Published:Updated:

தடாகம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கண்ணுக்கெட்டிய தூரத்தில், தடாகத்தின் கரையில் வந்து சேரும் ஊர்த்தெருவில் இசக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். கண் சரியாகத் தெரியாது.

தடாகம் - சிறுகதை

கண்ணுக்கெட்டிய தூரத்தில், தடாகத்தின் கரையில் வந்து சேரும் ஊர்த்தெருவில் இசக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். கண் சரியாகத் தெரியாது.

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

மலர், தன்னைச் சுற்றியுள்ள உலகமே நீரில் மூழ்கியிருப்பதைப்போல கனவுகண்டாள். உண்மையில் நீரில்தான் இருக்கிறோமா என்று தன்னைத்தானே இன்னும் ஒரு முறை பார்த்துக்கொண்டாள். நீரில் மூழ்கியிருந்தாலும் அவள் இயல்பாகவே மூச்சு விட்டுக்கொண்டு இருந்தாள். தான் ஒரு கடல் உயிரி ஆகிவிட்டோமா என்று சந்தேகிப்பதற்குள் தன் வீட்டிற்கு வெளியிலிருந்து குரல் கேட்டது, ‘மலரக்கா, தடாகத்த தூர் வாரப்போறங்களாம். நான் போய் வேடிக்க பாக்கப்போறேன்’ என்று பிரபா கத்தினான். குரல் இவள் காதுகளுக்குள் வந்து விழும்போது அவள் இன்னும் கனவின் பீடிப்பிற்குள் இருந்ததால் சன்னமாகக் கேட்டது. இன்னும் மலர் கனவிலிருந்து வெளியே வரவில்லை. தன் உடலைப் பார்த்தால், அது அப்படியே அவள் அம்மா கனகத்தின் உடலைப் போல இருந்தது. ‘இது யார்? நானா, இல்லை என் அம்மாவா?’ என்று யோசித்துக் கண்டுபிடிப்பதற்குள் கனவிலிருந்து கண் விழித்து வீட்டின் மேற்கூரையில் சுழலும் மின்விசிறியினைக் கண்டாள். எழுந்தாள். பல் துலக்கினாள். உடையைத் திருத்திக்கொண்டு மலரும் தடாகத்தை நோக்கி நடந்தாள்.

தடாகத்தின் வறட்சியான மணற்பரப்பின் நடுவில் ஜேசிபி என்கிற பெரிய கனரக இயந்திரம் இறங்கியிருந்தது. ஊரில் உள்ள பெரியவர்கள் பத்துப் பேருக்கும் மேலே அங்கே வெள்ளை உடையில் குழுமி, சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். பெரிய படையலாய் இருந்தது. நீளமான வாழை இலையில் பூக்கள், பழங்கள், வெற்றிலை, பொங்கல், இனிப்புகள் என்று விதவிதமாக வகைவகையாக விரவியிருந்தனர். வழக்கமாக நடப்பதுதான். அந்த ஊரின் குலதெய்வத்தை வணங்குதற்போன்று படையல். ஊருக்கும் மக்களுக்கும் நீர் ஆதாரம் அந்தத் தடாகம். கற்பூரத்தை எல்லோர் முன்னும் சுழற்றி இனிப்புகளைப் பகிர்ந்துகொண்ட பின், வேலையைத் தொடங்கிவிட்டதற்கு அர்த்தமாக, ஒரு பெரிய பிடி வண்டலை அள்ளி தூரம் எறிந்துவிட்டு, அந்த வண்டியின் ஓட்டுநர் கீழே இறங்கிச் சாப்பிடச் சென்றார். ஊர்ப்பெரியவர்களும் கையில் கிடைத்த இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினார்கள். பிரபா, அந்த ஓட்டுநரின் பின்னேயே வாலாட்டும் சிறிய நாயைப்போலச் சென்றான். இன்னும் வெயில் தலையைக் காட்டவில்லை. தடாகம் தனிமையாக இருந்தது. தடாகத்தின் நடுவில் அவள் மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஒரு கணத்தில், அந்த வண்டல் மண் பூமியில் தன் கண்களுக்குத் தன் அம்மாவின் அடையாளம் ஏதும் தென்படுகிறதா என்று தேடினாள். வரலாற்றின் நெருக்கடியான பாதைகளுக்கு இடையே தொலைந்துபோன குண்டூசியைத் தேடுவதுபோல அவளுக்குத் தோன்றினாலும், அந்தத் தடாகம் தண்ணீருடன் இருந்தாலும், தண்ணீரற்று இருந்தாலும் அவள் அம்மாவின் உடல் போன்றது அவளுக்கு.

தடாகம் - சிறுகதை

பாட்டி இசக்கிதான் மலருக்கு அவள் அம்மாவைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள். ஒரு நூற்றாண்டின் கதையைப் போல அவள் தினமும் அந்தக் கதையைப் பற்றி நீளநீளமாக நினைத்துக்கொள்வதுண்டு. உலர்ந்து வறண்டு போயிருக்கும் அந்தத் தடாக நிலத்திலேயே அங்கும் இங்கும் நீண்ட நேரம் உலவினாள். இன்னும் அவள் கண்கள் தேடுவதை நிறுத்தவில்லை. யாரோ தவறவிட்ட பத்து ரூபாய் நாணயம், யார் தலையிலிருந்தோ வீழ்ந்திருந்த ஹேர்பின், ஓர் ஒற்றை ரப்பர் வளையல், ஒற்றைச் செருப்பு, கிழிந்துபோய் எறியப்பட்டிருந்த கைப்பை, ஒரு கை உடைந்திருந்த சிறிய புத்தர் சிலை, விநோதமான வடிவில் பானை ஓட்டுத்துண்டு என்று அவள் கண்ணில் ஏதேதோ பட்டுக்கொண்டே இருந்ததே தவிர அவள் அம்மாவின் அடையாளமாய் எதுவுமே தென்படவில்லை. ஏனோ அவள் நீண்ட நேரம் அந்தத் தடாகத்தில் காத்திருந்தும் இயந்திரத்தின் ஓட்டுநரோ வேலை பார்க்கும் பணியாளர்களோ வரவே இல்லை. காலம் காலமாய் அந்தக் குறிப்பிட்ட நாளில் தடாகத்தைத் தூர் வாருவார்கள் என்பதற்காகப் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். இனி அவரவர் வசதி போல வந்து பணியைத் தொடர்ந்து முடிப்பார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில், தடாகத்தின் கரையில் வந்து சேரும் ஊர்த்தெருவில் இசக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். கண் சரியாகத் தெரியாது. இவ்வளவு தூரம் நடந்து வரவும் முடியாது. மலர் தடாகத்திற்கு வந்திருக்கிறாள் என்றதும் இசக்கிக்குப் பொறுக்கமுடியாது. உடலே கனமாகியிருக்கும் அவளுக்கு. தடாகத்தின் அளவிற்குக் கண்ணீர் ஒருசேர வந்து முட்டியது மலரை. விட்டால், அங்கேயே உட்கார்ந்து மாரில் அடித்துக்கொண்டு மீண்டும் அழத்தொடங்கியிருப்பாள். இசக்கி முன் அதையெல்லாம் செய்துவிட முடியாது. தன்னை விட, இசக்கிதான் தடாகத்தில் நிரம்புவதைவிட அதிகமான கண்ணீரைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று மலருக்குத் தெரியும். இசக்கியை அதிக தூரம் நடக்கவிட வேண்டாம் என்று மலரே வேகவேகமாகக் கரையேறி, இசக்கி இருக்குமிடத்திற்கு விரைந்து அவளுடன் சேர்ந்து கொண்டாள். பேச்சு ஏதும் அவசியம் இல்லாமலே இசக்கியும் திரும்பிக்கொள்ள இருவருமாக வீட்டை நோக்கி மெல்ல நடந்தனர்.

அடுத்தடுத்த நாள்களில் தடாகத்தின் மீது ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கனரக இயந்திரம் மண்ணை அள்ளிக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கரையை உயர்த்தியது. போதுமான மடைகளும் சேற்றுத்துளைக் குமிழிகளும் இருந்தும் தடாகத்தில் எப்படியாவது வண்டலும் சேறும் சேர்ந்துவிடுகிறது என்று அலுத்துக்கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர் மாணிக்கம். மண்ணை அளவிற்கு அதிகமாகத் தோண்டி எடுத்து விற்றுவிட்டதாக சென்ற ஆண்டு தோன்றிய குற்றச்சாட்டைத் தவிர்க்க கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எந்த வண்டியிலும் மண்ணை அள்ளிவிடக்கூடாது என்பதற்காகத் தடாகத்தின் காவலுக்காகப் போடப்பட்டிருந்த கண்ணன், மலருக்கும் உறவினர்தான். கரையை ஒட்டிய மேட்டில் இருந்த அரசமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கற்படுக்கைகளில் வந்து மலர் அமர்ந்ததும், சிறுவர்களுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிரபாவும் அவளுடனேயே வந்து உட்கார்ந்துகொண்டான். அவனுக்கு அந்தப் பெரிய இயந்திரம் மண் அள்ளிப் போடுவதும் அது செயற்கையாக மூச்சுவிட்டு இயங்குவதும் சுவாரசியத்தைத் தந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மலர் அவன் முகத்தின் பொலிவைப் பார்த்தாள்.

தலையைச் சுற்றிக் கழுத்துடன் போட்டிருந்த துப்பட்டாவினால் கழுத்துப்பகுதி வியர்க்க அதைத் தளர்த்தினாள். எங்கிருந்தோ வந்த காற்று கழுத்தைக் குளிர்வித்தது. தூரத்தில் இருந்தே கண்ணன் கரையில் இருந்த வேப்பமரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துக்கொள்வது தெரிந்தது. மலருக்கு என்னென்னவோ போல இருந்தது. காலத்தின் முன்னும் பின்னும் குழம்பியது போலவும், இறந்தகாலமே மேலோங்கி நிற்பது போலவும் தோன்ற கண்ணுக்குப் புலனாகாத காலத்தின் கைகள் அவள் சிறுமியாக இருந்த காலத்தை நோக்கி அவளைப் பின்னிருந்து இழுப்பதை உணர்ந்தாள். வெயில், கண்களைப் பூஞ்சையாக வந்தடைந்துகொண்டேயிருக்க, பெருமூச்சு விட்டாள்.

பிரபா கேட்டான், ‘ஏன் ஒரு மாதிரி இருக்க. இந்த இடத்துக்கு வந்தா நீ இப்படித்தான் முகத்த எல்லாம் சுருக்கிக்கிற.’

‘இந்தத் தடாகத்துக்குன்னு ஒரு கதை இருக்கு பிரபா.’

‘ஆமா, கிழவியும் அதத்தான் சொல்லும். ஆனா ரெண்டு பேருமே என்ன கதைன்னு சொல்ல மாட்டீங்க.’

மலர் செல்லமாக அவனைத் தட்டினாள். ‘கிழவியாம். மரியாத தெரியுதா பாரு.’

‘இப்பவாவது கதையச் சொல்லேன். அந்த மிஷின அங்கயும் இங்கயும் ஒரு அனிமல் மாதிரி நகருறத வேடிக்க பாத்துக்கிட்டே கதைய கேக்குறது எவ்வளவு இண்டரஸ்டிங்கா இருக்கும்.’

மலர், மண்ணில் தன் ஆட்காட்டிவிரலால் வட்டமிட்டபடியே யோசித்தாள். பின், கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

‘இந்தத் தடாகம் முழுக்க மழைக்காலத்துல நீர் நிரம்பியிருக்கும். சுத்தியுள்ள ஊர்ல இருந்தெல்லாம் தண்ணி இங்க வந்து சேந்துரும். தண்ணி அதிகமானா, அதோ அந்த மடை வழியா கால்வாய்க்குப் போயிரும். தாமரையும் அல்லியும், மீனும் நிரம்பியிருக்கும். நான் சொல்றதெல்லாம் ஒரு இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி. அப்ப நான் ரெண்டு வயசு சின்னப்பொண்ணாம்.

தடாகம் - சிறுகதை

தடாகம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். செக்கச்செவேரென்னு தாமரை பூத்திருக்கும். சுத்தியுள்ள படித்துறையில காலையிலேயே பொம்பளையும் ஆம்பிளையும் குளிக்க வந்துருவாங்க. இப்ப உள்ள மாதிரி சாக்கடைத் தண்ணியா இருக்காது. தாமரை மண்டிக் கிடந்ததனால சேறு சேந்ததுதான். மத்தபடி, குளத்துக்கு ஒரு அழகும் சுத்தமும் இருந்ததுன்னு வச்சுக்கோயேன். ஒரு நீளமான கோடைக்காலம் வந்துச்சு. குளம் வறண்டுபோச்சு. மீனு, நண்டு, நத்தை எல்லாம் காணாமப்போச்சு. இதே மாதிரி வறண்டு சொட்டுத் தண்ணி இல்லாமப்போச்சு.

கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் இது மாதிரி வறண்டு இருந்துச்சி. ஒரு வருசம் இல்ல, ரெண்டு வருசம் இல்ல. மூணு வருசம் தொடர்ந்து தடாகம் நிரம்பவே இல்ல. மழை பெஞ்சாலும் குளம் நிரம்பல. ஊர்ல ஒவ்வொருத்தரும் எப்பப்பாத்தாலும் தடாகத்தப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரோட அப்பா முத்துலிங்கம் தான் அப்ப பஞ்சாயத்துத் தலைவரு. அவருக்கு மட்டும்தான் உண்மை என்னன்னு தெரியும்.

இந்த ஊர் எல்லையில ஒரு பெரிய பங்களா இருக்குதே. பாழடைஞ்சு கிடக்குதே.’ மலர் தன் இடதுபக்கமாகத் திரும்பி பிரபாவைப் பார்த்தாள். பிரபா, முகத்தில் அந்த பங்களாவின் இருள் சித்திரம் வந்தடைந்ததுபோலத் தீவிரமானான். ஆமாம் என்று தலையசைத்தான்.

‘அந்த பங்களா பணக்காரனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தா. ஆனா அவங்களுக்குக் குழந்தையே உண்டாகல. அவ்வளவு அழகான மனைவி இருந்தும் அவளோட கணவன் வேற ஒரு பொண்ணோட உறவு வச்சி, குழந்தையும் பெத்துக்கிட்டாரு. அவ அழக அந்த ஊரே கொண்டாடுச்சி, உலகமே கொண்டாடுச்சி. ஆனா, அவளோட கணவன் அத ஒரு பொருட்டா நினைக்கலன்னு அவளுக்கு அப்படி ஒரு வேதனை. அவளோட அழகு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மங்கிப்போயி ஒரு காஞ்ச சருகு மாதிரி ஆகிக்கிட்டு இருந்தாளாம். தாங்க முடியாத வேதனையிலயும் தனிமையிலயும் மனக்கொந்தளிப்போட புத்திபேதலிச்சு இருந்த அவளுக்குத் தீர்வு வேணும்னு நெனைச்சுக்கிட்டே இருந்தாளாம். அப்ப அவ கண்ணாடியில அவ முகத்தப் பாத்தப்ப அவ முகத்துக்குப் பதிலா வறண்டு பாழாக் கிடந்த இந்தத் தடாகம்தான் தோணுச்சாம். ஊரெல்லாம் பாக்குற மாதிரி தலைவிரி கோலத்துல புடவையெல்லாம் அலங்கோலமா கிடக்க, இந்தத் தடாகத்த சபிச்சாளாம். இந்தத் தடாகம்தான இந்த ஊருக்கே மையமா இருக்கு, வாழ்க்கை கொடுக்குறதா இருக்கு.’

பிரபா குறுக்கிட்டான். ‘அதுக்கு எதுக்கு இந்தத் தடாகத்த சபிச்சாங்க. அவளோட கணவனைத்தான சபிச்சிருக்கணும்.’

‘அவ அழகக் கொண்டாடுன இந்த ஊருமக்கள் யாரும் அவ கணவன் அவளுக்குச் செஞ்ச துரோகத்தத் தட்டிக்கேக்கலன்னு ஆதங்கம். அது நியாயம்தான. கல்யாணம் ஆகி வந்தப்போ ஊரு உலகமெல்லாம் அவளத் தங்கம் தங்கம்னு மெச்சுனுச்சி. அவளுக்கு ஒரு அநீதி நடக்கும்போது கண்டுக்கணுமா இல்லையா. தடாகத்த சபிச்சப்போ எல்லாரும் என்ன பெருசா நடந்துரப்போவுதுன்னுதான் நெனைச்சாங்க. ஆனா, தடாகம் கொஞ்சம் கொஞ்சமா வத்தத் தொடங்குச்சி. ஒரு தாமரைய காணல. பூச்சி பொட்டு எதுவும் திரியல. தண்ணிகூட கொஞ்சம் கொஞ்சமா சாக்கடை மாதிரி ஆகி, பூமி பாளம் பாளமா வெடிச்சு, ஒரு நாள் பாத்தா, தடாகம் இருந்த தடயமே இல்லையாம். ஆடு மாடுகளுக்கு நீரு இல்ல. பயிருகளுக்கு இல்ல. மனுசங்களுக்கும் ஒன்னும் இல்ல. ஊரே பச்சைன்னு ஒன்னு இல்லாம வெறிச்சிப்போய் வெயிலு மட்டுமே ஊருக்குள் திரிஞ்சா எப்படி இருக்கும், அது மாதிரி ஒரு வெறிச்ச களை ஊருக்கு வந்து ஆடுமாடுங்க எல்லாம் செத்துக்கிட்டே இருந்துச்சாம். பறவையோட சத்தமே கேக்கலயாம். ஊர விட்டு ஒவ்வொரு குடும்பமா வேற ஊருக்குப் பொழப்பு தேடிப்போகத் தொடங்குனாங்க.

அதுமட்டுமில்ல, இந்தத் தடாகத்த சபிச்ச அவங்க மேலயும் தீப்பிடிச்சி அவங்களும் இறந்து போனாங்க. அப்பவும் மக்கள் மாறவே இல்ல. அவளோட அழகுதான் அவ்வளவு கெட்டதைக் கொடுத்துச்சின்னு அந்தப் பொண்ணக் கரிச்சிக் கொட்டுனாங்க. அந்த முத்துலிங்கம் சொன்னாருன்னு எல்லாரும் ஒரு ஜோசியர்கிட்ட போனாங்க. அந்த ஜோசியர் ஒரு விதண்டாவாதமான ஆளாம். அவருதான் அந்த பங்களா பொண்ணு தங்கத்துக்கிட்ட சொல்லிச் சபிக்கச் சொன்னதாகூடப் பேச்சு இருந்துச்சு.’

‘இந்தச் சாபம், ஜோசியம் இதெல்லாம் நீயும் நம்புறியாக்கா?’

‘நான் நம்பல. ஆனா சொற்கள ஏவிவிடுறதுதான. பேசவே முடியாதவங்களா இந்தச் சமூகம் இருந்தா எப்படி இருக்கும்னு நான் அடிக்கடி யோசிக்கறது உண்டு. நாம ஒருத்தர ஒருத்தரு என்ன நினைக்கிறோம்னு தெரியாம வாழுறதுல பாதி வெளிச்சமும் பாதி இருட்டுமா இருக்கும். அதே மாதிரி பேச்சு வந்ததுக்கு அப்புறமும் மனுசன் இப்படிப் பாதி இருட்டா, பாதி வெளிச்சமா ஆகிட்டாங்க. சொல்லுக்குச் சக்தி இருக்கான்னு தெரியல. ஆனா ரொம்ப வஞ்சிக்கப்படுறவங்க வேதனைக்கு ஒரு வெப்பம் இருக்கோன்னு அப்பப்ப தோணும்.’

‘சரி. அந்த ஜோசியரு என்ன சொன்னாருன்னு சொல்லு.’

மலர் அமைதியானாள். சற்று நேரத்திற்கு அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. தொலைதூரம் சென்ற அவள் பார்வை தன் அருகில் பேசும் பிரபாவின் குரலை உள்வாங்க முடியாமல் திணறியது.

‘என்னன்னு கேக்கறேன் இல்ல.’

‘ம்...’

‘அந்த ஜோசியரு அப்படி என்னதான் சொன்னாருன்னு சொல்லுக்கா. நம்ம ஊரு பத்தி இவ்வளவு பெரிய கதை இருக்குன்னு யாருமே சொன்னதில்ல.’

‘ஆமா. வேற யாருக்கும் அந்தக் கதைக்கும் சம்பந்தமே இல்ல. என்னால இதுக்கு மேல சொல்லமுடியல. நீ வேணா போயி இசக்கிகிட்ட கேட்டுக்கயேன்.’

பிரபா ஏமாற்றமானான். சில நிமிடங்கள் மலருடன் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து பின்பகுதியின் புழுதியைத் தட்டிவிட்டு மண் அள்ளிப்போடும் இயந்திரத்தை வேடிக்கை பார்க்கப்போய்விட்டான். மலரால் நீண்ட நேரம் அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெயில் அப்படியான ஊமைத்தனத்துடன் இருந்தது. எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள். உடலே கனமான கருங்கல்லைப்போல ஆகி இருந்தது. பிரபாவிடம் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கக் கூடாதோ என்ற எண்ணமும் தோன்றியது. ஒரு தூண் நடந்து செல்வதைப் போல அவளுக்கே அவள் பாரமாக இருந்தாள்.

பிரபா என்ன நினைத்தானோ இரவு ஒன்பது மணிக்கு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான். ‘கெழவி எங்க?’

‘தூங்கிருச்சி. எழுப்பாத.’

சொல்லி முடிப்பதற்குள் பிரபா, அந்தக் கனத்த கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். இசக்கியும் கதவின் சத்தத்தில் கண்விழித்துப் புரண்டாள். பிரபா, அவள் அருகில் போய் உட்கார்ந்து உலுக்கினான். இசக்கிக்குத் தூக்கம் கலைந்தேவிட்டது என்று உறுதியாகத் தெரிந்தது மலருக்கு.

‘என்னடா?’ அருகில் வந்து உட்கார்ந்த பிரபாவின் கையை வருடினாள் இசக்கி.

தடாகம் - சிறுகதை

‘மலர் ஒரு கதைசொல்லத் தொடங்கினா. பாதியிலேயே நிறுத்திட்டா. மீதிய நீ சொல்லு, ப்ளீஸ்.’

அந்த அரைகுறை இருளிலும் இசக்கியின் கண்கள் மினுங்கியதை மலரால் சற்று தொலைவிலிருந்தே பார்க்கமுடிந்தது.

பிரபாவிற்கும் இசக்கிக்கும் இடையே அப்படி ஒரு நெருக்கம். எங்கிருந்து வருகிறான் என்றுகூடத் தெரியாது. கேட்கும்போதெல்லாம் ஊரை ஒட்டிய ஒதுக்குப்புறமாக இருக்கும் தெருவை, குடியிருப்பைக் குறிப்பிடுவான். இசக்கியின் தலைமுறைக்கும் அவன் தலைமுறைக்குமான இடைவெளியில் மூச்சுவிடும் சுகம் இருந்தது போல இருவரும் அப்படி அன்னியோன்யமாகப் பழகுவார்கள். பல நேரங்களில் இசக்கி மறைவில் குளிக்கும்போதெல்லாம், அவள் புடவையை நனைத்துக் காயவைத்து, குளித்துமுடிக்கும் அவளிடம் உலர்ந்த புடவையை நீட்டுவான். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். அவள் அறையைத் தூய்மை செய்து கொடுப்பான். சில நேரங்களில் அவன் அவளுக்குத் தலைசீவி விடுவதையும் கூடப் பார்த்திருக்கிறாள். அவள் உலகத்தில் மலர் குறுக்கிட்டதே இல்லை. மலர், தன் படுக்கையை நோக்கிச் சென்றாள்.

‘ஜோசியரு என்ன சொன்னாருன்னா, தங்கம் பேருல இருக்கிற இன்னொரு பொண்ண இந்தத் தடாகத்துக்குப் பலி கொடுக்கணும்னாரு.’

‘ஐயோ...’ பிரபா கத்தினான். ‘அது ஏன் அப்படி?’

‘அப்படின்னா, செத்துப்போன பொண்ணு பேரு தங்கமாம். ஊரெல்லாம் தேடினாங்க. அந்தப் பேருல பொண்ணே இல்ல. ஆனா ஜோசியரு சொன்னாரு, பொன்னுமணி, சொர்ணம், கனகம்னு ஏதாவது கிடைக்கும் பாருங்கன்னு. அப்பதான் என் பொண்ணு கனகத்த அவன் சொல்றான்னு நேரடியாவே என் வீட்டு வாசல்ல வந்து நின்னாங்க. இதோ இந்த வாசல்லதான். ஜோசியருக்கும் என் கனகத்துக்கும் இடையில கொஞ்ச நாளாவே பகை. அவன் என் பொண்ண கல்யாணம் பண்ணித்தரக் கேட்டான். குளிச்சு உடுப்பு மாத்தும்போதெல்லாம் மறைஞ்சு பாத்தவன கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லி, என் சம்மதமே இல்லாம இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருந்தா கனகம்.’

இசக்கி தன் சுவரில் ஒரு ரசமிழந்த கண்ணாடியை மாட்டி வைத்திருந்தாள். இசக்கி கதை சொல்லச் சொல்ல, தெருவில் போகும் வாகனங்களின் வெளிச்சம் அந்தக் கண்ணாடியில் பட்டு உரு சிதறிய உருவங்கள் சுவர்களில் நகர்ந்து சென்றுகொண்டே இருந்தன. பிரபாவிற்கும் அதில் ஏதோ காட்சிகள் தென்பட்டிருக்கவேண்டும்.

அந்த இரவிலும் இசக்கிக்குப் பேச்சுத் துணைக்கு வெற்றிலை அவசியமாக இருக்க, அதில் அவள் கவனம் ஈடுபட, பிரபா ‘நான் வச்சித்தரேன். நீ கதைய சொல்லு முதல்ல’ என்று சொல்லி அவளை உசுப்பினான். வெற்றிலைப் பெட்டியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு வெற்றிலையின் காம்பினைக் கிள்ளி, இசக்கிக்கு ஏற்றாற்போல பாக்கினை வெற்றிலையில் அதக்கி மடித்துக் கடைசி வெற்றிலையில் சுண்ணாம்பினைத் தடவி நீட்டினான். இசக்கியும் கதையைச் சொல்லத் தடுமாறினாள். ‘என் பொண்ணத்தான் பலி கொடுக்கணும்னு முடிவு பண்ணுனாங்க. சட்டு புட்டுன்னு ஏதாவது பண்ணித் தடாகத்துல தண்ணி வரவச்சிடணும்னு ஊர்மக்களும் நினைச்சாங்க. நான் இந்தத் தெருவுக்கும் அந்தத் தெருவுக்குமா என் முந்தி கீழ புரள ஓடுனேன். என் மக கனகத்தக் கூட்டிட்டுப் போயி நடுத்தடாகத்துல நிக்கவச்சி என்ன ஏதுன்னு யோசிக்கறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சாங்க. அவள நடுத்தடாகத்திலேயே புதைச்சாங்க. அதத்தொடர்ந்து கனகத்தோட புருஷனும் தூக்குப் போட்டுக்கிட்டான்.’ கொஞ்ச நேரம் இருவருக்கும் இடையில் இருளைப் போன்ற ஒரு மெளனம்.

‘தடாகத்துல தண்ணி வந்துச்சா இசக்கி?’

‘இல்ல. வரவே இல்ல. அதுக்கும் ரெண்டு வருசத்துக்கு அப்புறம் ஒரு வெள்ளம். அஞ்சு நாள் விடாம மழை. அப்பத்தான் தண்ணி நிறைஞ்சுச்சு. பலி கொடுத்ததனாலதான் இதுவாவது பெஞ்சுதுன்னு எல்லாரும் சமாதானம் சொல்லிக்கிட்டாங்க. மனுசனோட நாக்கு இருக்கே, வெஷம். நான் எப்படித் தாங்கியிருப்பேன் இதெல்லாம். மலருக்காகத்தான். அப்பப்ப அந்தத் தடாகம் கரைமேல ஏறிப் பரவி இந்த வீட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்கும். சில சமயம், எங்க வீடு கரையிறங்கித் தடாகத்துல மூழ்கிப்போன மாதிரி இருக்கும். அவ்வளவு தான் கத.’

மறு நாள் காலை, மலர் பல்துலக்கிக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்டான் பிரபா. கண்ணுக்குக் கண் பார்க்காமல் நேரே இசக்கியின் அறைக்குச் சென்றான். அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. நேரே மலரிடம் வந்தான். ‘தடாகம் வரைக்கும் போலாமா?’ என்று கேட்டான். தடாகத்தை முழுவதுமாகத் தூர் வாரி முடித்திருந்தார்கள். ‘ம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். தடாகம், தூய்மையான மணல் பரப்பாக இருந்தது. தடாகத்தினூடே மற்ற சமயங்களில் நீர் நிரம்பியிருக்கும் அதன் வெளியினூடே ஏதும் பேசாமல் இருவரும் நடந்தார்கள். காலுக்கடியில் மண்ணில் புரண்ட ஒரு சிறிய எலும்புத்துண்டை எடுத்து மலரிடம் நீட்டினான் பிரபா. ஏனோ மலருக்கு அவள் அம்மாவைப் போலவே அவளும் பிரபாவும் நீருக்குள் வாழும் மனிதர்களைப் போலவே அந்தக் கணத்தில் தோன்றியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism