Published:Updated:

பூத்ததை யாரது பார்த்தது?! - சிறுகதை

ஆர்.மணிமாலா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.மணிமாலா

- ஆர்.மணிமாலா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிவிட்டு, ஆட்டோ தவிர்த்து கால் போனபோக்கில் நடந்தாள் கீர்த்தனா. அந்தச் சூழல்... அவன் நினைவை எழுப்பியது.

அவன்... `எனக்காக எத்தனை முறை... நான் எதிர்வரும்போதெல்லாம்... இயல்பாய் வருவது போல் எதிரே நடந்து வருவான். ஒருமுறை யேனும் என் கவனம் அவன்மீது பதியாதா எனத் தேய்ந்துபோன செருப்புகூட ஏக்கத் துடன் சப்தம் எழுப்பியதே...'

கீர்த்தனாவின் முகத்தில் உப்புக் காற்றோடு, அவன் நினைவுகளும் மோதியது. அவளுடைய பால்ய காலத்தையெல்லாம் திருவல்லிக்கேணி தான் சுவீகாரம் எடுத்திருந்தது. அப்பாவுக்கு சிம்சனில் வேலை. அண்ணன் விஷ்வா, தங்கை வினோதினி... கீர்த்தனா எல்லோரையும் நன்கு படிக்க வைத்தார். பட்டப்படிப்பு முடித்த கையோடு அப்பா இறக்க, விஷ்வாவுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது.

கீர்த்தனாவின் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்றாற்போல் ஒரு பன்னாட்டு கம்பெனியில் எதிர்பாராத அளவு சம்பளத்துடன் வேலை கிடைத்தது. வினோதினிக்கு உள்ளூர் மாப்பிள்ளை. கீர்த்தனாவுக்கு தூரத்து உறவினர் மகன், வாஷிங்டனில் இன்ஜினீயராகப் பணிபுரிந்துகொண்டிருந்த கல்யாண் என்பவ ரோடு திருமணம் நடந்தது. அப்போது கீர்த் தனாவுக்கு 25 வயது. இரண்டு வருடங்கள் கழித்து, பிறந்த தன்யாவுக்கு இப்போது பத்து வயது.

இதோ... சம்மர் லீவுக்கு தாய்நாடு வந்து ஒரு மாதம் ஆகப்போகிறது.

ஆர்.மணிமாலா
ஆர்.மணிமாலா

அவன்... ‘எனக்காகவே அதே பஸ்ஸில் கல்லூரி வரை பயணித்து, மாலை நான் திரும்பி வரும்போது, அன்று காலை உடுத்திச் சென்ற என் சுடிதாருக்கு மேட்சாக பேன்ட் சட்டை மாட்டிக்கொண்டு, எதிரே கம்பீரமாக நடந்து வருவானே... அவன்... இன்னும் இதே ஏரியாவில்தான் இருக்கிறானா?’

அந்தப் பாதைகளில் இருந்த காலடித் தடங்கள்... மிதிபட்டு அமிழ்ந்து, அழிந்து போயிருந்தாலும் புதைந்து போயிருந்த நினைவுகள் தடம் பதித்திருந்தன.

“கீர்த்தனா... கீர்த்தி... ஏய் கீர்த்தனா...” பின்னால் ஒரு குரல் அவள் பெயர் சொல்லி அழைத்ததைக்கூட அலட்சியப்படுத்தின பழைய நினைவுகள்.

“ஏம்மா... உங்களை அவங்க கூப்பிடுறாங்க பாருங்க...” எதிர்ப்பட்ட பெண்மணி அவளை நிறுத்திக்கூற, அப்போதுதான் திரும்பிப் பார்த்தாள். அவள் வயதொத்த பெண் ணொருத்தி மூச்சிறைக்க ஓடி வந்தாள். நெருங் கியவளின் முகம் மிகப் பரிச்சயமானதுபோல்...

“என்ன கீர்த்தி எவ்வளவு நேரமா கூப்பிட்டுக் கிட்டே ஓடி வர்றேன்? எங்கடி இங்கே? பார்த்து எத்தனை வருஷமாச்சு?!”

“ரா... கினி..!”

“அம்மாடி... இப்பவாவது கண்டுபிடிச்சியே... எப்படி இருக்கே கீர்த்தனா? பார்த்து எத்தனை வருஷமாச்சு... நீ இன்னமும் அப்படியே சின்ன பொண்ணு மாதிரிதான் இருக்கே... ஃபாரின்ல இருக்கேனு கேள்விப்பட்டேன். எப்ப வந்தே... எத்தனை குழந்தைங்க?”

“ஏய்... ரிலாக்ஸ்... இத்தனை கேள்வியும் அடுக்கடுக்கா கேட்டுக்கிட்டு... நீ எப்படி இருக்கே? உன் வீடு பெரம்பூர்லதானே... இங்கே எங்கே? ”

“அது சரி... கல்யாணமாயிட்டா புருஷன் வீட்டுக்கில்ல வரணும்?”

“உனக்கு எப்ப கல்யாணமாச்சு... ஏன்டி இன்விடேஷன்கூட அனுப்பலே...”

ராகினி அவளுடன் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், எட்டாவதிலிருந்து ப்ளஸ் டூ வரை ஒன்றாகப் படித்தவள். நெருங்கிய தோழி. குடும்ப சூழல் ராகினியை ப்ளஸ் டூவோடு நிறுத்திவைக்க... ஜாதகமும் எதுவுமே பொருந் தாமல் போனதில் திருமணமும் தள்ளிக் கொண்டே போனது.

“எங்கே கீர்த்தி... உன் வீட்டு அட்ரஸெல்லாம் என்கிட்ட இல்லையே... அதோட நீ ஃபாரின் போயிட்ட... உன்னை எங்க தேடிப்பிடிக்கறது?”

“சரி... அதெல்லாம் விடு... உன்னை பத்திச் சொல்லு... உனக்கு எத்தனை குழந்தைங்க?”

அந்தக் கேள்விக்கு அசுர கதியில் அவள் முகம் மாறி, கண்கள் கலங்கும் என்று எதிர் பார்க்கவில்லை கீர்த்தனா.

“ஹேய்... என்னாச்சு? யாராச்சும் பார்க்கப் போறாங்க?”

“எதுவுமே ஆகலே கீர்த்தி...”

“புரியல”

“சொந்த மாமாவைத்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. ஆனா, கல்யாணம் ஆகி எட்டு வருஷங்கள் ஆயிடுச்சு... இன்னும் நானும் அவரும்...”

“நீயும்... அவரும்... ” முகம் மாறியது.

“புருஷன், பொண்டாட்டியா சேரவே இல்லை.”

எத்தனை நாள் துக்கமோ... அழுகை கொப்பளித்து வர, முந்தானையால் அடக்கிக் கொண்டாள் ராகினி.

“வ்வாட்...” காலடியில் வெடிகுண்டு வந்து விழுந்த அதிர்ச்சி.

“ஆமாம் கீர்த்தி... மாமான்னா எனக்கு உயிரு. ஆனா, அவரு என்கிட்ட சரியா கூட பேச மாட்டார். என்னன்னா... என்ன? அவ்வளவுதான். சாப்பிடுவார்... வேலைக்குப் போயிடுவார்... வீட்டுக்கு வந்தார்னா டிவி பார்த்துட்டு தூங்கிடுவார். அம்மாவும் மத்தவங்களும் கேள்வி கேட்டு அரிச்சதுல, `எனக்குத்தான் உடம்புல குறை... பேரப் பிள்ளையைப் பார்க்கணும்ங்கற ஆசையை மனசுல அழிச்சிடு'ன்னு சொல்லிட்டேன். மகளுக்குக் குறையிருந்தாலும் தம்பி அதைப் பத்தி பெருசா எடுத்துக்காம நல்லா வெச்சு இருக்கானே... அதுவே போதும்ங்கற நிம்மதி யோட நாலு வருஷத்துக்கு முந்தி அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க!”

பூத்ததை யாரது பார்த்தது?! - சிறுகதை

“அடப்பாவமே... எப்படி இத்தனை வருஷமா இதையெல்லாம் சகிச்சுக்கிட்டிருக்கே? சரிப்பட்டு வராத ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு?” என்றாள் ஆவேசமாய்.

“சீச்சீ... பெரிய வார்த்தை எல்லாம் பேசாதே கீர்த்தி. அவர் மனசுல ஒரு ஆறாத காயம்...”

“பல வருஷமா கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமாய் இருந்தவரை வற்புறுத்திதான் என் கழுத்துல தாலி கட்ட வச்சாங்க. அவர் யாரோ ஒரு பெண்ணை ரொம்ப ஆழமா நேசிச்சிருக்காரு. அந்தப் பொண்ணு இவரை காதலிச்சதா, இல்லையான்னு சொல்லாம போயிடுச்சாம். அவளை மறக்க முடியாம இன்னமும்...”

“அதுக்காக? ஒருத்தியை மனசுல வச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை வீணடிக்கறதா? உன் வீட்டு அட்ரஸ் சொல்லு... சண்டே வர்றேன்.”

“வீட்டுக்கு வா... ஆனால், எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே!”

“என்னோட சைக்காலஜி ட்ரீட்மென்ட்டே வேற... நீ அட்ரஸ் மட்டும் சொல்லு!”

சொன்னாள்.

“அந்த தேவதாஸோட பேர் என்ன?”

“கோ... வி... ந்... த்..!” - பூமி அதிர்ந்தது ராட்டினம் சுற்றியதுபோல் உணர்ந்தாள் கீர்த்தனா.

`கோவிந்த்..! ராகினி சொன்ன கோவிந்த் என் கோவிந்த்தானா... அவள் சொன்ன மற்ற விஷயங்கள் எல்லாம் அவன்தான் என்று உறுதிப்படுத்துகின்றவே...

ஒரு மெல்லிய பனிப்படலமாய் என் உள்ளத் துக்குள் உறைந்திருந்த காதல்... அவனுள் மட்டும் எப்படி பாறையாய் வலுப்பெற்றிருக் கிறது... அந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறை கூட நானோ. அவனோ பேசியதே இல்லையே... ஏதோ ஒரு தயக்கம் இருவரையும் வாயே திறக்க விடாமல் செய்துவிட்டதே...

அதற்காக எட்டு வருடமாகக் கட்டிய மனைவியைக்கூட தீண்ட விடாமல்... எப்படி அப்படி ஒரு காதல் என் மீது..?

பெருமூச்சுடன் சோபாமீது தலை சாய்ந் தாள். அதில் பரிதவிப்பு மிகுந்திருந்தது.

நான் அவனை காதலித்தேனா, இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியாத ஒருவித இம்சை அவன் உயிர் வரை வதைத்திருக்கிறது. அதனால்தான் ராகினியை ஏற்றுக்கொள் ளாமல் தவிக்கிறான். பதில் தருகிறேன் கோவிந்த்!’

காலிங்பெல் இசைக்க...

கதவைத் திறந்த கோவிந்த் சுனாமியை எதிர்கொண்ட அதிர்ச்சியுடன் நின்றான்.

‘கீர்த்தனா!’

“ஏய்... கீர்த்தி... வா... வா... மாமா... இது கீர்த்தனா... என் குளோஸ் ஃபிரெண்ட். ப்ளஸ் டூ வரைக்கும் ஒண்ணா படிச்சோம். அச்சச்சோ... பால் தீய்ஞ்ச வாசனை வரு தில்லே... இதோ வந்துட்டேன்..!”வந்த வேகத்தில் கிச்சன் நோக்கி ஓடினாள் ராகினி.

கோவிந்த் இன்னமும் நம்ப முடியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.உயிருக்குள் தென்றல் காற்று பரவினால் எப்படியிருக்கும்... அப்படியிருந்தது. வருடக் கணக்காய் தேடிய புதையலைப் பார்த்த ஆச்சர்யமும், எல்லாம் இழந்த வலியின் வீரியமும், அவன் கண்களைத் துளிர்க்க வைத்தன.

‘இப்படியொரு சந்திப்புக்காகவா காத்திருந் தேன் கீர்த்தனா? இதோ, இப்போதும் உன் கண்கள் பூனைக்குட்டியை வாஞ்சையுடன் ஸ்பரிசிக்கிற இதத்தோடு என்னைப் பார்க்கிறதே... என்ன பெயர் இதற்கு? இப்போது நீ இன்னோர் ஆணின் திருமதி. நான் பாவப்பட்ட ராகினியின் கணவன். வலிக்கிறது கீர்த்தனா. அணு அணுவாய் வலிக்கிறது. என் மனைவியின் தோழியாக வீடு தேடி வந்திருப்பது என்னுள் வாழும் இதய தேவதை. எதற்காக இந்தச் சந்திப்பு?’

“நல்லாருக்கீங்களா?”

மிக மிக மென்மையாக வெளிப்பட்டது வார்த்தை. இதயம் உற்சாகத்தில் எம்பி குதித்தது கோவிந்துக்கு. அவனின் தேவதை அவனிடம் பேசிய முதல் வார்த்தை. விழி மீறி எல்லை தாண்டிய கண்ணீரைச் சுண்டி எரிந்து, ``ம்” என்று தலையாட்டினான்.

கீர்த்தனாவுக்கு தன் நிலையே மறந்து போனது. கல்யாண், தன்யா, ராகினி... எல் லோரும் பயணத்தில் காணும் மனிதர்களாய் பின்னோக்கி நகர்ந்தார்கள். அவள் முன்னே அவன் பிம்பம் மட்டுமே பெரிதாய்...

நாற்பதைக் கடந்திருந்த முகத்தில் நிரந்தர மாகத் தங்கியிருந்த சோர்வும் சோகமும் களையான முகத்தை மாற்றியிருந்தது. அடர்ந்த கேசம் பின்வாங்கத் தொடங்கி நெற்றியை பெரிதாக்க முயற்சி செய்திருந்தது. துருதுரு வென துளைக்கும் கண்களில் இப்போது கண்ணீர்.

“என்ன மாமா... பேசாம நிக்கறீங்க? நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத கீர்த்தி. மாமா ரொம்ப கூச்சப்படுவாரு!”

“பரவாயில்ல ராகினி, பேசாமலேயே இருக்கிறது உன் மாமா கேரக்டர் போல...”

அதன் அர்த்தம் கோவிந்துக்குப் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.

தோழிகள் இருவரும் பலவருட கதைகளை பேசி, சாப்பிட்டு... எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அவர்களோடு அமர்ந்து சாப்பிட வில்லை. இருவரும் பால்கனி பக்கம் சென்றனர். அங்குதான் கோவிந்தின் அறையின் ஜன்னல் இருந்தது.

“கீர்த்தி உன் ஹஸ்பண்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அவர் எப்படி உன் மேல ரொம்ப ஆசையா இருப்பாரா?”

“ப்ச்...”

“என்ன கீர்த்தி சலிச்சுக்கறே?”

“புருஷனும் சரி பொண்டாட்டியும் சரி... எல்லா எதிர்பார்ப்புகளையும் ஈடு செஞ்சிடற தில்லை. பொதுவா... கல்யாண் நல்ல கேரக்டர்...தட்ஸால்! பெருசா சொல்றதுக்கு எதுவும் இல்லை.”

“என்ன இப்படி சொல்றே?”

கோவிந்த் வியப்புடன் அவள் பேச்சை கவனித்தான்.

“மெஷின் மாதிரி இருப்பார். நல்ல சாப்பாடு, பிசினஸ், எப்பவாவது சினிமா. இதைத் தவிர எதுவும் தெரியாது. மனுஷனுக்குக் காதலிக்க தெரியாது.”

“இதெல்லாம் ஒரு குறையா? நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா கீர்த்தி?”

“.......!?”

“ஏய் என்னடி கண்ணெல்லாம் கலங்குது?”

“.......!?”

“என்னாச்சு கீர்த்தி அழறியா என்ன?”

“ஆமாம்... நானும் காதலிச்சேன்!”

“நீ காதலிச்சியா... எப்ப?”

“காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்ப. என் பின்னாடியே மூணு வருஷமா அலைஞ்சார். ஆனா, வாய் திறந்து அந்தக் காதலை சொல்ல அவருக்கு தைரியம் இல்லை. சொன்னால்தானே அது காதலா இல்லையான்னு தெரியும்? டைம் பாஸுக்காக சைட் அடிக்கிறாரோன்னுகூட நினைப்பு வர ஆரம்பிச்சுருச்சு. அந்த நேரத்துல அப்பா இறந்துட்டார். என் படிப்பும் முடிஞ்சது. அவர் பேரைத் தவிர அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனால என் காதலை எனக்குள் ளேயே புதைச்சுக்கிட்டு வாழ்க்கையில் ஜெயிக்க போராடிட்டிருந்தேன். கல்யாணம் ஆச்சு. ஃபாரின்ல செட்டில் ஆனேன். கணவர், குழந்தைன்னு காட்சிகள் மாறினாலும் அவரை இன்னமும் என்னால மறக்க முடியலை. சென்னை வந்தப்பகூட அந்தக் காதல் நினைவு தடங்களைத் தேடி வந்தேன். அப்பதான் உன்னையும் பார்த்தேன்.

ஆனா... அதெல்லாம் வேற. அவரை மறக்க முடியலைங்கறதுக்காக... எனக்கான வாழ்க்கையை நான் வாழாமல் இல்லையே... பிராக்டிகலா நம்மளை இந்த உலகத்தில் ஃபிட் பண்ணித்தானே ஆகணும்... என் கணவருக்கு ஒரு நல்ல மனைவியா, என் குழந்தைக்கு அருமையான தாயா... என் ரோலை சரியா செய்துட்டுதான் இருக்கேன். என் காதலை மறக்கலைங்கறதால என் ஹஸ்பண்டுக்கு துரோகம் பண்றதா அர்த்தமில்லை. ஆனா, நாம வாழற வாழ்க்கை மத்தவங்களை கஷ்டப் படுத்தக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன்” என்றாள் தழுதழுத்த குரலில்.

அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த கோவிந்தின் தொண்டைக்குள்... அதுநாள்வரை நெருடிக்கொண்டிருந்த முள் ஒன்று மெல்ல கீழே இறங்கியது.

வாஷிங்டன்.

நள்ளிரவில் கல்யாணின் அணைப்பில் கதகதப்பாய் உறங்கிக்கொண்டிருந்த கீர்த் தனாவை செல்போன் எழுப்பியது.

“கீர்த்தி... நான் ராகினிடி.”

“ஹேய்... சொல்லு நல்லாருக்கியா?”

“ரொம்ப...” என்று பேச ஆரம்பித்தவள் சொன்ன விஷயம் கேட்டு மலர்ந்தாள்.

“இஸிட்... எத்தனை மாசம்?” என்று கேட்டாள். பேசி முடித்தவள்... மானசீகமாக, `தேங்க்ஸ் கோவிந்த்’ என்றபடி, மீண்டும் கல்யாணின் கைகளை எடுத்து தன்மேல் போட்டுக்கொண்டாள்.

காலத்திடம் அனைத்து பதில்களும் உள்ளன. ஆனால், நாம் மனிதர்களிடம்தான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.