Published:Updated:

வசியக்காரிகள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- கவிதா சொர்ணவல்லி

வசியக்காரிகள் - சிறுகதை

- கவிதா சொர்ணவல்லி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

நவம்பர் மழை சென்னையில் தொடங்கியிருந்தது.

மழைக்காகக் காத்திருப்பதைவிடவும், சாலையோர மழைத்தண்ணீரில் குட்டி குட்டி நட்சத்திரங்களாக மிதக்கும் இம்மாதத்துக்கேயான பன்னீர்ப் பூக்களின் வரவிற்காகவே ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்
.

மண்தரையில் உதிர்ந்திருக்கும் பன்னீர்ப் பூவைக் காட்டிலும், மழைநீரில் விழுந்திருக்கும் பன்னீர்ப் பூவிற்குத் தனி நறுமணம் உண்டு. தண்ணீரில் கரைந்த பன்னீர்ப் பூவின் வாசமென்பது, பற்றியெரியும் தைலக்காடொன்றை நினைவிலாழ்த்தும். சுற்றிச்சுழலும் அனலின் இடையில் பரவித் திரியும் தைலத்தின் குளிர்போல, பன்னீர்ப்பூவின் சுகந்தம் தூறலின் குளிர்ச்சியுடன் உடன் நடக்கும்.

மழையில் தேங்கி மிதக்கும் பன்னீர்ப்பூவை, அவ்வளவு நெரிசலான டிராபிக் நடுவிலும், சாலையோரத்தில் வண்டி நிறுத்தி, நிதானமாகப் பொறுக்கி வருவேன். தென்றல் குவியல்களை அள்ளி வருவதுபோல் தோன்றுமெனக்கு. அறை முழுக்க அதன் வாசனை பரவியிருக்கும் நள்ளிரவில் ஏஞ்சல்கள் பற்றிய கனவு வந்திருக்கிறது.

சென்னையில் நான் தங்கியிருக்கும் வீட்டில், ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தில் ஜூனியர் டிசைனராகப் பணிபுரியும் நான், செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரியும் சுகன்யா, லாஜிஸ்டிக் நிறுவனத்தில் பணிபுரியும் லக்ஷ்மி, நான்சி என்று நான்கு பேர் குடியிருந்தோம்.

சுகன்யாவுக்கு, பன்னீர்ப்பூவின் நறுமணம் எப்போதுமே சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கை நிறைய பன்னீர்ப் பூக்களுடன் நான் வருகையிலும் அவள் அதிருப்தியை சலிக்காது வெளிப்படுத்துவாள்.

வசியக்காரிகள் - சிறுகதை

‘‘நாலு பேர் ஷேர் பண்ணித் தங்கியிருக்க வீட்டுல நீ இஷ்டப்பட்ட மாதிரியெல்லாம் இருக்க முடியாது, இதெல்லாம் உன் வீட்டுல வச்சுக்க’’ என்றாள் ஒரு முறை.

‘‘கொமட்டுற நாத்தமா இருக்குது, இத அந்த ரோட்டோர சாக்கடைல இருந்து தூக்கிட்டு வர்ற பாரேன்’’ என்று கத்தினாள் ஒரு முறை. ஏன் அர்த்தமில்லாத முரட்டுத்தனத்தை என்னிடம் பிரயோகிக்கிறாள் என்று ஆச்சர்யமாக இருந்தது.

அந்தக் களேபரங்களுக்கு நடுவில் பன்னீர்ப் பூ சீசன் முடிவடைந்திருந்தது. அடுத்த பருவத்திற்குள் அவள் வேறு நண்பர்களுடன் வீடெடுத்துத் தங்கப் போயிருந்தாள்.

நறுமணங்களின் மீதான பிரேமை, ஸ்வேதாவிடமிருந்துதான் எனக்குத் தொடங்கியிருக்க வேண்டும். அவள் என்னுடைய காலேஜ் மேட்.

கல்லூரி முதல் நாளில் நானும் அவளும், வகுப்பு தொடங்குவதற்கு வெகு முன்னரே வந்திருந்தோம். இருவர் மட்டும்தான். கல்லூரியின் நீண்ட வராந்தாவில், என்னிலிருந்து நான்கு நாற்காலிகள் தள்ளி அமர்ந்திருந்த ஸ்வேதா, எதேச்சையாக என்னைப் பார்க்கையில் எந்தவித சங்கடமுமில்லாமல் புன்னகைத்தாள். பற்களில் கிளிப் போட்டிருந்த முதல் பெண்ணை அப்போதுதான் நான் பார்த்தேன். அந்தப் பல் கிளிப் அவளை, கவர்ச்சி ஆக்குவது போல், பார்த்த நிமிடத்திலேயே தோன்றியது. அதுவே, அவளையும் என்னையும் கல்லூரியில் பிரியத்துக்குரிய எஸ் ஸ்கொயர்-ராக ஆக்கியிருக்குமோ என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

‘இந்த கிளிப் உன்ன ஹாட்டா காமிக்குது ஸ்வேத்’ என்று அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஸ்வேத் விசித்திரமான, இன்னமும் சொல்லப்போனால் வினோதமான ஒருத்தி. அவளுடைய கண்களின் வழி, புறவுலகைப் பார்க்கையில், அவளுடைய கிளிப்களின் வழி புதிய விஷயங்களைக் கேட்கையில் அதி சுவாரஸ்யமாக இருந்திருக்கிறது.

தலையில் விதவிதமான ரீத்கள், ஹேர்பேண்ட்களை அணிந்துகொள்ளும் வழக்கம் எனக்கு அவளிடமிருந்து தொற்றியதே. எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்த இன்டீரியர் டிசைனிங்கிற்காக கல்லூரி லைப்ரரியில், வெளிநாட்டுப் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து வாசிக்கக் கற்றுக்கொண்டதும் அவளிடமிருந்துதான். காட்டுக்கு நடுவே இருந்த எங்கள் கல்லூரியின் உபயோகப்படுத்தப்படாத வழிகளில் உதிர்ந்துகிடக்கும் மயிலின் இறக்கைகள், குயிலின் சிறகுகள், செம்போத்துப் பறவையின் நீண்ட வால் என்று தேடித் தேடிப் பொறுக்கியெடுத்து, அவற்றை சார்ட் அட்டையில் ஒட்டி, பிடித்த சீனியர்களுக்குப் பரிசாக வழங்குவதை அவள்தான் பழக்கிவிட்டாள்.

வேலண்டைன் தினத்திற்காக, ஹெர்பேரியம் செடிகள், பூக்களால் பொக்கே செய்யலாம் என்று தோன்றி, அதற்காக கல்லூரியின் காட்டுக்குள் திரிந்து கொண்டிருந்தோம். வயலட் நிற நட்சத்திரப் பூக்கள், மாம்பழ மஞ்சள் பூக்கள், வாடாமல்லி, கோழிக்கொண்டை என்று பொங்கிப் பூத்திருந்தது காடு.

ஒவ்வொரு பூவாக முகர்ந்து பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அப்போதுதான் ஸ்வேதா திடீரெனக் கேட்டாள்.

``உனக்கு என்ன வாசம் ரொம்பப் புடிக்கும்?’’

சட்டென்று கேட்டதால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சற்றே சங்கடமாகவும் இருந்தது.

‘`சட்டுனு கேட்டியா, எனக்கு ஸ்டக் ஆவுது. ஞாபகம் வரமாட்டுது ஸ்வேத். என்ன விடு... உனக்கு என்ன வாசம் பிடிக்கும்” என்றேன்.

அநேகமாக, இந்த ‘உனக்கு என்ன வாசம் பிடிக்கும்’ என்பது என்னிடமிருந்து வரவேண்டும் என்பதற்காகவே அந்த உரையாடலை ஸ்வேத் தொடங்கியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

மேஹ்ரூன் நிறத்தில் நீண்டு வளர்ந்திருந்த புல் ஒன்றைப் பிடுங்கி, தன் தலையில் வைத்து போஸ் கொடுத்தவாறே சொன்னாள் ‘`எனக்கு என்னோட வாசம்தான் பேவரைட்’’ என்று.

‘`உன்னோட வாசமா?!’’ என்று துணுக்குற்றுக் கேட்டேன். உண்மையாகவே.

‘`ஆமா என்னோட வாசம்தான். என் உடம்போட வாசம். காலையில எழுந்ததும், குளிக்கப் போவீல? அப்போ டிரஸ் ரிமூவ் பண்ணுறப்ப, நம்ம உடம்புல இருந்து ஒரு வாசம் வரும். மிதமான சூட்டோட, இதமா. அவ்ளோ நேரம் ரெஸ்ட்ல இருந்த நம்ம ரத்தம் சட்டுனு உடம்பு பூரா பாயத் தொடங்கும்ல... அதோட வேகத்தோட ஒரு வாசம் வரும். அந்த வாசத்துக்கு ஈக்குவலானது வேற எதுமே இல்ல. அதுக்காகவே அந்த நிமிஷம் அந்த நொடி நீண்டுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன். நீயும் பீல் பண்ணிப் பாரு’’ என்றாள்.

இதைச் சொல்லும்போது அவளுக்குப் பதினேழு வயது முடிந்திருந்தது. எனக்கும்தான். இப்போது யோசிக்கையில் அவள் அந்த வயதுக்கு மாயக்காரி போல் நிகழ்ந்துகொண்டிருந்தாள்.

அதே பதினேழில்தான் பிரத்யேக வாசனைகள் என்றால் என்ன என்பதையே தெரிந்துகொண்ட ஒருத்தியாக நான் நிகழ ஆரம்பித்தேன்.

ஆனால், அதற்கு முன்னதாகவே பிரத்யேக வாசனைகளின் பின் போகும், பேக்பைப்பரின் எலியாக நான் இருந்திருக்கிறேன். எட்டாம் வகுப்பில் வரலாற்றுப் பாடமெடுத்த வசுந்தரா டீச்சர் என்கிற மந்திரக்காரியின் மணப்பிற்கு மையலுற்ற சிறுமியாக.

நீண்ட நகம் வளர்த்து அதற்கு ரத்தச் சிவப்பில் நகப்பூச்சு அணிந்த முதல் பெண், நான் பார்த்ததில் வசுந்தரா டீச்சர்தான். வீட்டுப்பாடம் எழுதி வராதவர்களின் காதைத் தன்னுடைய விரல் நகத்தின் முனைகளால் நாசூக்காகக் கிள்ளுவாள். ரத்தம் வந்துவிடுகிற அளவுக்கு வலிக்கும். ஆனால் பார்க்கிறவர்களுக்கு அந்தச் செய்கை நளினமாகத் தோன்றும்.

நாசூக்காக அடிப்பது என்கிற கொடூர வகையாக இருந்தாலும் எனக்கு வசுந்தரா டீச்சரை எப்போதும் பிடித்திருந்தது. காரணம் அவரிடமிருந்து வரும் நறுமணம். பள்ளிக் காரிடாரில் டீச்சர் எங்கு நடந்து வந்தாலும், காற்றிலேயே உணர்ந்துவிடலாம்.

மலைப்பூவின் வாசம் அடிவாரத்திற்கு வருவதில்லையா... அதுபோல.

செண்பகப்பூப்போன்ற, மனோரஞ்சிதத்தை ஒத்த, குளிர்நீரின் தன்மையைப் பிரதியெடுத்த, வெயிலின் சுடுகதிர்களைத் தாங்கிய என்று அத்தனை விதமான வாசங்களுடனும், உணர்வுகளுடனும் அவர் வைத்திருந்த பெர்ப்பியூம்கள் அத்தனையும் இயைந்து போகும்.

சந்தனம், அதிகபட்சம் ஜவ்வாது என்பது மட்டுமே தெரிந்த அந்தச் சிறு ஊரில், நூற்றுக்கணக்கான பெர்ப்பியூம் கலக்‌ஷன் வைத்திருந்தது வசுந்தராதான். தினம் தினம் புதிய புதிய மணப்புடன் வருவார் அவர். பூப்பூத்திருக்கும் கார்டன் ரக சேலை முழுவதையும் பெர்ப்பியூமில் முக்கி வைத்துக் கட்டி வருவாரோ என்று ஆச்சரியமுறும் அளவிற்கு. அவர் அருகில் நிற்க நேரிடும் தருணங்களில், அவரது சேலை முந்தானையை விரல்களால் வருடினாலே, நாள் முழுமைக்கும் விரல் மணத்துக்கிடக்கும்.

டீச்சரைப் பற்றிய நறுமணக் கதைகள் ஊருக்குள் விரவிக் கிடந்தன.

‘துபாய்ல இருக்க புருசன்ல, இவ்ளோ சென்டு வாங்கிட்டு வந்து கொடுக்கானாம்.’

‘வீட்டுல ரசக்கண்ணாடிக்கின்னே தனி ரூம்பு வச்சுருக்குதாம் டீச்சரு... கண்ணாடி முன்னுக்க எல்லாம் சென்டு பாட்டில்தானாம்.’

‘குளிக்கதுக்குத் தொட்டி வச்சிருக்குதாமே டீச்சரு... அதுல தண்ணியோட கொஞ்சம் சென்டும் கலந்துதான் குளிக்குதாம்.’

என்று கிளியோபாத்ராவைப் பற்றிய கதைகளைப் போல, வசுந்தராவின் கதைகளும் சுவாரஸ்யத்துடனும், உண்மையைக் கண்டறிய முடியாத இயலாமைகளுடன், வீதிகள்தோறும் சற்றேறக்குறைய சிறு பொறாமையுடன் விதந்தோதப்பட்டன.

ஊர் பார்த்தேயிராத வெளிநாட்டுக் கணவர் மற்றும் டீச்சரின் சம்பாத்தியங்கள் காரணமாக ஊரின் ஒரே பங்களாவாக அவர்களின் வீடு இருந்தது. அந்த வீட்டில்தான் சிவப்பு, ரோஸ், மஞ்சள், வெளிர் பச்சை என்று பல வண்ண இட்லிப் பூக்களை முதலில் பார்த்தேன். காம்பவுண்டு சுவரைத் தாண்டி வளர்ந்திருக்கும். டீச்சரும், டீச்சருக்கு உதவியாக இருந்த உறவுக்காரப் பெண்ணும் தவிர அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை. கிடையாது. காம்பவுண்டு கதவைத் தாண்டி வேறு யாரும் உள்ளே போய்விட முடியாது. ஏதாவது தேவை என்றால், ``வாத்தியாரம்மா’’ என்று குரல் கொடுப்பார்கள். அந்த உறவுக்காரப் பெண் வெளியே வந்து தகவல் கேட்டுக்கொண்டு போவாள். இதுதான் நடைமுறை.

பள்ளிக்கருகிலேயே வீடு இருந்ததால், சிவப்பு நிற நகப்பூச்சுக் கைகளில் பிடித்த குடையுடன் காலை எட்டரை மணிக்கு டீச்சரைப் பார்க்கலாம். பின் ஐந்து மணிக்கு வீடு திரும்பும்போது. டியூஷன் அது இதுவென்று எதிலும் டீச்சர் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை.

டீச்சரின் பின்னால், நிழல்போல நான் திரிகிறேன் என்பது டீச்சருக்கும் தெரிந்திருக்கக்கூடும். பதின் வயதுப் பெண்ணின் கிறுக்குத்தனம் என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். அல்லது அப்படியொரு ரசிக மனத்தை டீச்சர் தேடியிருக்கலாம். அதன் காரணமாகவே டீச்சரின் வீட்டிற்குச் செல்லும் அற்புத வாய்ப்பு கிடைத்தது.

வழக்கமாக விடுமுறை தினங்களில் மட்டுமே வந்துகொண்டிருக்கும் என்னுடைய பிறந்த நாள், எட்டாம் வகுப்பில் மட்டும் பள்ளி நாளில் வந்தது. முயல் பொம்மை வைத்துத் தைக்கப்பட்ட கவுனுடன், பூனைக்குட்டியைப்போல வகுப்பிற்குச் சென்றிருந்தேன்.

வசியக்காரிகள் - சிறுகதை

அந்த நாளில், மிளிர்ந்த மகிழ்வுடன் வாழ்த்தியது சயின்ஸ் வாத்தியாரும், வசுந்தரா டீச்சரும் மட்டும்தான்.

``பூனைக்குட்டி என்ன முயல் குட்டியோட வந்திருக்கு’’ என்று கன்னம் கிள்ளிக் கிண்டலடித்த டீச்சர், அவருடைய கைப்பையை அவசரமாகத் திறந்து பார்த்துத் துளாவினார்.

``அச்சச்சோ... சாக்லேட்கூட இல்லையே. சரி... ஈவினிங் போறப்ப என்கூட வீட்டுக்கு வா. உனக்கு ஒரு கிப்ட் தர்ரேன்’’ என்றார் வசுந்தரா.

பதின் வயதிற்கான முதல் பட்டாம்பூச்சிகள் அப்போதுதான் என் வயிற்றில் பறக்க... இல்லை, பிறக்கத் தொடங்கியது.

பள்ளி விட்ட மாலையில், ஒரு தடவலுக்காக, கொஞ்சலுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டியைப் போன்றே, டீச்சரின் நறுமிகு முந்தானையின் பின் சென்றேன்.

காம்பவுண்டு கேட்டில் உள்ள டோர் பெல்லை அழுத்தியதும், வந்து திறந்த உறவுக்காரப் பெண் என்னைப் பார்த்து அதிர்ச்சியுறவெல்லாம் இல்லை. தலையசைத்து வரவேற்றாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு அதிர்ச்சியை எதிர்பார்த்தேன். யாரும் செல்ல முடியாத இடத்திற்குச் செல்லும் எனக்கு, அந்த அதிர்ச்சிகூடத் தென்படவில்லை என்றால் என்னதான் சுவாரஸ்யம் இருக்கப்போகிறது.

அதிருப்தியுடன் உள்ளே சென்றேன்.

கல்லூரியில் இன்டீரியர் டிசைனிங் படித்தபோது, வாசித்த வெளிநாட்டுப் புத்தகங்களில் ஒரு சிலவற்றை அன்றே, வசுந்தரா டீச்சரின் வீட்டில் பார்த்தேன்.

வீடு முழுவதும் வெளிச்சத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பெரிய குடுவைகளில் மணி பிளான்ட் படர்ந்திருந்தது. சில குடுவைகளில் வயலட் நிற பசலைக்கீரைகள். திரைச்சீலைகள், டேபிள் மேட்கள் எல்லாவற்றிலும் டாலியா பூக்கள் எம்பிராய்டரியில் பூத்திருந்தன.

``வீடு பிடிச்சிருக்கா’’ என்றார் டீச்சர்.

தார்சா, பட்டாலை, அரங்கூடு, மச்சு, நடைக்கூடம் என்று மட்டுமே பழக்கப்பட்டிருந்த கண்களுக்கு, காம்பவுண்டு சுவர்களுக்கு பூக்களும், வெளிச்சமும், படர்கொடிகளுமாக இருந்த அந்த வீடே பார்ப்பதற்கு ஆனந்தம்தான்.

``ரொம்பப் புடிச்சிருக்கு டீச்சர். சேர் எல்லாம் அழகா இருக்கு. வீட்டுக்குள்ள கிளைம்பர் எல்லாம் வளருது. கியூட்டா இருக்குது’’ என்று ஒன்றாம் வகுப்புப் பிள்ளையைப் போலப் பிதற்றியது இப்போதும் புன்னகைக்க வைக்கும்.

டீச்சர் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த வீட்டில் பாதியளவு டீச்சரின் படுக்கையறைக்கே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பெரிது கேள் என்பதுபோல் இருந்தது. மெத்தை இருந்த இடம் தவிர பிற பகுதிகள் அனைத்திலும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன.

டீச்சரைப் பற்றிய புனைவுகள் உண்மையாகிக்கொண்டிருந்தது.

அத்தனையிலும் தெரியும் என்னுடைய உருவமே சிறு கூச்சத்தை வரவழைத்தது.

``என்ன பிள்ள வெக்கப்படுற’’ என்று டீச்சர் கண்டுபிடிக்கவும், மேலும் கூச்சமாகிவிட்டது.

``இவ்ளோ உருவம் இன்னைக்குதான் பாக்கிறேன்’’ என்றேன்.

``அப்படிப் பாக்கிறது நல்லாருக்கில்ல?!” என்றார் டீச்சர்.

``ஆமா’’ என்றேன்.

``இந்தக் கண்ணாடிகள்ல எவ்ளோ அழகாருக்கோம்ல. நாம அழகாருக்கோம் அப்படிங்கிறத எல்லா நேரமும் யாரோ நமக்குச் சொல்லிட்டே இருக்கது சுகமா இருக்கில்ல. அதக் கண்ணாடி தவிர வேற யாரு செய்யுவா’’ என்றபடிக்கே எக்கச்சக்கமாகப் பேசினார் டீச்சர். எனக்கு பாதி புரியவில்லை.

எல்லாக் கண்ணாடிகள் பின்னாலும் வார்ட்ரோப் இருந்தது. இரண்டு வார்ட்ரோப் முழுக்க கார்டன் சேலைகள்.

அடுத்ததாக டீச்சர் திறந்து காண்பித்த மூன்று வார்ட்ரோப்கள் முழுக்க, ஊர் சொன்னது போலவே சென்டு பாட்டில்கள்.

குறைந்தது ஆயிரம் பெர்ப்பியூம் பாட்டில்களாவது இருக்கும். அவ்வளவு சேகரிப்பதற்கே வாழ்நாள் போதாது.

வெளிநாட்டுக் கணவர் வாங்கி வருவார் போல என்று நினைத்தேன். அப்போதுதான் உரைத்தது. வீட்டில் அவரது ஒரு புகைப்படம்கூட இல்லை என்பது. கணவரின் புகைப்படம் மட்டுமல்ல; டீச்சரின் புகைப்படம்கூட ஒன்றில்லை அங்கே... யோசித்துக் கொண்டிருக்கும்போதே டீச்சரின் குரல் ஊடுபாவியது.

``பெர்ப்பியூம் புடிக்குமா?’’

``தெரியல டீச்சர். இதுவரை யூஸ் பண்ணினது இல்ல’’ என்றேன்.

வார்ட்ரோபில் விரல் வைத்துத் தேடி ஒரு பாட்டில் எடுத்தார். பின், மெதுவாக என் புறங்கையைத் திருப்பி, கொஞ்சம் பெர்ப்பியூம் அடித்தார். அந்த மணத்திற்கு அப்போது பெயர் தெரியவில்லை. மோகக் களஞ்சியம்போல் இருந்தது.

அதே பாட்டிலை, பளபளக்கும் கவர் ஒன்றில் பொதிந்து, எனக்குப் பரிசளித்தார்.

``ஹேப்பி பர்த்டே பூனைக்குட்டி’’ என்றார்.

டீச்சர் ஒருவேளை, குளிக்கும்போது பெர்ப்பியூம் ஊற்றிக் குளிப்பார் போல என்று நினைத்துக்கொண்டேன். அந்த ஏகாந்தத்தில் மிதந்துகொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனால், அன்றுடன் எனக்கும் டீச்சருக்கும் ஏதோ ஒன்று உடைந்தது போல் ஆகிவிட்டது. அவ்வளவு நெருக்கமாக என்னை அனுமதித்தது பற்றி டீச்சருக்கு அசௌகர்யம் ஆகியிருக்கலாம். இல்லை, டீச்சரின் மிக அந்தரங்கப் பகுதியைத் திறந்து பார்த்த பெண்ணாக என்னை எண்ணியிருக்கலாம்... ஏதோ ஒன்று. அதன் பின், நோட் திருத்தும்போதுகூட, டீச்சர் தன் அருகில் என்னை அழைக்கவேயில்லை. ஒன்பதாம் வகுப்பில் முற்றிலும் புதிய ஆசிரியர்கள். டீச்சருடனான அந்த நறுமண உறவே அறுந்திருந்தது.

டீச்சரிடம் பெர்ப்பியூம் வாங்கிச் சென்றதற்காக வீட்டிலும் திட்டு வாங்கினேன். அந்த பெர்ப்பியூம் பாட்டிலை, அப்போது கல்லூரி போய்க்கொண்டிருந்த சித்தி வாங்கிக்கொண்டாள்.

``ஹா... இன்டிமேட்’’ என்றாள்.

``அப்படின்னா என்ன சித்தி?’’

``நீ கொண்டு வந்த பெர்ப்பியூம் பேருடி. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றாள்.

``நீ பெர்ப்பியூம் எல்லாம் யூஸ் பண்ணுறியா. வீட்டுல ஏதும் வச்சிருக்கியா?’’ என்றேன்.

``வீட்டுலையா, சான்சே இல்ல; ஹாஸ்டல்ல. இன்ட்டிமெட்தான் எக்கச்சக்கமா வச்சிருக்கேன். ஏன் உங்கம்மாவுக்குக்கூட இதுதா பேவரைட். ஆனா அவ சொல்ல மாட்டா. சோத்துமூட்டைக்கள்ளி’’ என்று சிவந்தாள்.

ஸ்வேதா போல, வசுந்தரா போல, சித்தியும் வசியக்காரிதான்.

நான் கல்லூரி சென்றுகொண்டிருந்த நாளில், அவள் முனைவர் பட்டத்திற்கு முட்டிக்கொண்டிருந்தாள்.

குங்குமத்தின் லேசான சிவப்பையும், வயலட்டையும் தன்னகத்தே கொண்டிருந்த, தாமரை வடிவிலான நிலப் பூவொன்றைத் தேடி, என்னையும் இழுத்துக்கொண்டு ஊரிலிருந்த ஒரே ஒரு மலையில் அலைந்து திரிந்திருக்கிறாள்.

``வசுந்தரா டீச்சர் இல்ல, அவங்க இறந்துட்டாங்க’’ என்றாள் போகும் வழியில்.

``அச்சச்சோ... ஏன்?’’

``ஏதோ ஹார்ட் அட்டாக் போல.தெனமும் சென்டுக்குள்ள முழுகி எந்திரிச்சா, உடம்பு கெட்டுக் குட்டிச்சுவராகாதா என்ன?’’ என்றபடியே நடந்தாள் சித்தி.

``அவங்க வீட்டுக்காரர் வந்தாரா? நீயாவது அவங்கள பாத்தியா?’’ என்றேன்.

``பச்... அவங்களுக்குக் கல்யாணமே ஆகலையாம்டி. சும்மாவே ஊரு ஒரு நூறு கதை சொல்லி வச்சிருந்ததில்ல அவங்களப் பத்தி. அதனால தனியா இருக்கதும் ஒரு கதையாகிரக் கூடாதுன்னு, வெளிநாட்டுப் புருஷன்னு அவங்களே ஒரு கதையைச் சொல்லியிருக்காங்க. அவங்க அக்கா பையன்தான் நீத்தார் காரியமெல்லாம் பண்ணினான்.’’

நீண்ட தூரம் நடக்கையில் அயர்ச்சியாக இருந்தது.

``போதும் சித்தி. ரொம்ப தூரம் வந்துட்டோம். டயர்டா இருக்கு’’ என்று கிட்டத்தட்ட இறைஞ்சினேன்.

``அந்தப் பூவுக்குன்னு எக்ஸ்க்ளூசிவ் வாசம் உண்டு புள்ள. அத கூட வச்சிருந்தா மோகினியே நம்ம பின்னாடி மயங்கி வரும்’’ என்றாள் பாட்டனியில் பிஹெச்.டி செய்து கொண்டிருந்தவள்.

``உன் அகாடமிக் புக்ல இருக்கா இதெல்லாம்?’’

``இல்ல. ஆச்சி சொல்லியிருக்கா. மாடு மேய்க்கப் போனப்ப தாத்தா பாத்திருக்கார்’’ என்று அவள் சொல்லும்போது, ரியல் பையத்தியக்காரியைப் பார்த்தது போலிருக்கும். ஆனாலும், அவளுக்கு மறுப்பு சொல்ல ஏலாது. கறுப்பு மை ஏதும் வைத்திருப்பாள்போல.

தேடித் தேடி, மலையில் ஒரு மூலையில், நீண்ட கோரைப் புற்களுக்கு நடுவே கூட்டமாக வளர்ந்திருந்த அப்பூவைக் கண்டதும் சிலிர்த்துப்போனது. குறிஞ்சிப்பூப்போல கொஞ்சம், தாமரைப்பூப்போல கொஞ்சம், வான் நிறத்தில் கொஞ்சம், வயலட் நிறத்தில் கொஞ்சம் என்று இருந்தது.

அருகில் செல்லச் செல்ல தலைவலிக்க வைக்கும் மணம் வரத்தொடங்கியது.

``சித்தி, தலை வலிக்குது... நான் வரல, இங்கயே நின்னுக்கிறேன். நீ போயிட்டு வா’’ என்றேன். எதையும் கேட்கும் நிலையிலில்லை அவள். அசுரமான ஒருத்தியாகப் பறந்து நடந்தாள்.

சித்தியின் வியர்வைக்கு மிகத்தகுதியான ஒன்றாக, மதி மயக்கும் அழகில் இருந்தது. வாசனைதான் தலையை உருட்டியது. பைநிறையப் பறித்து எடுத்துக்கொண்டாள். வரும் வழியில் களைப்பாக இருந்ததென்று புற்கள் அடர்ந்திருந்த இடம் ஒன்றில் அமர்ந்தேன். அயர்ச்சி காரணமாக இரு கைகளையும் தரையில் ஊன்றத் தயாரானேன்.

``தரைல கை வைக்காத. முன்ன பின்ன பாக்காம அப்படியே எந்திரிச்சு என் பக்கமா வா’’ என்று சித்தி மிக அமைதியான குரலில் சொன்னாள். அந்த நிதானமே பீதியாக இருந்தது. அதனாலேயே, மறுபேச்சு பேசாமல், எழுந்து அவளருகில் சென்றேன்.

கை வைக்க இருந்த இடத்தில், ஒரு கருநாகப் பாம்புக்குட்டி நெளிந்துகொண்டிருந்தது.

வசியக்காரிகள் - சிறுகதை

கீழிறங்கியதும் மெதுவாகச் சொன்னாள்,

``மோகினி மட்டுமல்ல, இந்தப் பூ வாசத்துக்குப் பாம்புகூட பின்னாடி வரும். நாம பாத்தம்ல, கருநாகக் குட்டி... வாசத்துக்குத்தான் வந்திருக்கும்.’’

பாம்பு பார்த்ததுகூட எனக்கு பயம் தரவில்லை. ஆனால், அதன் நறுமணத்திற்குப் பாம்பு வரும் என்று சொல்லாமலே கூட்டிப் போயிருக்கிறாளே என்பதுதான் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

``அடிப்பாவி... உன்ன நம்பி கூட வந்ததுக்கு... இனிமே எங்கயும் கூப்பிடாத. உன்கூட வரமாட்டேன். உன்னப் பத்தி அம்மாகிட்ட சொல்றேன்’’ என்றெல்லாம் பொங்கிவிட்டேன்.

``மோகினி வரும்னு சொன்னப்ப எத நம்பி என்கூட வந்த, அப்ப மட்டும் பயம் வரலையா?” என்றாள்.

``இல்ல, மோகினியெல்லாம் கிடையாது. அதெல்லாம் மித். எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனா பாம்பு அப்படில்ல. அது உண்மை’’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டேன்.

சித்தியின் பைக்குள் பூக்கள் இருப்பதையும், பாம்பு பார்த்ததையும், ஆச்சி, தாத்தா, அம்மா, அப்பா என்று எல்லோரிடமும் ஒப்பாரி வைத்தேன்.

அந்தப் பையைச் சித்தியிடமிருந்து, வாங்குவதற்கே போராட்டம் நடந்தது. தரவே மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தாள். நெடிய மரமொன்றைப் பிடுங்குவதற்கான அத்தனை யத்தனங்களும் அவளிடம் செய்ய வேண்டி இருந்தது.

தாத்தாதான் பைக்குள்ளிருந்த அத்தனை பூக்களையும் ஆற்றில் போய்க் கொட்டி வந்தார். திரும்ப ஹாஸ்டல் செல்லும்வரை, சித்தி யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கும் அவள்மீதான ஆத்திரம் தீரவில்லை.

அதற்குப் பிறகு பல வருடங்கள் எனக்கு அவளைப் பிடிக்கவே இல்லை.

சுகன்யாவும், ஸ்வேத்தும், டீச்சரும், சித்தியும் ஆக்கிரமித்துக்கொண்ட நொடிகளிலிருந்து, அம்மாவின் தொலைபேசி அழைப்பு மீட்டெடுத்தது

``ரிசர்ச்சுக்காக சித்தி யூ.கே போறா. நாளைக்கு மிட்நைட்ல ப்ளைட். சாயங்காலமா எல்லாரும் உன் வீட்டுக்கு வந்துருவோம்’’ என்றாள்.

சித்தியை இனி நினைத்த பொழுதில் பார்க்க முடியாது என்றானபோது ஏதோவொன்றை இழப்பதாக உணர்வெழுந்தது.

விமான நிலையத்தில் சித்தியை வழியனுப்பச் சென்றபோது ``சாரி சித்தி’’ என்றேன்.

எதுவும் பேசாமல் அணைத்துக்கொண்டாள் என்னை.

``அந்தப் பூவுல ஒண்ணு என்கிட்டே இருக்குடி. இத்தன வருஷத்துக்கப்புறமும் அதோட வாசனை வருது’’ என்றாள் காதருகில்.

எதுவும் சொல்லவில்லை அவளிடம். நறுமணங்களில் பிரேமையுள்ளவர்கள், மந்திரக்காரிகளாக உருமாறியிருந்தார்கள் என் உலகத்தில்.

திரும்ப வரும் வழியில் அம்மாவிடம்,

``ஏம்மா, எனக்குன்னு ஏதாவது வாசம் இருக்கா? சின்னப் புள்ளைல என் டிரஸ் துவைக்கும்போதாவது பீல் பண்ணியிருக்கியா?’’ என்றேன்.

ஸ்வேதாவின் காலத்திலிருந்தே நான் கண்டுபிடிக்க இயன்றும், இயலாத ஒன்றாகவே இருந்தது அது. என்னுடைய பிரத்யேக வாசம் என்ன என்பதை எனக்கு உணரவே முடியவில்லை. நான் முயன்றபோது, என் உடலுக்கென எந்த வாசனையும் இல்லையென்று தெரிந்தது.

``உனக்கு ஸ்பெஷல் உடம்புடி. பெர்ப்பியூமே தேவைப்படாத உடம்பு’’ என்று உடன் பணிபுரியும் பெண்கள் சிலிர்த்திருக்கிறார்கள்.

வியர்வையில் ஊறிய உடலிலிருந்து, காயாத உடைகளில் வருகிற மொட வாசம்கூட வராத நாளில் என்னை நினைத்து எனக்கே லேசான பயமும் எழுந்திருக்கிறது. எப்போதாவது தனித்த தருணங்களில், ஏன் இப்படி என்று குழம்பிப் போயிருக்கிறேன்.

``உனக்கு வாசமே இல்லாத உடம்பு. எப்பவுமே.நீ வயசுக்கு வந்தப்பகூட உன்கிட்ட இருந்து அதுக்கான பிரத்யேக வாசனை எதுவும் வரலை.பாப்பா சட்டை பாவாடைல என்னம்மா எந்த வாசமும் வரலன்னு துணி துவைச்சுப் போடுற மாடத்திகூட அதிர்ச்சியா சொல்லிட்டுப் போனா’’ என்று வீட்டு வாசலில் இறங்கியதும் அம்மா சொன்னாள்.

நடந்து வீட்டுக்குள் சென்று பின் திரும்பிப் பார்த்த அம்மா, ``எங்க வம்சத்துல வசியக்காரிங்க பிறப்பாங்க அப்படின்னும், எப்பவாது பிறக்கிற அந்த வசியக்காரிங்க, வாசமே இல்லாத உடம்போடதான் பிறப்பாங்கன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு’’ என்று புன்னகைத்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism