சினிமா
தொடர்கள்
Published:Updated:

காரான் - சிறுகதை

காரான் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
காரான் - சிறுகதை

ம.காமுத்துரை

குருவம்மாவின் நோவால் வீடே மந்தித்துக் கிடந்தது.

ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வது போல தேளின் கொடுக்காய் அமைந்த குருவம்மாளது கொம்புகள் ரெம்பவும் அழகானவை. திரட்சியான கருங்காலி மரத்தை இழைத்த வடிவான முகமும் அதில் இருபக்கமும் புடைப்பான கண்பட்டைகளும் அதனுள் பாதரசக் குண்டுகளாய் உருளும் கருவிழிகளும், விடைத்து நிற்கும் பட்டாம்பூச்சியின் றெக்கைகளாய் காதுகளும் மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சச் சொல்லும்.

குருவுவின் கொம்புகள் மீது நாகராஜனுக்கு அலாதியான பிரியம். பள்ளிக்கூடம் போகாத, விளையாட சோக்காலிகள் இல்லாத போதில் காடியில் வந்து உட்கார்ந்துகொண்டு குருவுவின் கொம்பைப் பிடித்துக் கொள்வான். பஸ் ஸ்டேரிங்கைப் பிடித்துச் சுழற்றும் போங்கில் இரண்டு கைகளாலும் `விய்ய்ங் விய்ய்ங்’ எனத் திருப்பித் திருப்பி வாயால் பஸ் ஓட்டுவான். குருவு எந்தச் சங்கட்டமும் இல்லாமல் தலையை அவனிடம் தந்துவிட்டு வாயை அசைபோட்டபடி இருக்கும்.

வாரம் ஒருநாள் மத்தியானப் பொழுதில் வீட்டு எருமைகளைப் பூராவும் குளிப்பாட்ட கட்டுத்தரையிலிருந்து அம்மாச்சி அவிழ்த்து விடுவார். கூப்பிடு தூரத்தில் சின்னக்குளம். எருமைகள் தானாக நடந்து போய் குளத்தில் விழுந்து புரண்டு சாவதானமாய் எழுந்து வரும். உடம்பினைத் தேய்த்து விட, அப்பா போவார். சிலசமயம் நாகராஜனை அனுப்பி வைப்பதும் உண்டு. அவிழ்த்து விட்டதும் குருவுதான் அத்தனை எருமைகளுக்கும் முன்னால் ஓடும்.

காரான் - சிறுகதை

அன்றைக்கு ஒருநாள் நாகராஜன் குருவுவின் முதுகில் யானைச் சவாரி ஏறி குளத்திற்குப் பயணித்தான். கையில் ஸ்டேரிங்கைப் பிடித்துகொண்டான். திருப்புகிற பக்கமெல்லாம் குருவு திரும்பியது. அந்த உற்சாகத்தில் குளத்துக்குள்ளும் ஸ்டேரிங்கைத் திருகினான். தண்ணீர்ச் சுகம் கண்டதும் ஸ்டேரிங் வேலை செய்யவில்லை. குருவு தன்னிஷ்டமாய் சரசரவென குளத்தினுள் மிதக்கத் தொடங்கினாள். நாகராஜனுக்கு நீச்சல் தெரியாது. குளத்தின் கரையிலிருந்து நொடிப்பொழுதில் ஆழத்திற்குப் போய்விட்டது. கரையே தெரியவில்லை கடலாய்த் தெரிகிறது. குண்டிவரை ஈரம். டவுசரெல்லாம் நனைந்துவிட்டது. இறங்க வழி தெரியவில்லை. விழுந்தால் அவ்வளவுதான். குளத்தில் தண்ணீர்ப் பாம்புகள் அதிகம். நாகராஜனுக்கு பயத்தில் கண்கள் நிலைக்குத்தி நின்றன. “ஐயய்யோ ஐயய்யோ” என குருவுவின் முதுகிலிருந்தபடி அலறினான்.

குளத்தில் வெளிக்குப் போய்க்கொண்டிருக்கிற பெரியாட்கள் நிகழ்வின் விபரீதம் கண்டு பதறினார்கள். “எறங்கீராதடா, கொம்ப விட்றாத. கால முதுகில கிட்டி போட்டுப் பிடிச்சுக்க, எருமத் தலைய முங்க விட்றாத” எனக் கரையிலிருந்தபடி உரத்துக் குரல் தந்தார்கள்.

குளத்தில் குதித்துக் காப்பாற்ற எண்ணமிருந்தாலும் சகதி கூடுதலாய் இருந்தது. அதுவுமில்லாமல் நீர் வற்றிய காலத்தில் செங்கல் காளவாசலுக்காக வண்டிக்காரர்கள் கரம்பை மண் அள்ளுவதால் வெட்டுக்கிடங்குகள் அதிகம். எந்த இடத்தையும் நம்பிக் குதிக்க முடியாது. `பய, எருமய விட்டு நழுவாம இருந்தாப் பொழச்சுக்குவான். வழுக்கி விழுந்தா வெட்டுக்கிடங்கில பொதைய வேண்டியதுதான். தண்ணி வத்திய பெறகுதான் கண்டுபிடிக்க முடியும்.’ ஆளுக்காள் ஜாதகம் கணித்தனர். ஒருத்தர், ரெண்டு பேர், நாலு பேர் எனக் குரல்கள் பலவாயின, பதறின.

நாகராஜனுக்கு எதுவும் கேட்கவில்லை. அவன் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம். இரண்டு கொம்புகள், கால்களை நனைத்து அலையடிக்கும் பரந்து நெளியும் தண்ணீர்க் கடல். “ஐயய்யோ ஐயய்யோ”வை மட்டும் விடாது முழங்கினான்.

குருவு தன் உடலை அசைக்காமல், தலையை முங்காமல், ஒரு படகினைப் போல நாகராஜனுக்குக் குளத்தின் நீள அகலங்களைச் சுற்றிக் காண்பித்துக் குளத்தினுள் வளைய வந்தது. கிழக்கும் மேற்கும் தெற்கும் வடக்குமாய் திசைகளை அளந்துவிட்டு, கரையோரத்து நீரில் வந்து மற்ற மாடுகளோடு படுத்தது. அவ்வளவுதான், கால் நடுங்க, கை உதறல் எடுக்க, தத்தித் தத்திக் கீழே இறங்கிய நாகராஜன், குருவுவின் முதுகில் ஒரு உதை கொடுத்துவிட்டு ஓட்டமாய் வீட்டுக்கு ஓடி வந்தான். அன்றைக்கு யாரும் மாடுகளுக்கு உடம்பு தேய்க்கப் போகவில்லை. மாடுகள் ஆசை தீர நீரில் புரண்டு எழுந்து, குளியலை முடித்துச் சாவதானமாக நடந்து வீடு வந்து சேர்ந்தன

வீட்டில் மொத்தம் நாலு எருமைகள் இருந்தன. தாத்தாவின் மறைவுக்குப் பிறகு மூணு குழி கரட்டுக் காடோடும் ஒரு பதக்கச் சங்கிலியோடும் இரண்டு தண்டட்டியோடும் எங்களோடு தன்னை இணைத்துக்கொண்ட அம்மாச்சிதான் குருவம்மாளை அதன் கிடாரிப் பருவத்தில் அழைத்து வந்தார்.

``வெத்து மாட்டுக்குத் தீனி புடுங்கிப் போடுறத விட கூடுதலாக ஒரு பால்மாட்டைச் சேர்த்துக் கிட்டா குடும்ப வருமானம், காப்பிச்செலவு பால்செலவு அடிச்சுப் போகும்ல மணி” என அப்பாவுக்கு ஆலோசனை சொன்ன மாரியப்பக் கோனார் கூடுதலாய் சாம்பல் நிறத்திலான ஒரு எருமையைப் பிடித்து வந்து வீட்டுக்குள் முளைக் குச்சி அறைந்து கட்டிவிட்டார்.

“காலையில ரெண்டரைப் படி, சாயந்தரம் ரெண்டேகால்ப் படிக்குக் கொறையாது, பாலைக் கறந்து பார்த்துட்டு மாட்டுக்கு பணத்தக் குடுத்தாப் போதும்” என்றார். அம்மாவுக்குப் பசு மாட்டின் மேல்தான் கண் இருந்தது. `கோமாதா எங்கள் குலமாதா’ என்ற பாட்டு பிரபல்யமான நேரம்.

``அதெல்லா பகுமானத்துக்கு வளக்குறது தாயி!” என ஒரே வார்த்தையில் அடித்துச் சொல்லிவிட்டார். ``எருமதா அம்மள மாதிரி சம்சாரிப் போங்குக்கு ஏத்தது. எதப்போட்டாலும் கழிக்காமத் தின்னுட்டு செவனேன்னு படுத்து எந்திரிக்கும். ஆடைக்கும் கோடைக்கும் அதுவாட்டுக்குத் திரியும். பெர்சா பண்டுவம் பாக்க வேண்டிதில்ல. மாடுக பார்வைக்கிப் பெருமூட்டாத் தெரிஞ்சாலும் பச்சப்புள்ள மாதரி பழகும். சின்னப்புள்ள கைல புடிச்சுக் குடுத்தாலும் அதுவாட்டுக்கு நாய்க்குட்டியா நடந்து வரும். வெரளாது, மெரளாது. பாலும் தாராளமாக் குடுக்கும். பசும்பாலவிட வெல கூடுனது - ஒரமானதில்லியா இது?” அப்படி இப்படிப் பேசித் தொழுவம் கூட்டிவிட்டார்... வீட்டில் நாலு எருமை மாடுகள் சேர்ந்தாலும், குருவுக்கே முதல் மரியாதை. மற்ற மாடுகள் பூராவும், வருவதும் நல்ல விலை கிடைத்தால் போவதுமாக காடி மாறிக்கொண்டே இருந்தன. வீட்டில் தாயும் கன்றுமாய் கிழக்கோரம் குளுதாணி சகிதமான காடி குருவம்மாவுக்குத்தான். அதற்கடுத்தடுத்த காடிகள் ஏனைய மாடுகளுக்கு.

இந்த இரண்டு மாத உடல் மெலிவில்தான் பண்டுவம் பாக்கத் தோதுவாய் வாசல் பக்கம் பிடித்துக் கட்டப்பட்டிருந்தது.

தொழுவத்திற்கு எதிர்க்க ஒடிசலான பட்டாசாலையும், இரண்டு அறைகளும், பட்டாசாலையின் முனையில் அடுப்படியும்தான் மொத்த வீடு. வாசல்கதவைத் திறந்தாலே மாடுகள் முகத்தில்தான் முழிக்க வேண்டும். தெருவில், எருமைக்கார வீடு என்ற பெயரும் அமைந்துவிட்டது.

தினசரி வாடிக்கைப் புல் இரண்டு கட்டு வந்து விழும். மந்தத் தோட்டத்தில் சோளத்தட்டை படப்பு ஒன்று இருக்கிறது. பகலில் பச்சைப்புல்லும், ராத்திரி கடிப்புக்கு ரெண்டுகட்டு சோளத்தட்டையை வெட்டி காடி நிரப்பினாலும் போதும். கழுநித் தண்ணிதான் பத்தவில்லை. குழாய்த் தண்ணியில் தவிடு, புண்ணாக்கு கலந்து போட வேண்டியிருக்கிறது.

காரான் - சிறுகதை

நாலு மாடுகளிலும் குருவுவின் நடவடிக்கை தனியாக நிற்கும். அடுத்த மாட்டை இடைஞ்சல் செய்யாது. தனக்குப் போட்டதை மட்டும் கடிக்கும். பக்கத்துக் காடியை எட்டிப் பார்க்காது. எக்கி இழுத்துப் போடாது. ஒவ்வொரு மாடாக தண்ணிக்கு விடும்போது அடித்துப் பிடித்து முன்னால் வராது. தண்ணீரை நன்கு அலசி முங்கிக் குடிக்கும். அடியில் கிடக்கும் தவிட்டைக் கழிக்காமல் அள்ளித் தின்றுவிடும். அதுபோல சாணியைப் போடும்போதும் குறுக்கே மறுக்கே போட்டு அதன் மேலே படுக்காது. தொழுவத்தைக் கழுவிவிடத் தோதுவாய் எட்ட நின்றுதான் மூத்திரம் பெய்யும். இந்தக்குணம் அம்மாச்சியை உருகச் செய்யும்.“பொறுப்பான குடும்பத்துக்காரி!” அடிக்கடி குருவுவிடம் வந்து எதாவது பேச்சுக் குடுப்பார்.

அரைப்பரீட்சை லீவில் குருவு, தனது நாலாவது ஈத்தினை எடுத்தது. பெண் கன்று! அன்றைக்கு வீடே குதூகலத்தில் மிதந்தது.

குறிப்பாக அம்மாவுக்கு முகத்தில் சிரிப்பாணியை மறைக்க முடியவில்லை. அவரது கலியாணத்தில்கூட இவ்வளவு சந்தோசமாக இருந்திருப்பாரா எனத் தெரியவில்லை.

அதுவும் இந்த ஈத்தை அம்மாவும் அம்மாச்சியுமே தனியாய் நின்று பண்டுவம் பார்த்தார்கள். அன்று காலையில் பால் கறக்கும் நேரத்திலேயே குருவுவின் அரையில் மாற்றம் தெரிந்தது. அம்மாச்சி கோனாருக்கு சூசகமாக “வெளீல எங்குட்டும் போய்றாதீக. குருவுக்கு கால்ல ஒளச்சல் பாஞ்சிருக்கு” என்றார்.

மற்ற மாடுகளை அவிழ்த்து இடம் மாற்றினார்கள். கழிசலும் நீரொழுக்கும் கனைப்பும் தொடங்க, அம்மாவும் அம்மாச்சியும் கதவைச் சாத்திக்கொண்டு பிரசவத்தை எதிர்கொள்ளத் தயாரானார்கள். முதல் மாசி வெளிப்பட்டதும், அம்மாச்சியே கோனார் வீட்டுக்கு ஓடினார். அவர் வீட்டிலில்லை. வந்ததும் அனுப்பி வைப்பதாக சம்சாரம் சொன்னார். ஒவ்வொரு ஈத்துமே மாரியப்பக் கோனார்தான் வந்து பார்ப்பார். அது பகலென்றாலும், நட்டநடுச் சாமமானாலும் அழைத்த நேரத்தில் வந்து நிற்பார்.

முதல் மாசி கழன்றதும் தடாபுடாவென கால்மாற்றி உழன்ற குருவுவைத் தடவிக் கொடுத்தும் தட்டிக்கொடுத்தும் பதற்றப்படவிடாமல் அருகில் நின்று ஆசுவாசப் படுத்தினார்கள். ஒரேமுக்கில் சளக்கென தலையையும் காலையும் வெளித்தள்ளியதும். அம்மாவுக்கு விருமுட்டி அடித்தது. அம்மாச்சி சமயோசிதமாய் தண்ணீர்க்குடம் உடைத்துத் தலையை வாங்கினார். அம்மாச்சி பக்கத்தில் இருந்ததால் அம்மாவின் பாடு சுலபமாயிற்று. அம்மாவுக்குக் கால்களையும் தலையையும் ஒரு சேர வாங்கும் பக்குவம் இருந்தாலும், தண்ணீர்க்குடம் உடைப்பதில் உள்ள பயம் தீரவில்லை.

கோனார் வருவதற்குள் கன்றை அரையிலிருந்து வாங்கித் தரையில் இறக்கிவிட்டனர், கன்றின்மீது படர்ந்திருந்த அக்கியை குருவு, நக்கிக் கொண்டிருந்தது. கோனார் வந்ததும் தொப்புள் கொடியை அறுத்து, கால்குளம்புகளில் மேவியிருந்த கசடுகளைக் கிள்ளி தாய்க்கு உண்ணக் கொடுத்தார். முறுக்கு கடிப்பதுபோல மொறுமொறுவென மென்று தின்றது. அக்கியும் கால்குளம்பும் பிரசவத்து அசதியைப் போக்குமாம்.

மாட்டின் அரையில் வழிந்த கசடுகளை ஒதுக்கி, அப்பா வாங்கிவந்த ஓலைக் கொட்டானில் சேமித்து ஓரமாய் வைத்துவிட்டு, அம்மா தந்த வெந்நீரால் மாட்டைக் குளிப்பாட்டிவிட்டார் கோனார். அம்மாச்சி மடமடவென மாட்டுக் கொட்டத்தைக் கழுவிச் சுத்தம் செய்ய, பால் சுரந்து விடைத்து நின்ற காம்புகளைக் கன்றின் வாயில் வைத்துச் சுவைக்க விட்டார். அம்மாவிடம் சட்டியை எடுத்துத் தரச்சொல்லி, சட்டி பொங்க சந்தனக் குழம்பாய்த் தகதகத்த சீம்பாலைக் கறந்து கொடுத்தார்.

அம்மா பாலைக் காய்ச்சி வெல்லம் போட்டுக் கிண்டியது, பால்கோவா போல திரள்திரளாக கெட்டிப்பட்டு வந்தது. அதற்குள் நாகராஜனும் தம்பியும் குளத்தோரம் ஓடி எருக்கலம் இலைகளைப் பறித்துக் கொண்டு வந்தனர். சாமி கும்பிட்ட திரட்டுப் பாலை எருக்கலம் இலையில் வைத்து, தெருப் பிள்ளைகளுக்குப் பூராவும் பந்தி வைத்தனர். அதற்குள் அம்மாச்சி குளிப்பாட்டிய மாட்டையும் கன்றையும் செந்துருக்கப் பொட்டும், நீலப் பொடியும் வைத்து அலங்கரித்திருந்தார். சாம்பிராணிப் புகை போட்டு வீட்டையே கமகமக்கச் செய்தார்.

தெருவிற்குள் செய்தி பரவிய வேகத்தில், “என்னா பிச்ச, குருவம்மா புள்ளயப் பெத்துட்டாளாம்ல?” பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் அம்மாவைக் குசலம் விசாரிக்க வந்து கன்றைப் பார்த்துப் போகலானார்கள்.

கொட்டத்தோரமாய் நந்தியைப் போல கெம்பிரிக்கமாய் தலையை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் மடித்து, உட்கார்ந்திருந்த கன்றின் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. பளிங்கான் குண்டாய் ஈரம் மின்னிய கண்களும், எருக்கலம் இலையாய் மொடமொடத்து நின்ற காதுகளையும் அசைத்தபடி, வருவோர் போவோரை எல்லாம் குறுகுறுவெனப் பார்த்து தனது குட்டியூண்டு வாலை ஆட்டியபடி இருந்தது கன்று. அப்பா உடனடியாய் ஓடிப்போய் தனி முடியில் திரித்த ஒரு கம்பிளிக்கயிறு வாங்கிவந்து காலில் கட்டி திருஷ்டி கழித்தார். “பொட்டக் கண்டுக்கு பால விட்டுக் கறங்க கோனாரே.’’ அம்மாச்சி கன்றினைக் கண்ணில் பார்த்த நிமிசத்தில் கோனாருக்கு உத்தரவு போட்டுவிட்டார். “அடுத்த வமுசம் தழைக்கணுமில்ல.”

முதல் மூன்று ஈத்தும் காளங்கண்டாய் ஈன்றெடுத்தது. அதென்னவோ காளங்கன்றுகள் மட்டும் பிறந்து புல் கடித்துப் பழகுவதற்குள் இறந்துவிடுகின்றன.

பெண் கன்று உற்சாகமாகத்தான் இருந்தது. ஊட்டமாகப் பால்குடித்து இப்போது மெல்லிசான அறுகம்புற்களைக் கடிக்க ஆரம்பித்திருக்கிறது. வாலைச் சுருட்டிக் கொண்டு அடிக்கடி வாசலுக்கு வெளியே பாய்கிறது. நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டும் வந்தது. அதற்குப் பெயர் வைக்க வேண்டும்.

சுமார் ஒரு மாதகாலமாக குருவம்மா சரிவர இரை எடுக்கவில்லை. மேனியெல்லாம் சப்பிய மாங்கொட்டையாய் எலும்புகள் தெரியலாயின. தடித்த மூக்கணாங் கயிற்றைத் தாண்டி, முகத்தில் படர்ந்திருந்த மெலிவு நரம்புகளில் நெளிந்தது, கண் பட்டைகளும் காதுகளும் தளர்ந்து தொங்கி குருவுவின் மொத்த உடம்பே வாடி கிழட்டுச் சாயலில் இருந்தது.

வாயில் நீர் ஒழுகல் நிற்காமல் நாராய் ஒழுகியது. அவ்வப்போது கண் வழியேயும் நீர் கசியும். அம்மாச்சிக்கு அதைக் காணப் பொறுக்காது. தானும் கண்ணைத் துடைத்துக்கொள்வார். ‘‘பாவம், குருவுவுக்கு உள்ளுக்குள்ள என்னா வாத செய்யிதோ. வாயிருந்தாலும் ரெண்டு வார்த்தைல சொல்லிப் போடுவா. வாயில்லாச் சீவெங்கறது சரியா இருக்கே!” குருவுவின் கழுத்தைக் கட்டி அணைத்துக்கொள்வார்.

குருவம்மா இரை கடிக்க வைக்க ஏகப்பட்ட வைத்தியங்கள் பார்த்தனர். கோனாரும் தனக்குத் தெரிந்த மாட்டு வைத்தியரைப் பூராவும் கூட்டிவந்து காட்டினார். தான் அறிந்த பச்சிலை வைத்தியங்கள் செய்து பார்த்தார். தினசரி குங்குலியமும் சாம்பிராணிப் புகையும் வீட்டைக் கமறடித்தன. நாக்கில் பச்சை நரம்பு ஓடியுள்ளது என்று வீதியில் மாடுகளுக்குப் பார்க்கும் வைத்தியர் ஒருத்தர் வந்து நாக்கில் நரம்பினை எடுத்து விட்டார். நீராகத்தான் குடிக்கிறது. பச்சையை ஆசையாய் மென்று விழுங்கும் முன் அப்படியே கீழே துப்பிவிடும்.

காரான் - சிறுகதை

அன்னஞ்சி நாயக்கர் வீட்டுக்குப் போய் ஜாதகம் பார்த்தார்கள். சின்னத்தம்பி சாதகப்படி குருப்பெயர்ச்சி வரை வீட்டு ஆள்களுக்கும், வீட்டிலிருக்கும் உயிர் ராசிகளுக்கும் சிரமதிசை உண்டாகுமாம். குருபகவானுக்குச் சுண்டல் நைவேத்தியம் செய்ய, வரும் வினையினைத் தள்ளிப் போடலாம் என்றார். அம்மா வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்ய, அப்பா, மாட்டாஸ்பத்திரிக்கு கோனாரோடு போய் தடிதடியாய் ஊசிகள் குத்தி வந்தார். விதவிதமாய் மாத்திரைகளும், பொடிகளும் வாழைப்பழத்தில் வைத்தும், குளுதாணித் தொட்டியில் கலந்தும் குருவுக்குப் புகட்டப்பட்டது. நாலு லிட்டர் பால், ஒன்றுக்கும் கீழானது.

நேற்று, நடராசனது அம்மா ஒரு வைத்தியம் சொன்னார். பன்னி ரத்தம் வாங்கி சாம்பிராணிப் புகையோடு எருமையின் மூக்கில் வாடை பிடிக்கச் செய்தால், வைத்தியத்தோடு கண்திருஷ்டி இருந்தாலும் விலகிவிடும் என்றார்.

பள்ளிக்கூடம் விட்டதும் மந்தத் தோட்டத்துக்குப் போய் இரண்டு கட்டு சோளத்தட்டை உருவிக்கொண்டு வந்து அதை வெட்டுக்கட்டையில் வைத்து ஒரு சாண் நீளத்துக்கு வெட்டி வைத்துவிட்டு, பன்னி ரத்தம் வாங்கப் பன்னி வளப்பு வீட்டுக்குக் கிளம்பினான் நாகராஜன்.

“எதுல வாங்கிக்கிட்டு வர?” ஆட்டு ரத்தம் வாங்கிவரும் பழக்கத்தில் கேட்டான். அம்மாவுக்கும் அதில் பழக்கமில்லை. நடராசனின் அம்மாவே பதில் சொன்னார். “போடா, அவெங்களே துணியில பிடிச்சு வச்சிருப்பாங்கெ” துணைக்கு நடராசனும் வந்தான். கைக்குட்டை அளவிலான துணிகள் இரண்டை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொடுத்தனர். சிவப்பாய் - ரத்தம் தோய்க்கப்பட்டு உப்புக்காகிதம்போல மொடமொடப்பாய் இருந்தது.

கையில் பன்றி ரத்தத்தோடு, வாசல் படியேறி வீட்டுக்குள் நுழைந்த நாகராசனை, குருவம்மாள் எழுந்து நின்று கண்ணுக்குக் கண் பார்த்தது. அந்த நிலையில் குருவுவைப் பார்க்க நாகராஜனுக்கு சங்கட்டமாக இருந்தது. கொம்புகளது கம்பீரம் மட்டும் குறையவில்லை.

வழக்கம்போல விளக்கு ஏற்றும் நேரத்தில் சாம்பிராணிக் கரண்டியில் தீக்கங்குகள் எடுத்து பன்னி ரத்தத்துணியைக் கிழித்துக் கரண்டியில் போட்டதும் துணி கருகிப் புகை கக்கியது. நாத்தம் எல்லோரது மூக்கிலும் புருபுருவென ஏறியது. அம்மா கரண்டியை குருவுவின் முகத்தருகே நீட்டிப்பிடிக்க, குருவு முகத்தைத் திருப்பிக்கொண்டது. நாகராஜன் அதன் வளை கொம்பைப் பிடித்து, புகை எழும்பும் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொடுத்தான். மூக்கினுள் புகை ஏற தலையை உலுக்கிக்கொண்டது குருவு. முழுத்துணியும் தீயும் வரை கொம்பை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தான் நாகராஜன்.

தமிழ் இலக்கண வகுப்பில் தமிழய்யா, எருமை அணிநடை நடத்தினார். சங்ககாலத்திலேயே எருமை, குறிஞ்சி நிலத்து விலங்காக வீட்டுப் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. சங்கப்பாடல்களில், மையான், காரான், போத்து என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது என்றார். நமது நாட்டில் மட்டுமல்லாது இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலும் எருமை வளர்க்கப்படுவதாகவும் சொன்னார். “ஒரு டன்னுக்கும் மிகுந்த எடையுள்ள - பல லட்சம் ரூபாய் விலை மிகுந்ததாகவும் மதிக்கப்படுகிறது. பொதுவாக காளைகளைவிட எருமை உடல்வலு, பணமதிப்பு, மனிதனுக்கான பயன்பாடு என அனைத்து வகையிலும் உயர்வகை பிராணி’’ என்றார். கடைசியாக மை போன்ற நிறமுள்ளதால், மையான் எனவும், கார்+ஆன் = காரான்; கருமை நிறம் கொண்டதால் காரான் எனவும் பெயர்க்காரணம் சொன்னபோது நாகராஜனுக்கு பெண் கன்றுக்கான பெயர் கிடைத்தது.

மைதிலி!

அம்மாச்சியிடம் முதலில் சொல்லுவதற்காக பள்ளிக்கூடத்தில் கடைசி மணி அடித்ததும் முதல் ஆளாக வீட்டுக்கு வந்தான்.

வீடு வெறிச்சென இருந்தது. வெளிவாசல் ஓரத்தில் அம்மாச்சியும், அடுக்களையுள் அம்மாவும் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி, மூக்கை உறிஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

தொழுவத்தில் மூன்று மாடுகள் படுத்து அசை போட்டபடி இருக்க, கழுத்துக் கயிற்றை இழுத்துக்கொண்டு விட்டுவிட்டுக் கத்திக்கொண்டிருந்தது மைதிலி. குருவம்மாளைத் தொழுவத்தில் காணவில்லை.

மதியத்துக்கு மேல குருவுவால் நிற்க முடியவில்லையாம். மதிய சாப்பாட்டுக்கு வந்த அப்பா, “செத்து மண்ணுக்குப் போறதவிட உசுரோட ஆருக்காச்சும் குடுத்தாலும் ரெண்டுவேருக்கு புரயோசனமாகும்’’ என்று சொல்லி செருப்புத் தைக்கும் பழனியை அழைத்து வந்து தள்ளுவண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டாராம்.

சாமி வந்தவனாய் புத்தகப்பையை வீசிவிட்டு, அந்தத் தெருவுக்கு ஓடினான். எத்தனை அலைந்தும் குருவுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விளக்குப் பொருத்தும் நேரத்தில் வீட்டுக்குத் திரும்பினான். மைதிலியைக் கழுத்தைச் சேர்த்துக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

இரண்டாம் நாள் மதியவாக்கில் பழனியும் ஒரு பொம்பளையும் வீட்டுக்கு வந்தனர். “தொண்டக் குழில குண்டூசி குத்தி இருந்துச்சு ஆயி, தவுட்டுல இருந்துருக்கும் போல. குளுதாணியக் கலக்கி விடுறப்ப கவனிக்காம விட்டுட்டீக.”

காகிதத்தில் மடித்திருந்த ஊசியோடு கொஞ்சம் பணமும் தந்தனர். “கறிக்காசு!” இரண்டையுமே தொட பயந்து சட்டென விலகிய அம்மா, முந்தானைக்குள் முகம் புதைத்து விசும்பலானார்.