தொடர்கள்
சினிமா
Published:Updated:

மாமத யானை - சிறுகதை

மாமத யானை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மாமத யானை - சிறுகதை

- இந்திரா பார்த்தசாரதி

அவர் படுக்கை அறை விளக்கைப் போட்டதும், அது பரபரத்து ஓடியது. சிகப்பாய் இருக்கும் ஒன்றை ஏன் கரப்பான் பூச்சி என்று அழைக்கின்றார்கள் என்று அவர் யோசிப்பதற்குள், அது அவருடைய கட்டிலின் கீழே ஓடிவிட்டது. அவர் கட்டில் வாமனாவதாரம். தரையிலிருந்து இரண்டடி உயரம். விளக்கிருந்தாலும், கட்டிலின் கீழே, ஒளியின் ஆட்சிக்கு இடமில்லை. குனிந்து பார்த்தால், ஒரே இருட்டாக இருக்கும். இந்தக் கரப்பான் பூச்சி கட்டிலின் கீழே எங்கிருக்கின்றது என்று எப்படித் தேடுவது? முழங்காலிட்டுக் குனிந்து அவரால் தேடமுடியாது என்பது வேறு விஷயம். ஆனால் அந்தப் பூச்சி அந்த அறையில் இருக்கின்றது என்ற நினைவுடன் அவரால் அன்றிரவு உறங்கமுடியாது.

விளக்கை அணைத்தவுடன் அது தன் பயணத்தைத் தொடங்கலாம். கட்டிலின் மேலே ஏறி, அவர் மெத்தையின் சுகத்தில் இளைப்பாறி, அவர் சரீரத்தின் மீது ஊர்வதுபோல் ஓர் உணர்வு தாக்கியதும், அவர் சிலிர்த்துக்கொண்டார். ‘நோ, இருவர்க்கு இந்த அறையில் இடமில்லை’ என்று அவர் தமக்குத்தாமே கூறிக்கொண்டார். கட்டிலின் ஒரு பக்கம் சுவரை ஒட்டியிருந்தது. அந்தப் பக்கமாகத்தான் பூச்சி ஓடியது.

நல்ல கனமான அந்த எஃகுக்கட்டிலை அவரால், இந்த வயதில், ஓரங்குலம்கூட நகர்த்த முடியாது. சுவர்ப்பக்கம் இருந்த பகுதியில் அந்தப் பூச்சி ஒளிந்துகொண்டிருந்தால், கட்டிலை நகர்த்தி அவரால் எப்படி அதைத் தேட முடியும்? கட்டிலின் கால் அதற்கு அடைக்கலம் தந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறு உண்டு. அவர் அலமாரியிலிருந்து ‘டார்ச் லைட்’டை எடுத்தார். மிகச் சிரமப்பட்டுத் தரையில் படுத்துப் பக்கவாட்டமாகத் திரும்பிக் கட்டிலுக்குக் கீழே கைவிளக்கின் ஒளியைச் செலுத்தினார்.

கண்ணுக்குத் தென்படவில்லை பூச்சி. எங்கே போயிருக்கமுடியும்? ஒளியைச் சுற்றுமுற்றும் துழாவினார். பூச்சியைக் காணோம்! அப்படியானால், அவர் அப்பொழுது பார்த்ததாக நினைத்தது அவர் மனப் பிரமையா? எப்படியிருக்க முடியும்? விளக்கைப் போட்டதும், அது வேகமாக ஓடிக் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டது, ஒரு படக் காட்சியைப் போல் அவர் மனத் திரையில் நின்றது.

மாமத யானை - சிறுகதை

கண்ணுக்கு ஒரு கணம் தோன்றி, மறு கணம் மறைவதைப் பார்த்தால், கரப்பான் பூச்சி கடவுளாயிருக்குமோ? ஏன் இது ஓர் அவதாரமாக இருக்கக்கூடாது? மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய்த் தோன்றும்போது, கரப்பான் பூச்சி அவதாரம் எடுக்கக்கூடாதா? கரப்பான் பூச்சி, உலக மூத்த குடிமக்களுள் ஒன்று.

பல நூறாயிரம் வருஷங்களுக்கு முன் தோன்றிய காலத்திலிருந்து, சூழ்நிலை பாதிப்புக்கேற்ப மாற வேண்டிய அவசியமில்லாமல், அன்று தொட்டு இன்று வரை படைக்கப்பட்ட மேனிக்குப் பங்கமில்லாமல் இருந்துவருகின்றது இந்தப் பூச்சி. பனிப்பிரதேசமாக இருந்தாலும் சரி, பாலைவனமாக இருந்தாலும் சரி, அங்கிங்கு எனாதபடி இது, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்கும்போது, எறும்பையும் மறக்காமல், ‘திருவெறும்பூர்’ என்று அதற்கு ஷேத்திரத்தை உருவாக்கியவர்கள், கரப்பான் பூச்சியை ஏன் மறந்துவிட்டார்கள் என்பது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

தரையில் படுத்த நிலையிலிருந்து மீண்டு, உட்காரும் நிலைக்கு வருவதற்கு அவருக்குச் சில நிமிஷங்களாகின. இடுப்பைப் பிடித்துக்கொண்டே, அவர் படுக்கையை நோக்கினார். தலையணை ஓரத்திலிருந்த கரப்பான் பூச்சியும் நோக்கியது. காதல் பிறப்பதற்குப் பதிலாகக் கவலைதான் தலை தூக்கியது. ‘மை காட்! இதை எப்படியாவது கொல்ல வேண்டும் அல்லது அறையை விட்டு வெளியே அடித்து விரட்ட வேண்டும்’ என்ற ஆவேசம் அவரை ஆட்கொண்டது. கால் செருப்பைக் கையில் ஆயுதமாகக் கொண்டு அடி மேல் அடி வைத்துக் கட்டிலை நோக்கி முன்னேறினார்.

தன்னை நோக்கி அவர் முன்னேறி வருவதன் உள்நோக்கம் அந்தப் பூச்சிக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது உடனே தலையணை அருகிலிருந்து நீங்கி, கட்டில் கால் வழியாக இறங்கி இருளில் கரைந்தது. மறுபடியும் குனிந்து, தரையில் கிடந்த வண்ணக்கோலம் கொண்டு அந்தப் பூச்சியைத் தேடமுடியுமென்று அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அந்தப் பூச்சி தம் கட்டிலைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் எங்கோ இருக்கின்றது என்ற நினைவு உள்ளவரை அவரால் உறங்க முடியாது. வாட்ச்மேனைக் கூப்பிட்டுக் கட்டிலைச் சற்று நகர்த்தி, இந்தப் பூச்சிப் பிரச்னைக்கு ஓர் ‘இறுதித் தீர்வு’ காணலாம் என்று அவருக்குப் பட்டது.

வாசலுக்குச் சென்றார். வாசலில் ஒரு நேபாளிய இளைஞர் அணி கூடியிருந்த மாதிரி அவருக்குத் தோன்றிற்று. நாலைந்து பேர் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் வீட்டுக் காவலாளி பகதூர்தான் தலைவனாக இருக்க வேண்டுமென்று அவர் நினைத்தார். அவன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவரைப் பார்த்ததும் பகதூர் எழுந்திருந்தான். அவர் அவனைத் தம்முடன் வரும்படி சைகை செய்தார். படுக்கை அறைக்குள் சென்றதும், கரப்பான் பூச்சிக்கு இந்தியில் என்ன சொல்வார்கள் என்பதைத் தாம் மறந்துவிட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

வேற்று மொழி எதுவாக இருந்தால் என்ன என்ற நினைவினாலோ என்னவோ, அவர் கட்டிலைச் சுட்டிக் காட்டி, “காக்ரோச்” என்றார் அவனிடம். அவர் சொன்னதை அவன் சுத்தமாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அவன் முக பாவனை காட்டியது. “லால்வாலே... பூச்சி...” என்றார் அவர் இந்தி-தமிழில். “கரப்பான் பூச்சியா?” என்றான் பகதூர் தமிழில். “கரெக்ட். உனக்குத் தமிழ் தெரியுமா?” “நல்லா தெரியும். பத்து வயசிலேர்ந்து இங்கே இருக்கு, பதிமூணு வருஷமா...” என்றான் அவன் புன்னகையுடன்.

“கரப்பான் பூச்சி அங்கே ஓடியிருக்கு. கட்டிலை நகர்த்திப் பாரு...” என்று சுவர்ப்புறமாகச் சுட்டிக்காட்டினார் அவர். அவன் சுவர்ப்புறம் சென்று மேலோட்டமாகக் கட்டிலின் மீது ஒரு பார்வையைச் செலுத்தினான். பிறகு குனிந்து கட்டிலை ஒரு கையால் ஒரு தள்ளு தள்ளினான். அவன் சொந்த நாட்டில் வறுமையைப் போக்குவதற்குப் பயன்படா விட்டாலும், சென்னையில் கட்டிலைத் தள்ளுவதற்காவது அவன் கைவலிமை பயன்படுகின்றதே என்று அவர் சந்தோஷப்பட்டார். டார்ச் லைட்டைக் கொடுக்கும்படி சைகை செய்தான். கொடுத்தார்.

அவன் தரையளவு குனிந்து கட்டிலுக்குக் கீழே டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான். கட்டிலே கரப்பான் பூச்சியாக மாறிவிட்டாற்போன்ற ஓர் எண்ணம் தாக்கியதும் அவர் சற்றுத் திடுக்கிட்டார். ‘கட்டிலில் மறைந்தது கரப்பான் பூச்சி, கட்டிலை மறைத்தது கரப்பான் பூச்சி’ என்று அவர் வாய் முணுமுணுத்தது. “இங்கெ இல்லே, ஸாப்... படுக்கையைப் பாக்கலாமா?’’ என்றான் பகதூர்.

“ பாரு.”

அவன் தலையணைகளை எடுத்து ஒவ்வொன்றையும் தட்டிப் பார்த்தான். உறைகளை உருவினான். பூச்சியைக் காணவில்லை. மெத்தையின் மீதிருந்த விரிப்பை எடுத்து உதறினான். மெத்தையை எடுத்துக் கீழே போட்டான். பூச்சி இல்லை. “நீங்க பூச்சியைப் பாத்தீங்களா, ஸாப்?” ‘நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்பதுபோல் ஒலித்தது அந்தக் கேள்வி. “பார்த்ததினாலேதானே உன்னைக் கூப்பிட்டேன்’’ என்றார் அவர். அவன் சில விநாடிகள் அவரைப் பார்த்துக்கொண்டே மௌனமாக நின்றான்.

அடுத்ததாக என்ன செய்வது என்று அவரைக் கேட்பது போலிருந்தது அவன் நின்ற தோற்றம். “மெத்தையை எடுத்துக் கட்டிலிலே போட்டுடு’’ என்றார் அவர். அவன் படுக்கையை முன்பு இருந்தபடியே விரித்துவிட்டு, ``பூச்சி வெளியிலே போயிட்டிச்சி, ஸாப், இங்கே இல்லே’’ என்றான். “போகலே... இங்கேதான் இருக்கு. அதெ கண்டுபிடிச்சுக் கொன்னுட்டி யானா முப்பது ரூபா தரேன்” என்று பரிசை அறிவித்தார் அவர். வாழ்க்கையில் பலருக்கு எதைத் தேடுகிறோம், எதற்காகத் தேடுகிறோம் என்று தெரிவதில்லை. இப்பொழுது இவனுக்கு எதைத் தேடுகிறோமென்ற ஓர் இலக்கும், எதற்காகத் தேடுகிறோமென்ற ஒரு காரணத்தையும் தந்துவிட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. “அந்த அலமாரியிலே பாக்கலாமா, ஸாப்?” என்று கேட்டான் அவன் உற்சாகத்துடன். “அங்கே எப்படிப் போயிருக்கும்? கட்டில் பக்கமாத்தான் ஓடித்து, நான் பார்த்தேன்” என்றார் அவர்.

“நீங்க என்னைக் கூப்பிட வெளியிலே வந்தப்போ அங்கே போயிருக்கலாம்... கட்டில் பக்கம் இல்லே ஸாப்.” அவர் அலமாரியில் பொருள்கள் தாறுமாறாகக் கிடந்தன. ஒவ்வொரு நாளும் அதைச் சரி செய்ய வேண்டுமென்று அவர் நினைப்பார். சோம்பலோ அல்லது சரி செய்து என்ன ஆகப் போகின்றது என்ற ஓர் அலட்சியமோ, சரி செய்ய முடியாமல் போய்விட்டது. தம்முடைய பொறுப்பின்மை இவனுக்குத் தெரிய வேண்டுமா என்று ஒரு கணம் நினைத்தார். அதே சமயத்தில், கரப்பான் பூச்சியைத் தேடும் முயற்சியைச் சாக்காக வைத்துக்கொண்டு இவன் உதவியுடன் அலமாரியை ஒழுங்கு செய்துவிடலாமென்ற எண்ணமும் தோன்றிற்று.

அவர் அலமாரியைத் திறந்தார். யசோதை கிருஷ்ணன் வாயில் கண்டது போல் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத ஏராளமான பொருள்கள் கண்ணுக்குத் தெரிந்தன. துணிமணிகள், காகிதக் குப்பைகள், பைல்கள், பழங் குடைகள், அழுக்குத் தலையணை உறைகள், அழுக்கேறிய பயணப் பைகள், காஸெட்கள், புத்தகங்கள் என்று ஒரு பழம்பொருள்கள் விற்கும் ஒரு பல்பொருள் அங்காடிக் கடையாகக் காட்சி அளித்தது அந்த அலமாரி. கரப்பான் பூச்சி இங்கிருந்து உற்பத்தியாகி வெளியே வந்திருக்கக் கூடுமென்றுகூட அவருக்குத் தோன்றிற்று. அலமாரியின் மேல் தட்டைப் பார்ப்பதற்கு ஒரு நாற்காலி வேண்டுமென்று அவர் உணர்ந்தார்.

“ஹாலுக்குப் போய் ஒரு ‘குர்ஸி’ எடுத்துண்டு வா” என்றார் அவர். அவன் நாற்காலியைக் கொண்டு வந்ததும், அதன்மீது பேப்பரைப் போட்டுக்கொண்டே ``மேலே ஏறிப் பாரு” என்றார். அவன் ஒரு வல்லுநனின் சாமர்த்தி யத்துடன் மெதுவாக ஒவ்வொரு பொருளையும் பூச்சி இருக் கின்றதா என்று ஆராய்ந்துவிட்டு, அவர் கையில் கொடுத்தான். அவர் பயன்படுத்தாத அழுக்கு பனியன்கள், ‘டி-ஷர்ட்டு’கள், பழைய வாரப் பத்திரிகைகள் என்று விதம்விதமான பொருள்கள் அத்தட்டில் குவிந்து கிடந்தது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை பொருள்கள் ஒரு தட்டில் இருக்க முடியுமா? அத்தனையும் அவனிடம் கொடுத்துவிடுவது என்று அவர் தீர்மானித்தார். உள்ளங்கை அளவுக்கிருந்த ஒரு ‘எப். எம்’ ரேடியோவை எடுத்து அவன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

அதை அவர் கடந்த ஆறு மாதங்களாகத் தேடிக் கொண்டிருந்தார். சிங்கப்பூரிலிருந்து அவர் நண்பர் ஒருவர் அவருக்காக வாங்கி வந்தது. “இது என்ன, ஸாப்?” “ரேடியோ, காதில் வச்சாதான் கேட்கும். மத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்காம கேக்கலாம்...” “அச்சா ஹை, ஸாப்” என்றான் பகதூர். அவர் அதை வாங்கிக்கொண்டார். பழைய துணிமணிகளை மட்டும் கொடுத்துவிட்டு, ரேடியோவைத் தாம் வைத்துக்கொண்டால் அவனுக்கு ஏமாற்றமாக இருக்குமென்று அவருக்குப் பட்டது. பூச்சியை அவன் தேடிக் கண்டு பிடித்தாலும் சரி, கண்டுபிடிக்காவிட்டாலும் சரி, அவனுக்கு முப்பது ரூபாய் கொடுக்கப்போகிறோம், ரேடியோவைக் கொடுக்கவில்லை என்றால் அவன் ஏமாற்றமடைவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று தம்மைத்தாமே சமாதானமும் செய்துகொண்டார்.

மாமத யானை - சிறுகதை

அவன் நாற்காலியிலிருந்து கீழே இறங்கி, இரண்டாவது தட்டிலிருந்த சாமான்களையும் ஆராய்ந்தான். அத்தட்டில், அவர் அன்றாடம் உபயோகித்துவந்த நல்ல துணிமணிகள் இருந்தன. வேட்டிகள், உள் உடைகள், டவல்கள், போன்றவை. “நீ மேல்தட்டிலிருந்து எடுத்துப் போட்ட எல்லா சாமான்களையும் எடுத்துண்டு போகலாம்...” என்றார் அவர். அவன் புன்னகை செய்தான். “எதுக்குச் சிரிக்கறே?” என்று கேட்டார் அவர்.

“குச் நை, ஸாப்...’’ ‘பழைய பொருள்களோடு ஒன்றாய், ரேடியோவை மேல் தட்டில் வீசி எறிந்துவிட்டு, நான் தேடி எடுத்துக் கொடுத்தவுடன், ரேடியோவை வைத்துக்கொண்டு குப்பைகளைத் எனக்குத் தருகிறாயே... இந்த வயதில் உனக்குப் பொருள்மீது ஆசை உன்னை விட்டு இன்னுமா நீங்க வில்லை?’ என்று சிரிக்கிறானோ என்ற எண்ணம் அவருக்குத் தோன்றிற்று. அவன் மேல் தட்டிலிருந்த பழம்பொருள்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டினான். இரண்டாம் தட்டிலிருந்த துணிமணிகளை ஒழுங்காக மடித்து வைத்தான். ``பூச்சி இல்லே, ஸாப்” என்றான் அவன்.

“எங்கே போயிருக்கும், ஜன்னல் கதவெல்லாம் சாத்தியிருக்கு, உன்னைக் கூப்பிட வந்தபோது, அறைக் கதவையும் சாத்திட்டுதான் வந்தேன்..?” ‘இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியுமென்று எதிர்பார்க்கிறாய்?’ என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவரை உற்று நோக்கினான் பகதூர். பூச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை, வாக்களித்த முப்பது ரூபாயையும் கொடுக்காமல், வெறும் பழந்துணி மூட்டைகளுடன் அனுப்பி விடுவாரோ என்ற சந்தேகமும் அந்தப் பார்வையில் தெரிவதுபோல் அவருக்குப் பட்டது.

அவன் பார்வை கம்ப்யூட்டர் மேஜையில் அவர் வைத்திருந்த ரேடியோ மேல் லயித்திருந்தது. அவர் அறைக் கதவு ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த பான்ட்டிலிருந்து பர்ஸை எடுத்து அதிலிருந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் நீட்டினார். “பர்வா நை, ஸாப்... பூச்சி கிடைக்கலே” என்று கூறித் தன் கண்ணியத்தையும் நேர்மையையும் புலப்படுத்திப் பணத்தை வாங்கிக்கொள்ள அரைமனத்தோடு மறுத்தான் பகதூர். “வாங்கிக்கோ...” என்று அவன் கைகளில் பணத்தைத் திணித்தார் அவர்.

“அச்சா, ஸாப்” என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே போனான். கட்டி வைத்த துணி மூட்டையை அவன் எடுத்துக் கொண்டு போகவில்லை. அவரும் அதை அவனிடம் நினைவூட்ட விரும்பவில்லை. அவர் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தார். உறக்கம் வரவில்லை. எங்கே போயிருக்கும் அந்தக் கரப்பான் பூச்சி? தூக்க மாத்திரை அரைக்குப் பதிலாக முழு மாத்திரையை விழுங்கினார். காலையில் எழுந்து பார்க்கும்போது தாம் ஒரு ராட்சசக் கரப்பான் பூச்சியாக மாறியிருக்கக் கூடும் என்று தோன்றிற்று.

சே! இப்படிக் காப்காவின் கதையில் அல்லவா வருகிறது! அவர் ஏன் தம்மைப் பற்றி அவ்வாறு நினைக்க வேண்டும்? காப்கா, பூச்சி என்றுதான் சொல்லுகிறானே தவிர, கரப்பான் பூச்சி என்று குறிப்பிட வில்லை. டைலர் நாக்ஸ் என்பவன் கதையில், ஒரு கரப்பான் பூச்சி ஒரு நாள் காலையில் எழுந்து, ஒரு மனிதனாக மாறியிருப்பதை உணர்கிறது! சாதாரண மனிதனில்லை... நியூயார்க் ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் அட்டூழியங்கள் நிகழ்த்தும் ஒரு ரௌடி! கொசுக்களைப் போலவோ, அல்லது தேள் போன்ற விஷ ஜந்துகளைப் போலவோ வியாதிகளுக்கும் விஷக் கடிக்கும் காரணமாக இல்லாமல் சாதுவாக இருக்கும் கரப்பான் பூச்சியைப் பார்த்து மனிதன் ஏன் அருவருப்பு கொள்ள வேண்டுமென்ற கேள்வி அவர் மனத்துள் எழுந்தது.

அதன் அசிங்கமான பளபளப்பும், இருட்டுக்கும் அதற்குமுள்ள சிநேகமும் காரணமாக இருக்கலாம்... அப்பொழுது திடீரென்று ஒரு பெரிய கரப்பான் பூச்சி அவர் கண்முன் தோன்றியது. “நான்தான் கரப்பான் பூச்சிகளுக்கெல்லாம் மூலத் தாய். கோடிக்கணக்கான சிசுக்கள் என்னிடமிருந்து உற்பத்தி ஆகின்றன. அணுகுண்டுப் போர் ஏற்பட்டு, நீங்கள் எல்லோரும் பூண்டோடு அழிந்தாலும், நாங்கள் சாக மாட்டோம் என்ற விஞ்ஞான உண்மை உனக்குத் தெரியுமா? ரேடியம் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு உங்களைவிட பதின் மடங்கு அதிகம். எங்களையா நீ கொல்லப் பார்க்கிறாய், ஹஹ்ஹாஹஹ்ஹா...” என்று உரக்கச் சிரித்தது அது. பயத்தில் அவருக்கு வியர்த்துக்கொட்டியது. அவர் எழுந்து உட்கார்ந்தார்.

என்ன பயங்கரக் கனவு... அவருக்கு விளக்கைப் போட பயம். அறை முழுவதும் கரப்பான் பூச்சிகள் இருந்து விட்டால்?! இந்தப் படுக்கையில் அவை இல்லை என்று என்ன நிச்சயம்? உடம்பு முழுவதும் அவை ஊர்வது போன்ற உணர்வு. அவர் கட்டிலிலிருந்து மெதுவாக இறங்கி, அறைக் கதவின் பக்கச் சுவரிலிருந்த ‘ஸ்விட்ச்’சைப் போட்டார். கரப்பான் பூச்சிகள் எதுவுமில்லை. எல்லாம் அவர் மனத்தில் ஊர்ந்தவைதாம்! அதுபோல், இரவு படுப்பதற்கு முன் அவர் பார்த்ததும் அவர் மனத்தில் விளைந்த தோற்றமோ? எது நிஜம், எது போலி? அக்கணத்தில் அவர் கண்ட காட்சி, அவர் இதயத்தை ஓரிரு விநாடிகளாவது நிறுத்தி வைத்திருக்க வேண்டுமென்று அவருக்குப் பட்டது. அவர் திடுக்கிட்டு நின்றார்.

பகதூர், அலமாரியிலிருந்து கண்டெடுத்த ரேடியோவை அவர் கம்ப்யூட்டர் மேஜையின் மீது வைத்திருந்தார். அதன் மீது ஒரு கரப்பான் பூச்சி குப்புறக் கிடந்தது! செத்த பூச்சியின் சடலம்! இதுதான் அவர் முதலில் பார்த்த பூச்சியோ? பிறந்தபின் நிகழும் ஒரே உண்மையை அது சுட்டிக்காட்டியது. அவர் வாசலுக்கு விரைந்தார். பகதூர் தூங்கிக் கொண்டிருந்தான். அவர் அவனை எழுப்பினார்.

“க்யா ஸாப்?” “உள்ளே வா...” என்று அவனை அழைத்தார். அவன் சற்று சுணங்கிக்கொண்டே வந்தான். “அதோ பார்’’ என்று ரேடியோவைச் சுட்டிக்காட்டினார். “க்யா ஸாப்?” என்று அவன் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தான். “அந்த ரேடியோவை நீ எடுத்துக்கோ. அந்தக் கரப்பன் பூச்சியை அடக்கம் செய்துவிடு...” என்றார் அவர். அவன் ரேடியோவைக் கையில் எடுத்துக்கொண்டு அவரைக் கேட்டான் ``எந்தப் பூச்சி, பூச்சி எங்கே ஸாப்?”