Published:Updated:

காற்றடைத்த வீடு - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஆர்.மணிமாலா

காற்றடைத்த வீடு - சிறுகதை

ஆர்.மணிமாலா

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

“பங்கஜா... சீக்கிரம் வாடி... டிரெயின் மூவ் ஆகுது...” சிவநேசன் குரல் கொடுத்தார்.

“வர்றேங்க... வந்துகிட்டுதானே இருக்கேன்...” மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தவள்... தூரத்தே நகர்ந்து செல்லும் ரயிலைப் பார்த்தாள். முகத்தில் சிறு குழந்தை யைப் போல் பரவசம். அதென்னவோ சிறு வயதிலிருந்தே ரயில் என்றால் கொள்ளைப் பிரியம். மொட்டைமாடி காற்று தலைமுடியை எல்லாம் பிய்த்து இழுத்தது.

ஆர்.மணிமாலா
ஆர்.மணிமாலா

அவர்கள் இருந்த வீட்டில் இருந்து பார்த்தால்... ரிமோட்டில் செலுத்தப்படும் அளவில் ரயில் தெரியும். சுற்றிலும் காலி மனைகள். உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய மனைகளை வேலி அமைத்து பாது காத்து வைத்திருந்தனர். எங்கோ ஓரிரு வீடுகள் தென்பட்டன.

இருவரும் கீழே இறங்கினர். 74 வயது சிவநேசனின் நடையில் வேகம் இன்னும் கொஞ்சம் இருந்தது. ரிட்டையர்டு அரசாங்க ஊழியர். பங்கஜத்துக்கு அவரைவிட ஐந்து வயது குறைவு என்றாலும், கேட்காமலே அத்தனை வியாதிகளும் குடியமர்ந்து விட்டதால் நடை தளர்ந்து மூச்சிரைத்தாள்.

விசாலமான வீடு அது. மூன்று பெட்ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஹால், கிச்சன் என்று நாகரிகமாக தேவையான வசதிகளுடன் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் தோட்டம். வீட்டைச் சுற்றி உயரமான மதில் சுவர், பெரிய கேட்.

“இட்லியா, தோசையா?'' - சிவநேசன்

“தோசைதான்!” - பங்கஜம்.

“ஈசியா முடிஞ்சிடுதேனு தெனத்துக்கும் தோசைதானா?”

“இட்லி ஊத்தி வச்சா, தோசை இல்லை யான்னு கேக்கறது. அப்படியே உங்கம்மா புத்தி” என்றாள் பங்கஜம், சற்றே எரிச்சலுடன்.

“எங்க அம்மா மேலே போய் சேர்ந்து 20 வருஷமாயாச்சு. அப்போ கேட்ட தோசையை இன்னமும் ஞாபகம் வச்சு தீய வச்சுட்டிருக்கே... தொட்டுக்க என்ன?”

“கடலை சட்னி!”

“சரி... பரவால்ல... எடுத்துட்டு வா!”

“பரவாயில்லையா... ஏன் சொல்ல மாட் டீங்க... மதியம் வச்சக் காரக்குழம்பு ஊத்தாம... வெஞ்சனமா சட்னி அரைச்சு ஊத்தறேன் இல்லையா...”

“சரி... சரி... போ... டிவி சீரியல் பார்த்து கெட்டுப்போயிட்டே...”அந்த வயதிலும் நக்கல் பண்ணினார். பங்கஜம் கணவரைப் பார்த்து முறைத்தாள்.

அவருக்கு மூன்று தோசைகள் சுட்டு வைத்துவிட்டு, தனக்கு இரண்டு சுட்டு

எடுத்துச் செல்வதற்குள் சிவநேசன் சாப்பிட்டுக் கையைக் கழுவிவிட்டார்.

“கொஞ்சம் மெதுவாதான் சாப்பிட்டா என்ன? நான் வர்றதுக்குள்ள சாப்பிட்டே முடிச்சாச்சு!”

“ஆறிப் போயிடுமில்ல?

பங்கஜம் வேண்டாவெறுப்பாய் சாப்பிடத் தொடங்கினாள்.

“உன் பாட்டி உயிரை வாங்கறா அர்ச்சும்மா... அவ இஷ்டத்துக்கு சமைச்சுப் போட்டு, நாக்கே செத்துப் போச்சும்மா!”

“நாக்கு செத்துப் போய்தான் மூணு கிலோ வெயிட் போட்டீங்களாக்கும்... எவ்வளவு நேரமா நீங்களே பேசுவீங்க. எங்கிட்ட குடுங்க!”

அவரிடம் இருந்த செல்போனை பிடுங்க...வீடியோ காலில் பேத்தி அர்ச்சனா.

22 வயது பேத்தியின் பூரிப்பான வளர்த்தியைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.

“அர்ச்சும்மா...”

“ஹாய் பாட்டி... என்ன தாத்தா கம்ப் ளைன்ட்டா அடுக்குறார்? சரியா கவனிக்

கிறது இல்லையா?” - பளிச்சென சிரித்தபோது

மகன் திருமுருகனின் சாயல் அப்பட்டமாய் இருந்தது.

“அந்தக் கிழவனை விடு... எப்படி இருக்கேடி கண்ணு... வேலை தேடிக்கிட்டு இருந்தியே... கிடைச்சிடுச்சா?”

“போயிட்டுருக்கேனே... டாடி சொல்ல லையா? ஒன் லாக் ஸாலரி!”

“சொல்லலையேம்மா..!”என்றவளுக்கு அவள் சொன்ன சம்பளத்தின் மீது பிரமிப்பு வரவில்லை. பணம் அதிகமாக... ஆக,

பந்தங்களுக்குள் பொத்தல்கள் அல்லவா அதிகமாகின்றன?

மருமகள் தேவி, அர்ச்சனாவைத் தாண்டிச் செல்வது தெரிந்தது. எட்டிப்பார்த்து, `அத்தை எப்படியிருக்கீங்க?’என்று கேட்டிருக்கலாம். அவளுக்கு வார்த்தைகளும் பணம் போல தான். அதிகமாய் செலவு பண்ண மாட்டாள்.

“டாடி எங்கேம்மா?”

“அதை நீங்க அவர் போனுக்கு கால் பண்ணி கேளுங்க பாட்டி... எனக்கு ஆபீஸுக்கு டைம் ஆச்சு... ”என்று கட் பண்ணிவிட்டாள்.

“ஏன்டி நான் கெழவனா?”

“இல்ல... என்னவிட 20 வயசு கம்மிதான்... சரி... நடேசன் மதியம் சாப்பிட வந்துடுவாரு தானே!”

“பத்தாவது முறையா கேக்கறே... காலை யிலயும் போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிட்டேன்... ஏதாவது காய்கறி கட் பண்ற வேலை இருந்தா சொல்லு.”

“வேணாம், வேணாம்... அவர் மட்டுமா,

கூட யாராவது வராங்களா?”

“அவங்க வொய்ஃப் வரலாம்... அதெல்லாம் கேக்க முடியுமா... சங்கடமில்லையா?”

பங்கஜம் கால் வலியுடன் ஆறேழு ஐட்டத்தை சமைத்து முடித்தாள். நடேசனுக் காக உள்ளுக்கும் ‘கேட்’டுக்குமாக அலைந்து, பிறகு அரை மணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தார்.

அந்த வீட்டில் மூன்றாவதாய் ஒரு நபரின் காலடித்தடம்பட்டதில் இருவர் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி.

“வாப்பா நடேசா!”

“வாங்கண்ணா... நீங்க மட்டும்தானா வந்தீங்க... அண்ணி வரலையா?”

“இல்லேம்மா... இவ்வளவு தூரம் வந்து போக அவ உடம்பு இடம் தராது... பிரஷர்காரி!”

“ஓ”

“ஏன் லேட்டு?”

“எப்படி அவுட்டர் ஏரியாவுல வீட்டை வச்சிருக்க... ஒரு ஊபர்காரன்கூட வர மாட்டேங்கிறான். ஒரு ஷேர் ஆட்டோக் காரனை கெஞ்சிக் கேட்டு, ரிட்டனுக்கும் சேர்த்தே பணம் தரேன்னு சொன்ன பிறகே வந்தான்.”

“அடடா..!”

“போறப்ப நீதான் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ணணும்!”

“நிச்சயமா” என்றவர், வீட்டை சுற்றிக் காண்பித்தார்.

சாப்பிட அமர்ந்தனர்.

“வீட்டை அம்சமா கட்டியிருக்கான்யா... இதுவே சிட்டிக்குள்ள இருந்தா எவ்ளோ ரேட் தெரியுமா? ஆனா, ஆளில்லா அத்துவான காட்ல இருக்கிற மாதிரியில்ல இருக்கு வீடு?!”

பரிமாறிக்கொண்டிருந்த பங்கஜம் பெருமூச்சுடன் கணவனைப் பார்த்தாள்.

“சல்லிசா வந்ததுன்னு பையன்தான்..!”

“அதுக்கு வளசரவாக்கத்தில் இருந்த வீட்டை வித்துட்டு இங்கே வாங்கணுமா?”

“இதுக்காக விக்கல நடேசா. திருமுருகனுக்கு பெங்களூர்ல வேலை. அவன் வொய்ஃப்க்கும் அங்கேயே கிடைக்கவும்... குடும்பத்தோட அங்கே செட்டில் ஆக வேண்டிய கட்டாயம். எப்படி இருந்தாலும் எங்களுக்குப் பிறகு, அவனுக்குதானே போய் சேரும்? அதான் அதை வித்து பெங்களூர்ல சொந்தமா ஃபிளாட் வாங் கிட்டுப் போய்ட்டான்.”

“சரி... நீங்களும் அங்கேயே போயிருக்கலாமே... இங்கே எதுக்கு தனியா?” - நடேசன் பருப்பு உசிலியை சுவைத்துக்கொண்டே வியப்பாய் கேட்டார்.

காற்றடைத்த வீடு - சிறுகதை

“ஹாஹா... எல்லார் வீட்லயும் நடக்கிற கூத்துதான். மாமனாரும் மருமகனும், ஒத்துமையா இருப்போம். மாமியாரும் மருமகளும் சண்டை போடாத வீடுன்னு ஒண்ணு கேள்விப்பட்டிருப்போமா? எதுக்கு நிம்மதியைக் கெடுத்துக்கிட்டு? போதாதற்கு... இவளுக்கு மூட்டுவலி வேற, அந்த க்ளைமேட் டுக்கு ரெண்டு நாளைக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல... மிச்சமிருந்த பணத்தோட, என் செட்டில்மென்ட் பணமெல்லாம் போட்டு திருமுருகன்தான் காத்தோட்டமா... மரம் செடி கொடியோட பெரிய வீடுன்னு வாங்கினான்.”

“வயசான காலத்துல என்ன தனிக் குடித்தனம்? இங்கே இல்லாத வேலையா? உங்க பையன் இங்கே வேலையைத் தேடி இருக்கலாமே?!”

“அவனை ஆஸ்திரேலியாவுல அவங்க ஹெட் ஆபீஸ்ல 10 லட்சம் சம்பளத்துல கூப்பிட்டாங்க. நினைச்சா வந்து பார்க்க முடியாதுன்னு அவாய்ட் பண்ணிட்டான்.”

“இங்கே மட்டும் அவனால வந்து பார்க்க முடியுதா? நிலா இருக்கும் தூரத்தைவிட பிள்ளைங்க இருக்கும் தூரம் கம்மிதான். ஆனா, நிலாவைப் பார்க்க முடிஞ்ச நம்மால அவங்களைப் பார்க்க முடியலை. தலைமுறை இடைவெளியைப் பசங்க இன்னும் ரப்பர் மாதிரி இழுத்து பெருசாக்கு றாங்க. லைஃப் ஸ்டைலுக்கு ஒத்து வர மாட்டோம்னு நம்மளை தனியா வச்சிடறாங்க. அந்த ஸ்டைலுக்கு பழக்கம் பண்ற வங்களே நாமதான்ப்பா!”

“.......!?”

“படி... படின்னு மூணு வயசுலேர்ந்து 25 வயசு வரைக் கும் இதைக் கத்துக்கோ, அதைக் கத்துக்கோன்னு பணத்தை வாரியிறைச்சு, பத்தாததுக்கு இதை வித்து, அதை வித்து, கடன் வாங்கி படிக்க வைக்கிறோம். நம்ம நாட்டு இங்கிலீஷ் போதாதுன்னு அமெரிக்கன் இங்கிலீஷ், ஸ்பானீஷ், சைனீஸ்னு கத்துக்க வைக்கிறோம். அவனுங்க கத்துக்கிட்டதை யூஸ் பண்ணிக்க அந்தந்த நாட்டுக்கே ஓடறான். நம்ம பேராசை... நம்மகிட்டேர்ந்து நம்ம பிள்ளையை, நம்ம பரம்பரையைப் பிரிக்க வச்சிடுது.”

அவர் பேச்சில் இருந்த உண்மை சுடச் சுட...சிவநேசனின் கையிலிருந்த சாதம் தட்டில் உதிர்ந்தது.

“ஒரு உண்மையைச் சொல்லவா? உன் கதை தான் எங்க கதையும். என் பையன் அமெரிக்கா வுல. பொண்ணையாவது நம்ம ஊர்ல கட்டிக் குடுத்தேனா... நல்ல படிப்பு, கைநிறைய சம்பளம்னு டெல்லி மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தேன். தனிமை சுட்டுச்சு இப்ப ஒரு ஓல்டேஜ் ஹோம்ல சில லட்சங்களைக் கட்டி நிம்மதியா இருக்கோம்!”

“எ... என்ன சொல்றே நடேசா?” கண்கள் தெறித்துவிடும் போல் அதிர்ச்சியுடன் பார்த்தார் சிவநேசன்.

“நீயும் நானும் யாரு? நம்ம ஏரியாவுல பத்து தெரு தள்ளி வசிக்கிற யாரோ! வாக்கிங் போறப்ப ஹாய், ஹலோவோட பழக்கம். ஆனா, யதேச்சையா போன வாரம் ரயில்வே ஸ்டேஷன்ல பார்த்தப்ப, ஃபாரின்ல தமிழ் பேசுற ஆளைப் பார்த்த சந்தோஷம் போல... அவ்ளோ பரவசமா பேசினே. வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டே.

உன் ஏக்கம் புரிஞ்சது. வயசாயிடுச்சில்லையா, இந்தக் காலத்துல நைன்ட்டி பர்சன்ட் நம்மள மாதிரி உள்ள ஆளுங்களுக்கு வர்ற நோய் தான் இந்தத் தனிமை. யாராவது நம்ம வீட்டுக்கு வர மாட்டாங் களான்னு சம்பந்தமே இல்லாத என்னை அழைச்சதிலேர்ந்தே புரிஞ்சிக்கிட்டேன்!” என் றார் நடேசன்.

காற்றடைத்த வீடு - சிறுகதை

“வச்ச சாப்பாட்டை ஒரு பருக்கைகூட தொடல... அவ்ளோ மோசமாவா சமைக்கிறேன்? இப்படி எல்லாம் பண்ணினே...

இனி சாப்பாடே கிடையாது உனக்கு! ஏய் நீ என்ன சிரிச்சுக்கிட்டு?”- கொல்லைப் புறத்தில் பங்கஜத்தின் குரல் கேட்க, ஜன்னல் வழியே பார்த்த சிவநேசன் உறைந்து போனார்.

சுவரின் மீது சாப்பாடும், நெல்லி மரத்தின் மீது காகமும், கொய்யா மரத்தின் மீது

இவள் சிரித்ததாகச் சொல்லிய அணிலும், இருந்தன.

புரிந்துபோக விபரீதம் உணர்ந்து உடம்பு கிட்டித்துப்போனது.

பேச ஆளில்லாத கஷ்டம்...

காற்றடைத்த வீடு...

மூச்சு முட்ட வைத்திருக்கிறது.

“சீதா... ஸ்டவ்ல என்ன வெச்சுட்டு வந்தே?” - லோகா கேட்க...

“அச்சோ” பதறி எழுந்தோடினாள்.

“கொஞ்சம் சிறுசா கேரட்டை கட் பண்ணு!” - முருகேஸ்வரி தானும் ஒரு கத்தியை எடுத்து நறுக்க... பவளமல்லி தலையாட்டியபடி நறுக்கினாள்.

சிவநேசனுடன் நாராயணனும், லிங்கேஸ் வரனும் கேரம் விளையாடிக்கொண்டிருந் தார்கள்.

“எல்லாரும் மாடிக்கு வாங்கடி... டிரெயின் வர்ற நேரமாச்சு...” - விஜயா அழைக்க... பங்கஜம் உட்பட மாடிக்கு ஓடினார்கள் வயதான குமரிகள்.

‘கேட்’டுக்கு பக்கத்தில் `நம் இல்லம்' போர்டு பளிச்சென அமர்ந்திருந்தது.

தங்குமிடம் இலவசம். ஆனால், உணவுக்கான செலவு மட்டும் அவரவரு டையது. அவரவர் பிடித்த உணவை சமைத்து சாப்பிட லாம். சில சமயம் மனசொத்து கூட்டாகவும் சமைப்பார்கள். ஒவ்வோர் அறையிலும் நான்கு கட்டில்கள்.

அந்த வீட்டு ஓனர்கள் உட்பட இப்போது எட்டு பேர் அங்கே. இரண்டு ஆண்கள் உட்பட. இனி எண்ணிக்கை கூடலாம்.

பங்கஜம் இப்போதெல்லாம் காக்கா குருவி யிடம் பேசுவதில்லை.

மாலை லேடீஸ் அத்தனை பேரும் கோயிலுக்குப் புறப்பட...

“போயிட்டு வர்றேங்க!” என்றாள் பங்கஜம் கணவரிடம்.

அவளைப் பார்த்து கண்களை விரித்தவர், ``சீரியல் பார்த்து ரொம்பக் கெட்டுப் போயிட்டே!” என்றார் புருவம் உயர்த்தி.

“என்னது?”

“லிப்ஸ்டிக்லாம் போட ஆரம்பிச்சுட்டே!”

பங்கஜம் புடவைத் தலைப்பால் வாயை மூடி வெட்கப்பட்டாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism