Published:Updated:

வானம் பரந்து விரிந்தது - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- மதுமிதா, ஓவியம்: ரவி

வானம் பரந்து விரிந்தது - சிறுகதை

- மதுமிதா, ஓவியம்: ரவி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
மதுமிதா
மதுமிதா

“அம்மா, நீங்க ஏன் இன்னும் அப்பாவை டைவர்ஸ் செய்யல...''

காரோட்டிக்கொண்டே கன்யா கேட்டதும், ஆழ்ந்த நினைவுகளிலிருந்து திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார் அம்மா. சீட் பெல்ட்டை லேசாகப் பிடித்துக்கொண்டு மகள் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

`கார் ஓட்டும்போது எளிய பேச்சு, பாட்டு, நகைச்சுவைனு மட்டுமே இருக்கணும். இல்லனா டிரைவிங்ல கவனம் சிதறும்’ என்று கன்யா எப்போதும் சொல்வாள். அதை நினைத்து எதுவும் பேசாமல் வந்த அம்மா, தடாலடியாக அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.

“நீங்க அப்பாவ கல்யாணம் செஞ்சு நாற்பது வருஷமாயிருக்கும்ல?”

“ம்.”

கார் சாலையில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அணிலின் குரலும், பல பறவைகளின் குரலோடு, பச்சைக் கிளிகளின் குரலும் இருபுறமும் மரங்கள் அடர்ந்து பரப்பும் நிழலோடு விரிந்த சென்னை சாலை. காற்றின் வேகத்தில் கிளைகள் ஆடுவதும், இலைகள் சலசலப்பதும் வேறு மாதிரி. வேகமாக அடித்த காற்றின் இசைக்கு இசைந்து மரம் ஆட இலைகள் வேகநடனமிடுவதைப்போல உதிர்ந்தன. அந்த இடத்தை அவர்கள் கடந்த பிறகும் மரத்தின் கிளைகள், இலைகளை உதிர்த்துக்கொண்டு தான் இருந்தன.

``சரி. இப்ப சொல்லுங்க. ஏன் அப்பாவை டைவர்ஸ் பண்ணல?”

``அந்தப் பேச்சை எடுக்காதே. திடுக்குனு ஆய்டுது எனக்கு.”

கன்யா இப் போது இவ்வளவு பக்குவத்துடன் ஒரு நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதைப் பார்க்கையில் அம்மாவின் மனம் பூரித்தது. ஆனால், அவளிடம் தெரியும் சில மாற்றங்கள் தீவிர கவலையில் தள்ளியது.

``இவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டே சேர்ந்து இருக்கணுமாம்மா?”

``இல்லடா கண்ணு. உங்க ரெண்டு பேரையும் வளர்க்கணும். இந்த தாத்தா - பாட்டி, அந்தத் தாத்தா - பாட்டி யாருக்கும் எந்த வருத்தமும் இருக்கக் கூடாது. பாவம் வயசானவங்க. தாங்க மாட்டாங்கல்ல?”

``அதுக்காக உங்க திறமைகளை விட்டுட்டு, இவங்க பேச்சையெல்லாம் கேட்டுகிட்டு இவங்களுக்கு அடிமையாவே இருக்கணுமா?”

``நான் இல்லன்னா அப்பா கஷ்டப்படுவாரு. ரெண்டு நாள் அவர்கூட நான் இல்லைன்னா அவருக்கு உடம்புக்கு எதுனா வந்துரும்.”

``அவர் கோபத்தால திட்டி அடிச்சாலும் வாங்கிகிட்டு இருக்கணுமா நீங்க?”

``அது அப்படி இல்லம்மா. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாதானே அண்ணா, நீ ரெண்டு பேரும் நல்லா இருக்க முடியும். அப்பாகிட்டருந்து உங்களைப் பிரிச்ச பாவம் தேவையா?”

வானம் பரந்து விரிந்தது - சிறுகதை

``நல்லா பாவம் பார்த்தீங்க. நீங்க பாவம்னு யாராவது நினைச்சாங்களா, சொல்லுங்க? நீங்க பிரிஞ்சிருந்தா, நாங்க நிம்மதியா இருந் திருப்போம்.”

``யாராவது பெத்த அம்மாகிட்ட இப்படி பேசுவாங்களா?”

``அம்மா நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய வங்க. இங்கே இப்படி கஷ்டப்படணும்னு தலையெழுத்தா... இதெல்லாம் நீங்களா சேர்த்து வெச்சுக்கிட்ட விஷயம். வானம் பரந்து விரிஞ்சிருக்கும்மா. நம் காலில் நின்னு சவாலை எதிர்கொள்ளணும்.”

``நான், உனக்கு சொல்லிக் கொடுத்ததை நீ, எனக்கே சொல்றீயா… இனிமே டைவர்ஸ் பத்தி பேசி எந்த உபயோகமும் இல்ல கன்யா, இந்தப் பேச்சை விட்ரு. நீ இப்ப கவனமா காரை ஓட்டு.”

சில நிமிட மௌனத்துக்குப் பிறகு, ``என்னைப் பார்த்தா உங்களுக்கு இரக்கமே வரலையாம்மா?” மறுபடியும் பேச்சை ஆரம்பித்த கன்யாவைப் பார்த்துவிட்டு, இடப் புறம் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார் அம்மா.

“கன்யா, டிரைவ் பண்ணும்போது பேச வேணாம்னு நீ தானே சொன்ன... சரி, இப்ப கேக்கறேன். ஏன் நிர்மலைப் பற்றி இதுவரை எதுவும் நீ சொல்லலை... எதையாவது ஒழுங்கா புரியும்படி சொன்னாதானே தெரியும்.”

``உங்ககிட்ட வேற என்ன சொல்லணும்? கல்யாணமான ரெண்டாம் வருஷமே நிர்மலை அழைச்சுட்டு கவுன்சலிங் போகணும்னு சொன்னேனே.”

``ஆமா... ஆனா, நீங்கதான் போகலயே.”

``என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியப்போறதில்லமா. உங்களைப்போல என்னால் இருக்க முடியாது. கார் டிரைவ் செஞ்சா இப்படிப் போகணும், அப்படிப் போகணும்னு சொல்லுவான். அவன் பர்ஸில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது. மொபைலில் எந்த நம்பரும் இருக்காது. சரி, அதை விடுங்க. நீங்க எனக்கு அனுப்பற மெசேஜைக்கூட டெலிட் செஞ்சுடுவான்.”

``என்ன சொல்றே கன்யா... மாப்பிள்ளையா இப்படி செய்வார்?”

``இன்னும் என்ன மாப்பிள்ளை... அவரு, இவரு... குட்டிச்சுவருனு, எனக்குனு எந்த பிரைவஸியும் இல்லம்மா.”

``கன்யா...”

``ஏம்மா கத்தறீங்க?”

``கணவன் மனைவிக்கிடைல என்னமா பிரைவஸி?”

காரை அண்ணாநகர் முருகன் இட்லிக் கடையில் நிறுத்தினாள்.

``எனக்கு எதுவும் வேணாம். நீ வேணா சாப்பிடு.”

“ரெண்டு பேருக்கும் பிடிச்ச தோசை சொல் றேன்” என்று ஆர்டர் செய்தாள். வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தாள் அம்மா.

வண்டியோடு பேச்சையும் ஸ்டார்ட் செய்தாள் கன்யா.

“என்னம்மா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பிரைவஸினு கேக்கறீங்க. நீங்க அமைதியா இருந்தாதான் நான் மேற்கொண்டு பேசவே முடியும். திடீர்னு வீட்ல எனக்குப் புடிச்ச என் டிரஸ் ஒண்ணுமே இருக்காது, என்னன்னு பார்த்தா, நல்லா இல்ல, அதான் டிஸ்போஸ் பண்ணிட்டேன்னு சொல்லுவான். என் மெயில் ஐடில போய் மெயில் எல்லாம் டெலிட் செஞ்சுடுவான். பேங்க் அக்கவுன்ட் எல்லாமே அவன்கிட்டதான் இருக்கு. பணம் எவ்வளவு கொடுத்தாலும், இது மாத்தி அது மாத்தினு ஏதாவது செய்யறான்மா.”

``விடு கன்யா. ரெண்டு பேருக்குமான பணம்... யார் அக்கவுன்ட்ல இருந்தா என்ன?”

``எது செஞ்சாலும் தப்பாவே புரிஞ்சுகிட்டா என்னால எதுவும் செய்ய முடியாதும்மா. உங்கள மாதிரி சுயவிரக்கத்துல மூழ்கிப் போக எனக்கு விருப்பமில்ல. இனியாவது நான் சந்தோஷமா இருக்கணும்மா. எனக்குத் தெரியாம வித்த என் நகைகளைப் பத்தி அப்பா, அவனோட அம்மாகிட்ட பேசினப்ப, அவங்க எவ்ளோ கோபமா உங்ககிட்ட போன்ல பேசினாங்க, மறந்துட்டீங்களா... போன மாசம்கூட அவன் வீட்டுக்குள்ள வரும்போது, வீடு துடைச்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் வெயிட் பண்ணு வீடு துடைக்கிறேன்னு சொன்னதுமே பெரிசா கத்திட்டு விருட்டுனு கோவிச்சுக்கிட்டு போயிட்டான்.”

``நம்ம வீட்ல மட்டுமல்ல. உலகத்துல எல்லா இடத்துலயும் எல்லா வீட்டுலயும் மெஜாரிட்டி ஆண்கள் இப்படிதாம்மா. ஏன் இவ்வளவு கஷ்டத்த வெச்சுக்கிட்டு இத்தனை வருஷமா சொல்லாம இருந்தே...”

``அப்படி வாங்க வழிக்கி, இதுவரைக்கும் நீங்க என்ன செஞ்சீங்களோ... அதைத்தாம்மா நானும் செஞ்சேன்.”

“என்ன சொல்ல வர்ற நீ...”

“நீங்கதான் எனக்குக் கத்துக்குடுத்தீங்க.”

``முட்டாள்தனமாப் பேசாத. எனக்கு என்ன கஷ்டம்னாலும், நம்ம வீட்ல எல்லோருக்கும் தெரியுமே... வெளியேதான் யாருக்கும் தெரியாது. ஆனா, நீ பெத்த அம்மாகிட்டயே மறைச்சு வெச்சியே... உனக்கு எப்படி மனசு வந்துச்சு. உனக்கு போன் செய்யக் கூடாதுனு என்கிட்ட ஒரு நாள் போன்ல பேசினாரு. என்னால உங்களுக்குள்ள பிரச்னை வரக் கூடாதுனுதான் நான் உன்கிட்ட பேசல.”

``என்கிட்டேயும் உங்க அம்மாகிட்ட எதுவும் பேசாதே. எதுவும் சொல்லாதேனு சொன்னாம்மா, அதனாலதான் நான் பேசல. இப்படிதான் பேசுவான்.”

வானம் பரந்து விரிந்தது - சிறுகதை

``இந்த தடவ அஃபீஷியல் ட்ரிப்புக்கு யூரோப் போனப்ப, தனியா இருக்கும்போதுதான் யோசிக்க முடிஞ்சது. ஒண்ணு கோபமா கத்துவான், இல்லைனா மன்னிச்சுக்கோ நான் மாறுவேன்னு சொல்லி என்னை அவன் பேச்சையே கேக்க வெச்சுடுவான். குழந்தை கெடையாதுனு என் தலையில் எழுதி இருக்கும் போலருக்கும்மா. அதுக்கும் நான் தான் காரணம்னு பழியை என் தலையில் போட்டாங்களே. அபார்ஷன் ஆகி நான் பட்ட கஷ்டமெல்லாம் அவங்களுக்குத் தெரியலையே” என்றவள்,

“அம்மா உங்கள பேசாமல் ஒதுக்கி அவமானப்படுத்தின அவங்களை இன்னுமா நம்புறீங்க?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

“அப்படி இல்ல கன்யா... அன்னிக்கு போன்ல பேசும்போது மாப்பிள்ளை சொன்னாரு... `சாரி அத்தை... இப்போ புரியுது. நான் என்னை சரி செய்துக்கறேன் அவள் தானா முடிவெடுக்கிறா... நீங்க சொல்லி எதுவும் செய்யலைன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன்'னு சொன்னார்.”

“புத்தி இல்லையாமா உங்களுக்கு... நான் அவனுடைய எந்த போனும் எடுக்கல. மெசேஜுக்கு பதில் சொல்லல. மெயிலுக்கு ரிப்ளை பண்ணலை. அதனால் உங்களுக்கு போன் வருது... இதுகூட உங்களுக்குப் புரியலையா...”

கண்களில் பொங்கிய நீர் அம்மாவின் கண்ணுக்குள்ளேயே மறைந்தது.

``போறப்போ எங்கேயாவது பெட்ரோல் போடணும். வழில எங்கேயுமே பெட்ரோல் பங்க் இல்லையா.”

தொலைதூரம் வந்திருந்தார்கள். சிக்னலில் நின்று சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு வந்ததுமே கார் புறப்பட்டது.

போன் அமைதியைக் குலைத்தது. “அவன் தான் போனை எடுக்காதீங்க.”

“தேங்க்யூ அத்தை... நீங்களும் போனை எடுக்க மாட்டீங்கனு நினைச்சேன்.”

“சொல்லுங்க.”

“இப்ப நான் என்ன செய்யட்டும்... நீங்களே சொல்லுங்க. நகை, பணம் எல்லாம் கொடுத்துடறேன். கன்யா சொன்னதுபோல ஹெல்த் செக்கப் பண்ணியாச்சு... பிபீ நார்மல்... அவ மேல கோபப்படல... இனிமே அப்படி நடக்காது... சொல்றது கேக்குதா... நாங்க பிரியறது உங்களுக்கு சம்மதமா...”

``இல்லப்பா... உங்க அம்மா நேத்து பேசும் போது அப்படி கத்துனா... `என் பையன் திருடன்... ஊரு முழுக்க சொல்வேன்'னு... `முட்டாத்தனமா பேசாதே வாயை மூடு என் மருமகனை அப்படிப் பேசாதே'னு சொன்னேன். அவ கேட்கல. `இப்பவே சொல் எவ்வளவு பணம் தரணும்னு... எனக்குத் தெரியாது'ன்னு சொன்னா... அதெப்படி உங்க அம்மாவுக்கு தெரியாதா...”

“ஓ... அப்போ என் அம்மாதான் இப்ப பிரச்னையா?”

“இல்லப்பா பார்த்தீங்களா… இதுதான் பிரச்னை… நீங்களோ, உங்க அம்மாவோ எதையும் தவறா புரிஞ்சுக்கறதுலதான் பிரச்னை... பணத்தை குடுத்தா போதும்... அது மட்டும்தான் உங்க எல்லோருடைய மனசுல இருக்கு... உங்களுக்கு கன்யா மனசே புரியல அதுதான் பிரச்னை.”

“சொல்லுங்க அத்தை.”

“இனி நான் சொல்ல எதுவும் இல்ல. கன்யா முடிவுதான் என் முடிவு.''

அமைதியான பயணம் தொடர...

``நான் இப்படி தனியா இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருக்குதாம்மா?”

`உனக்கு ஆதரவா நீ எடுக்கற முடிவுக்கு சம்மதம் சொல்லி எப்பவும் உன் கூடவே இருப்பேம்மா'

- சொல்ல நினைத்த அம்மா தொண்டை அடைத்ததால், எதுவுமே பேசாமல் மகளின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism