சினிமா
Published:Updated:

நடுநிசி நதி - சிறுகதை

நடுநிசி நதி
பிரீமியம் ஸ்டோரி
News
நடுநிசி நதி

இவ்வளவு ஆங்காரமான அழகை உருவாக்குவதற்கு ஒருவன் எத்தனை பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கும்

அன்புள்ள ஜோவுக்கு... சொல்வதைக் கேள். நானொரு குதிரையில் வந்துகொண்டுதானிருக்கிறேன். நீ மிகத்தொலைவில் இருக்கிறாய். உன்னை வந்து சேரும் பாதையை நீ உருவாக்கிவைக்கவில்லை. உனக்கு நினைவிருக்கிறதா? நீ ஒருமுறை சொன்னாய் உச்சி சூரியன்தான் உன்னைக் குளிர்விக்கிறதென்று. அந்தச் சூரியனைப் பின் தொடர்ந்துதான் வந்துகொண்டிருக்கிறோம். என் குதிரையின் குளம்பில் ஒரு உதிர்ந்த வேப்பிலை சிக்கும்போதெல்லாம் அது துவண்டுபோகிறது.

காய்ந்த இலைகளற்ற ஒற்றை வேப்பமரம்தான் உன் வீட்டின் அடையாளம் என்பதை நீ சொல்லியிருக்க வேண்டாம். நாங்கள் ரொம்பவே தடுமாறுகிறோம். எங்களுக்கு முன்னே யாரோ இலைகளற்ற வேப்ப மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டு போகிறார்கள்போல. வழியெங்கும் சிதறிய வேப்பங்குச்சிகளை நாங்கள் பொறுக்கிக்கொண்டுதான் வருகிறோம். பிரச்னை அது வல்ல, வெட்டிக்கொண்டு போகிறவர்களுக்கு ஓநாயின் முகச்சாயல் இருக்கலாம் எனச் சொல்லி அச்சப்படும் என் குதிரைக்கு வேறுவழியில்லாமல் என் விரல்களைத்தான் தின்னக் கொடுக்கிறேன். என் விரலின் ருசியை நம்பி குதிரை முன்னேறி வருகிறது. ஆனால் பார், குளிர்ச்சியான அடர் இலைகளைக்கொண்ட வேப்ப மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் குதிரை பசியெடுத்துக் கனைக்கிறது. மறுபடியும் சொல்கிறேன்... வேறு வழியில்லை, என் கை, கால் விரல்கள் தீர்ந்துபோனால் என்னையும் நான் தின்னக்கொடுப்பேன். நீ நினைப்பது புரிகிறது, எனக்கும் தெரியும், உன்னை வந்து சேர்வதற்குள் என் குதிரை என்னை முழுவதும் தின்று தீர்த்துவிடுமென்று… ஆனால் நீ கலங்காதே. நான் நிச்சயம் உன்னிடம் வருவேன். எப்படி வந்தாலென்ன, எப்படியும் உன்னை வந்து சேர்வேன். இப்போது சொல்வதை கவனமாகக் கேள்... காய்ந்த இலைகளற்ற வேப்பமரத்தைப் பார்க்கும்போதெல்லாம் அடிவயிற்றிலிருந்து கதறும் குதிரை வேறு யாருமில்லை, அது நான்தான்.”

நடுநிசி நதி - சிறுகதை

இப்படித்தான் ஜோவை நினைக்கும்போதெல்லாம் அவன் என்னவோ ஆகிவிடுறான். என்ன என்னமோ எழுதி கசக்கி அதை அவன் அறைக்குள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கும் பல்லிகளை நோக்கி பலம்கொண்டு எறிகிறான். நடு இரவு மணி ஒன்றாகிறது. கண்ணில் தூக்கம் வருவதற்கு வழியேயில்லை அவனுக்கு. ஜன்னலைத் திறந்து பார்த்தால் தெரிகிற தெருநாய்களுடன் சேர்ந்து திருநெல்வேலி முழுவதும் ஓடி ஓடிச் சுற்ற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஜோ இரண்டாவது திருமணம் செய்துகொண்டாள் என்பதை ஐயப்பன் வந்து சொன்னதிலிருந்து அவனுக்குப் பிடித்த பித்து இது. ஒரு வாரமாக இப்படித்தான், இரவெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் தன் நகத்தைத் தானே வெட்டியெடுத்து அதை சிகரெட் துகளுக்குள் செருகிப் பற்றவைத்து, பிணவாடை பிடித்துக்கொண்டு திரிகிறான். ஜோ ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாள், முதல் திருமணம் என்ன ஆயிற்று, ஏன் இந்த மனிதர்கள் தேவதைகளை இவ்வளவு அலட்சியமாக அலைக்கழிக்கிறார்கள்? எல்லாவற்றையும் நினைக்க நினைக்க அவனுக்கு உடனே அந்த நொடியே ஜோவைப் போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. அவள் தொலைவில் இருக்கிறாள். தொலைவில் என்றால் தூரத்தெரியும் நட்சத்திரம் போலல்ல, தூரக் கேட்கும் ஆந்தையின் அலறலைப்போல... ஆமாம், அது தூரக் கேட்கும்; பக்கத்தில் தட தடவெனப் பறக்கும். கிணற்றின் பொந்துக்குள் நுழைவதுபோல உள்ளே நுழைந்து நெஞ்சைக் கிழித்து அலறும் நினைவு அது.

கதவைத் திறந்தான். தெருவைப் பனி முழுவதுமாய் மூடிக்கொண்டிருந்தது. இந்த இரவும் அறைக்குள்ளே முடங்கிக்கிடந்தால் அவன் என்ன ஆவான் என்கிற பயமும் குழப்பமும் மேலோங்க, தெருவில் இறங்கி நடந்தான். நிஜமாகவே டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலிக்கென்று ஒரு தனி அழகு வந்துவிடுகிறது. குளிர் ஒரு நகரத்தை இவ்வளவு அழகாக்குமா…கொக்கிரகுளத்திலிருந்து திரும்பி ஆற்றுப்பாலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் எங்கிருந்தோ ஒற்றைத் தவில் மேளத்தின் ஒலி விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு தெருவில் யாரோ ஒரு சுடலைமாடன் வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கான்போல... வேட்டைக்குச் செல்லும் சுடலைமாடனைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால் சுடலைமாடன் வேட்டைக்குக் கிளம்பும் போதெல்லாம் நடுச்சாமத்தில் செக்கச் செவேலென்று நாக்குத் துருத்த அலங்கரிக்கப்பட்டு வந்து நிற்கும் காட்டுப்பேச்சியின் சிலையில் அவன் மயங்கிக்கிடப்பான். கனன்று எரியும் காட்டுப்பேச்சியின் பார்வை ஒரு அடிகூட நகர விடாது அவனை.

எந்த மாதிரியான பெண்ணை நினைத்துக்கொண்டு இவர்கள் காட்டுப்பேச்சி சிலையைச் செய்கிறார்கள். இவ்வளவு ஆங்காரமான அழகை உருவாக்குவதற்கு ஒருவன் எத்தனை பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கும். ஆயிரம் பெண். பத்தாயிரம் பெண். இல்லை லட்சம் பெண், இல்லை இல்லவே இல்லை... ஜோ மாதிரி ஒரு பெண்ணை நினைத்தாலே போதும், கோடி காட்டுப்பேச்சி சிலைகளைச் செய்துவிடலாம். திடீரென்று ஜோவை ஒரு ஆங்கார அழகியாக நினைத்துப் பார்த்தது அவனுக்கே பெரும் சிலிர்ப்பாய் இருந்தது. அவன் ஜோவைக் காட்டுப்பேச்சியாக நினைக்கிறானா, இல்லை, சின்ன வயதிலிருந்து பார்த்துப் பார்த்து ஏங்கிய காட்டுப் பேச்சியைத்தான் ஜோவிடம் கண்டடைந்தானா தெரியவில்லை.

ஆறு தென்படும் தொலைவில் ஓடிக்கொண்டிருந்தது. நடு இரவில் ஆறு பார்த்து எவ்வளவு நாளாகிறது. ஆற்றுக்குள்ளிருந்து மேலெழுந்து வரும் பனி அவனை ஆற்றுக்கு அழைப்பது போலிருந்தது. வண்ணதாசனின் எழுத்தில் மிதக்கும் தாமிரபரணியின் அழகு அவனுடைய தாமிரபரணிக்கு இன்றைக்குத்தான் வாய்க்கிறது. எல்லாப் பழிகளையும் இழிகளையும் மறந்துவிட்ட ஒரு அமைதி அதனிடமிருந்தது. முழுக்க முழுக்க பனியும் இரவும் சேர்ந்து கல்மண்டபத்தை மூடியிருந்தது இன்னும் நிம்மதியாயிருந்தது. மனித நடமாட்டம் இல்லாத போதுதான் ஆற்றின் வாடையை முகரமுடிகிறது. ஆற்றின் வாடையை முகர்ந்தபடியே போய் கல்மண்டபத்தில் அமர்ந்தான்.

ஜோ ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாள். ஏன் இந்த மனிதர்கள் தேவதைகளை இவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறார்கள். ஜோ நூறு திருமணம் செய்தாலும் அவள் தேவதை என்பதை எவனாலும் கண்டுபிடிக்கவே முடியாது. சர்ப்பத்தின் பரிந்துரைப்படி பெண்களை நேசிப்பவர்களால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும் அவள் ஒரு தேவதையென்று… கையோடு கொண்டு வந்திருந்த தன் நகத்துண்டுகள் அடங்கிய சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அவனுடைய வாடையைப் புகை வழியாக அந்த மண்டபம் முழுக்கப் பரப்பினான். இழுக்க இழுக்க உள்ளே போய் வெளியே வரும் அவனுடைய நகத்தின் வாடை அவனையே அவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சுட்டுப் பிய்த்துத் தின்பதைப்போல இருந்தது. அந்த நேரத்தை அவன் அவனுக்குள்ளாகவே கொண்டாடிக்கொண்டிருந்தான்.

சிகரெட் தீர்ந்துபோனதும் அவன் உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாகி அவன் உள்ளங்கையில் எடையற்று இருப்பதாக உணர்வு அவனுக்கு. அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஆற்றில் கரைத்துவிட வேண்டும் என்று எண்ணி ஆற்றை நோக்கி நடந்து போனான். ஆற்றைப் பார்த்தான். இந்த ஆறு முழுக்க ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதுபோல அவனுக்கு அடிக்கடி கனவு வந்திருக்கிறது. அந்தக் கனவு வரும்போதெல்லாம் அவன் பெருங்குரலெடுத்து அலறுவான். அந்த நேரத்தில் அம்மா அவன்மீது ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஊற்றுவாள். அவன் கண்விழிக்காமலே மெதுவாக மூச்சு வாங்கி இளைப்பாறுவான். ஆனால் இன்று டிசம்பர் மாதப் பனி உருகி தாய்ப்பால்போல ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்ததும் வயிறு நிறைய அள்ளிப் பருக வேண்டும் போலிருந்தது. மெதுவாக ஆற்றின் பக்கம் போய் குனிந்து ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல இரண்டு கைகளிலும் நீரை அள்ளி எடுத்துப் பருகத் தொடங்கினான். பசியா இல்லை ருசியா என்று தெரியவில்லை. அவன் பருகிக்கொண்டேயிருந்தான். நதியால் தன் வயிற்றை அவன் நிரப்பிக்கொண்டிருக்கும்போது நதிக்குள்ளிருந்து கேட்டது அந்தப் பாடல். அது ஒரு பெண்ணின் குரலில் மெலிதாகக் கேட்டது அவனுக்கு.

‘ஊரடங்கும் சாமத்திலே நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சி சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினைப்பு
பாவி மகன் உன் நினைப்பு...’


கேட்ட அந்த நொடி அதிர்ந்தே போய்விட்டான் அவன். மனித வாடையில்லாத இந்த நடு ராத்திரியில் அதுவும் நடு ஆற்றுக்குள் ஒரு பெண்ணின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டால் யார்தான் அதிர்ந்துபோகமாட்டார்கள். கொஞ்ச நேரம் அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தான். நாம் கேட்டது நிஜமா இல்லை பிரமையா… நிச்சயமாக பிரமையில்லை, அது தெள்ளத் தெளிவாகக் கேட்டது. பாடல் கேட்டுச் சிலிர்த்த தன் உடலை அதன் திசைப்பக்கம் திருப்பினான். நடு ஆற்றுக்குள் இருக்கும் பெரிய பாறையின் அந்தப் பக்கத்தி லிருந்துதான் பாடல் கேட்டது. யோசிக்கவில்லை, விருட்டென்று முள் புதர்களின் வழியாக நுழைந்து பாறையின் அந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்காக ஓடினான். பாடல் கேட்டுக்கொண்டேயிருந்தது.

நன்கறியாகி வார் முறுக்கேறிய ஒரு பன்றியைப் போல முட்புதருக்குள் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தான். முட்கள் உடலை ஆங்காங்கே குத்திக் கிழிப்பதை அவன் உணரவேயில்லை.

‘கழனி சேத்துக்குள்ள களையெடுத்து நிக்கயில
உன் சொத்தப்பல்லப் போல
ஒரு சோளிய நான் கண்டெடுத்தேன்.’

நடுநிசி நதி - சிறுகதை

இந்த வரிகள் பனிக்குள் பரவும்போது அவன் பாறைக்கு முன்பக்கமுள்ள புதர்களைப் போய் அடைந்தான். மூச்சு வாங்க முள் மூட்டின் பின்னாடியிருந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்தே முட்கொப்புகளின் வழியாகப் பாடல் வந்துகொண்டிருக்கும் அந்தப் பாறையைப் பார்த்தான். பாதி முடி முகத்திலும் மீதி முடி முதுகிலும் கிடந்தது அவளுக்கு. தலை மட்டும் வெளியே தெரிந்தது. உடலை நீருக்குள் வைத்திருந்தாள். அவள் பாடிக்கொண்டே இருந்தாள். அவளின் அரை முகம்தான் இவனுக்குத் தெரிந்தது. அந்த அரை முகத்தைப் பார்த்ததிலே அவன் உறைந்துபோய்க் கிடந்தான்.

அவள் மூக்கில் பட்டுத் தெறிக்கும் நீரை மினுக்கிக் காட்டும் நிலவின் வெளிச்சம் அவனுக்குக் கொஞ்சம் அச்சத்தைக் கூட்டுவதாக இருந்தது. யாராய் இருப்பாள் இவள்? தலை மட்டும்தான் இருக்கிறதா, நீருக்குள் உடல் இருக்கிறதா இல்லையா... அரை முகத்தை மயிர்கொண்டு மூடியிருக்கிறாள். இவள் முனியாக இருப்பாளோ? இல்லை, அர்த்த ராத்திரியில் நீரையும் நிலவின் வெளிச்சத்தையும் சேர்ந்து குடித்துக்கொண்டிருக்கிறாள். ஒருவேளை ஒட்டச்சியாக இருப்பாளோ..? இல்லை, ஒட்டச்சியின் உடம்பில் ஆயிரம் தட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் இருக்குமென அம்மா சொல்லியிருக்கிறாள். வேறு யாரு இவள்? அப்படியே முள் மூட்டோடு மூட்டாக நடுங்கிப் போய் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பாடுவதை நிறுத்தவில்லை.

‘ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும் உன்னையே சேருவன்னு
துண்டு போட்டுத் தாண்டினியே -
அந்த வார்த்தையிலே நானிருக்கேன்
வாக்கப்படக் காத்திருக்கேன்’.


இந்த வரிகளைப் பாடும்போது முகம் மூடிய தன் முடியை ஒதுக்கி அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபோதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். நிச்சயம் அவள் மனுஷிதான். கண்ணீர் வருகிறது அவளுக்கு. பாடும்போது கண்ணீர் வருகிறவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? சந்தேகமே வேண்டாம் அவள் மனுஷியேதான்.

பாடிக்கொண்டிருந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, பாட்டை நிறுத்திவிட்டு நீர் வரத்தை நோக்கி எதிர் நீச்சல் அடிக்க ஆரம்பித்தாள். அது ஆறே நடுங்கிக் குலுங்கும் அளவிற்கு இருந்தது. கால்களையும் கைகளையும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவள் உடல் பட்டுத் தெறித்த நீர் நிலமும் நனைத்தது. அவனையும் நனைத்தது. உள்ளங்கை வரை வந்து சேர்ந்துவிட்ட அவள் குளித்த நீரைப் பார்க்கும்போதுதான் அவனுக்குத் தெரிந்தது, அவள் உடைகள் எதுவும் அணியவில்லை என்று. தன்னிடமிருக்கும் எதையும் ஒளித்துவைக்காத மனுஷியாக நீருக்குள் விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த இரவு, அந்த நிலம், அந்த நீர், அந்த நிலா, அப்புறம் அவள் என ஐந்தும் சேர்ந்து அவனை அப்போதுதான் அங்குதான் அந்த நொடிதான் பிறந்தவன்போல அவ்வளவு இலகுவாக்கியிருந்தது. முள் கொப்புகளின் இலைமீதேறி முள்ளின் நுனி நோக்கி ஊர்ந்துசெல்லும் ஒரு கட்டெறும்பைப் போல அவன் மாறியிருந்தது அவனுக்கே தெரிந்தது.

மனதிற்குள்ளே பேசிக்கொண்டான். யார் இவள்? சற்று முன்பு தான் நிலத்திற்குள்ளிருந்து வெட்டி எடுத்து வந்து உரித்து மஞ்சள் தடவி சொளவில் வைத்த ஒரு பனங்கிழங்கைப் போலிருக்கும் இவள் எதற்கு இப்படி அர்த்த ராத்திரியில் வந்து நீந்துகிறாள்? நீரில் மிதக்கும் அவள் உடல் அவனை ஒரு பட்டாம்பூச்சியாக்கி ஆற்றின் மேற்பரப்பில் அவளின் உச்சந்தலைக்கு மேலே பறக்கவிட்டிருந்தது. ஆற்றில் அங்குமிங்கும் வலு நீச்சல் அடித்துக்கொண்டேயிருந்தவள் அப்படியே மல்லாந்து படுத்தபடி மேலே வானம் பார்த்து வாயிலிருந்து ஒரு பிடி நீரை நிலாவை நோக்கிக் கொப்பளித்து அடுத்த நொடி அப்படியே புரண்டு தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கி நீருக்குள்ளாகவே சென்று அக்கரையில் போய் கரையேறினாள். அவன் கண்களை மூடிகொண்டான். பனிக்குள் ஊறிக்கொண்டிருக்கும் நிலவின் ஒளி பட்டுத் தெறிக்கும் அவள் முழு உடல் ஒரு முள்ளைப் போல அவனைக் குத்திக்கிழிக்க, அவன் கண்களை மூடிக்கொண்டான். அவனால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. முதலில் அவள் போகட்டும் என்று கண்களை இறுக்க மூடியபடியே இருந்தான்.

துவைத்து வைத்த துணிகளை அள்ளித் தோளில் போட்டுக்கொண்டவள் அப்படியே எப்படிக் கரையேறினாளோ அப்படியே நீர் சொட்ட சொட்ட மறைத்து வைக்காத தன் உடலைத் தூக்கிக்கொண்டு ஒரு காட்டுப்பூனையைப் போல முட்புதர் தடத்தில் நுழைந்தவள் ஆற்றங்கரை முனியசாமி கோயிலைத் தாண்டி அந்த மணல் மேடு ஏறி, கைலாசபுரத்தின் ஒரு தெருவுக்குள் நுழைந்து மறைந்தாள்.

அவன் அங்கேயே இருந்தான். அந்தப் புதருக்குள்ளேயே இருந்தான். யார் இவள்? நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. பட்டென்று குனிந்து கொஞ்சோண்டு கால் பெருவிரல் நகத்தைக் கடித்து எடுத்து அவசர அவசரமாக சிகரெட் ஓட்டைக்குள் புகுத்திப் பற்றவைத்துப் புகைக்க ஆரம்பித்தான். வலுக்கட்டாயமாக  ஜோவை நினைத்துப் பார்த்தான். நிச்சயமாய் அவள் தன் இரண்டாவது கணவனோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். காட்டுப்பேச்சியை, ஒட்டச்சியை, முனியை எல்லாரையும் நினைத்துப் பார்த்தான். எல்லாருமே இந்நேரம் சாமக்கொடையில் சந்தனத்தைப் பூசிக்கொண்டிருப்பார்கள். யார் இவள்? ஏன் எனக்குத் தென்பட்டாள். தினமும் வரக்கூடியவளா, இல்லை, நான் வருவேன் என்று வந்தவளா… எப்பா எவ்வளவு அழகு, எவ்வளவு நேர்த்தி... யார் இவள்? ஏன் இந்த தேவதைகள் இப்படி அழுக்குத் துணி மூட்டையைப் போல ரகசியங்களைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள். அங்கிருந்து அவனால் ஒரு அடிகூட நகரமுடியவில்லை. முட்கொப்புகளில் தானாகவே தன் உடலையும் மனதையும் சிக்கக் கொடுத்து மூட்டுக்கு அடியிலே வீழ்த்தப்பட்ட ஒரு ஓணானைப்போல விடியும் வரை சுருண்டு கிடந்தான். எப்படி விடிந்ததோ, எப்படி எழுந்தானோ, தெரியவில்லை. எழுந்ததும் பொடி நடையாகச் சென்று கைலாசபுரத்தில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் கணேசனின் முன்பு நின்றான்.

“சரியா எந்த இடத்துல பார்த்த?”

“கல்மண்டபத்துக்குக் கொஞ்ச தள்ளி உள்ள பாறாங்கல்லுக்கு அந்தப் பக்கம்.”

“எவ்வளவு வயசிருக்கும்?”

“முப்பத்தியெட்டு, முப்பத்தொன்பது இருக்கும்.”

“ஆள் எப்படி இருந்தா?”

“உரிச்ச பனங்கெழங்கு மாதிரி.’’

“அதக் கேட்கல. கறுப்பா செவப்பா?”

“நிலா வெளிச்சத்துல சரியா அதச் சொல்லத் தெரியல. ஆத்துக்குள்ள மினுங்குற கலரு.”

“அப்படின்னா அவளாத்தான் இருக்கும்.”

“எவளா இருக்கும்?”

“அவதான் கைலாசபுரம் கஸ்தூரி. தொழிலுக்குப் போய்ட்டு வந்து குளிச்சிருப்பா.”

“தொழிலுக்குப் போயிட்டா... பார்த்தா அப்படித் தெரியலையே.”

“பார்த்தா எப்படித் தெரியும். போ, போய்த் தெருவுக்குள்ள விசாரி, தெரியும்.”

தெருவுக்குள் வந்தான். முனையில் இருந்த மளிகைக் கடையில் போய்ப் பேச்சுக்கொடுத்தான்.

“அண்ணே, இங்க கஸ்தூரின்னு யாரும் இருக்காங்களா?”

“அவளை ஏன் நீ விசாரிக்க?”

“சும்மாதான். அவங்க கடன் வாங்கிருந்தாங்க, அதான் கேட்கலாம்னு.”

“அவளுக்கா கடன் கொடுத்த, சரிதான் போ… போய்த் திருப்பிக் கேளு, வட்டியும் முதலுமா எய்ட்ஸ தருவா, வாங்கிட்டுப் போ.”

“எய்ட்ஸா, அவங்களுக்கா?”

“அட ஆமாப்பா… அது ரொம்ப நாளாச்சு. எங்க போச்சோ... இப்போல்லாம் ஊருக்குள்ள வர்றதில்ல.வந்தாலும் யாரும் உள்ள விடுறதில்ல... போ, ஜங்சன் பக்கம் போ, அங்கதான் திரியும்னு நினைக்கேன்.”

கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் சொல்லிவிட்டு அவர் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவன் அதை உள்வாங்கிக்கொள்ளவில்லை. அவன் அவளை நிலவின் ஒளியில் நீரில் மிதக்கப் பார்த்திருக்கிறான். கை  விரல்களால் அவள் நீரைக் கிழித்துப் பறந்ததைப் பார்த்திருக்கிறான். டீக்கடைக்குப் போனான். அங்கு நிற்பவர்களின் முகத்தைப் பார்த்தான். எல்லாருமே சர்ப்பத்தின் பரிந்துரைப்படி பெண்களை நேசிப்பவர்களாகத் தெரிய, யாரிடமும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் ஒரு டீ கேட்டான்.

அந்த நேரத்தில் அவனிடம் ஒரு கிழவி டீ வாங்கித் தருமாறு கேட்டாள். வாங்கிக்கொடுத்தான். டீ கிளாஸோடு தனித்த நிழல் தேடிப் போய் அமர்ந்தவளைப் பின்தொடர்ந்து போனான். கிழவிக்கு நேர்த்தியாக டீ குடிக்கத் தெரிந்திருக்கிறது. அவ்வளவு தோரணையோடு கிழவி டீ குடிக்கத் தொடங்கினாள். தயங்கித்தான் கேட்டான்.

“ஆச்சி, இங்க கைலாசபுரத்துல கஸ்தூரின்னு யாரையாவது உனக்குத் தெரியுமா?”

ஆச்சி ஒரு நிமிஷம் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கைகளைப் பிடித்துக் கீழே இருத்தினாள். அவன் காதுக்குள் போய்க் கேட்டாள்.

“எங்க பார்த்த நீ?”

“எங்கேயும் பார்க்கல. இனிமதான் பார்க்கணும், அதான்.”

“இனிமதான் பார்க்கணுமா, எப்படிப் பார்ப்ப, அவதான் எங்க இருக்கான்னு தெரியலையே.”

“இங்கதான் ஜங்சன் பக்கம் திரிவான்னு சொன்னாங்க.”

“எந்த லூசுப்பய அப்படிச் சொன்னான். திருநெல்வேலி முழுக்க சல்லடை போட்டுட்டேன், பொட்டு கண்ல தெரியல... ஒருத்தன் அங்க பார்த்தேங்கா... ஒருத்தன் இங்க பார்த்தேங்கா... ஒருத்தன் எய்ட்ஸ்னு சொல்றான். சில பைத்தியக்கார செருக்கிய கஸ்தூரிய செத்துட்டான்னும் சொல்றாவ... காணாப் பொணமாப் போறவளா அவ... ராசாத்தி... கண்ணு முன்னாடி ஒரு உசுர பட்டினி கெடக்க வுடுவாளா? எறும்புக்கும் தன்ன தின்னக்கொடுப்பா... யானைக்கும் தன்ன தின்னக்கொடுப்பா… அழகுதான். அதுதான் அவளுக்கு விஷம். ஒட்டுமொத்த விஷத்தையும்லா உடம்புல ஏத்திக்கிட்டு திரிஞ்சா… என்ன மாதிரி புள்ள... ச்சய்ய்ய்... ஓநாய்ங்க ஈனிப்போட்ட மான் குட்டிப்பா அவ... பூனையே தாங்குட்டிய திங்கும்போது ஓநாய்ங்க வம்பாங்கொலயா வந்து சேர்ந்த மான்குட்டிய சும்மா வுட்றுமா என்ன? தின்னுதீர்த்துட்டானுவ... வாவரசி எலும்பும் தோலுமா எந்த ஊர்ல எப்படித் திரியிறாளோ...ஆனா, ஒண்ணு! நிச்சயமா உசுர உட்டிருக்கமாட்டா. பூச்சியானாலும் பூரானானாலும் எப்படியாவது எங்கயாவது ஊரிக்கிட்டுதான் இருப்பா…”

கிழவி பேசிப் பேசிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருக்க, அவன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான். எங்கே போவதென்று தெரியவில்லை. நேராக ஆற்றுக் கல்மண்டபத்தை நோக்கி நடந்தான். ஏன் இந்த தேவதைகள் வாழ்வின் கடைசியில் பூச்சியும் பூரானும் ஆகிவிடுகிறார்கள்? வெயில் ஏற ஏற அவன் நடை தளர்ந்துபோனது. ஆனாலும் அவன் கல்மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டேயிருந்தான். எய்ட்ஸ் வந்தவளைப் போலவா இருந்தாள். முட்டாப்பய மூஞ்சப் பாரு… செத்துப்போனவளா அப்படி நிலம் நனைய நீச்சலடித்து மிதந்தாள். எதையும் தெரியாமல், தெரிந்துகொள்ளாமல் இந்த மனிதர்கள் ஏன் இன்னும் தேவதைகளைச் சிலுவையில் அறைகிறார்கள். கல்மண்டபம் வந்தான். மிச்சமிருக்கும் கால் நகங்களை எல்லாம் கடித்து எடுத்து சிகரெட்டுக்குள் செருகிப் புகைக்க ஆரம்பித்தான்.

பசியில்லை, உறக்கமில்லை. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, வீடு, தெரு, மயிரு, மாங்கொட்டை, ஏன், ஜோ வரைக்கும்கூட எதுவும் அவன் நினைவில் இல்லை. கஸ்தூரிதான் அவன் கண்களிலும் அந்தக் கல் மண்டபத்திலும் நிறைந்திருந்தாள். கடந்த மொத்த இரவுக்கும் கஸ்தூரி என்று பெயர் வைத்துப் பார்த்தான். பொருத்தமாகத்தான் இருந்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு இரவைத் தோண்டி எடுத்துக்கொண்டிருந்தான். இரவு வரும் வரை அவன் இரவையே தோண்டிக்கொண்டிருந்தான். ஆற்றில் மிதந்து வரும் ஒரு செத்த நாயைப்போல இரவு மெதுவாக மிதந்து வந்து அவனிடம் சேர்ந்தது.

நடுநிசி நதி - சிறுகதை

இன்றைக்கு அவள் வருவாளா? யாருக்கும் தெரியாமல் யாரும் இல்லாதபோது எங்கிருந்து அவள் யாருமற்று வருகிறாள்? அவள் போன பாதையைப் பார்த்தான். அந்தப் பாதை வழியாக இன்னும் நிறைய மனிதர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பாதையில்தானே போனாள். இந்தப் பாதை எங்கு போய் அவளைச் சேர்த்திருக்கும். பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். மனிதர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். யாரும் அங்கிருந்து வரவில்லை. எல்லாரும் போக வேண்டும். உடனே போகவேண்டும் அப்போதுதான் அவள் வருவாள். அவள் எங்கிருந்து வருகிறாள் என்று பார்க்க வேண்டும். பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைத் தவிர அத்தனை மனிதர்களும் கூடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். தூரமாகச் செல்லும் வாகனச் சத்தங்கள்கூடக் குறைந்துவிட்டது. கடைசிச் சுண்டு விரல் நகத்தையும் பிய்த்து சிகரெட்டுக்குள் வைத்துப் புகைக்க ஆரம்பித்தான். புகையும் பனியும் கலந்து அந்த நிலத்தை, அந்த நதியை, அந்த இரவை, அந்த நேரத்தை, அவன் நினைத்ததைப் போலவே மாற்றியிருந்தது. யாரும் அங்கு இல்லை. அவன் மட்டுமே அங்கு இருக்கிறான். இப்போது கஸ்தூரி வந்தால் சரியாக இருக்கும். பித்துப்பிடித்தவனைப் போல பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் கண்முன்னே ஆற்றில் நேரம் மிதந்து போய்க்கொண்டிருந்தது. எழுந்து நாலா திசையும் பார்த்தான். மனித நடமாட்டமில்லை. முட்புதருக்குள் புகுந்துபோய் ஆற்றுக்கு நடுவே இருக்கும் பாறையை நோட்டமிட்டான். சுற்றியுள்ள எல்லாப் பாறைக்கும் பார்வையைச் செலுத்தினான். கஸ்தூரி வந்த மாதிரி தெரியவில்லை. நேற்றுப்போல இன்றைக்கும் ஒரு ஒற்றைத் தவில் எங்கோ தூரத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. கையையும் காலையும் பார்த்தான். எல்லா நகங்களையுமே கடித்துச் சுட்டு ஊதியிருந்தான். சிகரெட்டும் முடிந்திருந்தது. தலையும் வயிறும் ஒரு சேர வலிக்க ஆரம்பித்திருந்தது. சரியாகச் சொன்னால் கஸ்தூரியை நினைக்க நினைக்க மயக்கம் வருவது போலிருந்தது அவனுக்கு.

ஓடிப்போய் ஆற்று நீரை அள்ளி மடமடவெனக் குடிக்க ஆரம்பித்தான். அவசரமாக அள்ளிய நீர் வாயையும் வயிற்றையும் நனைத்து மறுபடியும் ஆற்றுக்குள் வழிந்துகொண்டிருந்தது. அப்போது கேட்டது கஸ்தூரியின் பாடல்.

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்.’


பதறியடித்து பாடல் வந்த திசையை நோக்கினான். அது பாறையின் மேற்குத் திசையிலிருந்து வந்தது. முட்புதருக்குள் செருகிக்கொண்டு ஓட்டம் பிடித்து அங்கு போய் நின்றான். பாடல் இப்போது பாறையின் வடபக்கம் ஆற்றுப்பாலத்தின் கீழே கேட்க, அதிர்ச்சியடைந்தவன் முட்புதருக்குள் விழுந்து எழுந்து பாலத்தை நோக்கி ஓடிப்போய்த் தேடினான். பாடல் இப்போது பாறையின் கீழ்ப்பக்கம் முட்புதருக்குப் பக்கத்தில் கேட்டது. யோசிக்கவேயில்லை அவன். பிடரியில் வெட்டு வாங்கிய பன்றியைப்போல தலைதெறிக்க முட்புதருக்குள் பாய்ந்தான். ஒவ்வொரு முள் மூட்டுக்குள்ளும் நுழைந்து தேடினான். ஐயோ பாவம், பாடல் இப்போது நடு ஆற்றுக்குள் கேட்க, முள் மூட்டுக்குள்ளிருந்து முண்டியடித்து வெளியே வந்து நின்று மூச்சிரைக்க ஆற்றைப் பார்த்தான். நடு ஆற்றில் மிதந்துகொண்டிருக்கும் உச்சி நிலவிற்கு உள்ளிருந்து வந்துகொண்டிருந்தது பாடல். கஸ்தூரியின் பாடல்.

‘கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
சின்னக் கண்ணன் அழைக்கிறான். ராதையை பூங்கோதையை’


யார் பாடுவது? நதியா, இல்லை நிலவா? இல்லை இரவா, இல்லை அவளா? மண்டை வெடித்துச் சிதறுவதற்குள் தொப்பென்று ஆற்றுக்குள் குதித்தான். நீந்தி நிலவுக்குள் நுழைந்து ஆற்றின் ஆழத்திற்குப் போனான். போய்க்கொண்டேயிருந்தான். போகிற வழியெல்லாம் கூழாங்கற்களின் வெளிச்சம். அந்த வெளிச்சத்திற்குள் ஊடுருவி பாடல் வந்த திசையை நோக்கி அவன் நீந்திப் போய்க்கொண்டேயிருந்தவன் கண்களை கஷ்டப்பட்டுத் திறந்து பார்த்தான்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், மீன் குஞ்சுகளால் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அவள். வேறு யார், கஸ்தூரிதான். நேற்றைப்போலவே தன் உடலில் அவள் எதையும் மறைத்து வைக்கவில்லை. அந்த முடியைக்கூட  முன்னாடியும் இல்லாமல் பின்னாடியும் இல்லாமல் நடு நதியில் மிதக்கும் கூழாங்கற்களுக்கு ஊடாகப் பந்தலிட்டுப் பரப்பியிருந்தாள். தன்னை நோக்கி நீந்தி வரும் அவனைப் பார்த்ததும் அவள் பாடலை நிறுத்தவில்லை. மாறாக, கண்கள் கலங்க சின்னச் சிரிப்போடு பாடிக்கொண்டே இரண்டு கைகளையும் விரித்து மார்பை நோக்கி அவனை அழைத்தாள். அப்படி அவள் அழைத்ததும் அவன் இன்னும் வேகமாக அவளை நோக்கி நீந்தினான். அவள் அவன் வேகத்திற்கு ஏற்றவாறு உரக்கப் பாடினாள்.

‘நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயம் அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை’


என்ற வரிகளை அவள் பாடி முடிக்கும்போது அவன் அவள் நெஞ்சாங்கூட்டை அடைந்திருந்தான். வேகத்தோடு வந்தடைந்தவனை வாரி எடுத்து மடி கிடத்தி அவன் நெற்றியில் அவள் முத்தமிட்டபோது உள்ளிருக்கும் பாறைகளும் அந்த   மீன்குஞ்சு ஊஞ்சலும் வெடித்துச் சிதற இருவரும் பல லட்சம் மீன்குஞ்சுகளாகி எந்தத் திசை நோக்கி எங்கே போனார்களோ தெரியவில்லை.