Published:Updated:

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- ஜி.கார்ல் மார்க்ஸ்

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

- ஜி.கார்ல் மார்க்ஸ்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

அம்மா சகுந்தலா அப்படிச் சொல்வாள் என்று தீபக் எதிர்பார்க்கவில்லை.

``அப்படியாம்மா சொல்ற..?’’

``ஆமா...’’

தீபக் முகத்தைத் திருப்பி சகுந்தலாவைப் பார்க்கவில்லை. அவனது பார்வை முழுக்கவும் சாலையிலேயே இருந்தது. போக்குவரத்து நெரிசல் பேயைப் போல இருந்தது. ரியர் வியூ மிரரை எவ்வளவு உற்றுப் பார்த்தாலும் அதில் அகப்படாமல் மின்னல் வேகத்தில் டூவீலர்கள் இருபுறமும் முந்திக்கொண்டிருந்தன. இருசக்கர வாகன ஓட்டிகள் கார்களுக்கு நடுவே புகுந்து அதன் விளிம்புக்கு சில சென்டிமீட்டர் இடைவெளியில் முந்துவதில் கிளுகிளுப்படைந்தார்கள். பெண்கள் சாகச உணர்ச்சி பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் ஆனால் அதேபோல உயிரைப் பணயம் வைத்தார்கள்.

தீபக் கார் வாங்கிய இந்த ஐந்தாண்டுகளில் சகுந்தலா அதில் ஏறுவது இதுதான் முதல் முறை. அவளேதான் காலையில் அவனை அழைத்திருந்தாள். “இந்தா அம்மா...” என்று வைஷ்ணவி அலைபேசியை அவனது கையில் கொடுத்தபோது அவன் அப்போதும் படுக்கையில் உருண்டுகொண்டுதான் இருந்தான். `விடுமுறை நாளுக்கான காலை, மதியத்தில்தானே தொடங்கவேண்டும்’ என்று நினைத்தாலும், `இவள் எப்படி இவ்வளவு சீக்கிரம் எழுந்துகொண்டாள்’ என்பது குழப்பமாக இருந்தது. போன் இப்போதும் அடித்துக் கொண்டுதான் இருந்தது. அவள் அதை எடுத்திருக்கவில்லை. தீபக் எடுத்து காதுக்குக் கொண்டு போனான்.

“அம்மா...”

“என்னடா இன்னும் எழுந்துக்கலையா..?’’

“இல்லம்மா, இப்பதான் முழிச்சேன், அப்படியே படுத்திருக்கேன்...”

“நந்து..?”

“அவ இன்னும் முழிக்கல... நைட்டு அவளும் லேட்டாதான் படுத்தா...”

``குழந்தையை உன்ன மாதிரி நைட்டு கண்ணு முழிக்க வைக்காதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...’’

``இல்லம்மா. நானும் படுத்தாதான் தூங்குவேன்னு அவ அடம்புடிச்சி கார்ட்டூன் பாக்குறா, என்ன பண்றது, சரி சண்டேதானன்னு நானும் விட்டுட்டேன்...’’

``வைஷ்ணவி..?’’

``அவளும் நானும்தான் சேர்ந்து நெட்ப்ளிக்ஸ்ல குத்த வச்சோம். நந்து ஹெட்போனை மாட்டிக்கிட்டு டேப்ல இருந்தா...’’

“.....”

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

``ஆமா என்னம்மா இவ்வளவு காலையில போன் பண்ணியிருக்க..?’’

``சும்மாதான்டா..!’’

``உடம்பு ஓகேவாமா, வேற ஒன்னும் இல்லையே? கிளம்பி இங்க வர்றியா இன்னைக்கு..?’’

``இல்லடா, நீ இங்க வர்றியா, நாம ஒரு சின்ன டிரைவ் போலாம்..?’’

``வாவ் செம. என்ன அதிசயம்..! கண்டிப்பா போவோம், எங்க போலாம் சொல்லு. நான் வைஷ்ணவி, நந்துவ கிளப்பிக் கூட்டிட்டு வர்றேன். பத்து மணிக்கு வீட்ல இருப்பேன். ஏதாவது டிபன் பண்ணி வை. சாப்டு கிளம்புவோம், இல்லன்னா போற வழியில சாப்டுக்கலாம்...’’

‘........’

``என்னம்மா, ஒன்னும் சொல்லாம இருக்க...’’

``நீ மட்டும் வாடா, அவளுககூட அடுத்த வாரம் போகலாம்...’’

``ஓ, சாரிமா... டன். கிளம்பி வர்றேன், எத்தனை மணிக்குப் போகலாம்னு சொல்லு. எங்க போவோம்?’’

``ஈ.சி.ஆர் ஓகேடா, ஒரு ரெண்டு மூணு மணி நேரம், போயிட்டு திரும்ப வருவோம்.’’

அடுத்த இரண்டு விநாடிகளில் தீபக் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான். வைஷ்ணவி காபி குடித்துக்கொண்டிருந்தாள். கையில் நியூஸ் பேப்பர் இருந்தது. ``என்னடி, இவ்வளவு காலைலேயே... ஆச்சர்யமா இருக்கு...’’

கேட்டுக்கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

``பீரியட்ஸ்டா, அதிகாலைல நாலு மணிக்கு. கடுப்ஸ்...’’

உச்சா போய்விட்டு வந்து மீண்டும் படுத்துக்கொள்வான் என்று நினைத்தவள், “உனக்கு டீ வேணுமா?” என்று அவனிடம் கேட்கவில்லை. ஆனால் வெளியே வந்தவன் மிகச் சுருக்கமாக, ``அம்மாவுக்கு எங்கேயோ வெளியில் போகணுமாம், கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க, அதுக்குதான் போன்...’’

``எங்கயாம்..?’’

``சும்மா எங்காவது ஒரு டிரைவ் போகணுமாம்...!’’

அவள் எதுவும் சொல்லாமல் அவனது முகத்தைப் பார்த்தாள். அவளுக்கு விசித்திரமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

``நந்துவைக் கூட்டிட்டுப் போறியா..?’’

``இல்லடி அவ நல்லா தூங்கிட்டிருக்கா, எழுப்ப வேணாம்.’’

``சரி சரி...’’

``சரி, நான் கிளம்புறேன்...’’

``டைம் கிடைச்சா கால் பண்ணு, என்னன்னு சொல்லு. அவங்க அப்படியெல்லாம் உன்ன இந்த மாதிரி கூப்பிட்டதே இல்லல்ல, எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கு. போயி பாத்துட்டு எனக்குப் பேசு...’’

அடுத்த அரை மணி நேரத்தில் தீபக் கிளம்பியிருந்தான். கே.கே நகரிலிருந்து சகுந்தலா இருக்கும் அடையாறு செல்வதற்கு நாற்பந்தைந்து நிமிடங்கள் ஆகும் என்று நினைத்து வண்டியை கிண்டியை நோக்கிச் செலுத்தினான். ஞாயிறு என்பதால் வாகன நெரிசல் சற்றுக் குறைவாக இருந்தது. காலையில் எழுந்து குளித்துவிடவும் பசித்தது.

கார் நிறுத்துவதற்கு வாகான ஒரு டீக்கடையைப் பார்த்து வண்டியை நிறுத்தி, ஒரு காபி என்று சொல்லிவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். பாதி சிகரெட் தீர்வதற்குள் சரியாக காபி கைக்கு வந்தது. எடுத்து உறிஞ்சினான். வெறும் வயிற்றில் சிகரெட் புகையுடன் காபி ஊர்வது சுறுசுறுவென இருந்தது.

மனம் பரபரவென இருந்தாலும், அதற்கு மத்தியிலும் சிதறாத நிதானம் இருந்தது. இது அப்படியே அம்மாவின் சுபாவம்தான் என்று பலமுறை நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும்கூட இப்போது எதற்கு திடீரென இப்படி அழைக்கிறாள் என்று தோன்றியது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவள் காரில் வருவதைத் தவிர்த்திருக்கிறாள். அதைத் தவிர்த்தாள் என்றும் சொல்ல முடியாது. சிலமுறை வீட்டில் கொண்டு விட்டிருக்கிறான், அங்கிருந்து அலுவலகத்தில் கொண்டு போய் காரில் விட்டிருக்கிறான்தான். ஆனால் எங்காவது சிறிய பயணம், ஊர் சுற்றல் என்று திட்டமிடுகையில் அவளுக்கு வேலை வந்துவிடுகிறது. அந்தப் பயணத்தைவிட முக்கியமான வேறு ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது. அதை அவள்தான் தீபக்கிற்குப் பழக்கியிருந்தாள். ‘ஒரு priority-ஐ இன்னொரு priority-ஐ வைத்து மதிப்பிடாதே’! அது அவனது மனதில் ஆழமாகப் பதிந்துபோயிருந்தது.

வைஷ்ணவியுடனான இந்த ஐந்தாண்டுகால திருமண வாழ்வில் சில தற்காலிகக் கசப்புகளை மீறி பெரிதாக எதுவும் நடந்துவிடாமல் இருப்பதற்கு அதுதான் காரணம். யோசிக்கையில், தீபக், அம்மாவுடன் வாழ்ந்த காலங்கள் சொற்பம். இப்போது யோசித்தாலும் அவனுக்கு அது குறித்து ஆற்றாமை உண்டு. ஆனாலும் அவளிடம் அதையொரு குறையாகப் பகிர்ந்து கொண்டதில்லை. அவளுடன் இருக்க வாய்ப்பது கொஞ்ச நேரம்தான் என்றாலும், முழுக்கவும் அவனுடன் இருப்பதான எண்ணத்தை அவள் ஏற்படுத்துவாள். அந்த வயதில் அவனுக்கு அது புரிந்திருக்கவில்லை. இப்போது புரிகிறது. சில நண்பர்களுடன் எத்தனை நாள்கள் உடன் இருந்தாலும் சரி, அவர்களுடன் இருந்தது போன்றே தோன்றுவதில்லை. அப்படி ஒட்டாமல் இருக்கிறார்கள், கடந்துபோய்விடுகிறார்கள். அந்த வகையில் வைஷ்ணவி, அம்மாவைப் போன்றவள் என்பதில் ஆறுதல் அவனுக்கு. இப்போதுகூட அம்மா அழைத்தாள் என்றதும் துணுக்குறும் அவளது நுண்ணுணர்வு அவனுக்குப் பிடித்தது. அப்படியெல்லாம் அழைப்பவள் இல்லையே, ஏன் அழைக்கிறாள் என்று கனிவாக யோசிக்கும் அவளது தன்மை பிடிக்கிறது.

ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு தீபக் விடுதியில்தான் இருந்தான். பன்னிரண்டாம் வகுப்பு வரை திருச்சியில், கல்லூரி கோவையில். யோசித்தால் பள்ளியின் கோடை விடுமுறைகளைத் தவிர அவன் அம்மாவுடன் நீண்ட நாள்கள் இருந்த நினைவே இல்லை. கல்லூரியின் கோடை விடுமுறைகளில் ஊர்சுற்றியது போக சொற்ப நாள்களே அவளுடன் இருந்திருக்கிறான். ஆனால் வேலை கிடைத்த இரண்டே மாதத்தில் அவனுக்கு ஒரு வரனைத் தேடிப் பிடித்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இப்போது என்ன அவசரம் என்று மறுத்தான். உனக்கு எதுவும் காதல் கீதல் என்றெல்லாம் அவள் பேத்த வில்லை. உனக்கு இது சரியான சமயம் என்று எனக்குத் தோன்றுகிறது, இது வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு எதுவும் நியாயமான காரணம் இருந்தால் சொல் என்று அவள் கேட்டாள். தீபக்கிற்கு இருபத்து மூன்று வயதில் திருமணத்தை மறுப்பதற்கு அது குறைந்த வயது என்ற பூஞ்சையான காரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. `சரி, அம்மாவுக்குத் துணையாக இருக்கும்’ என்ற ஒரு காரணத்தை அவனாகவே வரித்துக்கொண்டு, புதிதாக தன் வாழ்வில் நுழையப்போகும் ஒருத்தியைக் குறித்த கிளுகிளுப்பில் அமிழத் தொடங்கினான். இந்த ஐந்தாண்டுகளில் அம்மாவுக்குத் துணையாக இருக்கும் என்று தாம் நினைத்தது எத்தனை க்ளிஷேவானது என்று சிரித்துக்கொள்கிறான்.

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

ஆனால், கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில், அவனைத் தனிக்குடித்தனம் போகச் சொன்னபோது அவன் நிஜமாகவே அதிர்ச்சியடைந்தான். வைஷ்ணவிக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக சகுந்தலாவின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் இருவரும்.

“உனக்கு இந்த வீடுதான் பிடித்திருக்கிறது என்றால் சொல், நான் வேறு வீடு பார்த்துப் போய்க்கொள்கிறேன், எனக்கு எந்தப் புகாரும் இல்லை” என்று மென்மையான குரலில் சொன்னாள். அதில் இருக்கும் உறுதியைப் புரிந்துகொள்ளும் வயதை தீபக் எப்போதோ எட்டியிருந்ததால் அவளிடம் அதுகுறித்து சர்ச்சை செய்யவில்லை.

``இல்லம்மா, நானே போய்க்கிறேன்’’ என்று சொன்னான். அப்போதுதான் அவள் வீடு பார்த்திருப்பதைச் சொன்னாள். வைஷ்ணவியும் அவனும்தான் போய்ப் பார்த்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடாக இருந்தது அது. “டபுள் பெட்ரூம் வீடே போதும்மா. மத்த திங்க்ஸ் வச்சிக்க ஒரு ரூம் பத்தாதா” என்றான். “ஒரு ரூம் எக்ஸ்ட்ராவா இருக்கட்டும்டா, எப்பவாது மூச்சு முட்டும்போது கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு தோணுச்சுனா அங்கே போயி படுத்துக்கலாம்ல, இருக்கட்டும்டா” என்றாள்.

அடுத்த மூன்று நாள்களில் தனி வீட்டுக்கு வந்திருந்தான். இதோடு ஐந்து வருடம் ஆகிறது என்று நினைக்கையில் அவனுக்கே மலைப்பாக இருந்தது.

“இன்னொரு காபி” என்று சொன்னான்.

பாய்லரில் இருந்தவன் விசித்திரமாகப் பார்த்ததைக் கண்டுகொள்ளவில்லை. இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். ஒரு முழு டம்ளர் காபி குடிப்பதுகூட அவளிடமிருந்து வந்த பழக்கம்தான். உணவகங்களுக்குச் செல்கையில் “ரொம்ப கம்மியா தர்றானுங்க இல்லடா, இன்னொரு காபி சொல்லு, ரெண்டு பேரும் ஷேர் பண்ணிப்போம்” என்று மெல்லிய நகையுடன் சொல்வாள்.

முதல் காபியைவிட இரண்டாவது காபி சுவை குன்றியதுபோல இருந்தது. மண்டைக்குள் கேள்விகள் குடைந்துகொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் நிதானமாகக் குடித்தான். காபியின் சூடு உடலில் வியர்வையைத் துளிர்க்கச் செய்திருந்தது. வண்டியை நகர்த்தவும் ஏசியின் குளிருக்கு அந்த வியர்வை ஆசுவாசத்தை வழங்கியது.

வண்டியை வாசலுக்கு வெளியே கதவை மறித்து அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே போனான். சகுந்தலா கிளம்பித் தயாராக இருந்தாள். எதோ விசேஷத்துக்குச் செல்பவள் போல, திருத்தமாக உடையணிந்திருந்தாள். தீபக்கைவிட பத்து வயது அதிகமாக இருக்கலாம் என்பது போன்ற தோற்றம். ஐம்பதுகளின் மத்தியில் இருக்கும் எந்த அடையாளமும் அற்றவளாக இருந்தாள். வைஷ்ணவி இதை நிறைய முறை தீபக்கிடம் சொல்லியிருக்கிறாள், ‘உங்க அம்மாவைப் பார்த்தா பொறாமையா இருக்குடா, இப்பவும்கூட எவ்வளவு ஸ்லிம்மா ஃபிட்டா இருக்காங்க...’

``ரெஸ்ட் ரூம் போகணுமாடா உனக்கு , இல்ல கிளம்புவோமா..?’’ ஒரு சிறிய கைப்பையுடன் வாசலிலேலே நின்றுகொண்டிருந்தவள் கேட்டாள்.

``இல்லம்மா, போலாம்...’’

இருவரும் அந்தத் தெருவிலிருந்து வெளியேறி பிரதான சாலையில் நுழைந்து கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பிடிப்பதற்குப் பதினைந்து நிமிடங்கள் ஆனது.

வண்டிகள் விரைந்துகொண்டிருந்தாலும்கூட ஓட்டுவதற்கு இலகுவாக இருந்தது சாலை. தீபக் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவளும் அமைதியாக சாலையை வேடிக்கை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். சாலையை, வழியில் மூடியிருக்கும் கடைகளை, சாலை ஓரத்தில் சோம்பேறித்தனமாகத் திரியும் மாடுகளை என அவற்றை ரசிப்பதுபோல முகபாவம் இருந்தது. அவளது முகத்தை வைத்து அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத பாவனையில் இருந்தாள். அவள் அதிருப்தியாக இல்லை என்பது தீபக்கிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அவள் இத்தனை நிதானமாக இருப்பதும் பதற்றத்தைக் கூட்டியது.

பதற்றமாக இருக்கையில் எப்போதும் நினைவுகள் பின்னோக்கியே ஓடுகின்றன. ‘அது சரியாக இல்லை’, ‘இது இப்படி இருந்திருக்கலாம்’, ‘இன்னும் கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்திருக்கலாம்’... இந்த மாதிரி.

“மகாபலிபுரம் தாண்டினதும் வண்டியை நிறுத்து, காபி குடிக்கலாம்...” என்றாள்.

“சரிம்மா...”

அடுத்த சில நிமிடங்களில் அவள் உறங்கத் தொடங்கியதை தீபக் பார்த்துவிட்டு திரும்பவும் சாலையில் பார்வையைப் பதித்தான். அவளைப் பார்க்கையில் பச்சாதாபமாக இருந்தது. திருத்தமான உடையில், புத்துணர்ச்சியுடன் இருப்பவள், வண்டியில் ஏறிய கொஞ்ச நேரத்தில் எப்படிக் குழந்தையைப் போல உறங்குகிறாள்...

இவ்வளவு விரைவில் மகாபலிபுரத்தைக் கடப்போம் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சூரியன் சுள்ளென்று அடிக்கத் தொடங்கியிருந்தது. முன்புறம் பெரிய மரம் இருந்த ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தினான். வண்டி நிற்கவும் அவள் விழித்துக்கொண்டாள்.

“கடை வந்திடுச்சா..?”

“இன்னும் கொஞ்சம் தூங்குறியா, கொஞ்சம் தூரம் போனதும் இன்னொரு கடையில நிறுத்துறேன்...”

“இல்லடா பரவால்ல, எனக்கு காபி குடிக்கணும் போலதான் இருக்கு...”

இருவரும் இறங்கி கடை முகப்பில் போடப்பட்டிருந்த வட்ட வடிவமான பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

அவள் அமைதியாகக் காபியைக் குடித்து முடித்தாள்.

“ஏய், உனக்கு இன்னொரு காபி..?”

“இல்லம்மா எனக்கு வேணாம், நீ வாங்கிக்க...”

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

சொல்லிவிட்டு எழுந்து மரத்தடிக்குப் போய் ஒரு சிகரெட் பற்றவைத்தான். அவள் காபியை வாங்கிக்கொண்டு அவனுடன் வந்து நின்றுகொண்டாள்.

அவன் சிகரெட் குடிப்பதை ரசிப்பவளைப் போல அவனைப் பார்த்துக்கொண்டே காபியை உறுஞ்சிக்கொண்டிருந்தாள். அவளது கைப்பை அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்த இன்னொரு நாற்காலிமீது கிடந்தது. அவளுக்கு அதுபற்றி எந்த பிரக்ஞையும் இல்லாததுபோல அவள் அந்தக் காபியை அருந்திக்கொண்டிருந்தாள். தீபக் தனது பார்வையைக் கைப்பையின் மீது இருக்கும்படி அமைத்துக்கொண்டான்.

“அதெல்லாம் ஒன்னும் காணாமப் போயிடாது விடுடா...”

“ஹா... ஹா... இல்ல இல்ல. கண்ணு முன்னாலதான இருக்கு. அதான் பார்வை அங்க போகுது...”

அவள் காகிதக் கோப்பையை அதற்கான கூடையில் போட்டுவிட்டு, கைப்பையில் இருந்து பணம் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்து வண்டியில் ஏறவும் தீபக் வண்டியை உயிர்ப்பித்தான். அவள் மீண்டும் உறக்கத்தில் விழுந்தாள்.

தீபக் அமைதியாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். பாண்டிச்சேரி ஆறு கிலோமீட்டர் என்று சாலையோரப் பலகை காட்டிய இடத்தை வண்டி கடந்துகொண்டிருந்தது.

“திரும்பிடலாம்டா, சிட்டி உள்ள போகவேணாம்...”

“ஏம்மா, பாண்டி பீச் நல்லாருக்கும்...”

“இந்த வெயில்லையா..?”

“வண்டியை விட்டு இறங்கவேணாம். சும்மா அப்படியே உக்காந்திருக்கலாம்...”

“சரி அப்படின்னா போ”

ஆனால் பீச் ரோட்டுக்குக் திரும்பும் வளைவில் தரையில் விரிந்த நிழலுடன் ஒரு பெரிய மரம் தென்பட்டது. அம்மரம் ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னால் இருந்தது. “வண்டியை வேணா இங்க நிறுத்து, கொஞ்ச தூரம் பீச்ல நடந்துட்டு வருவோம்...” என்று சொன்னாள்.

வண்டியை நிறுத்திவிட்டு, கதவில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தீபக் அவளுடன் நடந்தான். பீச்சில் வெயில் அவ்வளவாக இல்லை. கூட்டம் குறைவாக இருந்த மணற்பகுதி ரம்மியமாக இருந்தது. சிறிய கடற்கரை, வீட்டின் பின்புறம் இருக்கும் பிரத்யேக மணற்பரப்புபோல. தீபக்கின் கையை விட்டுவிட்டு அவள் தண்ணீரில் இறங்கி நின்றாள். அலை ரொம்பவும் குறைவான வேகத்தில் இருந்தது. மெல்லத் தளும்பும் குளம்போல. தீபக் அலைக்கு நெருக்கமாக, ஆனால் அது தீண்டாத தூரத்தில் உட்கார்ந்துகொண்டான். மணல் சுடவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, அவள் கைகாட்டி அழைக்கவும் அவளுடன் போய் அவளது கைகளைப் பற்றிக்கொண்டு நின்றான். சற்றே பெரிய அலை அவளை நிலை தடுமாற வைத்த போது அதிர்ச்சியடைந்து சிரிப்பவளை, தாங்கிப் பிடித்துக்கொண்டு அவனும் அந்தக் கடலை ரசித்தான். முதுகில் கோடாக வியர்வை வழிந்தது. அவளும் வியர்த்துப்போயிருந்தாள்.

இருவரும் வந்து மணலில் உட்கார்ந்தார்கள். மீண்டும் போய் அலையில் நின்றார்கள். நல்ல வெயில் வந்துவிட்டது. தலை கொதித்தது. தீபக்கின் தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “ரொம்ப சுடுதுடா வா போகலாம்” என்றாள். தீபக் சகுந்தலாவின் தலையைத் தொட்டுப் பார்த்து, “இல்லையே” என்றான்.

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

“உன் கை ஈரமா இருக்குடா, அதான் தெரியல...”

அப்போதுதான் கவனித்தான், அவளது கையில் ஈரமில்லை, உலர்ந்திருந்தது. ஆனால் உப்புக் காற்றின் பிசுபிசுப்பு இருந்தது.

இருவரும் வந்து வண்டியில் உட்கார்ந்தபோது பின் மதியம் ஆகியிருந்தது. ``இங்கயே சாப்டுட்டுக் கிளம்புவோம், எனக்குப் பசிக்குது’’ என்றான்.

“எனக்கும் நல்லா பசிக்குதுடா, எதாவது ஒரு ஹோட்டல் போ...”

எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஹோட்டலில் வாஷ் பேசினில் முகம் கழுவி, கைப்பையில் இருந்து புதிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வைத்துக்கொண்டாள். எப்போதும் வைத்திருக்கும் சிறிய சீப்பை எடுத்து காரிலேயே தலை வாரியிருந்தாள். சாப்பிடும் அவளைக் காண்கையில், காலையில் வீட்டிலிருந்து வண்டியில் ஏறும்போது இருந்த அதே புத்துணர்ச்சிக்கு அவள் மீண்டுவிட்டாள் என்று தீபக் நினைத்தான்.

உணவு அருந்தி முடித்துவிட்டு தீபக் முதலில் வெளியே வந்தான். வண்டி நிறுத்துமிடத்திற்கும் ஹோட்டலின் வாசலுக்கும் நீண்ட தூரமிருந்தது. இருபுறமும் உயரமான மரங்கள் உள்ள அந்த அடர்ந்த பாதையில் தீபக்கின் கைகளைப் பற்றிக் கொண்டு அவள் நடந்து வந்து வண்டியில் ஏறினாள். அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணுகையில், அவனது தலையைக் கோதிவிட்டாள். அவன் நகரத்தை விட்டு விலகி, கடற்கரைச் சாலையைப் பிடிக்கும் வரை கைகளால் தலைக்குள் அலைந்துகொண்டே இருந்தாள். வாகன நெரிசல் குறைந்த நீண்ட சாலையைப் பற்றி வேகத்தைக் கூட்டியபோது, அப்படியே கதவின் ஓரமாக சாய்ந்து மீண்டும் உறங்கத் தொடங்கினாள். தீபக் சாலையின் மீது கவனத்தைக் குவித்தான்.

மகாபாலிபுரம் நெருங்குகையில்தான் விழித்தாள். ``அதுக்குள்ளயா இவ்வளவு தூரம் வந்துட்ட?’’

``மெதுவாத்தாம்மா வந்தேன், நீ நல்லா தூங்குன... அதான் பாட்டுகூட வைக்காம இருந்தேன்.’’

பதில் எதுவும் சொல்லாமல் சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.

``வைஷ்ணவி எப்படிடா இருக்கா..?’’

``அவளுக்கென்னா நல்லாருக்கா.’’ நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பவளைப் போல, அவள் வைஷணவி குறித்துக் கேட்பது தீபக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.

அவள் மீண்டும் மௌனத்திற்குள் விழுந்தாள்.

`நீ எப்படிம்மா இருக்க’ என்று கேட்கலாமா என்று இருந்தது அவனுக்கு. ஆனால், அவள் மௌனமாகத்தான் இருக்கிறாளே தவிர, துயரத்தில் இல்லை என்கிற எண்ணம் அப்படிக் கேட்பதில் இருந்து அவனைத் தடுத்தது.

ஆனாலும்கூட, இந்தத் தடுமாற்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் கேட்டான்.

``நீ எப்படிம்மா இருக்க..?’’

இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒன்றை அவளிடம் கேட்டதில்லைதான். கேட்பதற்கான அவசியமும் நேரிடவில்லை.

அப்போதுதான் அவள் இதைச் சொன்னாள்.

``எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அப்பாகூட ஒரு தடவை செக்ஸ் இருந்திருந்தா நான் இன்னும் நிதானமா முடிவு எடுத்திருப்பேன்டா...’’

``உனக்கும் அப்பாவுக்கும் செக்ஸ் ஒரு பிரச்னையா இருந்துச்சாம்மா..?’’

``அவருக்கு இல்லடா, எனக்கு மட்டும்தான் அது பிரச்னையா இருந்துச்சு...’’

``அப்படினா..?’’

``என்னைவிட அவருக்குப் பத்து வயசு அதிகமா இருக்கும். எனக்கு வயசு ரொம்ப கம்மி இல்லையா அப்போ. அந்த வருஷம்தான் காலேஜ் முடிச்சிருந்தேன், உடனே வேலை கிடைச்சிடுச்சு, அவரு எனக்கு உயரதிகாரி. திடீர்னு வீட்டிலேருந்து ரொம்ப தூரம் வெளில வந்து தங்குறேன். தனியா இருந்தேன், பயமா இருந்துச்சு, படபடப்பா இருந்துச்சு, குதூகலமா இருந்துச்சு. நானாதான் அவர்ட்ட போயி என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்கன்னு கேட்டேன்...’’

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

``என்னம்மா சொல்ற...’’ தீபக்கிற்கு ஒரு திரைப்படத்தின் காட்சி போல இருந்தது அவள் சொல்வது. ஆனால் இதுவரை அதைப் பற்றி ஒரு நாள்கூட அவள் அவனிடம் சொன்னதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், அவன் ஒன்றாம் வகுப்பு படிக்கையில் அப்பா அம்மாவைப் பிரிந்து போய்விட்டார், அவ்வளவுதான். எப்போதாவது பேச வாய்த்த சொற்ப உறவினர்களும்கூட அப்பாவைப் பற்றிப் பேசியதில்லை. அம்மாவும்கூட அவரைப் பற்றிப் பேசியதில்லை, புகாராகக்கூட. அவனது வாழ்க்கையில் அப்பா எனும் பாத்திரத்துக்கு இடமே இல்லை, அப்படி ஒன்று எழாமலேயே அவனது அம்மா பார்த்துக்கொண்டிருந்து விட்டாள். சமீப காலங்களில், அலுவல் நிமித்தம் வெளியூர் செல்கையில் நந்துவைப் பிரிந்திருக்க நேரும் காலங்களில் தீபக்கிற்குப் பிரிவு என்பதே ஒருவித உபவிளைவு என்று தோன்றும். அவனுக்கு எப்போதெல்லாம் வைஷ்ணவி மீதான பிரிவுத்துயர் வருகிறதோ அப்போதெல்லாம் நந்துவின் நினைவும் உடன் வந்து வாட்டுவதை உணர்ந்திருக்கிறான். இது அப்படியே மாறியும் நடந்திருக்கிறது. நந்துவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியபோதெல்லாம் வைஷ்ணவி மீதான நினைவுகள் மேலேழுந்திருக்கின்றன. தன்னை விலக்கிக்கொள்வதன் வழியாக, தன் மகனுக்கு அப்பா குறித்த நினைவுகள் எழாமல் பார்த்துக்கொண்டாளா அம்மா? ச்சே... ச்சே... அப்படி இருக்காது என்று சமாதானம் செய்துகொண்டான் தீபக். ஆனால் அப்பா எனும் பாத்திரம் தன்னை எந்த விதத்திலும் பாதித்ததில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அப்படியானால் அம்மா? அப்படி யோசிக்கையில் எதுவென்று தீர்மானிக்க முடியாத துயரம் வந்து மனதைக் கவ்வுவது போல இருந்தது.

``நீ சொல்றது செக்ஸ் இல்லம்மா, காதல். அதைத்தான் அப்படிச் சொல்ற.’’

சகுந்தலா மனம்விட்டுச் சிரித்தாள். ``ஆமாடா நீ சொல்றது உண்மைதான். அந்த வயசுல நான் அதைக் காதல்னுதான் நினைச்சேன். உண்மையைச் சொன்னா, காதலுக்கும் செக்ஸுக்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் தெரிஞ்சதில்ல அப்போ. ரெண்டும் ஒன்னுன்னுதான் நினைச்சேன். இப்பவும்கூட எனக்கு அதுல குழப்பம் உண்டு. உனக்கு இல்லையா..?’’

``இல்லம்மா, எனக்கு இல்லை. உன்னவிட எனக்கு நிறைய exposure உண்டு இல்லையா..?’’

``அப்படியா சொல்ற, இருக்கலாம். ஆனா இதெல்லாம் மறுபரிசீலனை பண்ணுறதுக்கு பேசுறதுக்கு எனக்கு ரொம்ப வருஷம் ஆகியிருக்கு இல்லையா? ரொம்ப லேட் பண்ணிட்டேனாடா..?’’

தீபக் சகுந்தலாவின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் உட்கார்ந்திருக்கும் பகுதியின் சன்னலில் இருந்து வெண்மை நிறைந்த ஒளி அவளது பாதி முகத்தின் மீது தகதகப்புடன் படர்ந்திருந்தது. அது வெளிச்சம் குறைந்த முகத்தின் இன்னொரு பகுதியை குழந்தைமையின் உச்சமாக ஆக்கிவிட்டிருந்தது. அவளது முகத்தின் ஒரு பகுதி தன்னுடைய யவ்வனத்தை மீட்டெடுத்து விட்ட, தனது இளமைக்குத் திரும்பி விட்டவளைப் போலவும், இன்னொரு பகுதி இன்னும் ஆழமாகப் பிரயாணித்து தனது குழந்தைமைக்கே சென்றுவிட்டவள் போலவும் இருந்தது. மெல்லிய நரை முடிகள் தோன்றத் தொடங்கியிருக்கும் நெற்றியின் மேற்பரப்பிற்குக் கீழே அவ்விரு முகங்களும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை தீபக் பார்த்தான்.

செல்லும் வழியில் இருந்த ஒரு பிரமாண்டமான துணிக்கடையின் முன்னால் வண்டியை நிறுத்தச் சொன்னாள். அதன் பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் நகரும் படிக்கட்டின் மீது ஏறினார்கள். அவள் அவனது கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். சில முறைகளே அவன் அவளுடன் துணி எடுக்க வந்திருக்கிறான். இத்தனை ஆண்டுகளில் ஒரு இரண்டு முறை இருக்குமா?

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

அவள் தீபக்கிற்கு மட்டும் உடைகள் எடுத்துக் கொடுத்தாள். உனக்கு இது பிடித்திருக்கிறதா என்கிற கேள்வியில்லை. உனக்கு இது நன்றாக இருக்கும் என்று சொன்னாள். அதுவும் அதைத் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்பவளைப் போல, அவனது கருத்து இதில் பொருட்டில்லை என்பதைப் போல. அவற்றில் உள்ளாடைகளும் இருந்தன. தீபக் அவளைக் குறுக்கிடவில்லை. அவனுக்கு அது வசதியாகக்கூட இருந்தது. கொஞ்ச நேரம் மொபைலில் அலைந்தான். குறுக்கும் மறுக்குமாக நடக்கும் பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். போரடிக்கும்போது மட்டும் அங்கு தொங்கிக்கொண்டிருந்த சில புதிய டிசைன் உடைகளைப் பார்த்தான். சகுந்தலா துணிகள் எடுத்து முடித்து பணம் செலுத்திவிட்டு இரண்டு பைகளுடன் தீபக்கிடம் வந்து, “சரி வா, கிளம்பலாம்” என்று சொன்னபோது இரவாகிவிட்டிருந்தது.

இருவருக்கும் பசியில்லை. மீண்டும் காபி குடித்தார்கள். அவளைக் கொண்டு வந்து மீண்டும் வீட்டு வாசலில் இறக்கி விட்டான். மெயின் கேட் பாதி திறந்திருந்தது. அதன் வழியாக உள்ளே பார்க்கையில் வீட்டின் ஒரு பக்கக் கதவு திறந்திருப்பது தெரிந்தது. திரைச் சீலை தொங்கிக்கொண்டிருப்பதால், உட்பகுதி தீபக்கின் கண்களுக்குத் தெரியவில்லை. வீட்டின் முகப்பிலிருந்து, உட்புறம் வரை விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

வண்டியை நிறுத்திவிட்டு அவளுடன் இறங்கி உள்ளே போகலாம் என்று தீபக் நினைத்தான். ஆனால் நீண்ட நேரம் அவளுடன் செலவழித்துவிட்டதைப் போலவும், வீடு திரும்பலாம் என்றும் இருந்தது. சகுந்தலாவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் அவள் இறங்கி வண்டியைச் சுற்றிக்கொண்டு அவன் இருக்கும் பக்கமாக வந்தாள். அவளுக்கும் மெயின் கேட்டுக்கும் சில அடி தூரமே இருந்தது. வீட்டின் உள்ளேயிருந்து யாரோ வருவது போல இருந்தது. தீபக் அவளைக் கடந்து உள்ளே பார்வையைச் செலுத்தினான். வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறாளா அம்மா? இருக்காதே..!

அரைக்கால் சட்டையும், டி-ஷர்ட்டும் அணிந்த ஒரு ஆள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். சகுந்தலாவுக்கு அவர் வருவது தெரியும் என்பதுபோல அந்த அசைவின் மீது கவனம் சிதறாமல் அவள் தீபக்கை நோக்கியே நின்றுகொண்டிருந்தாள். வெளியே வந்தவர், “ஹாய் தீபக் ஹவ் ஆர் யூ...” என்று அவனிடம் கேட்டுவிட்டு, “எப்படி இருந்துச்சு ட்ரிப்” என்று சகுந்தலாவைப் பார்த்தார்.

அவருக்கு அம்மாவின் வயதுதான் இருக்கக்கூடும், இல்லை இன்னும் குறைவாகக் கூட இருக்கும் என்று தீபக்கிற்குத் தோன்றியது. “ம்ம்ம்... நான் நல்லாருக்கேன், நீங்க...” என்று சம்பிரதாயமாகக் கேட்டான். சொற்ப விநாடிகள், அங்கு மௌனம் நிலவியது. பிறகு அவராகவே, “சரி வண்டிய நிறுத்திட்டு உள்ளே வாங்க...” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் சென்றார்.

“யாரும்மா இது..?”

“அதைச் சொல்லணும்னுதான் உன்ன வரச் சொன்னேன். ப்ச்... சரியான சந்தர்ப்பம் அமையல போல, இல்ல என்னால சொல்ல முடியலையோ என்னவோ...”

தீபக் அமைதியாக இருந்தான். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “பரவால்லம்மா, நாம இன்னொரு நாள் பேசலாம்...” என்றான். அப்படித் துண்டித்துக்கொண்டிருக்கக்கூடாது என்ற எண்ணமும் வந்தது. தத்தளிப்பாக இருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீள முடியாததைப் போலவும் இருந்தது. ஆனால் சகுந்தலா நொடிக்கொரு முறை மாறும் அவனது முகத்தை உற்றுப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

திடீரென எதோ நினைத்துக்கொண்டவள் போல, கார் கதவின் மீது இருந்த அவன் கைகள் மீது தன் கைகளை வைத்து, “ஐ மிஸ் யூடா...” என்றாள். ``எனக்கு ஒரு மாசமாதான் இவரைத் தெரியும். பழகிட்டிருக்கோம். ஒரு நாள் இன்வைட் பண்றேன், வீட்டுக்கு வா, டீடெய்லா பேசுவோம்...’’

பிரத்யேகமானதொரு கடல் - சிறுகதை

சரி என்று சொல்லிவிட்டு, வண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தான். சகுந்தலா இன்னும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். வண்டியை நிறுத்தி, “வா கொஞ்சம் தூரம் போய்விட்டு திரும்பக் கொண்டு வந்து இறக்கி விடறேன்” என்று அவளை அழைக்க வேண்டும் போல இருந்தது. வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளை நெருங்கி, ``கிளம்புறேன்மா, பைமா...’’ என்று சொல்லிக்கொண்டே அந்த வீட்டைக் கடந்து போக்குவரத்து நெரிசலில் கலந்தான்.