Published:Updated:

மணல் செரா - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கவிப்பித்தன்

மணல் செரா - சிறுகதை

கவிப்பித்தன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஒருவழியாக அவர்கள் ஆற்றில் இறங்கியபோது சூரியன் சுருசுருவென மேலே ஏறிக்கொண்டிருந்தான். முக்கால்வாசி ஆறு மணலாய்ப் பூத்திருக்க, அவர்கள் நின்றிருந்த கிழக்குப் பக்கம் மட்டும் நூறடி அகலத்திற்குக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

உடைகளைக் கழற்றிக் கரையோரம் வைத்த குணசேகரன், சார்ட்சோடு தண்ணீரில் இறங்கினான். முட்டி வரை ஓடியது தண்ணீர்.

மற்ற ஏழு இளைஞர்களும் அவனைப் போலவே தண்ணீரில் இறங்கினர்.

“மொதல்ல மணல ரொப்பணும்டா பசங்களா…”

வேட்டியை மடித்துக் கட்டி, மணல் மேட்டில் உட்கார்ந்த பெரியவர் கண்ணப்பா சொன்னார்.

“செரி மாமா…’’ என மேலே ஏறினான் குணசேகரன். மற்றவர்களும் மேலே ஏறினர்.

“இன்னும் நாலஞ்சி நாளுதாங் தண்ணி வருமாம்… ஆந்திராக்காரன் அணய மூடப்போறானாம்…” வேட்டியைத் தலையில் சுற்றிக் கட்டிய வெள்ளைக்கண்ணு சொல்லிக் கொண்டே கண்ணப்பாவின் பக்கத்தில் குத்துக்காலிட்டுக் குந்தினார்.

“எரநூறு முந்நூறு மூட்டனா தச்சி எறக்கனாதாங் தண்ணி நம்ப காவாய்ல திரும்பும்…” பின்புறமிருந்த தங்களின் ஏரிக் கால்வாயைப் பார்த்துக்கொண்டே சொன்ன துரையும் அவர்களுடன் உட்கார்ந்தார்.

கால்வாயிலும் ஆற்றங்கரையிலும் ஏராளமான நாணல் புதர்கள். அவற்றின் தலைகளில் கோழி இறகுகளைச் செருகி வைத்ததைப்போல நீள நீளமான வெண்ணிறப் பூக்கள். அவை தனக்குத் தானே கிரீடங்களைச் சூட்டிக்கொண்டதைப் போல பார்க்கவே அழகாக இருந்தன.

சுடுகாட்டின் ஓரமாக நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்கள் மீது கட்டுகளாகக் கட்டி வைத்திருந்த காலி யூரியாப் பைகள், மாட்டுத் தீவனப் பைகளைத் தூக்கி வந்தனர்.

“மொதல்ல தீவனப் பைல ரொப்புங்க… அதாங் தண்ணி வேகத்துக்குத் தாக்குப் புடிக்கும்…”

கண்ணப்பா சொன்னதும், பெரிய பெரிய மாட்டுத் தீவனப் பைகளைப் பொறுக்கி எடுத்தனர்.

“நாலு நாளிக்கி முன்னால எவ்ளோ வெள்ளம் போச்சிடா… அய்யோ… அதெல்லாம் இப்ப எங்கடா..?” வாய் பிளந்தார் கண்ணப்பா.

“மாமா… பலமனேரி காட்ல செம மழயாங்… அண தாங்காதுனுதாங் திறந்து உட்டாங்களாம்…”

“அதான… இல்லனா ஒரு பொட்டு தண்ணீ உடுவாங்களா…” வெள்ளைக்கண்ணு சொன்னார்.

மணல் செரா - சிறுகதை

இளைஞர்கள் நான்கு ஜோடிகளாகப் பிரிந்துகொண்டனர். ஜோடிக்கு ஒருவர் பையை விரித்துப் பிடிக்க, ஒருவர் மணல் செராவாலும், மண்வெட்டியாலும் மணலை வாரி வாரிப் பைகளில் நிரப்பினர். கழுவிக் காய வைத்த நொய்யரிசியைப் போல வெளேரெனக் காய்ந்திருந்த மணலுக்குக் கீழே ஈர மணல் சொதசொதத்தது.

வாரிப் போடப் போட மணலை விழுங்கிக்கொண்டே இருந்தன பைகள். ஆளுக்கொரு மூட்டையை நிரப்புவதற்குள்ளாகவே சலசலவென வியர்த்து வழிந்தது.

“எங் கூத்தியாருங்கள… ஒரு மூட்டைக்கே நோனிக்காம்பு கெய்ல்தா…” எனச் சிரித்தார் துரை.

“அப்பலாம்… சூரியந் தல காட்றதுக்குள்ளியே ஆயிரம் மூட்டய தச்சி ஆத்துல எறக்குவோம் நாங்க…” பெருமையாய்ச் சொன்னார் கண்ணப்பா.

எல்லோரின் தலைகளிலிருந்தும் சிற்றாறுகள் பெருகின. தலா பத்து மூட்டைகளை நிரப்புவதற்குள்ளாகவே உடல் வெலவெலக்க… பொத் பொத்தென உட்கார்ந்துவிட்டனர்.

“மூட்டய புட்சிகினு நின்னவங்க மணல ரொப்புங்க… வார்னவங்க நின்னு புடிங்க…” வெள்ளைக்கண்ணு சொன்னார்.

அதன்படியே ஆள் மாற்றி நிரப்பத் தொடங்கினர்.

நீவாநதியில் இப்படி திடீரென வெள்ளம் வருவது பெரிய அதிசயம். ஆந்திராவில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு, பொன்னைக்கு வடக்கே நான்கு மைல் தூரத்தில்தான் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது.

அப்போதெல்லாம் வருசந்தவறாமல் வெள்ளம் வரும். பெரிய செம்மண் மலையையே கரைத்து ஊற்றியதைப் போல ரத்த நிறத்தில் ஓடும். அதில் ஏராளமான மரக் கிளைகளும், செடிகளும் மிதந்து கொண்டு போகும்.

மொத்த வெள்ளமும் பாலாற்றில் கலந்து, கிழக்கில் ஓடி… கடலில் கலக்கும்.

அவ்வளவு வெள்ளமும் கடலில் கலந்து வீணாவதைப் பார்த்த வெள்ளைக்காரன், பொன்னைக்கு அருகில் ஒரு அணையைக் கட்டினான். அணையின் இருபுறமும் கால்வாய்களை வெட்டி சுற்றுப்பட்டு ஏரிகளோடு இணைத்தான். அதன் பிறகு ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் மடை திருப்புவதைப் போல மதகுகளைத் திறந்து… நூற்றுக்கணக்கான ஏரிகளை நிரப்பினார்கள் லஸ்கர்கள்.

ஆனால் இவர்களின் கீழாண்டூர் ஏரி மட்டும் அணைக்கு முன்னதாகவே இருந்தது. அதனால் அணைக்கு மூன்று மைலுக்கு முன்னதாகவே ஒரு கால்வாயை வெட்டி, அதை அந்த ஏரியோடு இணைத்தான் ஆங்கிலேயன். ஆறு கொள்ளாமல் வெள்ளம் வரும்போது இந்தக் கால்வாயிலும் தண்ணீர் திரும்பி, தானாகவே ஏரி நிரப்பிவிடும்.

ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் ஓட ஓட… நாளடைவில் ஆறு பள்ளமாகிவிட, கால்வாயோ மேட்டில் நின்றது. அதனால் ஆற்று வெள்ளம் ஆற்றோடு போக, கால்வாய் அனாதையாக நின்றது.

ஹோவென ஆற்றில் ஓடும் வெள்ளத்தைப் பார்த்துப் பார்த்து மனசு நொந்து நின்றனர் கீழாண்டூர்க்காரர்கள். அதன் பிறகுதான் இப்படி ஒரு வழியைக் கண்டடைந்தனர்.

வெள்ளத்தின் ஆவேசம் சற்றுக் குறைந்து சாந்தமாக ஓடும்போது, ஆற்றின் குறுக்கில் ஒரு தற்காலிகத் தடுப்பைக் கட்டி, தண்ணீரை வலுக்கட்டாயமாகத் திருப்பத் தொடங்கினர்.

அது பிரம்மப் பிரயத்தனம். முதலில் மரக்கிளைகளையும், மண்டைகளையும் வெட்டி ஆற்றின் குறுக்கில் போட்டு, மணலைச் சேர்த்துச் சேர்த்துக் கரை கட்டுவார்கள். எவ்வளவு பெரிய கரையைக் கட்டினாலும் திரும்பிப் பார்ப்பதற்குள் அது ஆற்றோடு போய்விடும்.

அதனால்தான் வீட்டுக்கு ஒரு ஆள் என ஊரே திரண்டு வந்து ஆற்றில் இறங்கும்.

ஏரி நிரம்பிவிட்டால் ஏரியின் கீழிருக்கும் நஞ்சையில் இரண்டு போகம் நெல் விளையும். சுற்றுப்பட்டு கிணறுகளிலும் தண்ணீர் ஏறிவிடும். அந்தப் புஞ்சைகளில் கேழ்வரகும், கம்பும் விளையும்.

எல்லாமே பழைய கதை.

ஆந்திராவில் அணை கட்டிய பிறகு ஆற்றில் வெள்ளம் வருவது கனவாகிவிட்டது. எல்லா நிலங்களுமே கேட்பாரற்று தரசாய்க் கிடந்தன. பெருசுகள் கரிமலைக் காட்டில் ஆடுகளை மேய்க்க, இளசுகள் சிப்காட் பக்கம் படை எடுத்தன.

எல்லோருக்கும் பயிர் முகமே மறந்துவிட்ட பிறகு… ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை இப்படித்தான் திடீரெனப் பெரும் வெள்ளம் வந்தது.

மணல் செரா - சிறுகதை

யாருமே ஆற்றுப் பக்கம் போகவில்லை. கொஞ்சமாய்க் கால்வாயில் திரும்பிய தண்ணீரால் பாதி ஏரிகூட நிரம்பவில்லை. அதை நம்பிப் பயிர் வைத்தால் கதிர் வரும்போது ஏரி வற்றி, பதர் தான் மிஞ்சும். முதல் மடைக்காரர்கள் நான்கு பேர் மட்டும், குறைவான நாளில் விளையும் குண்டு நெற்பயிரை நட்டனர்.

அதில் ஒருவன் நடராஜன். உழவு ஓட்ட, நடவு நட, மருந்தடிக்க, அறுப்பறுக்க என ஏக்கருக்கே பதினேழாயிரம் செலவு. நெல்லை விற்றபோது பதினைந்தாயிரம்தான் வந்தது. கைக்காசு இரண்டாயிரம் போனது. இரவும் பகலுமாய் உழைத்த உழைப்பு..?

“பயிரு வேல… யான கட்டித் தீனி போட்ற வேலயா பூட்சி… வேலைக்கி போனமா… சிப்பம் அரிசிய வாங்கனமா… துன்னமான்னு போய்க்கினே கீணம்…” வெல்டராக வேலை செய்யும் மோகன் கறாராகச் சொன்னான்.

“எல்லாமே அப்டி போனா யார்தாண்டா பயிரு வெச்சி அரிசிய அனுப்பறது..?” அவனிடமே கேட்டான் குணசேகரன்.

“அதல்லாங் தானா நடக்கும்பா.”

அப்படித் தானாக நடக்கும் என ஆற்றில் போகும் வெள்ளத்தை இந்த முறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு குணசேகரனால் இருக்க முடியவில்லை.

ஒரு வாரம் வரை அளவு கடந்த வெள்ளம். அதற்குப் பிறகுதான் கொஞ்சம் ஆவேசம் குறைந்தது.

ஆற்றுக்கு வருமாறு வீடு வீடாகப் போய்க் கெஞ்சினான். யாரும் அசையவில்லை.

“மதியானம் வரைக்கும் வந்தாக்கூட போதும்டா…”

“எதுக்கு... ஞாயித்துக் கெழம ஒரு நாளு ஏரில கிரிக்கெட் ஆட்றோம்… அதயும் தண்ணிய ரொப்பி கெடுக்கறதுக்கா?” நக்கலடித்தான் சுகுமாறன்.

“ஏரி ரொம்பினாலும் யாரும் பயிரு வைக்கப்போறதில்ல… அப்பறம் எதுக்கு மாமா..?” சிரித்தான் கிரி.

“பயிரு வைக்கலன்னாலும் ஆடு மாடு குடிக்கறதுக்குனா தண்ணி வாணாமா..?”

“யோவ் பங்காளி, எதுக்கு தண்டமா ஊர சுத்திச் சுத்தி வர்ற..? எவனும் வரமாட்டாங்… போயி கம்பனில ஓட்டியாவது செய்யி… எஸ்ட்ரா துட்டுனா வரும்…” ஏகாம்பரம் நக்கலடித்தான்.

“லாக்டௌனு வந்தப்பறம் பெரிய பெரிய இன்ஜினீயர்ங்களே சொந்த ஊர தேடிக்கினு போறானுங்க… தெரிமாடா..?” ஆத்திரத்தோடு கத்தினான் குணசேகரன்.

அதற்குப் பிறகுதான் அவனுடன் ஏழு பேர் கிளம்பினார்கள்.

“மூட்டய ரொப்ப எங்களால முடியாது… நாங்க கரைல இர்ந்து யோசன சொல்றோம்… வாங்க போலாம்…” என அவர்களுடன் மூன்று பெரியவர்களும் கிளம்பினார்கள்.

எப்படியோ நூறு மூட்டைகளுக்கு மேல் நிரம்பிவிட்டது.

“பாபு… அவங்க ரொப்பட்டும்… நாம மூட்டய தைக்கலாம் வா…” என்றவாறு நீளமான கோணி ஊசியை எடுத்தான் குணசேகரன்.

ஒரு சணல் கயிற்றை கோணி ஊசியின் காதுக்குள் நுழைத்து முனையில் முடி போட்டான். மூட்டையின் முனையில் குத்தித் தைக்கத் தொடங்கினான். அவன் தைப்பதற்கு வசதியாக பையின் ஓரங்களை மடித்துப் பிடித்தான் பாபு.

உச்சி வெயிலுக்குள் நூறு மூட்டைகளுக்கு மேல் தைத்து முடிக்க, வெள்ளைப் பன்றிகளைப் போல அவை கும்பல் கும்பலாகப் படுத்துக் கிடந்தன.

“இப்ப மூட்டய இஸ்த்து தண்ணீல எறக்குங்க…” என்றார் கண்ணப்பா.

சட்டென ஒரு மூட்டையை இழுத்து இறக்கினான் பாபு. இறக்கிய வேகத்திலேயே அதை இழுத்துக்கொண்டு போனது வெள்ளம்.

“அய்யோ… மூட்ட தண்ணில போய்ச்சே…” என அலறினான்.

“உனுக்கு எல்லாத்திலியுமே அவசரம்டா… அது கங்கா தேவிடா… அவள கும்புட்டு நேக்கா எறக்கணும்…” என்ற துரை, நான்கு பேரை வெள்ளத்திற்கு முதுகைக் காட்டியபடி வரிசையாக தண்ணீரில் நிற்க வைத்தார்.

அவர்களின் கால்களுக்கு முன்னால் மெதுவாக ஒரு மூட்டையை இறக்கச் சொன்னார். தண்ணீரைத் தொட்டுக் கும்பிட்ட குணசேகரன், ஒரு மூட்டையை இழுத்து இறக்கினான். மூட்டையை வேகமாகப் புரட்டியது தண்ணீர். நின்றவர்கள் அதை அழுத்திப் பிடித்துக்கொண்டனர். அதன் மீது சட்சட்டென மேலும் இரண்டு மூட்டைளை இறக்கச் சொன்னார். இப்போது தண்ணீரின் ஆவேசம் குறைந்து மூட்டையை விட்டு ஒதுங்கி ஓடியது.

“இப்டியே சந்து உடாம வர்சியா அடுக்குங்க…”

கண்ணப்பா சொன்னதும், அடுத்தடுத்து மூட்டைகள் விழுந்தன.

தைக்கப்பட்ட மொத்த மூட்டைகளையும் தண்ணீரில் இறக்கி, அடுக்கி முடித்தபோது பத்தடி நீளத்திற்கு பலமான தடுப்பு உருவானது.

“ம்… உன்னோரு மூச்சு மூட்டய ரொப்புங்க…” வெள்ளைக்கண்ணு சொன்னார்.

முன்புபோலவே மூன்று ஜோடிகள் மூட்டையை நிரப்ப, குணசேகரனும் பாபுவும் மூட்டையைத் தைத்தனர். மளமளவென மேலும் நூறு மூட்டைகளை ஆற்றில் இறக்க, மேலும் பத்தடி தூரம் தடுப்பு நீண்டது.

இப்போது தண்ணீரின் ஆவேசம் கொஞ்சம் மட்டுப்பட்டது. தடுப்பில் மோதி சுற்றிச் சுழன்று கொஞ்சமாக கால்வாயிலும் திரும்பி நகரத் தொடங்கியது.

“சபாஸ்டா… உன்னோரு பத்தடி கட்ணம்னா… காவா நெறய்ய திரும்பிடும்…” வெள்ளைக்கண்ணு உற்சாகமானார்.

ஆனால் அதற்குள் எல்லோருக்குமே உடல் துவண்டுபோனது. மேலே சூரியன் தீயாய்ச் சுட்டான்.

குணசேகரன் சட்டெனப் பாய்ந்து தண்ணீரில் குதித்தான். தண்ணீரின் குளிர்ச்சி உடலுக்கு இதமாக இருக்க, அவனைப் போலவே மற்றவர்களும் குதித்தனர்.

“புதுத்தண்ணி… தலய நனைக்காதீங்க… ஜொரம் வந்தா ஆஸ்பத்திரிக்கிகூடப் போவ முடியாது… தொத்து நோவு இன்னும் நாட்ட உட்டுப் போவல...” எச்சரித்தார் வெள்ளைக்கண்ணு.

எல்லோரும் மேலே ஏறி வந்தனர். மீண்டும் மூட்டைகளை நிரப்பினர். பெரியவர்கள் மூவரும் கரையோரமிருந்த கடல்பால் மண்டைகள், ஆவாரம் மண்டைகள், புங்கம் மண்டைகளை வெட்டிச் சுமையாய்த் தூக்கி வந்தனர்.

“இத கட்டுக்கு முன்னால வெச்சி மணல இஸ்த்து அது மேல உடுங்க… கட்டு கனமா நிக்கும்…” என்றார் கண்ணப்பா.

“இன்னும் ஒரு அஞ்சாறடி கட்டிட்டா போதும்...” திருப்தியாகச் சொன்னார் வெள்ளைக்கண்ணு.

இரண்டு பேர் தண்ணீரில் இறங்கி, கட்டின் முனையில் நின்று மணல் செராவால் தண்ணீருக்குள்ளிருந்தே மணலை வாரி பையில் நிரப்பினர். அப்படித் தண்ணீரிலிருந்து மணலை வாரி எடுப்பது கடினமான வேலை.

ரைஸ் மில்களில் அரிசியைப் பிரிக்கும் வளைவான இரும்பு ஜல்லடைகள் தேய்ந்ததும் அவற்றைக் கழற்றிப் போட்டுவிடுவார்கள். அதுதான் மணல் செரா. ஒரு காலத்தில் அது ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. இப்போது கண்ணப்பாவும், வெள்ளைக்கண்ணுவும் மட்டும் தங்கள் வீடுகளிலிருந்து தேடி எடுத்து வந்திருந்தனர்.

மூட்டைகளைத் தைத்துத் தைத்துக் கைகள் சோர்ந்துபோனது குணசேகரனுக்கு. அவனிடமிருந்த கோணி ஊசியை வாங்கிய பாபு மூட்டையைத் தைக்கத் தொடங்கினான். குணசேகரன் பையின் முனைகளை மடித்துப் பிடித்தபடி நின்றான்.

ஈர மணல் நிரம்பி தண்ணீர் கசியும் மூட்டைகளைத் தைப்பது, வாழைப் பழத்தில் ஊசியைக் குத்துவது போல எளிதாக இருந்தது பாபுவுக்கு.

“அட… டைலர் மாரி சரசரன்னு தைக்கறடா நீ…” அவனைப் பார்த்துச் சிரித்தார் வெள்ளைக்கண்ணு.

இன்னும் வேகவேகமாக ஊசியைக் குத்திக் குத்தி இழுத்தான் பாபு. அதை அதிசயத்துடன் பார்த்தான் குணசேகரன். முதலிலேயே அவனிடம் ஊசியைக் கொடுத்திருக்கலாமே என நினைத்தான்.

எட்டு மூட்டைகளை அனாயாசமாகத் தைத்துக் கீழே தள்ளிவிட்டு ஒன்பதாவது மூட்டை. புதிய சணலை மாற்றி முதல் குத்தைக் குத்தி ஊசியை வேகமாக மேலே இழுத்தான்.

“அய்யோ…” என அலறிய குணசேகரன் சடாரெனக் கீழே சாய்ந்தான்.

கைளை உதறிய பாபு அதிர்ச்சியில் சிலையாய் நிற்க, பயத்தோடு எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

கண்ணப்பாதான் சுதாரித்து ஓடி வந்தார். மணலில் விழுந்து துடித்த குணசேகரனைத் தூக்கித் தனது மார்பில் சாய்த்துக்கொண்டார். அவனது இடது கண்ணிலிருந்து தொங்கிய கோணி ஊசி, வெயிலில் மினுங்கியது. ஊசியைப் பிடித்து மெதுவாக அசைத்தார். குணசேகரன் வலியில் அலறினான்.

“வெள்ளிமல முருகா… நீதான்டா காப்பாத்தணும்...” என்றபடி ஊசியை வெடுக்கென இழுத்தார். ஊசி கையோடு வந்து விட்டது. சுற்றி நின்றவர்கள் திகிலோடு பார்த்துக் கொண்டிருக்க... தனது துண்டை எடுத்து குணசேகரனின் கண்கள் மீது வைத்துத் தலையின் பின்புறமாக இழுத்துக் கட்டினார்.

“ஒடனே தூக்கினு ஆஸ்பத்திரிக்கி கிளம்புங்க...” என்று கத்தினார்.

வடிவேலுவும், குமாரும் பேன்ட் சட்டையை மாட்டிக்கொண்டு ஒரு வண்டியைக் கிளப்பினர். இரண்டு பேர் குணசேகரனைத் தூக்கிப்போய் அந்த ஸ்கூட்டரில் அவர்களுக்கு நடுவில் உட்கார வைத்தனர். வண்டி மண் பாட்டையில் மெதுவாக ஓடி, ஊருக்குள் நுழைந்து, ஆற்றுப் பாலத்தில் சீறி, வேலூரை நோக்கிப் பறந்தது.

கிலி பிடித்து நின்ற மற்றவர்களைப் பார்த்தார் கண்ணப்பா.

“இனிம யாரும் மூட்ட தைக்க வாணா… தச்சத மட்டும் எறக்கி உடுங்க… மத்தத நாளிக்கி பாத்துக்கலாம்…”

மிச்சமிருந்த மூட்டைகளையும் தண்ணீரில் இழுத்துப்போய் அடுக்கி மிதித்தனர்.

“பரவால்ல… காவால நல்லாவே தண்ணீ திரும்பிட்சி… இதே மாரி ஒரு வாரம் போனா போதும்…” வெள்ளைக்கண்ணு பொதுவாகச் சொன்னார்.

“திடீர்னு வெள்ளம் ஜாஸ்தியா வந்தா கட்ட இஸ்துகினு பூடும். அப்ப புதுசாதாங் கட்டணும்… எதுக்கும் நாலஞ்சி நாளு உடாம வரணும்…” கண்ணப்பா கரை ஏறினார்.

மறு நாள் விடிந்ததுமே தயாராகிவிட்டார் கண்ணப்பா. பஜனைக் கோயில் வேப்ப மரத்தடியில் வந்து நின்றார். வெள்ளைக்கண்ணுவும் வந்தார். ஆனால் பையன்கள் யாருமே வரவில்லை.

குணசேகரனுக்குப் பார்வை நரம்பில் பலமான சேதம் என்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க வேண்டுமாம்.

ஊர் முழுவரும் இதே பேச்சாக இருந்தது.

கண்ணப்பாவும், வெள்ளைக்கண்ணுவும் மட்டும் பேருந்தில் ஏறினர். பொன்னையில் இறங்கி, மெதுவாக நடந்து ஆற்றுக்குள் இறங்கினர். கட்டு உடைந்து முக்கால் பாகம் ஆற்றோடு போயிருந்தது. கால்வாயில் சுத்தமாக தண்ணீர் ஏறவில்லை.

“நேத்து பட்டதெல்லாம் வீணாப் பூட்சே மாமா… மறுபடியும் மூட்டய கட்டி எறக்கனாதாங்…” வெள்ளத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார் வெள்ளைக்கண்ணு.

மனசு சோர்ந்து போய் ஊருக்குத் திரும்பினர். அன்று இரவு முழுவதும் அவர்களுக்குத் தூக்கமே வரவில்லை. ஆற்று வெள்ளத்திலேயே மனசு கிடந்து அடித்துக் கொண்டது.

மறு நாள் காலையிலேயே வீடு வீடாகப் போனார்கள். எல்லோரும் வேலைக்குப் போவதிலேயே கவனமாக இருந்தனர். கெஞ்சிப் பார்த்தனர். கொஞ்சிப் பார்த்தனர். யாருமே அசையவில்லை.

அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. மறுபடியும் வீடு வீடாகப் போனார்கள். ஏரியில் கொஞ்சமாகத் தண்ணீர் வந்துவிட்டதால் கிரிக்கெட் குழு காட்டுப்பக்கம் கிளம்பியது. அவர்களைக் குறுக்கில் மறித்து நின்று கெஞ்சினார் கண்ணப்பா.

“எங்களுக்கு மூட்டலாம் தைக்கத் தெரியாது தாத்தா… தெர்ஞ்சாலும் குணா மாரி கண்ணக் குத்திக்க எங்களுக்கின்னா தலை எய்த்தா..?” ஒரு பையன் தீர்மானமாகவே சொன்னான்.

“நீங்க மணல மட்டும் ரொப்புங்கடா… நாங்க நிதானமா தச்சிக் குடுக்கறோம்…” வெள்ளைக்கண்ணு சொன்னார்.

“உங்க வெளாட்ட எப்பனாலும் ஆட்லாம்… ஆனா தண்ணீய இப்ப உட்டம்னா… அப்பறமா எத்தினி கோடி குட்தாலும் வராதுரா…” அந்த டீம் லீடரின் கைகளைப் பிடித்துக்கொண்டார் கண்ணப்பா. அவரது குரல் கம்மியது.

அவன் கண்ணப்பாவை உற்றுப் பார்த்தான்.

“மச்சாங்… குணா அண்ணங் இதுக்குனு கண்ணக்கூட குத்திகினு ஆஸ்பத்திரில கீது… நாமளும் எதுனா பண்ணணும்டா...” அவன் இன்னொரு பையனிடம் யோசனையோடு சொன்னான்.

“ஆமாடா… மேட்ச்ச அட்த்த வாரம் வெச்சிக்கலாம்… ஒரு வாட்டி ஆத்துக்குப் போயி பாக்கலாமா…” இன்னொரு பையன் சொன்னான்.

மணல் செரா - சிறுகதை

அவ்வளவுதான். அந்தப் படை அப்படியே ஆற்றுக்குக் கிளம்பியது. வண்டிகள் உறுமின. உயிரே வந்ததைப் போல பெரியவர்களும் அவர்களுடனே கிளம்பினார்கள்.

திமுதிமுவென ஆறு மிதிபட்டது. ஆட்டமும் பாட்டமுமாய் மணல் மூட்டைகளை நிரப்பினார்கள். ஓடி ஓடி கிரிக்கெட் ஆடிய உடம்புகளுக்கு வெயிலும் களைப்பும் தெரியவே இல்லை. கண்ணப்பாவும் வெள்ளைக்கண்ணுவும் மூட்டைகளைத் தைத்துத் தர… மூட்டைகளை இழுத்து இழுத்து ஆற்றில் இறக்கினார்கள்.

தடுப்பு மெதுவாக நீள நீள… கால்வாயில் தமதமவெனத் திரும்பியது தண்ணீர். பையன்களுக்கு இது குதூகலமாக இருந்தது. படம் எடுத்து முகநூலில் போட்டனர். சிலர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்தனர்.

மறுநாளும் அதே உற்சாகத்தோடு ஆற்றுக்குக் கிளம்பினார்கள். படை மேலும் பெருகியது. கால்வாயிலும் வெள்ளம் பெருகியது. அடுத்தடுத்த நாள்களிலும் வெள்ளம் கால்வாய் கொள்ளாமல் ஓடத் தொடங்கியது.

இரையை விழுங்கி விழுங்கி வயிறு பெருக்கும் மலைப்பாம்பைப்போல… தண்ணீரைக் குடித்துக் குடித்துத் தளும்பத் தொடங்கியது ஏரி. ஒரு வாரம் கழித்து ஏரியின் கோடியைத் தொட்டது தண்ணீர்.

மாலை வெயில் இதமாகக் காயத் தொடங்கியபோது, தமதமவென கோடி புரளத் தொடங்கியது. ஊரே கூடி நின்று அதை அதிசயத்துடன் பார்த்தது.

பதினைந்து நாள்கள் மின்னலாக ஓடிவிட்டது. அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள். பயிரே வேண்டாம் என்றவர்கள்கூட நாற்று விட்டு, உழவில் இறங்கிவிட்டனர்.

“எண்பது கிலோ நெல்லு மூட்ட எட்நூறு ரூபா… இருவத்தஞ்சி கிலோ சிப்பம் அரிசி ஆயிரத்தி எரநூறு… எதுக்கு நெல்ல வித்துட்டு அரிசிய வாங்கணும்..?” பி.காம் படித்த முருகன் கேட்டான்.

ஊரில் எல்லோருமே துணிந்து இறங்கிவிட்டனர். ஒரு போகம் விளைந்தால்கூட இரண்டு மூன்று வருடங்களுக்கு அரிசியே வாங்க வேண்டாமே என்ற கணக்குதான்.

குணசேகரனுக்கு அந்தக் கண்ணில் இனி பார்வையே வராது எனச் சொல்லிவிட்டார்கள்.

ஒரு மாதம் கழித்துதான் மருத்துவமனையிலிருந்து வந்தான். ஊருக்கு வந்ததும் மெதுவாக நடந்து ஏரிக்கரைக்குப் போனான். அவனுடன் பாபுவும் போனான்.

கரை மீதிருந்து ஒற்றைக் கண்ணால் வயல்வெளியைப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையும், மஞ்சளுமாய்ப் புடைவைகளை விரித்ததைப்போல நெற்பயிர்கள்.

திரும்பி ஏரியைப் பார்த்தான். பரந்து விரிந்த கடலைப் போலத் தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்க, சிலுசிலுவெனக் காற்று வீசியது.

அவன் கண்கள் கலங்கின. அதைப் பார்த்த பாபு சங்கடப்பட்டான்.

“இப்டி அநியாயமா உனுக்கு கண்ணு போய்ச்சே மச்சாங்…”

“கண்ணு போன்து எனுக்கும் கஸ்டமாதான்டா கீது… ஆனா அதுக்கப்பறந்தான்டா நம்ப ஊருக்கே கண்ணு தெறந்துகீது…”

ஆச்சரியமாக அவனைப் பார்த்தான் பாபு.

அப்போது அலைகளிலிருந்து எழும்பிய ஒரு மெல்லிய காற்று அவர்களின் தலையை மெதுவாகத் தடவிவிட்டுப் போனது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism