Published:Updated:

ஓக்கே பாஸ் - சிறுகதை

ஓக்கே பாஸ் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஓக்கே பாஸ் - சிறுகதை

- ம.காமுத்துரை

ஓக்கே பாஸ் - சிறுகதை

- ம.காமுத்துரை

Published:Updated:
ஓக்கே பாஸ் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஓக்கே பாஸ் - சிறுகதை

சக்கரைப்பட்டியில் மாடு இருப்பதாக முத்துராசு துப்பு சொன்னதும் வழக்கம்போல சைக்கிளை மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ஓக்கே பாஸ். ஆறடி உயரத்தில் மினுமினுவெனக் கறுப்பு மினுங்கற உடம்பு. குனியாமலே கையிரண்டும் கெண்டங்காலைத் தொடும். நீளமான முகம். காதுகள் ரெண்டும் விநாயகப்பெருமானை நினைவுறுத்தும் அம்சம், வெளுக்காத தலைமுடி, முகத்தில் சவரம் செய்யவே தேவையில்லாத ஒரு மழமழப்பு. நாடியில் மட்டும் எலி வால் போல் நீண்டுகொண்டிருக்கும் ஒன்றிரண்டு மயிர்க்கொத்து. ஒட்டிப்போன கன்னப்பகுதியில் உயரமாக நிற்கும் மெலிசான மூக்கு. சின்ன, தடித்த உதடுகள். அகலம் குறைந்த கொஞ்சம் நீண்ட விழிகள் - இதுதான் ஓக்கே பாஸ்.சொந்தப்பெயர் என்னவென்பது பாஸுக்குமே தெரியாது. பொடுசுல இருந்து பெருசுக வரைக்கும் அப்படியே கூப்பிட்டுப் பழகியாச்சு. கிட்டத்தட்ட அறுபதைத் தாண்டிய வயது. இனிமேல்ப்பட்டு மாத்தவும் முடியாது?

ஓக்கே பாஸு மாடுபாக்கும் அழகே தனி. வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் மாட்டின், கழுத்துச் சதைப் பிடிப்பை அழுத்திப் பார்ப்பார், அடுத்து பின்னத்தங்கால் சப்பையினைத் தட்டிப்பார்த்து ரெண்டுதரம் செருமுவார். ஒரு பீடியை எடுத்து நுனிப்பல்லில் கடித்துப் பற்ற வைத்து, புகையை ஊதியபடி மாட்டின் கவட்டுக்கடியில் குனிந்து அதன் அடிவயிற்றை நோட்டம் விட்டு, பீடிக் காறலை கொட்டத்திலேயே தூவெனத் துப்பிவிட்டு நிமிர்ந்தாரானால், பார்ட்டிக்காரரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து, மாட்டை விற்கும் சூழலுக்குக் கொண்டுவந்து விடுவார். அதற்குள் முத்துராசு எக்ஸெல் வண்டியில் வந்து சேருவான். ``என்னா பெர்சு, மாடு தேருமா?” என முத்துராசு நாடகத்தைத் தொடக்குவான்.

“ஏப்பா, இதுக்கு என்னா தங்கத்துக்கு, பத்துக்காசு சேத்தே குடுக்கலாம்” என்பார். “உன்னியக்கூட்டி வந்தா எனக்குத்தே ஆப்பு வப்ப போல.” “எனக்கு எதுக்கு பொல்லாப்பு, வளத்தவக பாத்து பத்துக்காசுக்கு குடுத்தாலுஞ்சரி பத்து ஆயிரத்துக்கு நீ வாங்குனாலுஞ் சரி, எனக்கு ரெண்டுவேருமே வேணும்” என ஒதுங்குவதுபோல ஓரமாய் நின்று இங்குமங்குமாய் விலைத் தாரணை செய்து முடித்துவைப்பார். வீட்டுக்காரர் தரகுப்பணம் தரும்போது ‘வெத்தலபாக்கு சேத்துக்குடுங்க’ என்பார். பெரியமனுசன் கேட்டுவிட்டார். இருந்தால் ஒருகை வெத்திலையும் ஒரு குத்துப்பாக்கும் கிடைக்கும். இல்லையானால் அதற்குத் தனியாக ஒரு பணம் கைசேரும். சக்கரைப்பட்டியில் வீடு நுழைந்து மாட்டின் கழுத்துச் சதைப்பிடிப்பை நோட்டம்விட்டுக் கொண்டிருந்த சமயம், “லே மனோகரா, ஒழுவாடி மவனே!” என்ற ஒரு கரகரத்த குரல் பாஸை நோக்கி வந்தது. ஒருகணம் விக்கித்துப் போன பாஸ், எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கே எனத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவுதான், நாற்பது வருடத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பேசலானார்கள், அந்த முன்னாள் லோடுமேன்கள் இருவரும். “ஒம்பேர் மனோகருதானப்பா. எனக்குமே மறந்துபோச்சி.’’ “சேச்சே’’ பாஸு தலையைக் குலுக்கினார்.

ஓக்கே பாஸ் - சிறுகதை

“கோயிந்தனா... இல்ல இல்ல, ராசுதான” வயோதிகத்தினை இருவருமே உணர்ந்தனர்.இல்லவே இல்லை எனத் தலையாட்டிய பாஸ், “ஓக்கே பாஸுதான்” என்றார். “க்காள்ளி, இன்னம் அப்பிடித்தே கூப்பிடுறாய்ங்களா” வந்த விவரத்தினைக் கேட்ட சக்கரைப்பட்டியார், ``அட, ஆடி ஓடி கடசீல இங்கனக்கே வந்து சேந்திட்டியா, எப்பிடிடா?” நம்பமுடியாமல் கேட்டார். லோடுமேன் வேலையில் கண்ட பாஸின் கெத்து கம்பீரம், என்னவானது?!

ஆரம்பத்தில் தேனி பஜாரில் லோடுமேன் வேலை பார்த்தவர் ஓக்கே பாஸ். மாவட்டத்தில் விளைகிற நவதானியம், பருத்தி, கரும்பு போன்ற பயிர்வகைகளுக்கு எப்பவுமே தேனிதான் மையமான வியாபார ஸ்தலம். விவசாயிகளிடமிருந்து வருபவற்றைக் கடையில் இறக்கிப் போடவும், விலையானதை வியாபாரிகளுக்கு எடைபோட்டு லாரியில் ஏற்றிவிடவும் லோடுமேன்கள் தேவைப்பட்டார்கள். சில பெரிய வியாபாரிகள், மில் முதலாளிகள் தமக்கென பிரத்தியேகமாக லோடுமேன்களை `வைத்து’க்கொண்டார்கள். அந்த வகையில் ஓக்கே பாஸும் ஒரு முதலாளிக்கு லோடுமேனாகப் போய் அடியாளாகப் பதவி உயர்வு பெற்றவர். முதலாளி எங்கே போனாலும், இந்த அடியாள் படைதான் முன்னே செல்லும். ‘தண்ணி வெண்ணிக்கு’ கவலை இல்லை. இவர்களுக்காகவே கரட்டுப்பட்டியிலிருந்து நல்லக்காள் சுடச்சுட சாராயம் காய்ச்சி வேடு கட்டிக்கொண்டு வருவாள். ஆத்துப்பட்டிக்குப் புதுசாக வரும் பெண்களைப் பழக்கிவிடுவதற்கும் பொலிகாளைகளாக அடியாள்கள் உபயோகப்பட்டனர்.

காலம் எப்படி எப்படியோ ஓடி கமிசன் கடைகள், ஜின்னிங் பாக்டரியெல்லாம் வலுவிழந்துபோக, கடைசியாக ஒரு பெரிய ஓட்டலில் மாவாட்டிக் கொடுத்து வந்தார். இப்போது முத்துராசு கறிக்கடையில் விலைபேசிய மாடுகளைத் தொழுவத்துக்கும் அங்கிருந்து கடைக்கும் ஓட்டிக்கொண்டுவரவும், உரித்த மாட்டெலும்புகளை வெட்டிக் கூறுபோடவும் தினசரி சேகரமாகும் கொழுப்புகளைக் காயப்போட்டு எண்ணெயாகக் காய்ச்சவுமான பணிகளைச் செய்துவருகிறார். அதிகாலை மூணரை மணிக்கெல்லாம் முத்துராசுவின் சம்சாரம் கடையை சாணி தெளித்துக் கூட்டி சுத்தம் செய்து மஞ்சள்பொடி கரைத்துத் தெளித்து மங்களகரமாய் பத்திப்புகை கமழ கல்லாவில் உட்கார்ந்து வெத்திலை மென்றுகொண்டிருப்பாள். சுத்தியலும் கத்திகளும் வெட்டுக்கட்டையில் அப்புராணியாய்க் கிடக்க, தொழுவத்திலிருந்து இரவில் அவிழ்த்துவந்த மாடு வாசலில் அசைபோட்டபடி நின்றுகொண்டிருக்கும்.

மாடறுக்கும் பெருமாள் சைக்கிளில் வந்து இறங்கியதும் மாட்டை அவிழ்த்து கடைக்குள் ஓட்டிச்செல்வதும் கழுத்தறுபட்டு தரையில் சிந்துகிற ரத்தத்தை உடனுக்குடன் விளக்குமாற்றால் தள்ளிவிடுவதும், சதை களையப்பட்ட எலும்புகளை வெட்டுக்கட்டையில் கொடுத்து மாங்குமாங்கென வெட்டிக் குவிப்பதும் பாஸுவின் காலை வேலை. பகலில் மாட்டெலும்பு, தலை, பிதுக்கிய சாணம், இவற்றைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று குப்பையில் சேர்ப்பது எனப் பொழுது சரியாய்ப் போகிறது. இதுபோக பக்கத்து ஊர்களில் மாடு எதும் அமைந்தால், மூக்கணாங்கயிறு போட்டு கைராத்தலாய் நடத்திக் கொண்டோ சைக்கிள் ஏறி உருட்டியபடியோ மாட்டை, முத்துராசுவின் தொழுவத்தில் வந்து சேர்த்துவிடும் வேலையும் உண்டு. அன்றைக்கு முத்துராசுவுக்குக் கூடுதலாய் ஒரு குவாட்டர் செலவாகும்.

ஓக்கே பாஸ் - சிறுகதை

“பிள்ள குட்டீக?” சக்கரைப்பட்டியார் மோவாயைச் சொறிந்தபடி கேட்டார்.அப்போதுதான் ஞாபகம் வந்ததுபோல யோசித்தார் பாஸு.

யாரைச் சொல்வது. மூன்றுபேர் ‘நான்தான் உறுத்தான சம்சாரம்’ என மல்லுக்கட்டுவார்கள். லோடுமேனாய் இருக்கும்போது எல்லாம் சரியாக இருந்தது. ‘ஏ வீட்டுக்கு வரல’, ‘ஓ வீட்டுக்கு வரல’ எனக் கூப்பாடு போட்டு குடுமிப்பிடி சண்டை நடக்கும். இப்போ? வழிப்போக்காய்ப் பார்த்துக்கொள்வதும் சேப்பிலிருக்கும் காசைக் காலிசெய்வதற்கும் வாரிசுகளோடு யார்யாரோ வந்துபோகிறார்கள். “இருக்காக!” அந்த வீட்டில் ஏவாரம் படிய கொஞ்சம் இழுத்தது. நடுத்தரமான பசுதான். இரண்டு ஈத்துக்கு பால் சுகமில்லையாம். தவிர, நாலைந்துதரம் சினைக்குப் போட்டும் சினை நிற்கவில்லையாம். வெட்டித்தீனி போடமுடியுமா? சதைப்பிடிப்பாக இருந்ததால் முத்துராசுவுக்கும் விட்டுவர மனசில்லை.

கடேசியில் சக்கரைப்பட்டியார்தான் நடுவில் புகுந்து விலை திகைத்து விட்டார். பணம் கைமாறியதும் பிடிகயிற்றை அவிழ்த்துக்கொண்டு மாட்டை ஓட்டிவிட்டார்கள். முத்துராசு கொண்டுவந்த புதுக்கயிற்றை வாங்கி மூக்கணாங் கயிற்றோடு சேர்த்துப் பிணைத்துக் கொண்டார் பாஸ். “டெம்போ கொண்டாரவா?” வழக்கம்போல முத்துராசு கேட்டான்.“வாணா வாணா. இத, டெம்போவுல ஏத்தி எறக்கற நேரத்தில நா வீட்டுக்குப் பத்திட்டு வந்திருவேன்.” முத்துராசுவை யோசிக்க விடாமல் பசுவை சைக்கிளில் கட்டும் வழியைத் தேடினார்.

ஆனால், வலுவான பசுவாக இருந்தது. எத்தனை வலுவான பசுவும் சாதுவாகத்தான் வரும். ஆனால் இந்த உருப்படியின் ஆகிருதி பாஸுவை யோசிக்க வைத்தது. சைக்கிளை சக்கரைப்பட்டியாரது வீட்டில் நிறுத்திய பாஸ், முத்துராசுவிடம் கூலியை வாங்கிக்கொண்டு மாட்டின் வாலை முறுக்கிப் பத்தலானார். எட்டு மைல் தூரம்தான். இங்கே ஒண்ணு, அன்னஞ்சி விலக்கில் ஒண்ணுமாய் ரெண்டு கட்டிங் இழுத்தால் போதும். மாடு தொழுவத்தில் போய்ச் சேர்ந்துவிடும். வேட்டியை தார்ப்பாய்ச்சலாய்க் கட்டிக்கொண்டு, துண்டை உருமாலாய்த் தலையில் சுற்றிக்கொண்டு மாட்டுடன் நடக்கலானார். ஒரே வேக்காடாய் வெந்து கொதித்தது பூமி. இத்தனைக்கும் வைகை அணை பக்கத்தில்தான் இருக்கிறது. பெரியமரங்கள் ஏதுமில்லை. குத்துச்செடிகளும் கருவ, முருங்க மரங்கள்தான் அதிகம். அதுவும் அவரவர் வீட்டுக் கொல்லைகளிலும் முன்புறத்திலும் நிழல்வேண்டி வளர்த்திருந்தனர்.

ஏதோ ஒருவீட்டில்தான் வேப்பமரமும், தேக்கும் நின்றிருந்தன. ஆட்டுக்குட்டியாய் பசு உடன் வந்தது. அதிகமாய்ப் பாடுவாங்கவில்லை. பள்ளிக்கூடம் போகும் பிள்ளைபோல அன்னநடை போட்டு நடந்தது. சைக்கிள் கேரியரில் பிடிகயிற்றைக் கட்டியே வந்திருக்கலாம், இனி சைக்கிளை எடுக்க ஒருதரம் சக்கரைப்பட்டிக்கு வரவேணும். வெத்திலை போடவேணும்போல பாஸுக்கு வாய் நமநமத்தது. ஏழெட்டு வருசமாய்த்தானே டெம்போ வருகிறது. ஐம்பது மைல் என்றாலும் முன்னெல்லாம் மாடுகன்றுகளை நடத்தியேதானே கூட்டிவருவார்கள். அதற்கென ஊரூருக்கு மாடோட்டிகள் கருத்த உடம்புடனும் புழுதி படிந்த முகத்துடனும் திரிவார்கள்.இரவு பகல், வெயில் மழை பார்க்காமல் மாடுகளை அழைத்து வருவார்கள். சினைமாடுகளை ஓட்டிவருகையில் வழியிலேயே பிரசவித்து கன்றினைத் தோளில் சுமந்து வரும் காட்சிகளை எல்லாம் பார்த்த காலம் உண்டு. அன்னஞ்சி விலக்கு வந்ததும் உடம்பு விரைப்புக் காட்டியது. வெத்திலையும் போடவில்லை. சும்மாவெல்லாம் போடமுடியாது. மாட்டை ஒயின்சாப்புக்குப் பக்கமாய் ஒரு மரத்தில் கட்டிப்போட்டார். மரத்தடியில் பச்சை கிடந்தன. அவற்றை மேய்ந்துகொள்ளும் வண்ணம் கயிற்றை கொஞ்சம் தளர்வாய் விட்டுக் கட்டினார். தான் வருகிறவரை ரெண்டு புல்பூண்டுகளைக் கடித்துக் கொள்ளட்டும்.

நாளை இந்நேரம் எத்தனை பேர் வயிற்றுக்குள் இரையாய்ப் போய்ச் சேரப்போகிறதோ. மனுசனுக்குக் கருணை பொங்கிவர, எட்ட இருந்த செடிகளைப் பிடுங்கி மாட்டின் வாயருகே போட்டுவிட்டு, கடைக்குள் நுழைந்தார். உள்ளே போனாலும் ஒருகண் மாட்டின் மீதே நின்றது. ரோட்டில் போகும் கார், பஸ் சத்தத்துக்கு மிரண்டு மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடும். லேசாகத் தண்ணிகலந்து `வேலையை’ முடித்தவர், மடியிலிருந்த வெத்திலையை எடுத்துக்கொண்டு மாட்டருகே வந்தார்.

மாடு குலைகடிக்காமல் அவரையே பார்த்தது. “தண்ணி வேணுமா” மாட்டிடம் கேட்டவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் குளம் குட்டை ஏதும் இல்லை. ஓட்டல்களில் கழுவுதண்ணீர் வாங்கித் தரலாம், தோதுப்படுமாவென விளங்கவில்லை. அவ்வளவு தாராள மனசு இப்பவெல்லாம் இருக்குமா எனச் சொல்லமுடியாது. ‘கொஞ்சதூரந்தான், அரமணி நேரத்துல தொழுவத்துக்குப் போய்டலாம்’ சொல்லிக்கொண்டே கயிற்றை அவிழ்த்தார். தனக்கே இன்னொரு பாட்டில் வாங்கவேண்டும். நடக்கும் வழியில் ரெண்டுமூணு கடைகள் வரிசையாய் இருப்பதால் ஸ்டாக்கெல்லம் வைக்க வேண்டியதில்லை. ஊரை நெருங்கும்போது சுடச்சுட வாங்கி இழுத்துக்கொள்ளலாம். வெத்திலை போட்டுக் கொண்டே நடக்கலானார்.

ஓக்கே பாஸ் - சிறுகதை

பைப்பாஸ் ரோட்டை விலக்கி ஊருக்குச் செல்லும் பாதையில் மாடு கொஞ்சம் தவங்கியது. முன்னேபோய் இழுத்துப் போக வேண்டி வந்தது. “பாதைமாறி நடப்பதை உணர்ந்து மாட்டின் நடையில் தேக்கம் இருப்பதாய் அவதானித்த பாஸ், கொஞ்சம் அருகில்வந்து அதன் புட்டத்தைத் தட்டிக்கொடுத்தார் “ஹோஹோ.” இன்னும் முன்னேறி அதன் கழுத்தை அணைத்தவாறு நடத்தினார். ‘ஏதாவது உண்ணக் கொடுத்தால் அதன் மனநிலை மாறும் என நினைத்தவர், சாலைப்பிள்ளையார் கோயிலுக்கு எதிர்ப்புறமிருந்த சேகர் டீக்கடைக்குப் பக்கமாய் மாட்டைத் திருப்பினார். கடைக்கு வெளியில் தகரக்கொட்டகை நீட்டி ப வடிவத்தில் ஸ்டால் போட்டு, பட்டறையில் நின்றிருந்தாள் சேகரின் சம்சாரம்.

சேகர் இதேரோட்டில் லாரி அடித்து செத்ததுக்குப் பிறகு அந்தப்பிள்ளைதான் முழுப்பொறுப்பாய் கடை நடத்துகிறது. “வா பெருசு, ரெம்ப நாளைக்கப்பறம் தப்புனாப்பல வார, மாட்ட பந்தக்கால்ல கட்டிப் போட்றாத, பந்தலச் சாச்சுப் புடும். ந்தா, ந்திப்பிடி புளியமரத்துல கட்டிப் போடு” அவளுக்குப் பின்புறத்தில் இரண்டுபேர் தரையில் குழிபறித்து அடுப்புபோட்டு, பெரிய வடச்சட்டியில் வடைகள் பொரித்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் சட்டிகழுவிய கழுநீர்த் தண்ணீர் குடத்திலும் சட்டிகளிலும் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தன. அதைக் கண்ட பாஸ், “மாட்டுக்கு ஒருவா, தண்ணி வேணும். ரெம்ப தூரம் நடந்து வருது.” எனக் கேட்டார்.

“அப்பன்னா நீ டீ குடிக்க வரலியா? ஓசித் தண்ணிக்குதே வந்தியா, வாடிக்கையா ஒருத்தி கொடத்த வச்சிட்டுப் போறாளே!” பேசியபடி பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.“பசுமாட்டுக்குத் தண்ணி குடுக்கறது புண்ணியம்மா” தலையை ஏத்திச்சீவி, நெத்தியில் அகலமான பொட்டு வைத்திருந்த ஒரு ஆள் வடையை மென்றபடி சொன்னான்.“அப்பிடியா? அப்படினா டெய்லி ஒரு தண்ணிலாரிய நிறுத்திவச்சு, போறவாற மாடுகளக் குளிப்பாட்டிவிட்டு நீயே தண்ணி காட்டலாம்லப்பா. என்னிய எதுக்கு செய்யச்சொல்ற!” என்றவள், குடத்திலிருப்பதை விட்டுவிட்டு ஏனைய பாத்திரங்களில் இருக்கும் நீரை எடுத்துக்கொள்ளச் சொன்னாள். மாடு வெகு ஆவலாகத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்த மாட்டைப் புளியமரத்தில் கட்டிப்போட்டுவிட்டு வடையை எடுத்துப் பிய்த்துத் தின்னலானார் பாஸ். ஓசித்தண்ணி எனச் சொல்லிவிட்டாளே!

“பெஞ்சீல ஒக்காந்து தின்னு பெர்சு. விக்கிக்கிடப் போவுது. டீ போடவா!” அடுப்பிலிருக்கும் பாலை ஆடை படியாமலிருக்க எவர்சில்வர் கப்பால் மொண்டு ஆற்றினாள். வடையை வாயில் அதக்கிக்கொண்டிருந்த ஓக்கே பாஸ் டீ வேண்டாமென சைகையில் சொன்னார். “ஏன், போத எறங்கீருமாக்கும்?”வடையை முழுங்கிய பாஸ், தண்ணீரும் குடித்துக் கொண்டார். காசை நீட்டியபோது. “மாடு வளப்புக்கா, கறிக்கா?” பாக்கியை ஈரக்கையுடன் தந்தபடி கேட்டாள்.

“கறிக்குத்தே.”

“கறிக்கா? எம்புட்டுத் தெனாவெட்டா கறிக்குன்னு சொல்லுவ? எதோ தமிழ்நாடுங்கப் போயி தப்பிச்சிக்கிட்ட. இதேது வடநாடா இருந்தா இந்நேரம் ஒன்னிய கறியாக்கிக் கூறுபோட்டு இருப்பாய்ங்கெ” என ஆவேசமாய்ப் பேசினார், அந்த அகலப் பொட்டுக்காரர். “ஆகாத மாட்ட வச்சு குடும்பமா நடத்துவாக’’ பாஸுக்காகக் குரல் கொடுத்தாள் சேகர் சம்சாரம். “அப்புராணி சீவன்ங்கறதனாலதான அடிச்சுக் கொல்றீக. சிங்கம் புலிய கொன்னு திங்கலாம்ல.” “கூமுட்டத்தனமா பேசக்கூடாது. மனிசன அண்டி நிக்கிறதாலதே ஆடு மாடு கோழியெல்லா வீட்டுக்குள்ள வச்சு வளக்குறம்... நாய்லகூட காவக்காக்குற நாய்க்கு மட்டுந்தே வீட்ல கஞ்சி. மத்ததெல்லா மண்ண நக்கித்தாஞ் சாகும் தெரியும்ல?” சொன்னவள், ``மனுசனுக்கு ஒதவாத எதுவும் மந்தைலகூட நிக்கமுடியாதுயா” என்றபடி, பொரித்த வடைகளை வாங்கி காலியான தட்டுகளில் பரப்பலானாள். அப்போதுதான் ஓக்கே பாஸுக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

புளியமரத்திலிருந்து மாட்டைக் கழற்றி ரோட்டுக்கு ஏற்றியபோது எதிர்ப்புறமாய் வந்த ஒரு மோட்டார் சைக்கிள்காரன் வேகமாய் வந்து மாட்டின் புட்டத்தில் மோதி, குப்புற விழுந்தான். அடிபட்ட மாடு துள்ளிப்பாய்ந்து ஓடமுயன்றது. ஓக்கேபாஸ் கயிற்றைக் கையில் வடம்போல இறுகச் சுற்றியிருந்ததால் விசும்பி முன்னே ஓடமுடியாமல் திரும்பித் தாவியதில் பாஸைக் கீழேதள்ளிவிட்டு ஓடியது. அப்போதும் பாஸ், மாட்டின் பிடிகயிற்றை விடவில்லை, மேலும் இறுக்கமாக்கிக்கொண்டார். மாட்டின் பின்னங்கால்கள் அவரது முகத்தை உதைத்ததில் கன்னச் சதை கிழிந்தது. கூடவே அவர் கயிற்றை விடாதபடியால் தரதரவெனத் தார்ரோட்டில் அவரை இழுத்துச் சென்றது.

கடையில் இருந்தவர்கள் குய்யோமுறையோ வெனக்கூவி ஓடிவந்து மாட்டின் ஓட்டத்தைத் தடுத்தனர். பாஸைத் தூக்கி நிறுத்தினர். ஓராள் மாட்டை பாஸிடமிருந்து வாங்கி மரத்தில் கட்டிப்போட்டான். இரண்டுபேர் மோட்டார் சைக்கிள்காரனைச் சூழ்ந்துகொண்டனர். மோட்டார் சைக்கிள்காரன் காலை நொண்டியபடியே வந்து மன்னிப்பு கேட்டான். ``ஸாரி தாத்தா. ஸாரி ஸாரி.” “என்னடா சாரி நோரி. பைக்குல வாரவனெல்லா பிளேன்ல பறக்குறமாதிரிதான ஓட்றீக.” யார் யாரோ திட்டினார்கள். அவன், பாஸை ஆஸ்பத்திரிக்குக் கூப்பிட்டான். ‘காயம் ஆறுகிறவரை அவரைக் கவனித்து நஷ்ட ஈடு தரவேண்டுமென ஓராள் தீர்ப்புச் சொன்னான். பாஸ் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை என்றார். கன்னம் கிழிந்ததில் முகமெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகால்களின் முட்டியில் சிராய்ப்புகள் தோலுரிந்து எரிச்சல் தந்தன. சேகரின் சம்சாரம் தண்ணி கொண்டுவந்து வைத்து ஒரு டீ போட்டும் தந்தாள். மோட்டார் சைக்கிள்காரன் இருநூறு ரூபாயை பாஸின் சட்டைப்பையில் வைத்துவிட்டு இன்னும் நாலு ஸாரிகள் சொல்லிவிட்டுப் போனான்.

“ஏம்பெருசு, கொஞ்சமாச்சும் கூறு வேணாமா, அத்தாம் பெரிய மாடு துள்ளுதே, சட்டுனு கயத்த விடமாட்டாம பெரிய சினிமா ஈரோ மாதிரி இழுத்துப் பிடிச்சிட்டிருக்கியே! எதோ நல்லநேரம் தாண்டீருச்சு. நறுக்குன்னு ஒருமிதி மிதிச்சிருந்தா கொடல் குந்தாணியெல்லாம் இந்நேரம் வெளில வந்திருக்குமே.” சேகரின் சம்சாரம் அடிப்பதுபோல கையை ஓங்கிவிட்டு கடைக்குள் ஏறிக்கொண்டாள்.“விட்ருந்தா, பதினஞ்சாயிரமுஞ் சேத்து ஓடிரும் மகளே. கடக்காரனுக்கு யார் வதுல் சொல்வா?” என்ற சமயம் தகவலறிந்து முத்துராசு வந்துவிட்டான். “இதுக்குத்தான் நா டெம்போ வச்சுக்கலாம்னே” எனப் புலம்பியவன் உடனழைத்து வந்திருந்தவனிடம் மாட்டைக் கொடுத்து ஓட்டிக்கொண்டு போகச் சொன்னான்.முத்துராசுவின் அழைப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை என்றார் பாஸ். “நா, என்னிக்கியா ஆசுப்பத்திரியெல்லாம் போனே. விடு, சரியாப்போகும்.” தலையில் கட்டியிருந்த உருமாலைக் கழட்டி உதறி அதிகமாய் வழிந்த ரத்தத்தைக் ஒற்றியெடுத்தார். இப்போது ரத்தம் வருவது நின்றிருந்தது. லேசாக உறையவும் ஆரம்பித்தது. அதேநேரம் வலியும் எரிச்சலும் குறையாததையும் உணர்ந்தார். “நீ போ முத்துராசு. சித்தநேரம் படுத்து எந்திரிச்சேன்னா சரியாப்போகும்” என்றார்.“போட்டுவச்ச டீயக் கூடக் குடிக்க மாட்டேங்கிது ணேய்” என பட்டறையில் இருந்தபடி சேகரின் சம்சாரம், முத்துராசுவிடம் புகார் சொன்னாள்.“குடிச்சுக்கறேன் மகளே” என டீயை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டார். முத்துராசுவும் நூறுரூபாய் தந்தான், வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டு சிமிண்டுத் தரையில் சாய்ந்தார்.

அரைமணி நேரத்தில் அவரது ரத்தசொந்தம் ஒன்று `நைனா’ என்றபடி வந்து எழுப்பியது. கடையில் தண்ணீர் வாங்கி, காயத்தைக் கழுவ எத்தனித்தார். பதனமாக நீரை முகத்தில் அறைந்து கழுவி, துண்டால் ஒற்றிக்கொண்டார். சிராய்ப்புகளில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார். காலைத் தூக்க கனமாய் இருந்தது. உஸ் என ஒரு பெருமூச்சு விட்டபடி மீதமிருந்த தண்ணீரைக் குடித்தார். கொஞ்சம் தெளிச்சி வந்தது. தலையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டார். இன்னமும் சேகரின் சம்சாரம் பட்டறையிலேயேதான் நின்றிருந்தாள். அருகிலிருந்த டீ ஆறிப்போயிருந்தது. அப்படியே எடுத்து அண்ணாந்த வாக்கில் வாயில் ஊற்றிக்கொண்டார். “போலமா” ரத்த பந்தம் கேட்டது. சேகர் சம்சாரத்துக்குக் கும்பிடுபோட்டு விட்டு காலைக் கெந்திக் கெந்தி நடந்தார். “ஆஸ்பத்திரிக்கி கூட்டிப் போப்பா, வயசான காலத்தில வச்சுப் பாருங்க. பெத்த உசுர வீதில அலையவிட்றாதீக” பட்டறையில் இருந்தபடியே குரல் விடுத்தாள்.

`கடைக்குள்’ நுழைந்ததும் நீளமான பெஞ்சியாகப் பார்த்து உட்கார்ந்துகொண்டார். சாய்மானம் போட்டால் நன்றாயிருக்கும் போலிருந்தது. “ரெண்டு கோட்ரு வாங்குடா” காசைக் குடுத்ததும் சாய்மானம் போட்டார். “தண்ணி ஊத்தவா?” கேட்டபடி பாக்கெட் தண்ணீரைப் பீய்ச்சினான். `போதும்’ என்று டம்ளரை வாங்கி ஒரேமடக்கில் குடித்தார். இன்னும் எரிச்சல் இருந்தது. மீதத்தையும் ஊத்தும்படி சைகை செய்தார். பாட்டிலைக் கவிழ்த்தான். எரிச்சலும் வலியும் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. இன்னொரு பாட்டிலை உடைத்து டம்ளரில் ஊற்றச் சொன்னார். ``தண்ணி வேணாம், புண்ணு எடக்கட்டி, சலம் கோத்துக்கும்” என்றவர், தோளில்கிடந்த துண்டின் நுனியில் சரக்கை நனைக்கச் சொன்னார். அதனை அப்படியே காயத்தில் பிழிந்து விட்டான். தீயாய் காந்தியது. ``ஸ்ஸ் ஆஆ” டம்ளரில் இருந்ததை ஒருமடக்கு குடித்தார். கன்னச்சதை முடிந்து கை சிராய்ப்பு, கால் சிராய்ப்புவரை பிழிந்துவிட்டான். நெருப்புக் குண்டத்தில் தூக்கிப்போட்டதுபோல உடம்பு தகித்தது. மீதமிருப்பதைத் தண்ணிகலந்து தரச் சொல்லிக் குடித்தவர். மீதப்பணத்தை அவனிடம் கொடுத்து “நீ சாப்ட்டுட்டுப் போ நா சித்த கழிச்சு வாரேன்” என்றார். உறக்கமும் மயக்கமும் கண்களைச் செருக, நீள பெஞ்சில் மல்லாக்கச் சாய்ந்தார் ஓக்கே பாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism