Published:Updated:

மையல் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- ஜெகநாத் நடராஜன்

இரவு பத்து மணிக்கு மேல் பேசுகிறேன் என்று அவனிடம் சொன்ன சாலா இணைப்பைத் துண்டித்துக்கொண்டாள். பிறகு ‘ஏன் அப்படிச் சொன்னோம்’ என்றும் நினைத்துக்கொண்டாள்.அப்போது காலை ஏழு மணிதான் ஆகியிருந்தது. இரவுக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது என்று கணக்கிட்டு மலைத்தாள். அவனுடன் பேச வேண்டியதை மறந்து விடாமலிருக்க கைத் தொலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டாள். என்ன பேசுவது என்று யோசித்தாள். அவனிடம் பேச வேண்டிய தன் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும்போதே, விம்மலும் அழுகையுமாக வந்தது அவளுக்கு. பலவந்தமாக அந்த நினைவைக் கலைத்துவிட்டு அன்றாட வேலைகளுக்குள் புகுந்தாள். காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்துச் சமையல், துணி துவைப்பு, வீடு பெருக்கித் துடைத்தல் என்று நிறைய வேலைகள் இருந்தன. சமைக்கும்போது காலியான மளிகைப் பொருள்களைக் குட்டி டைரியில் குறித்துக்கொண்டாள்.குளிக்கும்போது அவளறியாமல் ஏதோ ஒரு பாட்டை உதடுகள் முணுமுணுத்தன. அது தான்தான் பாடியதா என்று ஆச்சர்யத்துடன் யோசித்து நிறுத்திக்கொண்டாள். செயல்களில் அவசரம் கூட்டிக் கிளம்பும்போது அன்று அவள் மிகவும் அழகாக இருப்பதாக அம்மா சொன்னாள். அப்படி ஒரு நினைப்பே தனக்கு இல்லை என்று சொல்ல நினைத்தாள். ஸ்கூட்டர் அதற்கு முன் அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டது.

சாலாவை எதிர்பார்த்து நிறைய வேலைகள் அவள் வேலை பார்க்கும் பள்ளியில் காத்திருந்தன. அதில் பல, விடுமுறையிலிருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலைகள். சந்தோஷமாக அவற்றைச் செய்ய ஒரு ஜீவன் கிடைத்தால் அலுவலகம் அள்ளிக்கொள்ளாதா? அவளை அங்கு அனைவருக்கும் பிடித்தது. அன்பாய் இருந்து அவர்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டது. மாலையானதும், வேலை முடிந்து கடைசியாக வெளியேறிய சிலரில் அவளும் ஒருத்தியாக வெளியே வந்தாள். சாலையில் மறுநாளைக்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டாள். டைரியைப் பார்த்து மாத்திரைகள், தலைவலித் தைலம், ஒரு சில மளிகைப் பொருள்கள் வாங்கி ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டாள்.

அவளை எதிர்பார்த்து அம்மா கதவைத் திறந்தபோது சாலா ஸ்கூட்டரை வாசலில் நிறுத்தினாள். முகம் கழுவிக்கொண்டு வருவதற்குள் அம்மா காபியை ஆற்றிக் கொண்டு வந்தாள். அன்றைய பொழுதைப் பற்றி விசாரித்த பின், குறித்து வைத்திருந்த சில போன் நம்பர்களை அம்மா கொடுத்தாள். சாலா எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள். தூங்கும் அப்பாவிற்கு மேலிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு பத்து மணிக்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. அம்மா டி.வி-யை ஆன் செய்து, சத்தத்தை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ வைத்தாள். இரவுக்கு தோசையும் கொத்தமல்லிச் சட்னியும் என்று சொல்லி சம்மதம் வாங்கிக் கொண்டபோது, ‘போன் பேசினியா’ என்றாள் அம்மா. சாலா ‘பேசப்போறேன்’ என்றதும் அம்மாவின் முகம் மலர்ந்தது. ஏனெனில், அவள் பேசுவதாகச் சொல்வது அதுதான் முதல் முறை.

பேச வேண்டும். யாராவது ஒருவரிடமாவது அவள் மனதிலிருப்பதைப் பேசிவிட வேண்டும். வார்த்தைகளைக் கூட்டியோ குறைத்தோ அவள் சொன்னதெல்லாம் அப்பா, அம்மாவிடம் வந்து சேர்ந்துவிடும். அதன்பின் அவளைப் பெண் கேட்டு எந்த போனும் வராது. அம்மா கிண்ணத்தில் பறித்து வைத்திருந்த மல்லிகையைக் கலக்கக் கட்டிக்கொண்டே இரவு பத்து மணிக்கு போனில் தன்னைப் பெண் கேட்டுப் பேசியவனிடம் சொல்ல வேண்டியதை யோசித்தாள். தன் கடந்த காலம் பற்றி முன்பின் தெரியாத அவனிடம் சொல்ல வேண்டும் என்ற நினைப்பே அவளை அலைக்கழித்தது.

காதல், அவள் பார்த்தறிந்திராத புதுவிதப் பூவாய் அவளுக்குள் மலர்ந்தபோது அவளுக்குப் பதினெட்டு வயது முடிந்திருந்தது.காதலித்தவனோடு வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்துகொண்டபோது இன்னும் இரண்டு வருடங்கள் கூடியிருந்தது. அவசரக் கல்யாணம், தனி வாழ்க்கை, தவிர்க்கவியலாத கூடல், குற்ற உணர்வோடு குழந்தை என்று இன்னும் இரண்டு வருடங்கள் அவளிடமிருந்து நகர்ந்தன. அவளைக் கட்டிக்கொண்டவனுக்குப் பெருங்கனவு இருந்தது. வேலை பார்த்துக் கொண்டும், அரசாங்கப் பணிகளுக்கான உயர் தேர்வுகளை எழுதிக்கொண்டும் இருந்தான்.அவன் அதில் முழுமையாக ஈடுபடும்படி அவள் பார்த்துக்கொண்டாள். அவனை இறுக்கிப் பிடித்துத் தொந்தரவு செய்யாமல் விலகியே இருந்தாள். கிடைத்த இடைவெளியில் அக்கம் பக்கக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து, கையில் கொஞ்சம் காசு புரளும்படி பார்த்துக் கொண்டாள்.

மையல் - சிறுகதை

மாவட்ட அளவிலான காவல்துறை உயர் பதவி அவனுக்குக் கிடைத்தது. அதன்பின் அவனோடு படித்த இன்னொரு பெண்ணுடன் அவன் நெருக்கமாக இருக்கிறான் என்பது தெரிந்ததும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.அதுபற்றிக் கேட்ட போது, அதுவரையில் அவள் பார்த்தறியாத அவனின் கோபமான முகம், கெட்ட வார்த்தைகள் நிறைந்த அவன் பேச்சு அதிர்ச்சியைத் தந்தது. மௌனமாகி, தனக்கும் கணவனுக்குமான இடைவெளியைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டாள். அதன் பின் கேள்வியோ, கூப்பாடோ, சண்டை சச்சரவோ அவர்களுக்குள் இல்லை. அவள் நடக்க விரும்பாதது, நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அவள், தான் நின்ற இடத்திலேயே புதைந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

ஆனால், வாழ்க்கை அப்படி யாரையும் தனித்து விடுவதில்லை. விருந்தாளி போல அப்பா ஒருநாள் அவள் வீட்டுக்கு வந்தார். பெற்றவர்கள் பிள்ளைகளின் வாழ்வையே நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்பாவைப் பார்த்ததும் அவள் அழுதாள். எப்போதும்போல அணைத்துக்கொண்டார். அப்போதுதான் பெற்ற குழந்தை போல அவளை சந்தோஷத்துடன் பார்த்தார். ‘வீட்டுக்குப் போகலாம்’ என்றார். அவளில் லாமல் வெறுமையில் இருந்த வீடு அவளை வரவேற்றுக்கொண்டது. அப்பாதான் அவள் விவாகரத்துக்கு அலைந்தார். அவள் கணவன் பேச்சு வார்த்தைக்கு வந்தபோது அவள் எதையும் பேசத் தயாராக இல்லை. ‘இந்த விவாகரத்து ஏன் என்று உனக்கே தெரியும்’ என்று முடித்துவிட்டாள். அவன் நல்லவனாக என்னென்னவோ வேஷம் போட்டும் அவள் அவளாகவே இருந்தாள். நலம் விரும்பிகளாக வந்த உறவினர்கள் சீண்டி சித்திரவதை செய்தார்கள். அவள் கணவன் வசதியான வனாகவும், ஆள்பிடி கொண்டவனாகவும் இருந்தான். அதோடு காவல்துறைப் பதவியிலும் இருந்தான். போராடியும் குழந்தை அவனோடு போனது. அது அவன் அவளுக்காக விரிக்கும் பாசவலை. அவள் மீண்டும் அவனிடம் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. குழந்தை போனது துக்கம்தான். பிரயாசப் பட்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். வாழ்க்கையை வேறுவிதமாக வாழ்ந்து பார்க்க விழைந்தாள். நல்லவேளையாக கல்லூரிப் படிப்பை முடித்திரு ந்தாள். டியூஷன் அனுபவம் இருந்தது. தனியார் பள்ளியில் டீச்சர் வேலை. புது வாழ்வை அவள் ஆரம்பித்தபோது அவளுக்கு முப்பத்து மூன்று வயது ஆகி விட்டிருந்தது. உற்றுப் பார்த்தால் தெரியும் நரை முடிகள் மினுங்க ஆரம்பித் திருந்தன. சிரிப்பை மறந்த முகச்சதையின் இறுக்கம் தளர ஆரம்பித்திருந்தது.

அப்பாவும் அம்மாவும் அவளது கடந்த காலம் பற்றிக் கேட்கவே இல்லை. அவளுக்கும் அவர்களுக்கும் எந்த அதிகப்படியான வார்த்தைப் பரிமாற்றங்களும் இல்லை. பதிலை எதிர்பார்த்து வரும் கேள்விகள் மட்டுமே இரு பக்கமும் புழங்கின. காலம் இரவும் பகலுமாக நகர்ந்து அவர்களின் மன இறுக்கத்தைத் தளர வைத்தது. மெல்ல மெல்ல நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டில் சமையல் மணம் கமழ ஆரம்பித்து, ருசி நாக்கில் படியும் உணவுகள் தயாராக ஆரம்பித்தன. அவளுக்காக கேஸ் அடுப்பும், டி.வி-யும், புதிதாகச் சில பாத்திரங்களும் வாங்கப்பட்டன. அவள் கல்யாணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்பா விவாகரத்து வாங்க தயங்காமல் செலவழித்தார். வழக்கறிஞர்களை மாற்றினார்.உள்ளூர் கோர்ட்டுக்கு, மதுரை ஹைகோர்ட்டுக்கு கார் வைத்துக் கூட்டிப் போனார். திரும்பும்போது ஏதாவது கோயில், நல்ல ஹோட்டல்களில் சாப்பாடு என்று உற்சாகம் காட்டினார். அவர் செய்கை அவளுக்குத் தன் குற்ற உணர்ச்சிகளை மீறி நிறைவைத் தந்தன.

ஒருமுறை எப்படியாவது சாலாவின் கணவனிடம் பேசி சமாதானம் செய்து கொள்ளலாமே என்று பேசிய உறவுக்காரனை கோர்ட் வாசலில் வைத்து, அப்பா செருப்பால் அடித்தார். குடித்துக்கொண்டிருந்த டீயை வைத்துவிட்டு, டீக்கடையிலிருந்து அவளும் அம்மாவும் ஓடிப் போவதற்குள் சொத் சொத்தென்று நான்கைந்து அடிகள் விழுந்திருந்தன, அப்பா ஆவேசமாக நின்றார். அடி வாங்கியவர் கன்னத்தைத் தடவிக்கொண்டு, ‘‘ஊர் உலகத்துல நடக்காததையா நா சொல்லிட்டேன்’’ என்று விசனப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார். அம்மாவைக் கண்டதும் அழுதார். ‘‘சாலாவுக்குப் புள்ள வேற இருக்கில்லக்கா’’ என்றார். அம்மாவுக்கும் அழுகை வந்தது. ‘‘அழுது ஊரக் கூட்ட வேண்டாம். புள்ள வரும்போது வரட்டும்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் அப்பா.

அதுதான் யதார்த்தம். அழுவதைத் தவிர, கோயில் கோயிலாய்ச் சென்று கைதொழுவதைவிட வேறு வழியே இல்லை சாலாவுக்கு. பஸ்ஸில் யாராவது வைத்திருக்கும் குழந்தைகள் அவள் குழந்தையை நினைவூட்டி அழ வைக்கும். அந்த நாள் அவளுக்குத் துக்க நாளாக மாறும். அதிலிருந்து தப்பிக்கத்தான் ஸ்கூட்டர் வாங்கிக் கொண்டாள்.

மையல் - சிறுகதை

ஒரு வழியாய் விவாகரத்து கிடைத்தது.கையிலிருப்பவற்றில் கேஸுக்கு இழந்தது போக பதினாலு பவுன் நகைகள் இருப்பதாக அம்மா கணக்கிட்டு வந்தாள். முப்பத்து ஐந்து வயதும் முடிந்திருந்தது. மூன்று வேளை சமைத்து, வேலைக்குப் போய், உண்டு, உறங்கி நாள்களை எப்படியாவது நகர்த்தும் வாழ்க்கை சாலாவுக்குப் பழகிவிட்டிருந்தது. அவளிடம் சொல்லாமல், மஞ்சள் பையில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போயிருந்த அப்பா சந்தோஷத்துடன் ஒருநாள் வீட்டுக்கு வந்தார். ‘‘பாக்கலாம், எல்லாம் நல்லா முடியும்னு சிராமணி ஜோசியர் சொல்லிட்டாரு’’ என்றார். அம்மாவுக்கு சந்தோஷம். சாலாவை அழைத்து, ‘‘உனக்கு நாங்களே மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறோம்’’ என்றாள். அவளுக்கு மீண்டும் நின்ற இடத்தில் கால் நழுவியது. அமைதியாக அந்த இடம் விட்டு வந்து பின் வாசலில் அமர்ந்து கொண்டாள். அம்மா சாலாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளின் தனிமை, தங்களின் மூப்பு, மருந்து மாயங்களால் வாழும் தங்களின் நோயாளி வாழ்வு, எந்த நேரத்திலும் யாராவது ஒருவர் இல்லாமல்போகலாம் என்ற எதார்த்தம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டே போனாள். நீண்ட நாள்களாக அப்பாவும், அவளும் பேசிக் கொண்டதன் சுருக்கம் அது. ‘‘நாங்க முயற்சி செய்யலன்னு ஆத்தாம எங்களுக்கு வரக் கூடாதில்ல. இதுதான் உனக்கு விதிச்ச விதின்னு நாங்க நம்பல. எங்களுக்கு ஆசை. விருப்பம் உன்னோடதுதான். உன்ன அனுசரிச்சுக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் இனிமேலா பொறக்கப்போறான். நல்லா விசாரிச்சுதான் தேடுறோம்’’ அம்மா பேசிக்கொண்டே போனாள். அவள் அமைதியாகவே இருந்தாள்.

விவாகரத்தான, குழந்தை கணவனின் பொறுப்பில் இருக்கும், முப்பத்து ஆறு வயதான, டீச்சராக தனியார் பள்ளில் வேலை பார்க்கும், அப்பா அம்மா மறைவுக்குப் பின் சுமார் 20 லட்சம் மதிப்பிலான சொத்துக்குப் பாத்தியப் பட்ட பெண்ணுக்கு வீட்டோடு மாப்பிள்ளை தேவை.

அப்பா விளம்பரம் கொடுக்க எழுதியதை அம்மா கொண்டு வந்து காட்டினாள். சொத்தையும், வீட்டோடு மாப்பிள்ளை என்பதையும் அடித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கிக் கொடுத்தாள். அவள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாக அம்மாவும் அப்பாவும் சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள். வீட்டில் புதுப் புது ஆட்கள் வந்து பேசிப் போனார்கள்.அப்பாவிடம் அடி வாங்கியவனும் வந்து ஜாதகம் வாங்கிப் போனான். வருபவர்களை உபசரிக்க பல ஆண்டுகளுக்குப் பின் அம்மா விட்டுப் போன முறுக்குச் சுற்ற முயன்றாள். அவள் விரல்கள் ஒத்துவரவில்லை. மாவை வாங்கி சாலாதான் சுற்றினாள். மகளுக்கு தன்னைப் போல முறுக்குச் சுற்றத்தெரியும் என்பதே அம்மாவுக்கு மிகப் பெருமையாக இருந்தது. வரும் மாப்பிள்ளைகளில் பலரை அப்பா, அம்மா, சிலசமயம் இருவரும் சேர்ந்தே நிராகரித்தார்கள்.சில தொலைபேசி எண்களைக் கொடுத்தபோதும், மாப்பிள்ளைகள் பற்றிச் சொன்னபோதும் சாலா அசைந்துகொடுக்கவில்லை. கடைசியாக முழுதும் தங்களுக்குத் திருப்தியான ஒருவனின் போன் நம்பரை அம்மா கொண்டு வந்து கொடுத்து, ‘‘இது அமஞ்சா ரொம்ப நல்லது’’ என்று சொல்லிவிட்டு, சாலா என்ன சொல்கிறாள் என்று சில நொடிகள் அவள் முகத்தை ஏக்கத்தோடு பார்த்து விட்டும் போனாள்.

அம்மாவும் அப்பாவும் தூங்கிய பின், இரவு பத்து மணிக்கு சாலா அவனிடம் பேசினாள்.அவன் குருபர குமார். திருமணமாகாதவன். ஜாதகக் காரணங்களால் அவன் திருமணம் தட்டிப் போய்விட்டது. கௌரவமான வேலையில் இருந்தான். குரல் வசீகரமாக இருந்தது. கல்யாணம் பற்றி மட்டுமே அவன் பேசினான். தன் முப்பத்து எட்டு வயதில் திருமணமே ஆகாத பெண்தான் வேண்டும் என்று ஆசைப்படுவது சரியாக இருக்காது என்பதால், விவாகரத்தான, கணவனை இழந்த, குழந்தையோடு இருக்கும் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று விளம்பரம் கொடுத்ததாகச் சொன்னான். அவள் அப்பாவையும் அம்மாவையும் அவள் தன்னோடு வைத்து, கடைசி வரைக்கும் பார்த்துக்கொள்ள சம்மதம் என்றான். அவன் பேசியது எல்லாமே அவளுக்குச் சரியாகவே பட்டது. தன் முடிவைச் சொல்ல ஓரிரு நாள்கள் தேவை என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துக்கொண்டாள். ஆண் பற்றிய அவளது அனுமானங்களில் அவன் நல்லவன் என்று அவளுக்குப் பட்டது.

ஆனால், யோசிக்க யோசிக்க கடந்த கால வாழ்வின் கசப்பே அவளுள் சுரந்து கசிந்தது. நல்லவன் என்று நம்பி வீட்டை விட்டு அவனுடன் போன தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினான் என்ற நினைப்பே மறுபடி மறுபடி வதைத்தது. எத்தனை விதமாய் சமாதானம் சொன்னாலும் இன்னொரு ஆணை ஒப்புக்கொள்ள மனம் மறுத்தது. வாழ்க்கையை இப்படியே கழித்து விடலாம். இதில் என்ன கஷ்டங்கள் வந்துவிடப் போகிறது. வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், அவளாலோ, அவளைப் பெற்றவர்களாலோ எதிர்பார்ப்பால் வரும் ஏமாற்றத்தை இனிமேல் தாங்கிக்கொள்ள முடியாது என்று மனம் சொன்னதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு அடுத்த நாளே குருபர குமாருக்குப் போன் செய்தாள்.

‘‘திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். மனமும், உடலும் இப்போது வாழும் வாழ்க்கைக்குப் பழகி விட்டது. புதிதாக ஒன்றை இணைக்க, அது சரியாக வரும் என்று நம்பிக்கைகொள்ள முடியவில்லை. பெற்றோருக்கு எத்தனை வயதானாலும் பிள்ளைகள் குழந்தைகள்தான். உலகம் தெரியாதவர்கள்தான்.அவர்கள் ஆசைக்காக நான் என்னைப் பலியிட முடியாது’’ என்று உறுதியாகச் சொன்னாள். ‘‘என்னை வற்புறுத்த வேண்டாம், சமாதானப்படுத்தவும் முயல வேண்டாம்’’ என்று அவன் ஏதோ பேச முயன்றபோது குறுக்கிட்டுச் சொன்னாள்.

அவன் அதன்பின் தொடர்பு கொள்ளவில்லை. அம்மாவும் அப்பாவும்கூட அதுபற்றிப் பேச்செடுக்கவில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லை என்று முடிவெடுத்திருக்கலாம்.அதன்பின் மாப்பிள்ளை பற்றிய பேச்சே இல்லை. ஒரு நாள் அவள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, அவன் வந்து போயிருந்தான். பாதி சாப்பிட்ட மிக்சர் தட்டும், காலியான காபி டம்ளரையும் பார்த்து அவள் கேட்டாள். ‘‘பின்ன என்ன? எத்தன தடவ போன் செய்யறது. போயி பாக்கறது. கடைசியா இன்னிக்குத்தான் வந்தாரு. வராமலே இருந்திருக்கலாம். வந்து கல்யாணமே வேண்டாம்னு முடிவெடுத்திருக்கறதா சொல்லிட்டுப் போறாரு. இப்பதான் உனக்கு எதிராத்தான் போயிருப்பாரு. பாத்திருப்பியே ராமர் கலர் சட்டை, நல்ல அழகு, விஜய்காந்த் மாதிரி இருந்தாரு. தன்மையான பேச்சு, நல்ல மரியாத. அதனாலதான் திரும்பத் திரும்ப போன் போட்டு, தேடித்தேடிப் போனோம். என்ன செய்யறது. ஆசைப்பட்டதெல்லாம் நடந்துடுமா?’’ அம்மா விசனப்பட்டுப் பேசிக்கொண்டே தட்டு டம்ளரை எடுத்துக்கொண்டு போனாள். அப்போதுதான் தனக்கு எதிரே பைக்கில் போன நீலச் சட்டைக்காரனை சாலா நினைவுக்குக் கொண்டு வந்தாள். ‘‘நீ வேணா பேசிப் பாக்கிறியா? போன் நம்பர் உன்கிட்ட குடுத்தமே, நீ பேசவே இல்லையா?’’ அம்மா திரும்பி வந்து, காபியை நீட்டியபடி சொன்னாள். சாலா பதில் சொல்லவில்லை.

வீடு அதன்பின் அமைதியாகிவிட்டது. யாரோ வந்து மிச்சமிருந்த சந்தோஷத்தையெல்லாம் அள்ளிக்கொண்டுபோனது போல இருந்தது. அபூர்வமாக யாராவது மாப்பிள்ளை விஷயமாகப் பேசினால், ‘‘இல்லங்க, நீங்க வேற யாரையாவது பாருங்க’’ என்று அம்மா இணைப்பைத் துண்டிப்பாள். கண்ணீர் பொங்கும் கண்களை முந்தானையில் துடைத்துக்கொள்வாள்.

அப்பா முதலில் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு அருகேயே இருந்து, சரியாகச் சாப்பிடாமல் தூங்காமல் அம்மாவும் நோய் வாய்ப்பட்ட சில நாளில் அம்மாவை ரத்தப் பரிசோதனைக்குக் கூட்டிப் போனாள். மாடியிலிருந்த ரத்தப் பரிசோதனைக் கூடத்திலிருந்து படியிறங்கும்போது, அவன் எதிரே படியேறினான். அவன் போட்டிருந்த சட்டை அன்று அம்மா சொன்ன ராமர் கலரில் இருந்தது. உயரம், முக அமைப்பு எல்லாம் அவன்தான் என்று சொன்னது. அம்மாவைப் பார்த்துச் சிரிக்கும்போது விஜய்காந்த் போலவே இருந்தான். பின்னால் வந்துகொண்டிருந்த அம்மாவிடம் நலம் விசாரித்தான். அவள் கொஞ்சம் வேகமாகப் படியிறங்கினாள். அம்மாவும் அவனும் ஏதோ பேசிக் கொண்டார்கள். அம்மா அவளை நோக்கிக் கை காட்டினாள். அவன் பார்த்தான். அம்மா திடீரென்று பீறிட்ட உற்சாகத்துடன் கீழிறங்கி வந்தாள். ‘‘அந்தத் தம்பிதான். கல்யாணத்தப் பத்தி மறுபடியும் பேசிப் பாத்தேன். உனக்கு விருப்பமான்னு கேக்கச் சொல்லுது’’ என்றாள் சந்தோஷத்துடன்.

சாலா அவனைப் பார்த்தாள். அவன் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கசப்பான தன் முதல் திருமண வாழ்வு முறிந்த பின், இன்னொரு ஆணை சாலா பல வருடங்களுக்குப் பின் பார்த்தாள். சந்தோஷத்துடன் அதை அவள் அம்மாவும் பார்த்தாள்.