Published:Updated:

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- மதுமிதா

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

- மதுமிதா

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஆரணி பாளைய கூட்ரோட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில், நஞ்சை நிலம் சூழ்ந்ததுதான் எங்க ஊரு... விளையிற நிலத்தையெல்லாம் கூறுபோட அனுமதிச்சாதான் ஷேர் ஆட்டோ, மினி பஸ் எல்லாம் வருமோ என்னவோ? அப்பதானே ‘பேருந்து வசதிகள் இருக்கு’ன்னு விளம்பரம் செய்ய முடியும். எங்க நாட்டில விவசாயம் பண்றவங்களைவிட விவசாய நிலத்தை விக்கிறவங்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

இப்பவும் இங்க தினமும் நாலு மணிக்கு ஒருக்காதான் பஸ் வரும். பொழுது சாஞ்சா, ஆறு மணி பஸ்தான் எங்க ஊருக்குக் கடைசி பஸ். அதை விட்டா வயித்துப் புள்ளைத்தாச்சியா இருந்தாலும் கால்கடுக்க நடந்துதான் போகணும். எனக்கு இப்ப ஒன்பது மாசம்..! இன்னைக்கோ நாளைக்கோ புள்ளை பொறக்கலாம்னு டாக்டர் சொல்லியும் பொறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கணும்னு கிளம்பி வந்துட்டேன். என் பேரு ரேணுகா. ஒரு காலத்துல பன்னி மேய்க்கிறதுதான் எங்க தொழில். பெத்தவங்க இப்ப உசிரோட இல்லை. ஆனா, இப்பவும் அண்ணன் அந்தப் பிழைப்பத்தான் பண்ணிட்ருக்கு.

என் அண்ணன், அண்ணி, அண்ணனோட பொண்ணு அலமேலு, அப்புறம் எங்க வீட்டு வெள்ளையன், கழுத்து கறுத்த அந்தக் கருப்பன், செம்பட்ட - அவன் போட்ட வட்டன், வடுவன், வல்லூரு... இப்படி எல்லாப் புள்ளைங்களும் இங்கதான் இருக்காங்க. என் அம்மா இறந்தப்பதான் கடைசியா இந்த ஊருக்கு வந்தது. அதுக்கு அப்புறம் இப்பதான் வரேன். காதல் கல்யாணம் பண்ணதால எல்லா உறவும் அப்படியே விட்டுப்போச்சு. என்னன்னு தெரியல இதுவரைக்கும் என் நினைப்புலகூட வராத அந்த ‘ராஜி’ திடீர்னு நேத்து ராத்திரி என் கனவுல வந்தா, அதுவும் செத்துப் போனதா சொன்னா, அவ ‘ராஜி’ என்கிற அ.ராஜலக்ஷ்மி!

இன்னைக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாம நடந்து வர இதே கூட்ரோடுலதான் அன்னைக்கு நானும் அவளும் முன்னும் பின்னுமா நடந்து வந்தோம். நாங்க நட்பானதே ஒரு வித்தியாசமான தருணத்திலதான். ஆண் - பெண் நட்புன்னு இல்லை; பெண் – பெண் நட்புக்குக்கூட எல்லைகள், தகுதிகள் இருக்கணும்னு அப்பவும் ஒரு பழக்கம் இருந்துருக்கு... நானும் ராஜியும் ஒரே பள்ளிக்கூடம். அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெரிய கொழப்பலூர்… அப்ப நான் நாலாவது, அவ அஞ்சாவது. இரண்டு பேரும் ஒரே வயசுதான்; ஆனா, அவ படிப்புல கெட்டின்னு மூணாவது முடிச்சப்பவே நேரா அஞ்சாவது அனுப்பிட்டாங்க... அவளோட அப்பாதான் எங்க ஸ்கூல், ‘தலைமை ஆசிரியர்.’ ஆனா, அதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு அப்ப வரை நினைச்சிருக்கேன்.

அவ பெரிய தெருவுல இருக்கா, அதையும் தாண்டி உள்பக்கமா ஒரு மறைவான சந்துக்குள்ள எங்க குடிசை இருக்கும். வெளிய இருந்து பார்த்தாலே ராஜி வீடு அவ்ளோ அம்சமா இருக்கும். ஓட்டு வீடு, திண்ணை, நாலு பக்கமும் செடிகொடின்னு, கோயிலை ஒட்டி அவ்ளோ பெரிய வீடு அது. பள்ளிக்கூடம் போக நாங்க அரை கி.மீ தூரம் நடந்து போகணும். ராஜியும் அவ அப்பாவும் வீட்ல இருந்து ஒரே பள்ளிக்கூடத்துக்கு வந்தாலும் அவ அப்பா சைக்கிள்ல வருவார்; அவ மட்டும் நடந்து வருவா... வெளிய ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கவே மாட்டாங்க. அவ அப்பாவை விட்டு எப்பவும் பத்து அடி தள்ளிதான் நிப்பா. அவளோட தம்பியும் அதே பள்ளிக்கூடம்தான். அவன் மூணாவது படிச்சான். அவனை மட்டும் சைக்கிள்ல முன் பக்கம் மூங்கில் கூடையில வச்சு அதுல ஒரு பஞ்சுப் புடவையை அணைகட்டி, பொம்மை மாதிரி கூட்டிட்டு வருவார். ஊரே அதை வேடிக்கை பார்க்கும்.

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

மதிய சாப்பாட்டுக்குக்கூட வீட்டுக்குப் போயிட்டுதான் வருவாங்க. நான் பழைய கஞ்சி குடிப்பேன்; அதுவும் காலைல ஒருவேளைதான்; மதியம் சத்துணவுல சாப்பிடுவேன். அப்பாவும் மகனும் சைக்கிள்ல போயிட்டு வர, இவ மட்டும் மதிய சாப்பாட்டுக்குக் கூடுதலா இரண்டு முறை நடந்து போயிட்டு வருவா... பார்க்கவே பாவமா இருக்கும்! ‘பெரிய வீட்ல பொறந்தா மட்டும் எல்லாம் கிடைச்சிடாது. பையனாவும் பொறக்கணுமோ’ன்னு தோணும்...

ஆரம்பத்துல, நாங்க ஒரே தெருவுல இருந்து கிளம்பி முன்ன பின்ன நடந்து போவோம். சின்னத்தெரு, நடுத்தெரு, அப்புறம் பெரிய தெரு தாண்டியதும் ஒரு பெரிய ‘குட்டை’ வரும். அதுவரைக்கும் கையை ஆட்டிக்கிட்டு கவலை இல்லாமப் போவோம். குட்டையை ஒட்டி, பயங்கரமா இருட்டா பாழடைஞ்ச ஒரு ‘ஓட்டு வீடு’ வரும். அங்கிருந்து எங்களுக்கு நடுங்கத் தொடங்கும். பார்க்கவே வித்தியாசமா இருக்கும். அதுல வெளவாலும் பூனையும் எப்பவும் கூச்சல் போடும். 20 வருஷத்துக்கு முன்ன, ‘ஒத்தக் கண்ணு கருக்கன்’னு ஒருத்தன் தூக்குப் போட்டுக்கிட்டதாவும், அவன் இப்பவும் அங்க பேயா தொங்கிட்டு இருக்கிறதாகவும் சொல்வாங்க.

இதுவரைக்கும் அந்த இடத்துல மாட்டைப் புடிக்கப் போன நாலு பேரை பேயடிச்சு அவன் கொன்னுருக்கானாம். குழந்தைங்க, அதுவும் பொம்பளைப்பசங்கன்னா அவன் காத்தோட காத்தா கலந்து தூக்கிட்டுப் போய்க் கொன்னுடுவான்னு அம்மா சொல்லியிருக்கு. அவன் அடிச்சுக் கொன்ன எல்லாரையுமே அவன் தூக்குல தொங்கின இடத்துலயே அதேமாதிரி தொங்க விடுவானாம். செத்த அவங்களும் இந்த வீட்டையே பேயா சுத்தி வர்றதா எங்க தையல் டீச்சர்கூட சொல்லிருக்காங்க. ஏன், நானே பல சமயம் காத்து வேகமா அடிச்சு என்னைத் தள்ளிட்டுப் போகிற மாதிரி பயந்திருக்கேன். அப்புறம், அம்மா மசூதிக்குக் கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு விட்டாங்க. எப்ப பள்ளிக்கூடம் வரணும்னாலும் எல்லாப் பசங்களுக்கும் இந்த இடம் பயம்தான். பெரியவங்ககூட யோசனையோட இந்த இடத்தை ஒரு பார்வை பார்த்திட்டு பயந்து நடப்பாங்க.

வழக்கமா, இந்தப் பக்கம் நான் தனியா வரமாட்டேன். மத்த பொண்ணுங்க போறப்ப கூட்டத்தோட கூட்டமா ஓடிப் போயிடுவேன். ராஜிக்குக்கூட இந்த இடம்தான் பயம். ஒருநாள் சேர்ந்தாப்போல இரண்டு பேருமே பள்ளிக்கூடத்துக்கு வர நேரமாயிடுச்சு... குட்டை வரைக்கும் முன்ன பின்ன வந்த நாங்க, எவ்ளோ நேரம் காத்திருந்தும் துணைக்கு யாருமே வரவே இல்லை. தனியா மாட்டிக்கிட்டோம்; பள்ளிக்கூடம் போகாமல் திரும்பி வீட்டுக்குப் போக முடியாது.

எப்படியாவது இந்த இடத்தத் தாண்டித்தான் ஆகணும். அந்த நிலைமைல கண்ணை மூடிட்டு, கையை வீசி வேகமா, “ஓலக்கண்ணு மாரியம்மா... ஒத்தையில வந்துடும்மா’’ன்னு நானும் அவளும் சத்தம் போட்டு ஓடினோம். எங்க சத்தத்துல பூனை, வெளவால் சத்தம் கேட்கவே கூடாதுன்னு சத்தம் போட்டுக் கத்தினோம்... ஓடுற ஓட்டத்துல பள்ளிக்கூடப் பசங்க சத்தம் கேட்டதும் லேசா கண் திறந்தோம். எப்படியோ வியர்த்துக்கொட்டி ‘ஒத்தக் கண்ணு’ வீட்டைத் தாண்டி பள்ளிக்கூடம் வரை போயிட்டோம்னு அப்பதான் தெரிஞ்சுது.

இரண்டு பேரும் அந்த வீட்டைத் தாண்டி வந்ததுல அவ்ளோ சந்தோஷம். ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சாதிச்ச மாதிரி சிரிச்சுக்கிட்டோம். ஆனா, அப்பதான் முதல்முறையா இரண்டு பேரும் கை புடிச்சு ஓடிப் போயிருக்கோம்னு எங்களுக்குப் புரிஞ்சது. ‘நல்லவேளை... யாரும் பார்க்கலை’ன்னு பட்டுனு கையை விட்டோம். என்னவோ தெரியல, முதல்முறையா இரண்டு பேர் முகத்துலயும் அவ்வளவு சந்தோஷம். அது எங்களுக்கு எப்பவும் இருக்கணும்னு தோணுச்சு. அன்னைல இருந்து யார் பள்ளிக்கூடத்துக்கு முதல்ல கிளம்பினாலும் எங்க தெரு ஒட்டி வர்ற ஆலமரத்துப் பக்கம் எங்குட்டாவது மறைஞ்சு நிப்போம். அவ கொண்டு வர்ற கட்டம் போட்ட ‘பிஸ்கட்’ எனக்கு ரொம்பப் புடிக்கும். நானும் புளியம்பழம், எங்க வீட்டுக் கறியெல்லாமே கொடுத்திருக்கேன். அவளுக்கும் அதெல்லாம் ரொம்பப் புடிக்கும். என்கூடப் பழக ஆரம்பிச்சதுல இருந்து, அவ அம்மாகிட்ட கெஞ்சி மதியம் சாப்பாடு கொண்டு வரத் தொடங்கினா...

நாங்க ‘எட்டி எட்டி’ உட்கார்ந்தாலும் கைகழுவப் போறப்ப ஆளுக்கு ஒரு வா ஊட்டிக்குவோம். காலைல எட்டு மணிக்கு வீட்டை விட்டு வெளிய வந்தா, அதோட ஸ்கூல் விட்டு புளியம்பழம் அடிச்சுத் தின்னுட்டு அரச மரத்துல தொங்கி விளையாடி கடைசியா எங்க தெருமுக்குக்கு வந்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிப் பார்ப்போம். இடது பக்கம் ஒரு பெரிய புளிய மரம், அது பக்கத்துல ஒரு நூறு அடி கிணறு; அந்த இடம் வரை ஒட்டி வந்த எங்க தோள் லேசாக விலக ஆரம்பிக்கும். அதைத் தாண்டி, ஒரு சின்ன ‘கல் மரம்’ அதுதான் எங்க எல்லைக்கோடு... கல் மரத்துக்கு அப்புறம் ‘அவ யாரோ! நான் யாரோ!’ கல் மரத்தை ஒட்டி வலதுபக்கம் அவ வீடு; அவ வீட்டைத் தாண்டித்தான் நான் போகணும்.

அவகூடப் பழகிறதுக்கு முன்ன எனக்கு ‘அவ்வாவோட கைத்தடி’யைப் பத்தி ஒன்னும் தெரியாது. நானும் பெரிசா கவனிச்சதில்ல. ஆனா, பழக ஆரம்பிச்சதுல இருந்து, அது என்னைப் பார்க்கிற மாதிரியே ‘ஒரு பயம்’ என்னைத் துரத்த ஆரம்பிச்சுது. அவ வீட்டுத்திண்ணைல அந்த ‘அவ்வா’ இருக்கறதுக்கு அடையாளமாவே ‘அவ்வாவோட கம்பு’ நீட்டிட்டு நிக்கும். அதுக்குப் பக்கவாட்டுல காலை நீட்டி, கம்பைத் தட்டிட்டே அந்த ‘அவ்வா’வும் உட்கார்ந்திருக்கும். ராஜி வீட்டுக்குள்ள போகிற வரைக்கும் ‘அவ்வா’ தெருவையே நோட்டம் போடும். எப்படியோ ராஜி என்கூடப் பழகிறதை அந்த அவ்வா வாசம் புடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன்.

முதல் நாள் கம்பை வச்சு தரையில தட்டி, ராஜி கிட்ட ஏதோ கேட்டுச்சு. அவளும் ‘ஆமாம்’னு தலை ஆட்டினா. கம்பாலயே ‘நாலு இழுப்பு’ இழுத்துச்சு. இன்னமும்கூட அந்த வடு ராஜி கால்ல இருக்கத்தான் செய்யும். அன்னைக்கு அவள வெளியவே நிற்க வச்சு தலையில தண்ணிய ஊத்தி உள்ள அழைச்சிட்டுப் போச்சு. மறுநாள் முழுக்க ராஜி என் பக்கத்துல வரக்கூட ரொம்ப பயந்தா.

ஆனா, அந்த ‘ஒத்தக் கண்ணு கருக்கன்’ புண்ணியத்துல திரும்பவும் நாங்க ஒட்டிக்கிட்டோம். அன்னைல இருந்து ‘அவ்வா’ கேட்கிறப்பல்லாம் ராஜி ‘இல்லை’ன்னு தலைய ஆட்டிட்டு உள்ள ஓடிடுவா. ‘அவ்வா கைத்தடி’ மெதுவா தெருப்பக்கமா என்னை எட்டிப் பார்க்கும். நான் கல் மரத்துக்கு முன்னவே ஒளிஞ்சுப்பேன். ‘அவ்வா கம்பு’ வீட்டை நோக்கித் திரும்பற வரைக்கும் நான் வெளியவே வரமாட்டேன். ‘எதுக்கு அவ என்கூட வரக்கூடாது. நான் தொட்டா என்ன?’ அதெல்லாம் நான் யோசிக்கல. என் யோசனை எல்லாம் ஒருவேளை அவளை அடிச்ச அதே `கம்பு’ என் பக்கமும் திரும்பினா... நான் என்ன செய்றதுன்ற பயம் மட்டும்தான். இதுவரைக்கும் அவ்வாவை நான் நிமிர்ந்துகூடப் பார்த்தது இல்லை. ஆனா, அந்தக் கைத்தடி மட்டும் எப்பவும் என்னை பயமுறுத்திட்டே இருக்கும். ஊருக்கே, ‘ஒத்தக் கண்ணன் வீடு’தான் பயம்; ஆனா, எனக்கு மட்டும் ‘இரண்டு வீடு’மே ஒரே மாதிரி பயத்தைத்தான் கொடுத்துச்சு.

நகரத்துக்குப் போன பிறகுகூட இன்னொரு பொண்ணைத் தொட்டுக் கூப்பிட எனக்கு மனசு பதறும். யாராவது தப்பாச் சொல்லிட்டா அவமானமாகிடுமோன்னு யோசிப்பேன். எது பாவம், எது புண்ணியம்னு பல வருஷம் என்னையே நான் வெறுத்துக் கிடந்தேன். அவமானத்தை ஏத்துக்கிறது நம்ம உயிருக்கு நாம செய்கிற துரோகம்னு தெரிஞ்சதும், கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து நான் வெளியில வரப் பழகினேன். ஆனா, அந்த ‘அவ்வாவோட கைத்தடி’ பயம் இப்பவும் எனக்குள்ள இருக்கான்னு தெரியல, இல்லாம இருந்தா ராஜியைக் கூப்பிட்டுப் பேசி அவ நல்லாருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

கூட்ரோடெல்லாம் முடிஞ்சு ஊருக்குள்ள வந்துட்டேன்னு நினைக்கிறேன். லேசா தாகம் எடுக்குது, பழசையெல்லாம் யோசிச்சபடி வந்ததுல, அந்த ‘ஒத்தக் கண்ணு கருக்கன்’ வீட்டைக்கூட கவனிக்காம வந்திருக்கேன். இப்ப அதே நூறடி கிணறு, ஆலமரம், பம்பு செட்டு… படிப்பு வராதோன்னு பயந்த காலம் போய் படிப்புதான் தைரியம்னு புரிஞ்சு, இப்ப நான் பால்வாடி ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்கிறேன். சொல்லிக் கொடுக்கிறதுதான் எனக்கு நிம்மதியைத் தருது. என்னதான் படிச்சாலும், வெளிய பழகினாலும், டீச்சராவே மாறினாலும், குழந்தைப் பருவத்துல ஏற்பட்ட உணர்வு, ‘யானைச்சங்கிலி’ மாதிரி மனசுல தைரியம் இல்லன்னு குத்திக் காட்டிட்டுதான் இருக்கு.

இப்பவும் இந்த இடம் வரும்போது, அந்த வயசுப் பதற்றம் அப்படியேதான் இருக்கு. ஏற்கெனவே வயித்துல புள்ளை; இதுல எனக்கு இதயம் பலவீனம்னு சொல்லியிருக்காங்க. லீவு இல்லன்னு வர முடியாமப்போன புருஷனைக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்திருக்கணுமோ... இல்லை, நான் வர்ற விஷயத்தையாவது அண்ணன் காதுல போட்டிருக்கணுமோன்னு கல் மரத்துகிட்ட போகப்போக என் பதற்றம் என் பயத்தைக் கிளறிவிட்டுச்சு. என் கை புடிச்சிட்டு இருந்த ராஜி, இப்ப என் பக்கத்துல இல்ல. ஆனாலும் நான் ஏன் பயப்படுறேன்? பொண்ணுங்க படிக்கிறப்ப இருக்கிற ‘தோழமை’ சில காலம்தான். இப்ப அவ எங்க இருக்கான்னுகூடத் தெரியாது. ஒரு வேளை அவளும் என்னை மாதிரி அம்மா வீட்டுக்கு வந்திருப்பாளோ? அதைத்தான் கனவுல அப்படித் தப்பாக் காட்டுச்சோ! அவ இப்ப எப்படி இருப்பா, அதே ராஜியாவா... இல்லை, அவ்வா மாதிரி மாறியிருப்பாளா?

அவ்வா வீட்டுக் கைத்தடி - சிறுகதை

படிச்ச படிப்பை எல்லாம் ஓட்டிப் பார்த்து மனசுக்குள்ள ஒரு தைரியத்த வர வச்சேன். ராஜி வீட்டு வாசல்லதான் இப்ப நான் நிக்குறேன். ‘அவ்வா கைத்தடி’ இங்க இல்லை. உள்ள போகிற தைரியமும் வரல... `ராஜி, ராஜி’ன்னு ஒரு குரல் கொடுத்துப் பார்த்தேன். வீட்டைக் கொஞ்சம் மாத்தியிருக்காங்க. வீடு முழுக்க மரத்தால செஞ்ச கைவினைப் பொருட்களும் பெரிய படங்களும் அழகான திரைச்சீலைகளும் தொங்கிட்டிருந்துச்சு. அவ்வாவோட படமான்னு தெரியல. ஆனா, அதே சாயல்ல மாலைய போட்டு ஒரு படம் தொங்கிட்டிருந்தது. கைத்தடிக்கு பயந்து வெளியில நின்ன காலம்லாம் ஏளனமா என்னை எட்டிப்பார்க்க, அவசரமா ‘அவ்வா வீட்டு’க்குள்ள கால் வைக்கக் கால் எடுத்தேன். நினைச்சுப் பார்க்க முடியாத வேகத்துல அந்தக் கைத்தடி, அதே வேகத்தோட அதைவிடத் திமிரோட என் காலுக்கு முன் வந்து விழுந்துச்சு. நான் மறுபடியும் படி இறங்கிக் கீழே நிற்க, ராஜிய ஒத்த சாயல்ல ஒரு ‘சிறுவன்’ வந்தான்.

‘அவ்வா’ இறந்த பிறகு, ‘அவ்வா வீட்டுக் கைத்தடி’ அந்த வீட்டுப் பேரப்பிள்ளையிடம் கை மாறி இருந்துச்சு... இங்க எதுவுமே மாறலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism