Published:Updated:

பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை

பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை

மாலதி.என்

பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை

மாலதி.என்

Published:Updated:
பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை

பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்துவிடும் மனநிலையில் போனில் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆசை ஆசை யாக யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில் வாங்கிய டிக்கெட்டுகள். எனக்கும் என் கணவருக்கும் மட்டுமே வாங்கிய டிக்கெட்டுகள்.

60 வயதுக்கு மேல் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது எனக்கே ஆச்சர்யத்தைத் தந்தது. குடும்பத்துக்காக உழைத்தது போதும் என்ற மனநிலைக்கு வந்த போதுதான் விமானத்தில் கணவருடன் செல்ல வேண்டும் என்று தோன்றியது. மூன்று மாதங் களுக்கு முன்பு எடுத்த டிக்கெட்டுகள்.

மூத்தவன், தன் மனைவி மகனுடன் அவன் மாமியார் வீட்டுக்குச் சென்று ஒரு மாதம் தங்கப்போகிறேன் என்று சொன்னதும் நானும் அவரும் எங்காவது போய் வந்தால் என்ன என்கிற பொறிதட்டியது. இரண்டாவது மகன், தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு வாரம் அவன் மாமியார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்ததும் நானும் அவ ரும் போவது என்று முடிவு செய்து விட்டேன்.

அதிக தொலைவு இல்லை. சென்னையி லிருந்து பெங்களூருக்கு இரண்டு டிக்கெட்டுகள். பெங்களூரில் என் அத்தை இருக்கிறார். கொரோனா நேரத்தில் அவர் கணவனை இழந்தபோது போக முடியவில்லை. இப்போது போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று தோன் றியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தது என் கணவருக்கும் தெரியாது. இப்போ தெல்லாம் என்னைக் கண்டாலே எரிச்சல். ஏளனச் சொற்கள். ரிடையராகி வீட்டில் இருக் கிறார். ஏதாவது கேட்டால் ஏடாகூடமான வார்த்தைகள்.

ஹாலில் அமர்ந்திருப்பவரிடம், ``காபி கொண்டு வரவா?’’ - கேட்டேன்.

பெங்களூருக்கு ரெண்டு டிக்கெட்... - சிறுகதை

``இத்தனை நேரம் கழிச்சாவது கேட்டியே... எல்லாருக்கும் கொடுத்துட்டு மிச்சமிருந்திருக் கும். அதான் என் ஞாபகம் வந்திருக்கு.”

மதியம் டிவி முன் அமர்ந்திருந்தவரிடம் கேட்டேன், ``சாப்பிடறீங்களா?’’

``காலையில உன் பசங்களுக்குக் கட்டிக் கொடுத்த சாப்பாட்டுல மீதிதானே. எனக்கும் ஒரு டப்பாவில போட்டு வெச்சிருந்தா... பசிக்கிறபோது எடுத்து சாப்பிட்டிருப்பேன்.’’

இரவு, ``மணி எட்டாகப் போகுது... சாப்பிட வர்றீங்களா..?’’

``என் பென்ஷன் பணத்துல கொஞ்சம் பணத்தை அடுத்த மாசத்துல இருந்து எடுத்து வெச்சிக்கறேன். சாயந்தரம் ஏழு மணிக்கு மெதுவா நடந்துபோய் எனக்கு பிடிச்ச எதை யாவது சாப்பிட்டுட்டு வந்துடறேன். அதான் உனக்கும் வசதியாயிருக்கும். எனக்கும் செளகர் மாயிருக்கும்.’’

இது இன்று நேற்று நடக்கிற கதையல்ல... அவர் ஓய்வுபெற்ற நாளிலிருந்து நடக்கிற ஓயாத கதை. பணியில் இருந்தபோது இப்படி யில்லை. அதிகம் பேச மாட்டார். அவருண்டு அவர் வேலைகள் உண்டு. இப்போதுதான் இப்படி.

சாப்பிட்டதும், இரவு நேர மாத்திரையை எடுத்துக்கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டார்.

மூத்த மகனின் ஒன்பது மாதக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூத்தவன் பணியில் இருந்து வந்ததும் மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மூத்த மருமகள்... ``அத்தை வாங்க... எங்களோட சாப்பிடுங்க...’’

``வேண்டாம்... நீங்க சாப்பிடுங்க... சின்னவன் வரட்டும்.’’

``உங்களைத் திருத்தவே முடியாது...’’ - செய்து வைத்ததை சாப்பிட்டுவிட்டு அவர்கள் மாடி ரூமுக்குப் போய்விட்டார்கள்.

இளைய மகனுக்காகக் காத்திருந்தேன்.அவன் மனைவி நேரத்துக்கு சாப்பிட்டுவிடுவாள்.

``உன் புருஷன் இன்னிக்கு லேட்டா வருவேன்னு போன் பண்ணான். நீ போய் படும்மா... நான் அவன் வந்ததும் சாப்பாடு போடுறேன்’’ - சொன்னதும் போய்விட்டாள்.

இளையவன் வந்து சாப்பிட்டு முடித்துக் கிளம்பியதும் படுக்கையறைக்கு வந்தேன். படுத் திருந்த அவரிடம் சீரான குறட்டை ஒலி வந்தது.

எழுப்பி டிக்கெட் விஷயத்தைச் சொல்ல லாமா என்று நினைத்தேன்.

எழுப்பினால், `இப்பதான் இழுத்துட்டுப் போச்சு. என்னை எழுப்பி உட்கார வெச்சுட்டு நீ பாட்டுக்கு சுகமா தூங்குவே. ஏதாவது இருந்தா காலையிலே சொல்லு’ அவரிடமிருந்த ஒரு எரிச்சலான பதில் வரும் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

செல்போனை எடுத்து பதிவு செய்யப்பட்ட விமான டிக் கெட்டுகளை கேன்சல் செய்து விடலாம் என்று தோன்றியது. சுவாரஸ்யமின்றி ஃபேஸ்புக்கில் கண்களைப் பதித்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

காலையில் எனக்கு முன்பே எழுந்துவிட்டார். ரெஸ்ட் ரூம் போய்விட்டு ஹாலில் அமர்ந் தார். அங்கிருந்தே படுக்கை யிலிருந்த என்னை பார்த்தார். காபிக்காகக் காத்திருக்கலாம். காத்திருக்கட்டும். இதுவரை சம்பளமில்லாமல் இவர்களுக் காக உழைத்தது போதும்.

மூத்த மருமகள் வருகிற ஓசை கேட்டது... ஹாலில் அமர்ந்திருந்த என் கணவரிடம் கேட்டாள், ``அத்தை எங்கே?’’

``பெட்ரூம்ல இருக்கா... படுக்கையில இருந்து எழுந்திருக்கலை.’’

``என்னாச்சு மாமா?’’

``அவகிட்ட நீயே கேளு...’’

``தூங்கறதா இருந்தா தூங்கட்டும். எழுப்ப வேண்டாம். உடம்புக்கு முடியாம இருக்கலாம். உங்களுக்கு காபி போடவா?’’

``வேண்டாம். மெதுவா சாப்பிட்டுக்கறேன்.’’

``அத்தையை மட்டும் நம்பியிருக்காதீங்க மாமா.’’

``என்ன சொல்ற..?’’

``உங்களுக்கு மட்டுமல்ல... அவங்களுக்கும் வயசாயிட்டுதான் வருது. அதைப் புரிஞ்சுக் கங்க... உங்களால முடிஞ்ச வேலையை நீங்களே செய்துக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் குழந்தையை எங்களால பார்த்துக்க முடியும். அவங்க நம்ம எல்லாரோடும் இருப்பது ஒரு பலம். இப்பகூட நாங்க ஊருக்குப் போகும் போது உங்க ரெண்டு பேரையும் அழைச்சுட்டுப் போகலாம்னுதான் இருந்தோம். அவங்க, உங்களை விட்டு வர மாட்டாங்கன்னு தெரியும். அதான் கேட்கலை.’’

``நான் தப்பு பண்றேனு நினைக்கிறியா?’’

``அப்படி சொல்லல மாமா.’’

``வேற எப்படி சொல்ற... எனக்கும் அவளோட உணர்வுகள் புரியும். அவளுக்கு வயசாயிட்டு வர்றதும் தெரியும். சில விஷயங்கள என்னால செய்ய முடியாம அதை அவளிடம் வெளிப்படுத்தறது உண்மைதான். அதுக்கு முக்கியமான காரணம், அவள் கொஞ்சமாவது வருங்காலத்துல ஓய்வெடுக் கணும் என்கிற தொடக்கம். இனி வாழப்போற வாழ்க் கையை அமைதியா கழிக் கணும் என்கிற விருப்பம்.’’

``அதை நீங்க அவங்களுக்கு புரியவைக்கலாமே...’’

``புரிஞ்சுப்பான்னு எனக்குத் தெரியலை. எந்த நேரமும் சமையல், சாமி, சொந்தம், பந்தம்...’’ அவர் பேசிக்கொண்டே இருக்கும்போது... படுக்கையில் இருந்த எனக்கு... நாம்தான் தவறு செய்கிறோமோ என்று யோசிக்க ஆரம்பித் தேன். அருகில் இருந்த போனை எடுத்தேன்.

வாட்ஸ்அப்பில் ‘அன்பும் ஆதரவும் மிகச் சிறந்த பரிசு; அதைக் கொடுப்பதும் பெறுவதும் சந்தோஷம் தரும்’ என்ற தோழியின் ஸ்டேட் டஸ் மின்னல் போல தாக்கியது. சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தேன்.

வாட்ஸ்அப்பில் அத்தை எண்ணுக்கு, ‘அத்தை... உங்களைப் பார்க்க நானும் அவரும் பெங்களூரு வர்றோம் ’ - தகவல் அனுப்பினேன்.