Published:Updated:

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

மாலன், ஓவியங்கள்: மணிவண்ணன்

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! - சிறுகதை

மாலன், ஓவியங்கள்: மணிவண்ணன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

“இன்றும் பனிக்குல்லாயை மறந்துவிட்டாயா?”

சுவரிலிருந்த பித்தான்களில் எண்களை அழுத்திவிட்டுக் கண்ணாடிக்கதவுகள் திறக்கக் காத்திருந்த நெடுமாறன் திரும்பிப் பார்த்தான். சூ ஹுவா புன்னகையோடு நின்றுகொண்டிருந்தாள். சூவும் அவள் புன்னகையும் பிரிக்க முடியாதவை. அது அப்படியொன்றும் வசீகரமான புன்னகை அல்ல. முன் பற்கள் தெரிய விரியும் புன்னகைதான். அணில்களைப் போல அவளது முன் பற்கள் சற்று அகலமானவை. வசீகரமான புன்னகை அல்ல என்றாலும் அது தோழமை நிறைந்த புன்னகை.

“ஆமாம், இன்னும் பெய்ஜிங் வானிலை பழகவில்லை” என்றான் நெடுமாறன். ஓவர் கோட்டில் உடலைத் திணித்துக்கொண்டபோதே குல்லாயையும் கையுறையையும் எடுத்து அணிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றை மேசையின் இழுப்பறையில் போட்டு வைத்திருந்ததால் கிளம்பும் அவசரத்தில் ஞாபகம் வரவில்லை. கண்ணெதிரே கிடந்தால் எடுத்துக்கொண்டு வந்திருப்பான்.

“வெப்பம் மிகுந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்! இதெல்லாம் பழக இன்னும் கொஞ்ச காலமாகும்” என்றாள் சூ. “இன்னும் ஒரு மாதம்தான். சீனப் புத்தாண்டு வந்தால் பனி குறைந்துவிடும்” என்றாள் புன்னகைத்தபடி.

பெய்ஜிங்கில் பழகிக்கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருந்தன. ஒன்று, அவர்களது மொழி. சியேசியே (நன்றி) அவ்வளவு கடினமாக இல்லை என்றாலும், நீ ஹாவ் (வணக்கம்) என்று சரியாக உச்சரிக்கவே அவனுக்கு ஒரு வாரமாயிற்று. மொழி தவிர அவன் பழகிக்கொள்ள சிரமப்பட்ட முக்கியமான மற்றொன்று உணவுக் குச்சி.

மென்பொருள் நிறுவனத்தின் வேலை ஆணையோடு சீனத்தில் வந்திறங்கிய போது சீனாவில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்றுதான் நெடுமாறன் நினைத்திருந்தான். அவனது கற்பனைச்சித்திரம் கறுப்புப் பால கிராமத்திற்குப் போனபோது தகர்ந்தது. கைவிடப்பட்ட இருப்புப் பாதையோரமாக இருந்தது அந்தச் சேரி.

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! - சிறுகதை

கான்கிரீட், வளைந்த இரும்புத் தகடுகள், மரக்கட்டைகள் கொண்டு ஒழுங்கற்று அமைந்த சிறு கூடுகள். அனேகமாக ஒற்றை அறை. வீடுகளுக்குள் நுழைந்தால் இஞ்சி, பூண்டு அல்லது வெந்துகொண்டிருக்கும் இறைச்சி இவற்றின் வாசம். ஏனென்றால் சமையலறை, படுக்கையறை, வாழ்வறை எல்லாம் ஒன்றுதான். தண்ணீரை மிச்சம் பிடிக்க வீதிகளில் பிளாஸ்டிக் பேசின்களில் துணி அலசிக் கொண்டிருப்பார்கள். குளியலறையோ குழாயோ இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் வேறு என்னதான் செய்ய முடியும்? ஏழைகளின் வாழ்க்கைச் சித்திரம்போல எல்லாப் பக்கங்களிலும் புடைத்துக் கனக்கும் பைகள் தொங்க மீன்பாடி வண்டிகள் வாசலோரமாக நின்றுகொண்டிருக்கும். கண்ணாடிக்குப் பின் நின்று மன் தோ என்ற கனத்த வெள்ளை ரொட்டி விற்கும் கடைப் பெண்களின் சினேகச் சிரிப்புகள். 400 மில்லி ரத்தம் தந்தால் 400 யுவான் என்று ரத்த ‘தானத்திற்கு’ அழைக்கும் சுவரொட்டிகளில் தெரிந்த வறுமையின் செம்மை. 400 யுவான் இருந்தால் அந்த ஒற்றை வீட்டுக்கு வாடகை கொடுத்து விடலாம்.

``சீனாவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!’’ கேக்கும் டீயும் எடுத்துக் கொண்டு சூவின் இருக்கைக்கருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான் நெடுமாறன். உணவகத்தின் உலோகச் சத்தங்களுக்கிடையில் தான் சொன்னது அவளுக்குக் கேட்டிருக்குமோ என அவள் முகம் பார்த்தான். சீனாவில் சில விஷயங்களை உரக்கப் பேசாமல் இருப்பது நல்லது என்பதும் இன்னும் அவனுக்குப் பழகவில்லை. நூடுல்ஸ் மிதக்கும் சூப்பை ருசித்துக்கொண்டிருந்த சூ நிமிர்ந்து அவன் கண்ணுக்குள் ஒரு நிமிடம் பார்த்தாள்.

“உலகெங்கும் பரவிக்கிடப்பவை வசீகரமான அரசியல் பொய்களும், வசதியற்ற ஏழைகளும்” என்றாள் சூ. ஆங்கிலத்தில்தான் சொன்னாள் என்றாலும் கண்கள் அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்துப் பின் தாழ்ந்தன. புன்னகைக்குள்ளிருந்து அணில் பற்கள் எட்டிப் பார்த்தன. ``நீ எங்கே பார்த்தாய் ஏழைகளை?”

`‘பிளாக் பிரிட்ஜ் போயிருந்தேன்” என்றவன், சற்றுத் தாமதித்து “முடி வெட்டிக்கொள்ள” என்றான்.

“நொங்சுன்மின்கொங்.”

“அப்படியென்றால்?”

“கிராமங்களிலிருந்து பெய்ஜிங்கிற்குக் குடிபெயர்ந்த தொழிலாளிகள். பாவம். பறவைக் கூடமைக்க வந்தவர்கள் இந்தக் கூடுகளுக்குள் முடங்கிவிட்டார்கள்.” அவனுக்குப் புரியவில்லை என்பது அவளுக்குப் புரிந்ததால் சூ தொடர்ந்தாள், “அன்றைக்குப் பார்த்தியே, ‘பேர்ட்ஸ் நெஸ்ட்.’ ’’

“ஒலிம்பிக் ஸ்டேடியம்?”

“ம்... அதுதான். அதைக் கட்ட 2007-ல் பெய்ஜிங் வந்தார்கள். இத்தனை வருஷமாச்சு, இங்கேயே தங்கி விட்டார்கள்.”

“ஏன்?”

“நகரம் மாயம் செய்யும் மாறன். நம்பிக்கை தரும். வசதி வரும், காசு கொட்டும் என்று கனவுகள் தரும்.”

“எல்லா நாடுகளிலும் மாயப் பொன்மான்கள் ஓடிக்கொண்டும் உலவிக்கொண்டும்தான் இருக்கின்றன. அரசு அவர்களுக்கென்று ஏதும் வசதிகள் செய்து தரவில்லையா?’’

“அவசியம் விடை தெரிய வேண்டுமா?” சூப்பில் மிதந்த நூடுல்ஸை உணவுக் குச்சியால் பிடித்து வெளியே எடுத்தாள் சூ. தூண்டில் புழுவைப் போல அவை அதிர்வில் ஆடின. நாவில் அதை இட்டுக் கொண்டு அவள் சொன்னாள், “அப்படியானால் நீ கட்டாயம் லியூ யான் சங்கை சந்திக்க வேண்டும்” என்றாள்.

நாங்கள் போன போது லியூ அரையிருளில் ஆழ்ந்திருந்தார். அறையும் (எழுத்துப் பிழை அல்ல) குறையுமாக எழும்பிக்கொண்டிருந்த கட்டடத்தின் மூலையில் தரையில் கம்பளம் விரித்து அமர்ந்திருந்தார். காகிதக் கூடால் சுடர் மூடப்பட்ட சீன விளக்கின் ஒளியில், சிவப்புக் காகிதத்தில் ஏதோ வரைந்து கொண்டிருந்தார். அதாவது எழுதிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு சித்திரம்தானே எழுத்து. அந்த விளக்கின் ஒளி அவர் நிழலை பிரமாண்டமாய்ச் சுவரில் கிடத்தியிருந்தது. ஆனால் அதன் மஞ்சள் ஒளி அவர் முகத்தில் பொன்னைப் பரப்பியதுபோல் ஒளிர்ந்தது.

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! - சிறுகதை

அந்தக் சிவப்புக் காகித நாடாவை எடுத்துப் பார்த்த சூ “வாவ்! சுன் லியன்!” என்று குதூகலித்தாள். லியூ முறுவலித்தார். “புத்தாண்டு வருகிறதில்லையா?” என்றார். நான் புரியாமல் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட சூ சொன்னாள், ``சுன் லியன் என்பது இரண்டு வரிக் கவிதை. உனக்குத் தெரியுமில்லையா, நாங்கள் மேலிருந்து கீழாக எழுதுகிறவர்கள். அவற்றை எழுதி நாடா நாடாவாகக் கத்தரித்து புத்தாண்டின் போது வீட்டின் நிலையருகில் அலங்கரித்து விடுவோம். இதில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கல்விப் பெருங்கடலுக்குக் கரையில்லை. ஆனால் முயன்றால் படகு செய்ய முடியும்!”

“அருமை!”

இன்னொரு நாடாவை எடுத்துப் படித்தாள், ``வானம் ஒன்றுதான். ஆனால் வழிகள் பல!’’

என்றும் நிலைக்கும் உண்மைகளை இரண்டு வரிகளில் நறுக்கென்று சொல்லும் அந்தக் கிழவன் அந்தக் கணத்தில் மாறனுக்கு வள்ளுவனைப் போலத் தோன்றினான். அசப்பில், ஏழு வயதுக்குள் தனக்கு ஆயிரம் குறள் கற்பித்த அவன் தகப்பன் போலும் இருந்தது. கையெடுத்து வணங்கத் தோன்றியது.

“லியூ நீங்கள் கவிஞரா?” என நேரடியாகவே கேட்டான். அதை அவருக்கு மொழிபெயர்த்த சூ, “இல்லை, விவசாயி!” என்று அவரை முந்திக்கொண்டு பதிலும் சொன்னாள்.

லியூ ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தார். “பொய் சொல்லாதே மகளே, நான் கண்ணாடி துடைப்பவன்” என்றார். வானுயர்ந்த கண்ணாடி போர்த்திய கட்டடங்களின் முன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு அவற்றில் படிந்த பனியைத் துடைக்கும் கூலி வேலையில் அவர் வாழ்க்கை மிதந்துகொண்டிருந்தது.

“எங்கள் கிராமத்தில் மண்ணில் உழலும் விவசாயியாக இருந்தேன். நகரம் என்னை உயர்த்திவிட்டது. கண்ணாடி துடைப்பவனாக ஆக்கிவிட்டது” என்று அவரே தொடர்ந்தார். சற்று நேரம் சூனியத்தைப் பார்த்துக்கொண்டு மெளனமானார். பின் கடகடவென்று பேச ஆரம்பித்தார்.

“அந்த இரவு நீ பெய்ஜிங்கில் இருந்தாயா சூ? நடந்து நாலைந்து வருடமாகிவிட்டது. ஆனால் இரைச்சலிட்டுக் கொண்டு விரைந்து வந்த அந்த நெருப்பு என்ஜின்களின் கூக்குரல் என் காதில் இன்னும் இருக்கிறது. நானும் ஷூ சாங்கும் தெருவோரமாக அமர்ந்து மாஜொங் விளையாடிக்கொண்டிருந்தோம். இன்று போல் அன்றும் மாலை நாலரைக்கே குளிர ஆரம்பித்து விட்டது, பனிபெய்யும் போலிருந்தது. உள்ளே போகலாம் என்று எழுந்துகொண்டோம். அப்போதுதான் அந்த வண்டிகள் வந்தன. அவை சென்ற திக்கில் தூரத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிவது தெரிந்தது. போட்டதைப் போட்டபடி போட்டுவிட்டு ஷூ அந்த வண்டிகளின் பின் ஓடினான். பின் மூச்சிரைக்கத் திரும்பி வந்து சொன்னான். “தீப்பிடித்துக் கொண்டுவிட்டது. அனேகமாக ஆயில் ஹீட்டர்தான் காரணமாக இருக்கும்.’’

“ஆனால் நீங்கள் இப்போதும் ஆயில் ஹீட்டர்தான் உபயோகிக்கிறீர்கள் போல” என்றாள் சூ, அறையின் மூலையில் இருந்த எண்ணெயில் எரியும் கணப்பைப் பார்த்தபடி.

“என்னம்மா செய்வது? காசு இருந்தால் மின் கணப்பு வாங்கிக் கொள்ள மாட்டோமா?”

அடுத்த வார இறுதிக்குள் அவருக்கு ஒரு மின் கணப்பு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“அந்த நெருப்பு அணைக்கப்பட்ட இரண்டாவது நாள் வந்துவிட்டார்கள். மூன்று நாள்களுக்குள் நாங்கள் இடத்தை காலி செய்ய வேண்டும். இந்த இடத்தை இடிக்கப்போகிறோம் என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள்.”

“உங்களுக்கு வேறு இடம் ஏதும் கொடுக்கவில்லையா?’’

“ஹுஜி” என்றார் லியூ. குரலில் கசப்பு வழிந்தது

ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டேனா? திட்டுகிறாரா என்று சூவின் முகம் பார்த்தான் மாறன். அவள் சிரித்துக்கொண்டு சொன்னாள்.

“ஹுஜி என்றால் வாய். உங்கள் ஊரில் குடும்பத்தில் இத்தனை தலை என்று சொல்வீர்கள் இல்லையா? நாங்கள் குடும்பத்தில் உணவளிக்க வேண்டிய வாய்கள் இத்தனை என்போம். பழங்காலத்திலிருந்து, அதாவது மன்னர்கள் காலத்திலிருந்து, குடும்பத்தில் இத்தனை பேர் என அரசாங்கம் பதிந்துகொள்ளும் முறை ஹுஜி. இப்போதும் அது தொடர்கிறது. அதைப் பேச்சு வழக்கில் ஹுகோவ் என்கிறோம். நவீனகால அரசாங்கம் குடும்பங்களை இரண்டு பிரிவாக வகைப்படுத்திவிட்டது. நகரக் குடும்பங்கள், கிராமக் குடும்பங்கள். கல்வி, மருத்துவம், பென்ஷன் எல்லாவற்றையும் அவரவர் பூர்வீக ஊரில்தான் பெற்றுக்கொள்ள முடியும். கிராமத்துக் குடிமக்கள் எனப் பதிவேட்டில் பதிவானவர்கள் நகரத்தில் அவர்களது பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது” என்றவள், லியூவைப் பார்த்து, “ஏன் இங்கு கிடந்து கஷ்டப்படுகிறீர்கள், உங்கள் கிராமத்துக்குத் திரும்பும் உத்தேசமில்லையா?’’ என்றாள்.

“போகப்போகிறேன் மகளே. இந்தப் புத்தாண்டிற்குப் போகத்தான் போகிறேன். திரும்ப வர மாட்டேன். ஆனால் ஒரு இருபதினாயிரம் யுவானாவது சேர்த்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். இல்லையென்றால் இத்தனை வருஷம் நகரத்தில் இருந்து என்ன கிழித்தாய் என்று ஊர் கேலி பேசும். புத்தாண்டு விருந்திற்கு வருபவர்களுக்குச் சிவப்புக் கவரில் தலா நூறு யுவான் போட்டுக் கொடுத்தால் வாயடைத்துப் போவார்கள். மகள் பெரியவளாகி யிருக்கிறாள். அவளுக்குப் பட்டுத் துணி வாங்கிக்கொண்டு போக வேண்டும். துணிகூடப் பார்த்து வைத்து விட்டேன். கறுப்பில் செர்ரிப் பூங்கொத்துகள் போட்ட துணி. அதான் இப்போது பேஷனாமே?’’ என்று சூவைப் பார்த்தவர், “இன்னும் ஒரு இரண்டாயிரம் சேர்ந்தால் கிளம்பிவிடுவேன்” என்றார்.

லியூவிற்கு இரவு உணவு வாங்கிக் கொடுத்தார்கள். வெளிச்சம் நிறைந்த சொகுசான விடுதி ஒன்றுக்கு அழைத்துப் போனார்கள். பதினோராவது மாடியில், இசைத் தட்டுபோல இழுத்தால் நடுவில் சுழலக்கூடிய மேசையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். “நான் இங்கு மூன்று மாதத்திற்கு முன் கண்ணாடி துடைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் காசு கொடுத்துப் பார்க்கும் நகரக் காட்சிகள் எனக்கு அப்போது இலவசம். ஆனால் என்ன, அந்தரத்தில் தொங்கிக்கொண்டு அவற்றைப் பார்ப்பேன்” என உரக்கச் சிரித்தார் லியூ.

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! - சிறுகதை

திரும்பி வரும்போது சூவிடம் மாறன் சொன்னான். “புலம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் அந்தரத்தில் தொங்குபவர்கள்தான். இது எங்கள் ஊரில்லை. நாலு காசு சேர்க்கலாம் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். சேர்த்துக்கொண்டு திரும்பிப் போவோம். ஆனால் அங்கு அப்போது அது எங்கள் ஊராக இராது” என்றான்.

“ `உலகெங்கும் ஓடித் திரிகின்றன ஓய்வின்றி மாயமான்கள்’ இந்த இரண்டுவரிக் கவிதையைப் புத்தாண்டின்போது என் வீட்டில் எழுதித் தொங்கவிடப் போகிறேன்” என்றாள் சூ பதிலுக்கு.

“தாராளமாகச் செய். ஆனால், காப்பிரைட் என்னுடையது’’ என்றான் மாறன். அணில் பற்கள் மீண்டும் சிரித்தன.

புத்தாண்டுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே தள்ளுபடி விற்பனைகள் தொடங்கிவிட்டன. அத்தோடு பனிக்காலம் முடிய இருந்ததால் மின் கணப்புகள் தள்ளுபடி விலையில் கிடைத்தன. தாவ்பாவ்வில் ஆன் லைன் மூலம் மின்கணப்பிற்கு ஆர்டர் செய்தான் மாறன். வந்தவுடன் எடுத்துக் கொண்டு போக வாய்க்கவில்லை. மறுவார இறுதியில் கணப்பை எடுத்துக் கொண்டு அந்த வள்ளுவத் தகப்பனைப் பார்க்க அவனும் சூவும் அந்த எழும்பிக் கொண்டிருந்த அடுக்ககத்திற்குப் போனார்கள்.

கம்பளி, கணப்பு, காகித விளக்கு ஏதுமின்றி அந்த இடம் சுத்தமாக இருந்தது. அவர்களது திகைப்பைப் பார்த்துவிட்டு இன்னொரு கிழவர் வந்தார்.

“யாரையாவது தேடுகிறீர்களா?”

“லியூ?”

“உங்களுக்கு விவரம் தெரியாதா?”

“ஊருக்குப் போய்விட்டாரா?’

“மேலே போய்விட்டார். கண்ணாடி துடைக்கப் போனவர் கால்தவறி விழுந்துவிட்டார். இடுப்பொடிந்து விட்டது என்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். அங்கே போய்விட்டார்.”

நான் திகைத்து நின்றேன். அந்தக் கிழவர் அருகில் வந்து “நீங்கள் பத்திரிகையா?” என்றார்.

“இல்லை.”

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கிசுகிசுத்த குரலில் சொன்னார், “தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்றால் இன்ஷூரன்ஸில் பணம் கொடுக்க மாட்டார்கள். கம்பெனிக்காரர்கள் கருணைத் தொகை கொடுத்துக் கணக்கை முடித்து விட்டார்கள். இருபதினாயிரம்” என்றார்.

அவர்கள் நகர்ந்து வந்தபோது குளிர்ந்த காற்று வீசியது. முகத்தில் வந்து ஒட்டிக்கொண்ட காகித நாடாவை விலக்கி எடுத்த சூ அதை வாசித்தாள்,

“வானம் ஒன்றுதான். ஆனால் வழிகள் பல.”