Published:Updated:

மாணப் பெரிது - சிறுகதை

மாணப் பெரிது - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மாணப் பெரிது - சிறுகதை

- கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

மாணப் பெரிது - சிறுகதை

- கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

Published:Updated:
மாணப் பெரிது - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மாணப் பெரிது - சிறுகதை

``வாழ்த்தூக்கள் சார்’’ என சற்றே தூக்கலான வாழ்த்துகளுடன் நெருங்கி வந்து டெம்ப்பரேச்சர், ரத்த அழுத்தம் எல்லாம் பார்த்துக்கொண்டே சொன்னாள் நர்ஸ் மாஸௌமி, ``நெகட்டிவ் வந்துச்சாமே. இப்போ ஐ.சி.யூ-விலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாத்திடுவாங்க.’’

வடநாட்டுப்பெண் என்றாலும் பத்தாண்டுகளாகத் தமிழகத்தின் மல்டி-ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் பணிபுரிவதால் தமிழை உடைசலாகக் கற்றிருந்தாள்.

``ஆமாம்! இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுல இருந்து ஆள் வராங்க! கிளம்ப வேண்டியதுதான்’’ என்றேன் சிரித்தபடியே.

``இனிமேல் உங்களைப் பார்க்க முடியுமான்னு தெரியல. பிஸியான வி.ஐ.பி நீங்க. சாயந்தரம் டிஸ்சார்ஜ் ஆனவுடனே எங்களை மறந்துறாதீங்க!’’ என்று அவளும் சிரித்தபடியே ரிப்போர்ட்களையும் மருந்து மாத்திரைகளையும் கவரில் போட்டு அடுக்கிக்கொண்டிருந்தாள்.

அட்மிட் ஆன புதிதில் அருகில் வந்து பேசவே பயந்து தயங்கினாள். இந்தியாவிலேயே பெரிய நிறுவனத்தின் ஓனர், வி.வி.ஐ.பி என ஆஸ்பத்திரியில் சொல்லி பயமுறுத்தியி ருப்பார்கள். இரண்டே நாள்களில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

மாணப் பெரிது - சிறுகதை

``வி.ஐ.பி எல்லாம் வெளி உலகத்துக்குத்தான். உங்களுக்கு நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன், மறந்துட முடியுமா என்ன? ரொம்ப நன்றி’’ எனக் கூறிக்கொண்டே அருகில் இருந்த எனது வாலெட்டிலிருந்து கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

``உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எனக்கு போன் பண்ணலாம், என் வீட்டுக்கு வரலாம், இது என் பர்சனல் கார்டு’’ எனக் கூறிவிட்டு நானும் தயாராக ஆரம்பித்தேன்.

இரண்டு பெட் தள்ளி சட்டெனப் பரபரப்பானது. அவருக்குச் சென்றுகொண்டிருந்த ஆக்சிஜன் சப்ளை பயனளிக்காமல் மூச்சு நின்று விட்டதாக நர்ஸ் பதறியபடி ஓடினார். மாஸௌமியும் என்னை விட்டு விலகி அங்கு சென்று ஏதேதோ செய்யத் தொடங்கினார். நான் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். விரைந்து வந்த ஒரு டாக்டரும் சில நர்ஸுகளும் அவரது மூச்சினைத் திரும்பப்பெறப் போராடிக்கொண்டிருந்தனர்.

நான் மெல்ல எழுந்து அந்தக் கட்டிலுக்கு நான்கடி தூரத்திலேயே நின்றேன். டாக்டர்களும் நர்ஸுகளும் என்ன செய்கிறார்கள், இழந்து கொண்டிருக்கும் உயிரை எப்படி மீட்கிறார்கள் என்பதைப் பார்க்கும் ஓர் ஆர்வம். ஒன்றும் புரியாவிட்டாலும் சில நொடிகள் நின்று பார்த்தபடியே இருந்தேன். அதுவரை அவரது முகத்தை மறைத்தபடி நின்ற மாஸௌமி ஏதோவொரு மருந்து பாட்டிலை எடுக்க ஒரு நொடி விலகி மீண்டும் மறைத்தாள், பளிச்சென அந்த முகம் தெரிந்தது.

ஒரு நொடி எனக்குள் ஏதோ திரவம் பாய்ந்தது போல இருந்தது. அந்த முகத்தை இதற்கு முன்னர் எங்கோ பார்த்திருக்கிறோமே, மிகவும் பரிச்சயமான முகம் அல்லவா. நமக்குத் தெரிந்தவரா? சொந்தக்காரரா? இல்லை கூடப்படித்த பள்ளித் தோழனா? எதுவும் இல்லை. ஆனால் நன்கு பழகிய பரிச்சயமான முகம். எனக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தொண்டையிலேயே நின்றுகொண்டு நினைவில் வர மறுத்தது. மீண்டும் ஒருமுறை பார்த்தால் சட்டென ஞாபகம் வந்துவிடலாம். ஒருவேளை அதற்குள் கீர்த்தனாவும் குழந்தைகளும் வந்துவிட்டால் கடைசிவரை இந்த முகம் தெரியாமல் தூக்கம் போய்விடுமே. என்ன செய்வது?

எனது ரிப்போர்ட் பற்றி மாஸௌமியிடம் கேட்பதுபோல இன்னும் சற்று அருகில் சென்றேன். இடைவெளி கிடைத்து மூச்சுக்காகத் துடித்துக்கொண்டிருந்தவரின் முகம் இப்பொழுது நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. இரண்டு நொடிகள் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சலனமே இல்லாமல் இருந்தார். அவரை உயிர்ப்பிக்க கரன்ட் ஷாக் கொடுத்து நெஞ்சில் எதையோ வைத்து அமுக்கிக்கொண்டிருந்தார் டாக்டர். திரை விலகியது போல சட்டென நினைவுக்கு வந்தது அந்த முகம். லேசாக உடல் அதிர்ந்தது, நிச்சயமாக அவனேதானா? ஆம், அவனேதான். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்த அதே முகம்.

புனே ரயில்வே ஸ்டேஷன்.

12:05-க்கு சென்னை எக்ஸ்பிரஸ் மணி அடித்தாற்போல வந்துவிடும். இப்போது நேரம் 11:50. தீபாவளிக்குச் சென்னைக்கு வீட்டுக்குப் போகிறேன். ஐ.டி வேலைக்காக புனே வந்து ஆறுமாதம்கூட ஆகவில்லை. முதல் விடுமுறை. கடைசி நிமிடத்தில் கிடைத்த லீவினால் முன்பதிவு செய்யவில்லை. முன்பின் ரயிலில் அதிகம் பயணம் செய்து பழக்கமுமில்லை.

ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்றுகூட அவ்வளவாகத் தெரியாது. எப்படியும் கடைசி நேரத்தில் கன்ஃபார்ம் ஆகிவிடும் என்ற அபார நம்பிக்கை. இறுதியில் அது மூடநம்பிக்கை ஆனதுதான் மிச்சம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது பெரிதாக எதுவும் யோசிக்கவுமில்லை. இப்படி பல ‘இல்லை’களுடனே தொடங்கியது அந்தக் கன்னிப்பயணம். ‘ரயிலில் திருட்டு பயம் அதிகம்டா, கையில் ரொக்கமாகக் காசு எடுத்துக் கொள்ளாதே’ என்றான் ஆதி, என் ரூம் மேட்.

புனே வந்ததிலிருந்து ஆதி சொல்வதுதான் வேதவாக்கு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று - அவனுக்கு இந்தி தெரியும், எனக்கு சுத்தமாகத் தெரியாது. இரண்டு - அவனுக்கு ஏற்கெனவே புனே, மும்பை எல்லாம் பலமுறை போய்வந்த பழக்கம். எனக்கு வேலை கிடைத்தபின்தான் புனே எந்த திசை என்றே மேப்பில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

ஆதி சொன்ன ரொக்கம் என்பது ஐயாயிரம், பத்தாயிரம் என்பதை அப்போது உணரவில்லை. ‘கையில் காசு எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்பது மட்டும்தான் மனதில் பதிந்தது. மூன்று வேளை ரயிலில் சாப்பிட ஒரு 200 ரூபாய், ஆட்டோ, பஸ்ஸுக்கு ஒரு 200 ரூபாய், டீ, சிகரெட்டுக்கு ஒரு 100 ரூபாய், கொஞ்சம் 10, 20 எக்ஸ்ட்ரா என மொத்தம் 500 ரூபாயும், வழித்துணைக்கு ஒரு சுஜாதாவும் பாலகுமாரனும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வரும்போதே ஆட்டோவுக்கு 70 ரூபாயும், சிகரெட்டிற்கு 50 ரூபாயும் செலவழிந்துவிட்டது.

ரயில்வே ஸ்டேஷனின் அடையாளமாக மெலிதான ஒரு மூத்திர வாடையும், புனேவின் அடையாளமாக பான் பராக் வாடையும் கலந்துகட்டி அந்த நள்ளிரவிலும் உச்சக் கட்டத்திற்கு இம்சித்தது. சரியாக 11:55 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்தில் மெதுவாக நுழைந்ததும், ஒட்டுமொத்த புனேவும் என்னை முந்திக்கொண்டு ரயிலை நோக்கி ஓடின. ரயில் பயணம் என்பதே முன்பதிவு தானே, அதற்கு ஏன் இப்படி அடித்துப் பிடித்து இடம்பிடிக்க ஓடுகிறார்கள் என்று புரியாமல் நானும் கூட சேர்ந்து ஓடினேன்.

‘ரயில் வந்ததும் கம்பார்ட் மென்ட் அருகில் டி.டி.ஆர் இருப்பார், அவரிடம் இந்த கன்ஃபார்ம் ஆகாத டிக்கெட்டைக் காண்பித்தால் உனக்கு சீட் கன்ஃபார்ம் பண்ணிக் கொடுத்துவிடுவார்’ என்று சொல்லியிருந்தான் ஆதி.

டி.டி.ஆரைத் தேடினேன், ஜூனியர் விம்பிள்டன் வென்ற பதினாறு வயதினிலே சானியா மிர்ஸாவிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கும் கூட்டம்போல நீலக்கலர் கோட் போட்டவரைச் சுற்றி சுமார் நாற்பது, ஐம்பது பேர் தங்கள் டிக்கெட்டை நீட்டியபடி இந்தியில் கெஞ்சிக்கொண்டிருந்தனர். அவரும் சளைக்காமல் எல்லோர் மீதும் எரிந்து விழுந்தபடியே அவர்களது டிக்கெட்டிலும், தனது நோட்டிலும் மாறி மாறி எதையோ எழுதிக்கொண்டேயிருந்தார்.

மணி சரியாக இரவு 12:00. டி.டி.ஆரையும், கூட்டத்தையும் பார்த்ததுமே லேசாக வயிற்றில் பயம் சுரந்தது. வேடிக்கை பார்த்தால் வேலைக்கு ஆகாது, நாமும் முண்டியடிப்போம் எனக் கூட்டத்தில் புகுந்து எப்படியோ டி.டி.ஆரை அணுகி என்னுடைய டிக்கெட்டை அவர் முகத்திற்கு நேரே இப்படியும் அப்படியும் ஆட்டினேன் (சொல்லப்போனால், நானாக ஆட்டவில்லை, கூட்ட நெரிசலில் தானாக ஆடியது). டிக்கெட்டை வாங்கிப் பார்த்தவர் ஒரு நம்பியார் விறைப்புடன் முறைத்துவிட்டு, ஏதோ சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டார். அவர் பேசியது இந்தியா, மராத்தியா என்றுகூட விளங்கவில்லை. பதிலுக்கு நானும் ஸ்டைலாக ``சென்னை ஜானே ஹு, சீட் கிதர் ஹே?’’ என ஆறு மாதத்தில் கற்ற இந்தியைப் பெருமையாக உபயோகித்தேன்.

பதிலுக்கு மேலும் முறைத்துவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் எனக்குப் போட்டியாக டிக்கெட்டை நீட்டியபடி இருந்தவன் நக்கலாக என்னைப் பார்த்துச் சிரித்தான்.

கொஞ்சம் அவமானமாக இருந்தது. கரெக்டாதானே இந்தி பேசினோம், அப்புறம் ஏன் டி.டி.ஆர் முறைக்கிறார், இவன் ஏன் சிரிக்கிறான்? என் டிக்கெட் என்னாச்சு?

மணி 12:03. இன்னும் இரண்டு நிமிடங்கள்தான். பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது. ரயில் ஏறுவதா, வேண்டாமா என்ற குழப்பம். டி.டி.ஆரையும் காணவில்லை, கூட்டமும் கலைய ஆரம்பித்தது. ஆனது ஆகட்டும் என கண்ணை மூடிக்கொண்டு ரயில் ஏறிவிடலாமா அல்லது பேசாமல் லீவு கான்சல் செய்துவிட்டு ரூமுக்கே திரும்பி வந்துவிடலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறினேன்.

``மலையாளி?’’ தோளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அதே நக்கல் சிரிப்பு ஆசாமி. அவனைப் பார்க்கவே கடுப்பாக இருந்தது. ``நோ’’ என்று கூறிவிட்டு நகர்ந்தேன். ``தமிழா, தெலுங்கா?’’ என்றான் மீண்டும்.

யாரடா இவன், லாட்டரி சீட்டு விற்பவன்போல என எண்ணி மேலும் கடுப்பாகி ``தமிழ்’’ என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

``தமிழா? சரி, கவலைப்படாதீங்க, ரயில் ஏறிடுவோம், எதுவா இருந்தாலும் உள்ளே போய்ப் பார்த்துக்கலாம். டி.டி.ஆரை கரெக்ட் பண்ணுனா சீட் கிடைச்சுடும்’’ என்றான்.

ஆஹா!

என் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது. என்னை நக்கல் செய்தது, இப்போது மீண்டும் வந்து பேசுவது, ஒரு தமிழனா? அவனது நக்கல் சிரிப்பை அக்கணமே மன்னித்தேன்.

மணி பார்த்தேன். 12:04.

``ஓ! நீங்களும் தமிழா, டிக்கெட் கிடைக்குமா, எப்படி பாஸ்?’’ என்றேன். ஆனாலும் இவனை நம்பி எப்படி ஏறுவது, இவனே கன்ஃபார்ம் ஆகாத டிக்கெட்தானே.

மணி 12:05. பெரிய ஹாரன் சத்தத்துடன் சென்னை எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்தது. அவன் விறுவிறுவென ஓடிப்போய் ரயில் படியில் ஏறி நின்று என்னைப் பார்த்தான். நான் நகரவில்லை. ஏறுவதா, வேண்டாமா? பாதி வழியில் டிக்கெட் செல்லாது எனச் சொல்லி இறக்கிவிட்டால் என்ன செய்வது. ஏற்கெனவே பாழாய்ப் போன பாஷைப் பிரச்சினை. இதில் திருட்டு ரயில் வேறா? எதற்கு இதெல்லாம், ரூமுக்கே சென்றுவிடலாமா?

``பாஸ்! என்ன பார்க்கறீங்க? வந்து ஏறுங்க. சீக்கிரம்’’ - அவன் கத்தினான்.

உண்மையிலேயே என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், கண்ணெதிரே ஒரு நண்பன் கிடைத்திருக்கிறான். ரயில் ஏறச் சொல்கிறான். என்னதான் ஆகிவிடும், பார்த்துவிடுவோம் என்ற குரல் ஓர் ஓரத்தில் உள்ளுக்குள் ஒலிக்க, மறுகணம் யோசிக்கவில்லை. உடனே பையைத் தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று ஏறிவிட்டேன்.

ரயில் புனே ஸ்டேஷனை விட்டு மெல்ல நகர்ந்து, இருளில் புகுந்து வேகம் பிடித்தது.

கதவோரம் நின்றேன். மணி 12:07. பின்னால் மெல்ல இருளில் கரைந்துகொண்டிருக்கும் புனேவைப் பார்த்தேன். இனி பார்த்து பிரயோஜனம் என்ன, இன்னும் ஒரு நாள் முழுக்கப் பயணிக்கப் போகிறேன், அதுவும் டிக்கெட் இல்லாமல். வயிற்றில் கொஞ்சம்... ம்ஹும், நிறையவே புளியைக் கரைத்தது. முன்பின் தெரியாத ஒருவனை நம்பி ஏறிவிட்டேனே, சரியான முடிவுதானா?

``பாஸ், இப்படியே படியில நின்னுட்டே இருந்தா எப்படி? வாங்க என்கூட. எப்படியும் சோலாப்பூர் தாண்டுனா கிடைச்சுடும். இல்லேன்னா ராய்ச்சூர்ல புடிச்சிடலாம்.’’

``எதை?’’

ஒரு வினோதப் பார்வை பார்த்தான்.

``சீட்டைத்தான்.’’ சொல்லிவிட்டு பெர்த்தில் உட்கார்ந்திருந்தவர்களை நோட்டமிட்டபடி நடக்க ஆரம்பித்தான். நானும் கூடவே நடந்தேன். சீட் கிடைக்கும் என்ற சொற்கள் என்னைக் கொஞ்சம் ஆசுவாசம் செய்தன.

``சோலாப்பூர் எவ்ளோ நேரம் ஆகும்?’’

``5 மணிநேரம். இல்லைன்னா ராய்ச்சூர் 9 மணிநேரம்.’’

எனக்கு பக்கென்றது. அவ்வளவு நேரம் சீட் இல்லாமலா? அதுவும் நட்டநடு ராத்திரியில்.

இரண்டு பெட்டிகள் கடந்து மூன்றாவது பெட்டியின் ஆரம்பத்தில் டி.டி.ஆர் உட்கார்ந்திருந்தார். சுற்றி 10, 20 பேர். அதே நோட்டு, அதே கெஞ்சல். மறுபடியுமா? எனக்குத் தலை சுற்றியது.

அவன் அவரது அருகில் போய் நின்றான். நான் அவன் பின்னால் நின்றேன். இருவரும் எதுவும் பேசவில்லை. கூட்டம் குறையக் காத்திருக்கிறான் என்பது புரிந்தது. ஒவ்வொருவரும் என்னென்னமோ சொன்னார்கள். ஒருசிலர் கொஞ்சம் பணம் கொடுத்து ரசீது பெற்று ரயில் பெட்டிக்குள் நடையைக் கட்ட ஆரம்பித்தனர். இப்பொழுதுதான் டிக்கெட் வாங்குகிறார்கள் போலும். நாம் எவ்வளவோ பரவாயில்லை. அடடே, இப்படி ஒரு சுலபமான வழியிருக்கிறதா? திடீரென ரயில் ஏறிவிட்டு டி.டி.ஆரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறை உண்டு என்று ஏன் இந்த ஆதி சொல்லவே இல்லை. நல்லவேளை, நம்மிடம் டிக்கெட் இருக்கிறது, கன்ஃபார்ம்தான் ஆகவில்லை.

மாணப் பெரிது - சிறுகதை

யோசித்துக் கொண்டிருக்கும்போதே கூட்டம் குறைந்துவிடவும் அந்த நக்கல் ஆசாமி என் டிக்கெட்டை வாங்கிய படியே டி.டி.ஆரை அணுகினான், இருவரது டிக்கெட்டையும் அவரிடம் காண்பித்து, கெஞ்சும் தோரணையில் சரளமாக இந்தியில் ஏதோ பேசினான். அடடா, அதிகம் கஷ்ட மில்லாமல் நமக்கு சேவை செய்யவே ஆண்டவன் நம்மிடம் இந்த இந்தி தெரிந்த தமிழனை அனுப்பியிருக்கிறானே என உச்சி குளிர்ந்தது.

முதலில் டி.டி.ஆர் மசியவில்லை. மறுக்கும் தொனியில் ஏதோ சொல்லிவந்தார். இவனும் விடாமல் விதம்விதமாகக் கெஞ்சிக்கொண்டே இருந்தான். எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததைப்போல் அவர்களது சம்பாஷணையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அதுதான் என்னால் செய்ய முடிந்ததும்கூட. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வீரியம் குறைந்தது, இறுதியில் ஏதோ சொன்னார்.

பின்னர் என்னைத் தள்ளிக்கொண்டு இரண்டு அடி நகர்ந்து வந்தான்.

``என்னாச்சு?’’

``குண்டக்கல் ஸ்டேஷன் வரைக்கும் சீட் கிடையாதாம். டிக்கெட் வாங்கிட்டு, ஃபைன் கட்டிட்டு கீழ படுத்துக்கச் சொல்றாரு. குண்டக்கல் தாண்டி சீட் தரேன்னு சொல்றாரு’’

ஃபைன் கட்ட வேண்டும் என்ற வார்த்தை எனக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.

``குண்டக்கல் ஸ்டேஷன் இன்னும் எவ்ளோ தூரம்?’’

``12 மணி நேரம் ஆகும். நாளைக்கு மதியம் ஆயிடும்.’’ சலனமே இல்லாமல் சொன்னான்.

``ஐயய்யோ... அவ்ளோ நேரம் நின்னுட்டேவா? அதுவும் இந்த பாத்ரூம் நாத்தத்துலயா?’’

``ஒன்னும் பிரச்சினை இல்லை. இவன் சும்மா சொல்லுவான். ராய்ச்சூர்ல கண்டிப்பா காலியாகும். விசாரிப்போம். அதுவரைக்கும் தரையிலேயே ஒரு பெட்ஷீட் விரிச்சுத் தூங்கிடுவோம். ராத்திரி ஓட்டிட்டா போதும்.’’

எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் பழக்கமில்லை. சொகுசாய் வளர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பையன். தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை. தமிழ்நாட்டிற்குள்ளேயும் பஸ்ஸில் சீட் இல்லையென்றாலே அந்த பிளானையே கேன்சல் செய்பவன். அதிகபட்சம் நான் ரயிலில் சென்றது தாம்பரம் - பீச் ஸ்டேஷன்தான். இவன் ஒருபக்கம் எதற்கும் ரியாக்‌ஷனே கொடுக்க மாட்டேன் என்கிறான். விட்டால் சென்னை வரை பாத்ரூமிலேயே பயணம் செய்தாலும் செய்வான் போல. இவன் பெயர் என்ன என்றுகூடத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. சென்னைக்குப் போய்ச் சேர்வதற்குள் என்ன ஆகுமோ என்ற கவலைதான் வாட்டி எடுத்தது.

டி.டி.ஆர் அவனை அழைத்தார். ஏதோ சொன்னார். திரும்பி வந்தான்.

``நேர்மையான ஆளுப்பா. முறைப்படிதான் செய்வானாம். டிக்கெட் காசும், வித்தவுட்ல ஏறுனதுக்கு ஃபைனும் சேர்த்து ஆளுக்கு 850 ரூபாய். ட்ராவல் பண்ணிக்கலாம், குண்டக்கல்ல சீட் கொடுத்திருக்கான். அதுவரைக்கும் நாமளாதான் பாத்துக்கணும்.’’ சொல்லி விட்டு அவன் பர்ஸை எடுத்துப் பணத்தை எண்ண ஆரம்பித்தான்.

``நாம எங்க வித்தவுட்ல போறோம். நம்மகிட்டேதான் டிக்கெட் இருக்கே?’’ என்றேன் அப்பாவியாய். லேசாகக் கை நடுங்கியது.

``சரிதான்! உன்னைப் பார்த்தவுடனே தோணுச்சு, நீ ஊருக்கும் புதுசு, ட்ரெயினுக்கும் புதுசுன்னு, ஆனா இப்போ கன்ஃபார்ம் ஆகிடுச்சு. நீ எடுத்த டிக்கெட் எல்லாம் இப்போ செல்லாது. ப்ராக்டிக்கலி, இப்போ நாம வித்தவுட்தான். அந்தாளு மனசு மாறதுக்குள்ள காசை எடு, டிக்கெட்டை வாங்கிட்டு நடையைக் கட்டுவோம்.’’

டிரெயின் ஏறும்போது வாங்க, போங்க என்றிருந்த அவனது மொழி இப்போது வா, போ என்ற ஏக வசனத்தில். எனக்கு அழுகையே வந்தது. அடேய் ஆதி, உன் பேச்சைக் கேட்டு காசையே எடுத்துட்டு வரலையேடா. நிச்சயம் அடுத்த ஸ்டேஷனில் இறக்கிக்கொண்டு போய் உட்கார வைத்துவிடப் போகிறார்கள். கையில் இருக்கும் காசு ஃபைன் கட்டக்கூட போதாது. இருப்பதையெல்லாம் இவர்களிடம் கொடுத்துவிட்டால் திரும்ப எப்படி புனே போவது? ஆதியை போன் போட்டு வரவைக்கலாம். ஆனால், அதுவரை எப்படி நடத்துவார்களோ, தமிழ்நாட்டிலேயே வித்தவுட்டில் வந்தால் பெண்டு கழலும், இங்கு எப்படி இருக்குமோ. சாதாரணமாகவே மதராஸி என்றால் இவர்களுக்கு கிள்ளுக்கீரை. இந்த நடுராத்திரியில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில், பாஷை தெரியாத ஊரில், ஒரு திருடனைப் போல...

எனக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது. இதெல்லாம் தேவையா? அடேய், உன்னை நம்பி அவசரத்தில் ஏறிவிட்டேனே. உன்னைத் திட்டி என்ன பயன், என்னைச் சொல்லணும்.

பர்ஸை எடுத்து எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். மூன்று நூறு ரூபாய் நோட்டுகள், இரண்டு 50 ரூபாய் நோட்டுகள், ஒரு பத்து ரூபாய், இரண்டு கிரெடிட் கார்டு, ஒரு டெபிட் கார்டு. ஹுக்கும், இத்தனை கார்டுகள் இருந்து என்ன பயன், இறைவா!

``என்னாச்சு, சீக்கிரம்.’’

``பாஸ், டி.டி.ஆர் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவாரா? கையில காசு கொஞ்சம் கம்மியா இருக்கு. அடுத்த ஸ்டேஷன்ல ஏ.டி.எம்-ல எடுத்துக் கொடுத்துடறேன்.’’

என்னை ஒருமாதிரி பார்த்தான். பார்க்கிறானா முறைக்கிறானா என்றே தெரியவில்லை. அவன் முன்பு நான் ஒரு கோமாளியாய்த் தெரிகிறேன் என்பதை மட்டும் உணர்ந்தேன். திட்டமிடாமல் திடீரென தீபாவளிக்கு புனேவில் இருந்து சென்னை செல்வது என்று எடுத்த முடிவு எவ்வளவு பெரிய மடத்தனம்.

``ஏ.டி.எம்-ல எல்லாம் எடுக்க முடியாது பாஸ்... டிரெயின் எந்த ஸ்டேஷன்லயும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல நிக்காது. கையில எவ்வளவு இருக்கு?’’

``410 ரூபாய் மொத்தமாவே. வரும்போது காசு எடுக்கணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்.’’ அவமானத்தை மறைக்கப் பொய் சொன்னேன். ``நீங்க டிக்கெட் வாங்கிக்கங்க. நான் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி பஸ்ல புனே போய்க்கறேன். டி.டி.ஆர்கிட்ட அடுத்த ஸ்டேஷன்ல இறங்கணும்னா எவ்ளோன்னு மட்டும் கேட்டுச் சொல்லுங்க பாஸ், கட்டிட்டு நான் போய்க்கறேன்.’’

அவமானத்தின் இயலாமையில் எனது குரல் உடைந்தது. முன்பின் தெரியாத ஒருவனிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சம்பாதித்து என்ன பயன், அவசரத்திற்கு கையில் காசு இல்லை. எவ்வளவு ஆங்கிலம் படித்து என்ன பயன், இந்த ஊரில் ஒரு பயலும் இங்கிலீஷ் பேச மாட்டேன் என்கிறான். இந்த இரவில் இன்னும் எவ்வளவு பார்க்கப்போகிறேனோ?

``சரி, பேசிட்டு வரேன்.’’

நேராக டி.டி.ஆரிடம் சென்றான். அவர்கள் பேசுவதைப் பார்க்க நான் விரும்பவில்லை. குனிந்து திரும்பி நின்றேன். டி.டி.ஆர் என்னை ஒரு பிச்சைக்காரனைப் பார்ப்பதைப்போல் பார்க்கப்போகிறான்.

திரும்பி வந்தவன் என்னிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான். வாங்கிப் பார்த்தேன். சென்னைக்குச் செல்லும் டிக்கெட்டும், ஃபைனும் சேர்த்து 850 ரூபாய் என எழுதியிருந்தது. எனக்குப் புரியவில்லை.

``என்னது?’’ என்றேன்.

``உன் டிக்கெட்தான். நானே எடுத்துட்டேன். கவலைப்படாதே. சென்னை வரைக்கும் என்கூடவே இரு. நான் பாத்துக்கறேன். இப்போ வா, முதல்ல நல்ல இடமா தேடுவோம், தூக்கம் வருது.’’

என் பதிலை எதிர்பாராமல் பையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். என் பெயர்கூடத் தெரியாமல் எனக்கான டிக்கெட்டையும் அவனே சேர்த்து எடுத்து விட்டான் என்பது புரியவே சில நொடிகள் ஆனது. யார் இவன், நான் தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காக அவனே இக்கட்டான சூழலில் இருந்தும் முன்பின் தெரியாத எனக்கும் சேர்த்தே போராடுகிறான்.

ஒரு ஆண் இன்னொரு ஆணை நினைத்து சென்டிமென்ட்டில் நெகிழ்வதுதான் இருப்பதிலேயே சங்கடமான விஷயம். கூச்சத்தில் குரல் தழுதழுத்தது. நான் அவனை இன்னும் முழுவதுமாக மதிக்கக்கூடவில்லை. எதற்காக தொடர்ந்து எனக்கு உதவிக்கொண்டே இருக்கிறான். இவ்வளவு நேரம் இந்தப் புதிய ரயில் சிநேகிதனின் பெயர் என்னவென்றுகூடக் கேட்கத் தோன்றவில்லையே.

``பாஸ், உங்க பேர் என்ன?’’ கேட்டபடி என் பையை எடுத்துக்கொண்டு அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தேன். அவன் பதிலே சொல்லாமல் நடந்தான்.

டாக்டரின் ஏதோ ஒரு சீரிய முயற்சியில் சட்டென தொண்டையில் பெரிதாக ஓசையெழுப்பியபடி துடிதுடித்து அவன் அதிர்ந்தபோது நினைவுகள் களைந்து நிகழ்காலத்திற்குத் திரும்பினேன். அவன் மூச்சுக்காகப் போராடத் தொடங்கியிருந்தான். டாக்டர் நர்ஸுகளிடம் ``ஆக்சிஜன்’’ எனக் கூறியபடி நாடி பிடித்துக்கொண்டிருக்க, மாஸௌமி ஒரு ஊசியைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். நான்சி நர்ஸ் ஆக்சிஜனை அவன் மூக்கில் மாட்டினாள். அவனுக்கு மீண்டும் உயிர் வந்திருந்தது, எனக்கும்தான்.

``சார், நம்ம வீட்டுல இருந்து வந்துட்டாங்க. ஸ்பெஷல் வார்டுக்கு மாத்திடலாங்களா?’’ என உதவியாளர் சண்முகம் வந்து அழைத்தார். சரியெனத் தலையாட்டினேன்.

பின் மாஸௌமியின் காதோரம் சென்று, ``நார்மல் ஆகிட்டாரா, ஒன்னும் பிரச்சினை இல்லையே?’’ என்றேன்.

‘`இல்லை சார், ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனா பாவம், சொந்தம் யாருமே இல்லைன்னு ரோட்ல விழுந்து கிடந்தாருன்னு அட்மிட் பண்ணுனவங்க சொல்லிட்டிருந்தாங்க’’ என்றாள் பரிதாபமாகப் பார்த்தபடியே.

‘`இனிமேல் இவரை நான் பார்த்துக்கிறேன், கடைசி வரைக்கும்’’ என்றேன். அவள் புரியாமல் விழித்தாள்.

நான் மெல்லக் குனிந்து அவனது கட்டிலின் முனையில் மாட்டியிருந்த அட்டை ஃபைலைப் பார்த்தேன். இடதோரம் பெரிய எழுத்துகளில் பட்டையாக எழுதியிருந்தது. ஆக்சிஜன் குழாயினுள் சலனமற்று இருந்த அவனது முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தேன். ``பாஸ், உங்க பேரைக் கண்டுபிடிச்சுட்டேன்.’’