Published:Updated:

கனவின் தாழ்வாரம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கு.இலக்கியன்

கனவின் தாழ்வாரம் - சிறுகதை

கு.இலக்கியன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

பனை மட்டைகளில் ஆடியபடியிருக்கின்ற தூக்கணாங்குருவிக் கூடுகளில் மெல்ல எழும் கீச்சொலிகள் வசீகரிக்கின்ற மாலைப்பொழுது. காற்றின் பேச்சுக்குத் தாழை ஏரிக்கரை நாணல்கள் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன. இரு மருங்கிலும் பசுங்கோரைகள் வளைந்து நிற்கின்ற ஒற்றையடிப்பாதையில் தாழப்பறக்கும் தும்பிகள் மஞ்சள் நிறம் அடர்ந்து மிளிர்கின்றன. சிறிதும் பெரிதுமான மண் திட்டுகளில் செழித்த ஊமத்தம்பூக்களுக்குள் ரத்தின வண்டுகள் குந்திக்குந்தி மயங்குகின்ற நேரத்தில், முழங்காலுக்குக் கீழ் தழையும், முந்திரிக் கொட்டை வடிவில் பூப்போட்ட சேலையை எடுத்துச் செருகி விரைந்து வருகிறாள் பவுனு.

இருள் அடர்ந்து ஈரம் குடித்துக்கிடக்கும் தாழைக்காட்டில் நொசநொசத்துப் பெய்து கொண்டிருந்தது மழை. பயிர்களுக்கு பாதிப்பில்லாமல் பள்ளத்திலிருந்து நீர் இறைப்பதைப்போன்று, நீர்ச்சாரலைக் காற்று விசிறியடித்துக்கொண்டிருந்தது. வெடித்த வெள்ளரிப்பழம்போல பளிச்சிடும் தேகத்தில் நீர் சொட்டிக்கொண்டிருக்க, தாழைக்காட்டிலிருந்து தட்டுத்தடுமாறி அகண்ட மண்சாலைக்கு வந்தாள் அவள்.

பவுனு, பனைபுரம் கிராமத்தாள். அடர் பச்சை முதிரா தளிர் வெற்றிலைக்கொடி. ஈச்ச மடலென வீச்சு வீச்சான பார்வை அவளுக்கு. சுற்றி வளைத்து, நொண்டிச் சாக்குகளோடு பேசிப் பழகாதவள். தீத்துண்டில் நீர்த்துளி பட்டதைப்போல் பதில் சொல்வாள். அடர் குளிருக்கும் கடுங்கோடைக்கும் உழைக்க அஞ்சாதவள். அதிகாலைக் குளிரில் எள் வயலுக்கு நீர் இறைக்கப் போனவள், இருள் கவிந்து, மழை வலுத்துவிட்ட இப்போதுதான் வீடு திரும்புகிறாள்.

தாழைக்காட்டைத் தாண்டித்தான் போக வர வேண்டும் பவுனுவின் எள் வயலுக்கு. வெளிச்சம் இருக்கும்போதே திரும்பிவிட வேண்டும். இருட்டிவிட்டால், குத்துக்குத்தாகச் செழித்திருக்கும் தாழைக்காட்டுக்குள் நெளிந்து நெளிந்து போகும் பாதைகளில் இடறி, தாழை மடல்களில் கிழிபட்டுதான் வரவேண்டும். மண் சாலைக்கு வந்துவிட்டால் போதும், பத்து நிமிடத்தில் வீடு சேர்ந்திடலாம். கவிந்துகொண்டிருக்கும் இருளில், நிதானித்துப் பெய்யும் தூறலில் வெட்டுக்கிளியின் தாவலென வீடு சேர்ந்தாள் பவுனு.

கனவின் தாழ்வாரம் - சிறுகதை

நனைந்துவிட்ட ஈரச் சேலையைப் பிழிந்து, தன் குடிசையின் சின்னஞ்சிறிய தாழ்வாரத்தில் உலர்த்திவிட்டு, கதவருகே வந்தாள். சாத்தி வைத்துவிட்டுப்போன குடிசையின் தட்டிக்கதவு திறந்திருந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டவள், சட்டென உள் நுழைந்தாள். பற்றிப்படற பற்றுக்கொடியற்றவள் பவுனு. அரண்டாலும் உருண்டாலும் அது அவளாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கு அவளேதான் நலம் விசாரித்துக்கொள்ள வேண்டும். அவள் போட்ட கோலத்தை அவளேதான் அழிப்பாள். அவள் பூட்டிய வீட்டை அவளேதான் திறப்பாள்.

திறந்துகிடந்த தட்டிக்கதவைத் தள்ளிக்கொண்டு நுழைந்தபோது, சின்னஞ்சிறிய அகல் விளக்கொளியில் கால்களை மடித்து அமர்ந்திருந்தான் கருவண்டு. விளக்கேற்றும் அளவுக்குப் பொழுதாகிவிடவில்லை. இருண்டிருந்த மழை வானம் அந்தி வெளிச்சத்தை விழுங்கியிருந்தால் அந்த விளக்கின் வெளிச்சம் தேவைப்பட்டது அந்தக் குடிசைக்கு. நின்று சுடர்ந்து கொண்டிருந்த அகல் விளக்கின் மென் மஞ்சள் ஒளியில், கருவண்டின் கறுத்தமுகம் சிலையில் பூட்டிய ஆபரணங்கள்போல பிரகாசமாய்த் தெரிந்தது. கருவண்டை முன்பின் அறிந்திடாத அவள், ‘நீ யார்’ என்று கேட்கத் தோணாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். சட்டென்று சிலிர்த்து நினைவு திரும்பியவள், “யார் நீ?” என்றாள்.

அவளின் குரல் அதட்டுகிற தொனியில் இருந்ததே தவிர, கண்கள் அப்படியல்ல. அவை உயிர்களின் மீது பெருங்கருணை சமைக்கும் பேரன்பு மிளிர இருந்தன. அவளின் கேள்விக்கு மிக நிதானமாய் பதில் சொன்னான் கருவண்டு.

“நா மலையூர் கிராமத்தான். நடை வாசி. தாகமும் பசியும் உசுர எடுக்க, இந்தக் குடிசையில எதாச்சும் கிடைக்குமான்னு வந்திட்டேன். திங்க ஒண்ணுமில்ல. பதனியாட்டம் இருந்த ஒம் பானத்தண்ணியில வயிறு நெறஞ்சிருச்சி. அந்தக் களைப்புல அப்படியே படுத்து அசந்து தூங்கிட்டேன்” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தான்.

“அப்பறமென்ன, முழிச்சா போக வேண்டியதானே, இங்கேயே சாவகாசமா தங்கியிருக்க?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் பவுனு. “எழுந்து நடக்க உடம்புல தெம்பிருந்தா ஒண்ணுமில்லாத ஓங் குடிசையில ஏன் இருக்கேன்?” என்று அலுப்போடு சொல்லிக்கொண்டே, நீல வண்ணத்தில் பெருங்கட்டமிட்ட தனது லுங்கியை வரிந்து கட்டிக்கொண்டு தட்டிக்கதவருகே வந்தான். அவனுக்கு வழிவிட்டவள், அவசரமாக ஓடி, கீழ் மூலை அடுக்களை திறந்து எதையோ அள்ளிக்கொண்டு வாசல் வந்தாள்.

மின்னி முழங்கிக்கொண்டிருந்த வானத்தில், தூறலும் காற்றும் சல்லாபித்திருக்க, மண் சாலையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் கருவண்டு. “யோவ், ஒன்னதான்யா” என்ற பவுனோட குரலுக்குத் திரும்பி நின்றவனை நோக்கி ஓடி வந்தவள், தனது இரண்டு கைகளையும் ஒன்றுசேர்த்து நீட்டினாள். விரிந்த பூப்போல் இருந்த அவள் கைகளுக்குள், பனங்கருப்பட்டி கலந்து செய்திருந்த எள்ளுருண்டைகளை ஏந்தியிருந்தவள், “இந்தாயா, இதத் தின்னுட்டுத் தண்ணியக் குடிச்சிட்டுப் போ” என்றாள். அப்போது, அவள் கண்கள் உடைப்பெடுக்கக் காத்திருக்கும் வெள்ளம்போல இருப்பதைக் கண்டவன், “வேணாம் சாமி, அசதியில படுத்திருந்த உன் வீட்டுத் தரைக்கும், தாகம் தணிச்ச தண்ணிக்கும் ரொம்ப நன்றி சாமி” என்று அவளை ஏறிட்டுப் பார்க்காமலும், கொடுத்ததை வாங்காமலும் நடக்கத் தொடங்கினான்.

கருவண்டு, அவன் சொன்னதுபோல ஒரு மலைக்கிராமத்தான்தான். ஆனால், ஆடுகளைத் திருடி விற்றுத் திரியும் ஊதாரி. ஆடுகளைத் திருடுவதில் மிக நூதனங்களையும் சாமர்த்தியங்களையும் கற்றவன். சுற்றுவட்ட எல்லா ஊர்களிலும் தனது கைவரிசையைக் காட்டிவிட்டவன். திருடியவற்றை வளர்ப்புக்கோ, கிடைக்கோ விற்க மாட்டான். கறிக்கு விற்றுக் காசாக்கிவிடுவதுதான் வழக்கம். திருடுவதைக் காட்டிலும், அதைக் காசாக்குவதில் துரிதமாக இருப்பவன் கருவண்டு.

‘கண்டெடுத்த காசு காணாமல்போவது போல, திருட்டால் வந்த காசும் செலவழிந்துதான் போகும்’ என்பதை அறிந்தவன். அதே போல, உதவியென்று யாரேனும் காசு பணம் கேட்டுவிட்டால் போதும், அவனிடம் இருப்பதை அள்ளிக்கொடுப்பவன். பலிக்கு நேர்ந்துவிட்ட கிடாவைப் பாசத்தோடு வளர்ப்பதைப்போல, திருடிய ஆடுகளின் மீது கொஞ்சம் கருணையையும் காட்டுபவன் கருவண்டு.

அசலூர் ஒன்றில், நள்ளிரவில் திருடிவந்த ஆடு, அன்றைய தினத்தில்தான் குட்டிகளை ஈந்திருப்பதை அறிந்தவன், இரவோடு இரவாக குட்டிகளிடம் சேர்த்துவிட வேண்டுமென்று எண்ணினான். திருடிய இடத்திலே கொண்டு விடப் போய் மாட்டிக்கொண்டு கட்டுப்பட்டவன். அன்றிலிருந்து அவனின் திருட்டு நூதனங்கள், ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. சொந்த ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாமலும், சுற்று வட்டப் பகுதிகளில் பிழைக்க முடியாமலும் தேசாந்தரியானவன்தான்.

காற்று, மழை, பசி, தாகமென்று அலைந்து அலைந்து, பனைபுரம் கிராமத்தில் பவுனு வாசலில், மேல் நோக்கி வீசும் தூவானத்தில், ஒட்டிய வயிற்றோடு போய்க்கொண்டிருக்கிறான். இவை எதையும் அறிந்திடாத பவுனு, எப்போது வேண்டுமானாலும் பொத்துக்கொண்டு ஊத்தக் காத்திருக்கும் மழை மேகம்போல கண்கள் தளும்ப அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கனவின் தாழ்வாரம் - சிறுகதை

சட்டெனத் தன் குடிசைக்குள் நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழல விட்டுப் பார்த்தாள் பவுனு. எப்போது அவன் குடிசைக்குள் வந்தானென்று தெரியாது. எவ்வளவு நேரம் இருந்தானென்றும் தெரியாது. வச்சது எதுவும் இடம் மாறவில்லை. அவன் சொன்னதுபோல, பானைத் தண்ணி மட்டும்தான் குறைஞ்சிருக்கு. ஏனோ, அவள் கருவண்டின் ஞாபகமாகவே இருந்தாள். அழுது முடித்துவிட்டபின்பும் அழுகையின் தடத்தை முகம் சூடிக்கொண்டிருப்பதைப்போல, சென்றுவிட்ட பின்பும் அவன் நினைவின் தடம் அவள் மனதிலிருந்து நீங்கவேயில்லை. பசிக்கென்று வந்து, அந்தப் பசியோடே திரும்பிப் போனது அவளுக்கு இன்னும் வலித்தது. பசித்தவனுக்குச் சோறு போடாமல் அனுப்பி வைத்ததை, மனித வாழ்வின் ஆகப் பெரும் பாவமென்று வருந்தினாள் பவுனு.

கூடா சகவாசத்தால் அப்பனையும், வயிற்றுப் பிள்ளையோடு கொள்ளை நோயில் ஆத்தாளையும் இழந்துவிட்ட இத்தனை ஆண்டுகளில், தாழை அடர்ந்த பனைபுரத்தில், வல்லூறுகளின் மத்தியில் போராடி வாழ்பவள்தான். முன் எப்போதும் இவள் மனம் இப்படித் தத்தளித்ததில்லை.கொழுவின் கூர்முனை இதயத்தில் ஆழ இறங்கி உழுததைப்போல வலியெடுத்திருந்தது அவளுக்கு. இரவு முழுவதும் தூங்காமல் கருவண்டின் நினைவுகளைப் போர்த்திப் படுத்திருந்தாள் பவுனு. விழித்திருப்பவர்களின் இரவுதானே நீளமானது என்பார்கள். ஆனால் விழித்திருந்த அவளுக்கு சட்டென விடிந்துவிட்டதைப்போலிருந்தது.

இப்போது எழுந்தால்தான், எள் வயலுக்கு நேரமே போக முடியும். இன்னும் நான்கைந்து சிறு சிறு துண்டு வயல்கள் நீரின்றிக் கிடக்கின்றன. எள் செடிகள் பூ அரும்பும் காலமிது. தண்ணீரின்றிப்போனால் பால் பிடிக்காது. விழித்தவள் தாமதிக்கவில்லை. சாமான்களைச் சட்டுப்புட்டென உருட்டிவிட்டுத் தாழைக் காட்டுக்கு வரும்போது அதிகாலை செவ்வானம் வெளுத்திருந்தது. உறக்கத்தை இரவுக்குத் தின்னக்கொடுத்த பவுனுவின் கண்கள், கள்ளிக்கொடியில் படர்ந்து பழுத்த கோவைப்பழமென இருந்தன. மழையிலும் வெயிலிலும் மாறி மாறி காயும் நிலம் போல, கனவிலும் நினைவிலும் கலந்தும் கரைந்தும் கிடந்தாள் பவுனு. கருவண்டைப் பிடித்துப்போனதற்குக் காரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. எள் செடி பூத்ததைப்போல, பளிச்சென்று அவள் மனசுக்குப் பிடித்துவிட்டது அவ்வளவுதான். மிளிரும் மஞ்சள் விளக்கொளியில் பார்த்த அவனின் கறுத்த முகத்தைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால், எந்த வழியில் போவது? எந்தத் திசையில் தேடுவது? யாரென்று யாரைக் கேட்பது?

மழைக்காலம் கடந்து நிலத்தில் நின்று காய்கிறது வெயில். எள் வயல் விளைந்து அறுப்புக்கு வந்துவிட்டது. பவுனுவின் மனசுக்குள் கருவண்டு நினைவுகள் அடர்ந்து படர்ந்திருக்கின்றன. அடர் பச்சயம் மாறி, பழுப்பேறி நிற்கிற எள் செடி காய்கள் வெடிக்கக் காத்திருப்பதைப் போலிருக்கிறது அவள் மனசும். தனித்த நதிதான் பவுனு என்றாலும், நிறைந்த நதி. தளும்பும் நதியைக் காக்கும் கரைபோல ஒருவன் தன் வாழ்வில் வந்துவிட மாட்டானா என்று ஏங்காத பெண் எவர் இருக்கிறார் உலகில்?

குழவிக்கல்லை ஏற்றி வைத்ததைப்போல கனக்கும் நெஞ்சோடு, தனது எள் வயலுக்கும் குடிசைக்கும் அலைந்துகொண்டிருந்தாள் பவுனு.

பொழுது கரைந்து பூமியில் நிழல் விழாத வெளிச்சம் இருந்தது. வயலிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவளை வழி மறித்தாள் ஆச்சிக்கிழவி. “ஏத்தா பவுனு, யாரோ உன் தூரத்து ஒறவாம். பேரு காளியன்னு சொன்னான். ஆளு குட்டிப் பனையாட்டம் நல்லா திம்முனு இருந்தான். ஒன்ன விசாரிச்சான்” என்று தன் சுருங்கிய நெற்றியைச் சுருக்கிக்கொண்டு பேசி முடித்தாள் ஆச்சிக்கிழவி. பதிலேதும் சொல்லாமல் அகல விழித்துக் கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டென இடைமறித்து, “எப்போ வந்து கேட்டாக” என்றவளுக்கு, “முந்தாநாள் இந்நேரம் இருக்கும். என்ன சேதின்னு கேட்டதுக்கு எல்லாம் நல்லதுக்குதான்னு பொடி வச்சி சொல்லிட்டு, பொரடிய தடவிக்கிட்டே போய்ட்டான்” என்று சொல்லி நகர்ந்தாள் ஆச்சிக்கிழவி.

காளியன், பவுனுவின் தந்தை வழி உறவுக்காரன். அவன் எப்போதாவது உறவென்று சொல்லிக்கொண்டு வருவான். அவன் மாமனை, பவுனுவின் அப்பனை நினைத்து அழுவான்.

“என் மாமென் சம்பாரிச்ச எள்ளுக்கா வயலுல எனக்கும் பங்கிருக்கு யம்மே...” என்று புலம்பிவிட்டு, செலவுக்குப் பணத்த புடுங்கிக்கிட்டுப் போயிடுவான். அதான், எள் வயல் அறுவடை நேரம் பார்த்து இப்போ வந்து விசாரிச்சுட்டுப் போயிருக்கான் என்று எண்ணிய பவுனு, நெற்றியின் வியர்வையை விரல்களால் வழித்தெறிவதைப்போல, அவன் வந்து போனதைக் கடந்துவிட்டாள். ஆனால் கருவண்டை அப்படிக் கடந்து போய்விட முடியாமல் தவித்தாள்.

கனவின் தாழ்வாரம் - சிறுகதை

இது நடந்து ஒரு வாரமிருக்கும், களத்திலிருந்து வீடு சேர்த்திருந்த எள் மூட்டைகளை, அசலூர்ச் சந்தையில் விற்றுவிட்டு கொஞ்சம் இருட்டியேதான் வீடு திரும்பியிருந்தாள் பவுனு. சந்தைக்குப் போய் வந்த களைப்பில், சமைத்துச் சாப்பிட அலுப்புக்கொண்டவள் அப்படியே படுத்துவிட்டாள். அவள் கனவின் தாழ்வாரத்தில் என்னென்னவோ மின்னி மறைந்துகொண்டிருக்க, ஒரு கணத்தில் உறங்கிப்போனாள்.

கோடையின் குளிர்காற்று கொஞ்சம் இதமாகவே வீசிக்கொண்டிருந்தது. பவுனு, படுத்துறங்கி நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது. அவள் குடிசையின் தட்டிக்கதவை யாரோ தட்டுகிற சத்தம்.

“யாரு... யாரது இந்த நேரத்துல?” என்று கேட்டுக்கொண்டே தட்டிக்கதவருகே போனவள், கதவைத் திறக்கவில்லை. தனிமையின் தவிப்பும், இருளின் அச்சமும் அவளைப் படபடக்கச் செய்தது. மீண்டும் தட்டுகிற சத்தம் கேட்க, விளக்கை ஏற்றிக் கையில் பிடித்துக்கொண்டே கதவைத் திறந்தாள். அவளின் முன் கருவண்டு. அதே மென் மஞ்சள் ஒளியில் வியர்வை சொட்ட சொட்ட நின்றிருந்தான்.

“என்ன ஏதுன்னு சொல்ல நேரமில்ல, என்னத் தேடி போலீசு வருது. காப்பாத்து சாமி” என்று பவுனுவின் கையில் சுடர்ந்த விளக்கை அணைத்தான். அப்போது, அவன் கைகள் மெல்ல நடுக்கமுற்றிருந்தன. குமைந்த இருளில் திகைப்புற்று நின்றிருந்தாள் பவுனு. கருவண்டு குடிசைக்குள் வந்து, ஆசுவாசம் கொண்டு அரைமணி நேரமிருக்கும். போலீஸ் விசில் சத்தம் பவுனுவின் குடிசைப் பக்கம் கேட்டது. மூன்று திசைகளிலிருந்து ஊடுருவிய டார்ச் லைட் வெளிச்சம் பவுனுவின் குடிசை நோக்கி வருவதை உறுதி செய்தது. சில நிமிடங்களில் போலீஸின் காலடிச் சத்தம் பவுனுவின் வாசலில் கேட்டது.

“யாரு வீட்டுல... கதவைத் தொறங்க... கதவத் தொறங்கங்கிறேன்ல...” என்று அதட்டும் தொனியில் போலீஸின் குரல் ஒலிக்க, விளக்கை ஏற்றிப் பதற்றமில்லாமல் பவுனு கேட்டாள் “யாரது... இந்நேரத்துல கதவத் தட்டுறது?’’ பதில் குரல் ஒலித்தது. “போலீஸ்ம்மா. கதவைத் தொற. திருட்டுப் பய ஒருத்தன் தப்பிச்சு ஓடியாந்துட்டான்” என்றதும், அடி வயிற்றில் பளிச்சென்று வலி தாக்கியது பவுனுக்கு.

கதவைத் திறந்தாள் பவுனு. கதவைத் திறந்ததும் விருட்டென்று உள் நுழைந்து, ஒளிந்துகொள்ள ஒழிப்பு மறைப்பென்று ஒண்ணுமில்லாத குடிசையிலிருந்து வெளியேறினார்கள். “இந்தாம்மா, ஜாக்கிரதை. கிடையில ஆடு திருடப் போயி, காவக்காரன்கிட்ட மாட்டிகிட்டான். தப்பிக்கிறதுக்காக, மறச்சி வச்சிருந்த கத்தியால குத்திப் போட்டுட்டாம்மா. குத்துப்பட்டவன் பொழைக்க வாய்ப்பில்ல” என்று எச்சரித்துவிட்டுப் போனது போலீஸ்.

குடிசைக்குள் வந்தவனை சாமர்த்தியமாய் ஒளித்து வைத்தாள் பவுனு. கீழ் மூலை அடுக்களைப் பக்கம், கருவண்டின் நீளத்துக்குப் படுக்கைக் குழி வெட்டி, தலையை மட்டும் மேல் வைத்து புதைத்திருந்தவள், அதன் மேல் பாயை விரித்திருந்தாள். கருவண்டின் தலைமேல் பானையொன்றைக் கவிழ்த்து, மூச்சுக்காத்துக்கென்று மூலைப்பக்கம் ஓட்டையும் போட்டிருந்தாள் பவுனு. போலீஸ் போனதும், நடந்தவற்றையும், தான் யாரென்பதையும் சொல்லித் தலை கவிழ்ந்திருந்தான் கருவண்டு. விளக்கொளியில் அவனின் கறுத்த முகம் மேலும் கறுத்துவிட்டதைப்போல் இருந்தது.

தன் மனத்தின் அடி ஆழத்தில் நின்று நீச்சலிட்டவன் ஒரு திருடனா? கொலைகாரனா? கருவண்டின் பிம்பம் சுக்குநூறாய் உடைந்தது. அவன் அடுக்கடுக்காய்ச் சொல்லிய சுயசரிதைக்கு பதிலே சொல்லாத பவுனு, உள்ளுக்குள் வெடித்தழுது கொண்டிருந்தாள். அவள் கண்களின் ஒளி மங்கிப்போனது. நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்த பொழுதில் எதையும் சொல்லிக்கொள்ளாமல் தலை கவிழ்த்தபடியே வெளியேறினான் கருவண்டு. நிலத்திலிருந்து பிடுங்கிப் போட்ட எள் செடிகளைப்போலத் துவண்டு போனாள் பவுனு.

‘வாழ்நாளில் அவள் சலனமுறும் அளவுக்கு அவள் மனத்தை வென்றவரென்று எவரும் இல்லை. முன் பின் அறியாமலே கருவண்டின் மீது இவ்வளவு நினைப்பு கொண்டது அவளையே வியக்க வைத்தது. கல்லெறிந்த நீர்நிலைபோல, அவன் நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளை வட்டமடித்துக்கொண்டிருந்தன. திருடனோ, கொலைகாரனோ என் மனசுக்குள் நிலைத்து நின்றவன் அவன். அது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்று எண்ணியபடியே உறங்கிப்போனாள்.

விடியலின் செவ்வானம் வெளுத்து, பனைபுரம் இரைச்சல் கண்டிருந்தது. கெட்ட கனவிலிருந்து மீண்டவளைப் போல திடுதிப்பென்று விழித்தவள், ஊருக்குள் ஓடி வந்தாள். அகண்ட மண் சாலையின் வழி நெடுக கூட்டம் கூட்டமாய் கூச்சலும் குழப்பத்தோடும் பேசிக்கொண்டு போனார்கள். “ராத்திரி ஊருக்குள்ள திருட்டுக் கொலைகாரன் பூந்திட்டானாம். எங்கோ போய் ஒளிஞ்சிருந்தவனை, போலீசு பதுங்கியிருந்து புடிச்சுடுச்சு. பாவம், அடிச்சு ரத்தம் சொட்டச் சொட்ட, கட்டி இழுத்துட்டுப் போய்ட்டாங்க” என்ற வார்த்தைகள் பவுனுவின் செவிகளின் வழியே மனசுக்குள் இறங்கியது. அப்போது, எள் பூக்களின் மீது பனியடர்த்திருப்பதைப் போன்று ஈரம் பனித்திருந்தன அவள் கண்கள்.