Published:Updated:

வயதான காதுகள் - சிறுகதை

வயதான காதுகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வயதான காதுகள் - சிறுகதை

- எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

வயதான காதுகள் - சிறுகதை

- எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
வயதான காதுகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வயதான காதுகள் - சிறுகதை

ராஜேஸ்வரிக்கு இரண்டு காதுகளும் கேட்கவில்லை. அவளுக்கு முதலில் குக்கர் விசில் சத்தம் கேட்கவில்லை. அடுத்து குளியலறையிலிருந்து அவளது மகள் முத்துமீனா சோப்பு கேட்டு அழைத்தது கேட்கவில்லை. மிக்ஸியில் சட்னி அரைத்தபோது இயந்திரம் ஓடுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் கேட்க முடியவில்லை. அவள் பயந்துபோனாள். காதுகள் இரண்டையும் பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். நன்றாக ஆட்டித் தட்டிவிட்டாள். சளி அடைத்திருக்கும் என்று வாஷ்பேசினுக்குச் சென்று காறித்துப்பினாள். ராஜேஸ்வரிக்கு இரண்டு காதுகளும் கேட்கவில்லை.

ராஜேஸ்வரிக்கு ஐம்பது வயது நிறைவடைகிறது. கடந்த மூன்று மாதங்களாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கவேண்டுமென்பதற்காக சாப்பிடும் உணவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். சாப்பாட்டைக் குறைப்பதால் ஒருவேளை காதடைத்துப் போயிருக்கும் என்று நினைத்தாள். மகளிடமும் கணவனிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. குளியலறையிலிருந்து வந்த சத்தம், உறங்கிக்கொண்டிருந்த அவளது கணவன் சிவராமனை எழுப்பிவிட்டது.

சிவராமன் தூக்கம் கலைந்த கோபத்தில் சமையலறைக்கு வந்து, “காது கேட்கலயா. செவிட்டுக் கழுத. சோப்பு கேட்குறா எடுத்துட்டுப் போ” என்று கத்தினார். சிவராமன் கத்தி சத்தமாகப் பேசியது அவளது காதிற்குச் சன்னமாகக் கேட்டது. அதுவும் அரைகுறையாக. சோப்பு என்ற வார்த்தையை வைத்துப் புரிந்து கொண்டாள். தனக்குக் காது கேட்கவில்லையென்பதை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, “குளிக்கப் போறப்ப சோப்ப எடுத்துட்டுப் போற பழக்கம் கழுைதக்கு இல்ல” என்று திட்டிக்கொண்டு சென்றாள்.

முத்துமீனா குளித்து முடித்து வெளியே வந்ததும், தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத் திரும்பவும் அவளைத் திட்டினாள். அவள் பதில் எதுவும் பேசவில்லை. தட்டில் இட்லி வைத்து சட்னியை ஊற்றி அவளுக்குக் கொடுத்தாள். முத்துமீனா, ஜடை பின்னுவதற்காக நாற்காலியில் அமர்ந்ததும் அவள் அழைப்பதற்கு முன்பாக சீப்பை எடுத்துக்கொண்டு அவளருகே சென்று நின்றுகொண்டாள்.

“நாலு தடவ கத்துன பெறகு வந்து நிப்ப. இன்னைக்கு கூப்பிடுறதுக்கு முன்னாடியே வர்ற. மழை வரப்போகுதும்மா” என்று சொன்னாள். ராஜேஸ்வரிக்குச் சங்கடமாக இருந்தது. அவள் ஏதோ பேசுகிறாள். அது என்னவென்று தெரியவில்லை. எப்படி சமாளிப்பது என்று அவளது முகத்தைப் பார்த்தாள். ரிப்பனைத் தேடுவதுபோல அங்குமிங்கும் பார்த்தாள். கொடியில் தொங்கியது. ரிப்பனை உருவி எடுத்து இடுப்பில் சொருவிக் கொண்டவள், ஜடை பின்னுவதில் மும்முரமாக இருப்பதாக பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டாள். ஆனால் அவளது மனதுக்குள் தனக்குக் காது கேட்கவில்லையென்கிற வேதனை பதற்றத்தைத் தந்தது. அவளது கைகளும் கால்களும் லேசாக நடுங்கத் தொடங்கின. ஐம்பது வயதானால் காது கேட்காமல் போய்விடுமா என்று நினைத்தவளுக்கு தனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் ஐம்பது வயது வந்துவிட்டதே என்று தன் மேல் வெறுப்படைந்தாள். முத்துமீனாவின் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னுடைய காதுகளைப் பார்த்தாள். அவளது முகத்தைவிட காதுகள் இரண்டும் மிகவும் வயதான தோற்றத்தைத் தந்தது. உடனே அவற்றை வெட்டி எறிய வேண்டுமென்கிற கோபம் வந்தது அவளுக்கு.

ராஜேஸ்வரி தனக்கு இதற்கு முன்பு இப்படி காது கேட்காமல் போயிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகப்படுத்திப் பார்க்கப் பார்க்கச் சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தபோது காது வலியெடுத்து காது கேட்காமல் இருந்ததையும் இரவில் சூடாக நல்லெண்ணெயைக் காய்ச்சி மிளகாய்வற்றலில் ஊற்றிச் சொட்டு சொட்டாக விட்டுக்கொண்டதும் காது ங்ங்ங்யெங் என்கிற சத்தத்துடன் கேட்கத் தொடங்கியது நினைவுக்கு வந்தது. கணவனும் மகளும் வெளியே சென்றதும் முதல் வேலையாக நல்லெண்ணெயைக் காய்ச்சிக் காதில் ஊற்ற வேண்டுமென நினைத்தாள். ஆனால் அதுவரை எப்படி இவர்கள் பேசுவதற்குப் பதில் பேசி சமாளிப்பது என்று கவலைப்பட்டாள்.

சிவராமனின் அலைபேசி மணி ஒலித்தது. கழிப்பறையிலிருந்தவர், “யாருன்னு பாருங்க... யாருன்னு பாருங்க...” என்று கத்தினார். முத்துமீனா எரிச்சலோடு அம்மாவைப் பார்த்தாள். “போனு வர்றது கேட்கலயா? செவிடு மாதிரி நிக்குற. எடுத்து யாருன்னு பாத்து அந்தாளுகிட்ட சொல்லு. இல்லன்னா கக்கூஸில ஒக்காந்துட்டு கத்துவாரு. பத்து வீட்டுக்குக் கேக்குற மாதிரி” என்றாள். அவள் கையை செல்போன் பக்கமாக நீட்டியதால் ராஜேஸ்வரி தப்பித்தாள். முத்துமீனாவின் உச்சந்தலையில் சீப்பைச் சொருவி வைத்துவிட்டுச் சென்றாள். அதற்குள் செல்போன் மணியடிப்பது நின்றது.

வயதான காதுகள் - சிறுகதை

“யாருன்னு தெரியல. நீங்க வந்து பாத்துப் பேசுங்க” என்றாள்.

முத்துமீனா முகங்கழுவி பவுடர் அடித்துக் கல்லூரிக்குக் கிளம்பியதும் அவளுக்கு நிம்மதியானது. வீடு கூட்டி பாத்திரங்களைக் கழுவி வைத்தால் காலை நேர வேலைகள் முடிந்துவிடும். நல்லெண்ணெயைக் காய்ச்சிக் காதுகளுக்கு ஊற்றலாம் என்று நினைத்தாள். மீனாவின் அறையிலிருந்து அழுக்குத்துணிகளை எடுத்து மெஷினில் போட்டாள். மீனா அவளது உள்ளாடைகளைக் கழற்றி கட்டிலுக்குக் கீழே போட்டிருந்தாள். எதற்காக தினமும் இப்படிச் செய்கிறாள். உள்ளாடைகளை யாரும் பார்க்கக்கூடாது என்று இப்படிச் செய்கிறாளா? துவைத்து மொட்டை மாடியில் உலர்த்தத் தொங்கவிடும் போது அனைவரும் பார்ப்பார்கள். துவைத்த உள்ளாடைகளை ஒளித்து வைத்தா ஈரத்தை உலர்த்த முடியும் என்று தலையில் அடித்துக்கொண்டாள். அவளுக்கு வாஷிங் மெஷின் ஓடுவது தெரிந்தது. சத்தம் கேட்கவில்லை. குனிந்து மெஷின் மேல் காதுகளை வைத்துக் கேட்டாள். சத்தம் கேட்கவில்லை. தன்னுடைய காதிற்கு ஏதோ பெரியதாகப் பிரச்னை உருவாகிவிட்டது, அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தவளுக்கு பயம் உண்டானது.

சிவராமன் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருந்தார். கழுத்தில் நெஞ்சில் முதுகில் என்று பவுடரைக் கொட்டித் தடவுவதை வேடிக்கை பார்த்தாள் ராஜேஸ்வரி. சிவராமனுக்குத் தட்டில் இட்லியை எடுத்து வைத்துவிட்டு அமர்ந்தாள். எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதுபோல உணர்ந்தவள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சுற்றிச் சுற்றிப் பார்த்தக்கொண்டாள். பீரோவின் கதவைத் திறப்பதும் பூட்டுவதும் பார்த்த பிறகுதான் தெரிகிறது. தன்னைப் பார்த்து ஏதோ சொல்கிறார், என்னவென்று தெரியவில்லை. என்ன சொல்லியிருப்பார். சிவராமனுக்கு சாப்பிடுவதற்கு முன் நியூஸ் கேட்க வேண்டும். நியூஸ் கேட்டுக்கொண்டே சாப்பிடவேண்டும். இல்லையென்றால் இட்லி, இட்லி மாதிரி இருக்காது. ஒருவேளை தொலைக்காட்சியைத் தான் ஆன் செய்யச் சொல்கிறாரோ என்று எழுந்து தொலைக்காட்சியின் பித்தானை அழுத்தினாள்.

சேனலில் விளம்பரம் வந்தது. அவளுக்கு ஒருவகையில் காது கேட்காமல் இருந்தது நல்லதாகத்தான் தோன்றியது. காது கேட்கும் கருவி ஒன்றிற்கு இரண்டாக வாங்கி மாட்டிக்கொள்ளலாமென்று விளம்பரங்களை ஆர்வமாகப் பார்த்தாள். சிவராமன் வந்து அவள் முன் உட்காரும் வரை காது கேட்கும் கருவி குறித்த விளம்பரம் எதுவும் வரவில்லை.

“டிவிய போடு டிவிய போடுன்னு நாலு தடவ சொன்னாலும் போடமாட்டே. தொணதொணன்னு எதாவது பேசிட்டிருப்ப. இன்னைக்குச் சொல்லுறதுக்கு முன்னாடி டிவிய போட்டிருக்க ராஜி” என்று சிவராமன் சொன்னார். அவள் அவருடைய முகத்தைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தாள். என்ன பேசியிருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும்.

“இன்னைக்கு சாயங்காலம் வர்றதுக்கு நேரமாகும்” என்று சிவராமன் அவளிடம் சொன்னார். தொலைக்காட்சியில் காது கேட்கும் கருவி விளம்பரம் வருகிறதா என்கிற மும்முரத்தில் இருந்தவள் அவர் பேசுவதைப் பார்க்கவில்லை. சிவராமன் திரும்பவும் சத்தமாகச் சொன்னதும், திரும்பிப் பார்த்தாள். தனக்குக் காது கேட்காமலிருப்பதை இனிமேலும் மறைத்து வைத்திருக்க முடியாது. எதிரேயிருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் தானாக எதோ பதில் பேசினால் தவறாகப் போய்விடும். தனக்குக் காது கேட்காதது என்றைக்காவது வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியப்போகிறது. அதை இப்போது சொல்லிவிட்டால் நல்லது என்று நினைத்தாள்.

“என்ன சொல்றீங்க, கொஞ்சம் சத்தமா சொல்லுங்க, காது சுத்தமாக் கேட்கமாட்டேங்குது. ரெண்டு காதும் பஞ்சு வெச்சு அடச்ச மாதிரி கப்புன்னு அடைச்சிருக்குது” என்றாள். அவள் பேசியது அவளுக்குக் கேட்கவில்லை.

சிவராமன் அவளது முகத்தைப் பார்த்தார். “நேத்து ராத்திரி நல்லாத்தானே இருந்துச்சு. இப்ப திடீருனு காது கேட்கலன்னு சொல்லுற” என்று அவளிடம் கேட்டவர், இட்லியைப் பிய்த்து சட்னியில் தொட்டுத் தடவிக்கொண்டார். தட்டைச் சுற்றிப் பார்த்தார். பொடி இல்லை. எண்ணெய்க் கிண்ணமும் இல்லை. தக்காளிச் சட்னி இல்லை. அவருக்கு எரிச்சலாக இருந்தது. சாப்பிடுகிற மூன்று இட்லிக்கும் இன்று பாதகம் ஏற்பட்டுவிட்டது என்று வேண்டாவெறுப்பாகப் பிய்த்துத் தின்றார். சிவராமனின் வேகத்தைப் பார்த்த ராஜேஸ்வரி, தட்டை ஒருமுறை நோட்டமிட்டாள். ஞாபகம் வந்தவளாக வேகமாக எழுந்து பொடி டப்பாவையும் எண்ணெய்க் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வந்தாள். சிவராமனுக்குச் சிறிது உற்சாகம் உண்டானது. இட்லியைப் பொடியில் தொட்டுக் கொண்டார்.

“காலையில இருந்து இந்த மாதிரி இருக்குதா?” என்று கேட்டார். ராேஜஸ்வரியின் முகத்தைப் பார்த்து காதுகளைத் தொட்டுக் காட்டிப் பேசியதை அவள் புரிந்துகொண்டவள்போல, “ராத்திரியெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. காலையில இருந்துதான் இந்த மாதிரி” என்று தலை கவிழ்ந்து பேசினாள். ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கை நீட்டிப் பணம் வாங்க வேண்டுமென்கிற வெட்கம் அவளுக்கு அவமானமாக இருந்தது. “சம்பாதிக்கிற துட்டெல்லாம் ஆஸ்பத்திரிக்கு அழுதுட்டுப் போகவேண்டியதுதான்” என்று புலம்பலுடன் பணத்தைத் தருகிற காட்சி அவளுக்குத் தெரிந்தது. கண்களை மூடிக்கொண்டாள்.

“சரி கிளம்பு. காது ரொம்ப முக்கியம். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருவோம். ஆபீஸில சொல்லிக்கிறேன்” என்றார். சொன்னார் என்பதைவிட கத்தினார் என்று சொல்ல வேண்டும். அவளுக்கும் அது சரியெனத் தோன்றியது. இட்லியைச் சாப்பிட்டுவிட்டு வழக்கமாக காலையில் போட்டுக்கொள்ளும் சத்து மாத்திரையை விழுங்கினாள். சிவப்பு நிற சத்து மாத்திரையை தினமும் காலையில் அவள் வாயில் போட்டுக்கொள்வது விசித்திரமான விளையாட்டாக இருக்கும். சுண்டுவிரலிலும் கட்டை விரலிலும் மாத்திரைப் பிடித்து முகத்திற்கு ேநராக வைத்துக்கொண்டு உதட்டை நோக்கி எறிவாள். அம்மாத்திரை ஏதோ கோல் கீப்பரைத் தாண்டி கோல்போஸ்டருக்குள் நுழைவது மாதிரி வேகமாகப் போகும். அதற்குப் பிறகு வீடு கூட்டுவது, துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு போய் மாடியில் கொடியில் போடுவது போன்ற வேலைகள் மெஷினைவிட வேகமாக நடக்கும். இந்த வேலைகளைச் செய்வதற்காகவே டாக்டர்கள் கண்டுபிடித்த மாத்திரை இது என்று அவள் நினைத்திருக்கிறாள். ஒரு தடவை சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிட்டால் அதன் சக்தி முழுவதும் நீர்த்துப்போகும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு எதுவும் செய்ய இயலாது. திரும்பவும் உடம்பு வேகமெடுப்பதற்கு மறுநாள் காலையில் சிவப்பு மாத்திரையை விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை மாத்திரைகளை விழுங்கக்கூடாது என்பதை டாக்டர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.

“அரை மணி நேரம் பொறுத்தீங்கன்னா துணி அலசியிரும். எடுத்து வெச்சுட்டு மெஷினை ஆஃப் செஞ்சுட்டு வந்துர்றேன்” என்றாள்.

“எனக்கு ஆபீஸுக்கு லேட்டாகுது ராஜி. அரை மணி நேரத்தில உன்னய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் செக்கப் முடிச்சிட்டு திரும்பவும் வீட்டில விட்டு ஆபீஸுக்குப் போகணும். அரை மணி நேரந்தான்” என்றார்.

“ஐயோ நீங்க என்ன சொல்றீங்கன்னே கேட்கல. கொஞ்சம் சத்தமாத்தான் பேசுங்க.”

சிவராமன் கை கழுவிக்கொண்டார். மெஷினை ஆஃப் செய்துவிட்டு, “ஆஸ்பத்திரியில இருந்து வந்து போட்டுக்க. கிளம்பு போகலாம்” என்று கைகளை ஆட்டிப் பேசி அவளுக்குப் புரிய வைத்தார்.

ராேஜஸ்வரி தலையை முடித்துக் கொண்டாள். புடவையைப் பார்த்தாள். பரவாயில்லை இதுவே போதும் என்கிற நினைப்பு ஒருபக்கமிருந்தாலும் எதிர்த்த வீட்டுப் பெண்கள் பக்கத்து வீட்டுப் பெண்கள் தன்னைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று, நல்ல சேலையை பீரோவிலிருந்து எடுத்து உடுத்திக்கொண்டாள். ஒருவகையில் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு வகையில் பயமாகவும் இருந்தது. பெரிய அளவில் ஏதாவது பிரச்னை வந்து ஆஸ்பத்திரியில் படுக்க வேண்டியதாகிவிடுமோ என்று பயந்தாள்.

சிவராமன் முன்னால் சென்று, மோட்டார் வாகனத்தின் மேல் ஏறி அமர்ந்தார். ராஜேஸ்வரி கதவைப் பூட்டிவிட்டு அவருக்குப் பின்னால் நடந்தாள். அவருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டாள். யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என்று பார்த்தாள். காலையில் பெரும்பாலான வீடுகளின் கதவுகள் பூட்டியிருந்தன. சில வீடுகளின் கதவுகள் மட்டும் திறந்திருந்தன. யாருமில்லை தங்களைப் பார்க்கவில்லை என்று அவளுக்குத் தெரிந்ததும் நிம்மதியாக இருந்தது.

அவர்கள் இருவரும் காது மூக்கு தொண்டை மருத்துவமனைக்குச் சென்றபோது பத்துமணியாகியிருந்தது. பெயரைப் பதிவு செய்துகொள்ளுமிடத்தில் நின்றிருந்த பெண், “என்ன உடம்புக்கு” என்று கேட்டாள். அதற்கு ராஜேஸ்வரி, “திடீருனு காது கேட்காமப்போச்சு” என்று சொன்னாள். அப்படிச் சொல்லும்போது, அவள் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டாள். அங்கிருந்தவர்கள் தன்னைப் பார்க்கிறார்களா, தனக்குக் காது கேட்கவில்லையென்று சொல்லியதைக் கேட்டிருப்பார்களா என்கிற சந்தேகத்துடன் அவர்களைப் பார்த்தாள். ராஜேஸ்வரிக்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்களுடைய பெயர்களை முன்பதிவு செய்திருந்தனர். ராஜேஸ்வரியின் பெயர் பன்னிண்டாவது பெயராக எழுதிய அப்பெண் உட்காரச் சொன்னாள்.

ராஜேஸ்வரி, ஆட்கள் எழுந்து நடப்பதைப் பார்த்தாள். கதவும் நாற்காலியும் சத்தமில்லாமல் நகர்வதையும் பார்த்தாள். ஏற்கெனவே மருத்துவமனையில் சத்தமில்லாமல் தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதையும் நோயாளிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சத்தமில்லாமலிருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்க அவளுக்கு அழகாகத் தெரிந்தது. காட்சிகள் கலர் கலராக மாறுகின்றன, ஆனால் சத்தமில்லை. முத்துமீனா கல்லூரியிலிருந்து வந்ததும் ஒருமணி நேரமாவது சுவர் இடிந்து விழுமளவிற்கு சத்தமாக தொலைக்காட்சியை வைத்துப் பார்ப்பாள். சேனல்கள் நொடிப் பொழுதில் மாறும். அதன் சத்தம் திடீரெனக் கூடுவதும் குறைவதுமாக வீட்டிலுள்ள தம்ளரும் தட்டும் அதிரும்படியாகக் கேட்கும். ராஜேஸ்வரி அந்தச் சத்தத்திற்கு பயந்து காதுகளை அடைத்துக்கொள்வாள். அப்படியும் சத்தம் காது ஜவ்வு கிழிவது மாதிரி கேட்கும். பிறகு சிறிது நேரம் கழிப்பறையில் அமர்ந்திருந்துவிட்டு வருவாள். முத்துமீனா தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றதும் நிம்மதியாக இருக்கும். தன்னுடைய காதுகளை யாரோ நீவிவிடுவதுபோலிருக்கும். அந்தச் சமயங்களில் தனக்குக் காது கேட்கக்கூடாது என்று நினைக்கவில்லை அவள். முத்துமீனாவைத் திட்டுவாள்.

சிவராமன் செல்போனை எடுத்து நேரம் பார்ப்பதும் எழுந்து முன்பதிவு செய்யும் பெண்ணிடம் இன்னும் எவ்வளவு நேரமாகும் என்று கேட்பதுமாயிருந்தார். அவருக்குப் பொறுமையாக அமர்ந்திருக்க இயலவில்லை என்பது ராஜிக்குத் தெரியும். தனக்கு அருகில் அமர்ந்திருந்த நோயாளிகளைப் பார்த்தாள். அங்கிருந்தவர்கள் தங்களுடைய காதுகளில் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். மருத்துவரின் அறைக்குச் சென்று திரும்பும் நோயாளிகள் கையை, இடுப்பைத் தேய்த்துக்கொண்டு வெளியேறுவதை அவள் வேடிக்கை பார்த்தாள்.

வயதான காதுகள் - சிறுகதை

குழந்தை அழுகையைச் சத்தமில்லாமல் முதன்முதலாகப் பார்த்தாள். அதைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. சிரிப்புக்கூட வந்தது. தனக்கு வலதுபுறத்தில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாள். அவள் காதுகளுக்குள் பஞ்சு வைத்திருந்தாள். அவளிடம், “உங்களுக்குக் காது கேக்குதா” என்று கேட்டாள். அப்பெண் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. அவள் கேட்டதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. திரும்பவும் அப்பெண்ணிடம் காது நல்லா கேக்குதா என்று கேட்டதும் அவள் சலிப்புடன், “காதெல்லாம் நல்லாத்தா கேக்குது. வலி தாங்க முடியல. கொடைகொடைன்னு கொடையுது” என்று கோபமாகச் சொன்னாள். அவள் சொல்லியது ராஜிக்குக் கேட்கவில்லை. ஆனால் அவள் பேசியது ஆதரவாக இருந்தது. அவளிடம் மேற்கொண்டு எது பேசினாலும் கோபமாகப் பேசுவாள், இல்லையென்றால் பேசமாட்டாள் என்று நினைத்தவள் இடதுபக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்தாள். அப்பெண் ராஜி பேசுவதற்காகக் காத்திருந்தவள்போல, அவளது முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். ராஜி, அவளது காதுகளைப் பார்த்தாள். பஞ்சு வைத்திருக்கவில்லை. தன்னுடைய காதுகளைப் பார்ப்பதை அப்பெண் விரும்பவில்லை.

நர்ஸ் ‘ராஜேஸ்வரி’ என்று அழைத்தாள். சிவராமன் முதலில் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் ராஜி சென்றாள். மருத்துவரின் முன்னால் ஏற்கெனவே அமர்ந்திருந்த நோயாளிகள் தங்களது சந்தேகங்களைக் ேகட்டுக்கொண்டிருந்தனர். மருந்துச்சீட்டை எழுதி அவர்களிடம் கொடுத்து மருத்துவர் அவர்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லியதைப் பார்த்தாள் ராஜி. அவர்கள் சென்றதும் மருத்துவர் ராஜியை அழைத்து நாற்காலியில் அமரச் சொன்னார்.

மருத்துவர் எதுவும் கேட்காமல் சிவராமன், “ஸார் திடீருனு காலையில இருந்து ரெண்டு காதும் கேட்கல ஸார்” என்று சொன்னார்.

மருத்துவர், “அதெப்படி திடீருனு கேட்காமப்ேபாகும்” என்று சிறிய டார்ச் லைட் எடுத்து காதுகளைப் பரிசோதனை செய்தார். டார்ச் லைட் வெளிச்சம் போதாது என்று தன்னுடைய நெற்றியில் கட்டியிருந்த ஹெட் லைட் போட்டுக்கொண்டார். அவராக, “அழுக்குச் சேர்ந்திருக்கும். மூணு நாளைக்கு சொட்டு மருந்து ஊத்தணும். சுத்தம் செய்தா சரியாப் போகும். பயப்பட வேண்டியதில்ல. மூணு நா கழிச்சி வாங்க” என்றார். சிவராமனுக்குத் திருப்தியாக இருந்தது.

“பேரு வயசு சொல்லுங்க” மருத்துவர் ராஜியைப் பார்த்துக் கேட்டதும் அவள் பெயரைச் சொல்லி, கூச்சத்துடன் அம்பது வயசு என்று சொன்னாள். மருத்துவர் உடனே, “அம்பது வயசில இதுமாதிரி எதாவது பிரச்னை வரும்” என்று சொன்னார். ராஜேஸ்வரிக்கு இரண்டு வயதைக் குறைத்துச் சொல்லியிருக்க வேண்டுமென்கிற எண்ணம் வந்தது. மருந்துச்சீட்டை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது ஆட்டோவிலிருந்து வயதான தம்பதியினர் இறங்கினார்கள். அவர்கள் இருவருமே தங்களுடைய காதுகளுக்குள் காதுகேட்கும் கருவி வைத்திருந்ததை ராஜி பார்த்தாள். அந்தக் கருவி பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இன்னமும் மூன்று நாள்களுக்குப் பிறகு தன்னுடைய காதுகள் இரண்டும் கேட்கத் தொடங்கிவிடும். பிறகு எதற்கு காதுகேட்கும் கருவி என்று வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். பஞ்சு வைத்து அடைத்திருந்த காதுகளைத் தொட்டுக்கொண்டாள்.

வயதான காதுகள் - சிறுகதை

வீட்டின் வாசற்படியில் அவளை இறக்கிவிட்டு, “மாத்திரையைப் போட்டு கொஞ்ச நேரம் தூங்கு” என்று சிவராமன் ெசால்லிவிட்டுச் சென்றார்.

ராஜேஸ்வரி வீட்டுக்குள் சென்றாள். வாஷிங் மெஷினை ஓடவிட்டாள். அவளுக்குச் சத்தம் கேட்கவில்லை. காதுகளில் அடைத்திருந்த பஞ்சை எடுத்துவிட்டுக் கேட்டாள். எதுவும் கேட்கவில்லை. இப்பொழுதுதானே மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கிறோம், நாளைக்குள் சரியாகிவிடும் என்று மருத்துவமனையில் தந்த மாத்திரைகளைப் போட்டு தண்ணீர் குடித்தாள். மாத்திரைகளை விழுங்கியதும் அவளுக்கு நம்பிக்கை மேலும் கூடியது. ஒருவேளை இரவு காது கேட்கத் தொடங்கிவிடுமென்று நினைத்தாள். தொலைக்காட்சியின் சுவிட்சைப் போட்டாள். பழைய பாடல் சேனலை வைத்துவிட்டு அமர்ந்தாள். கறுப்பு வெள்ளையில் நகரும் காட்சிகளை அமைதியாகப் பார்த்தாள்.

திடீரென அவளுக்கு மிக்ஸி ஓடுகிற சத்தமும் அதைத் தொடர்ந்து சட்னி தாளிக்கிற சத்தமும் பயங்கரமாகக் கேட்டது. காதுகளைப் பொத்திக்கொள்கிற அளவிற்குச் சத்தம் இருந்தது. அவள் தன் வீட்டில் மிக்ஸி ஓடுகிறதா என்று பார்த்தாள். பக்கத்து வீட்டிலிருந்து சத்தம் வரும் என்று கதவுகளை அடைத்து வைத்தாள். மிக்ஸி சத்தம் நின்றது. ஆனால் குக்கரின் விசில் சத்தம் காதுகளுக்குப் பக்கத்தில் கேட்டு உலுக்கி விழுந்து திரும்பிப் பார்த்தாள். விசில் சத்தத்தோடு அதன் சூடான புகையும் அவளைத் தாக்கியதுபோல உணர்ந்தவள் பயந்திருந்தாள். சமையலறைக்குச் சென்றாள். மிக்ஸியையும் குக்கரையையும் கழுவத் தொட்டியில் போட்டிருந்தாள். காது கேட்கிறது என்பதைவிட, ஏன் இவ்வளவு சத்தமாகக் கேட்கிறது என்கிற பயத்தில் காதுகளைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். கண்ணாடியில் பார்த்தாள். காதுக்குள் வைத்திருந்த பஞ்சை எடுத்துவிட்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தது. ஒவ்வொரு அறைக்கும் சென்று எதாவது சத்தம் கேட்கிறதா என்று காதுகளை நீட்டி நீட்டிப் பார்த்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தைக் கூடுதலாக வைத்துக் கேட்டாள். மின்விசிறியைப் போட்டுப் பார்த்து சத்தம் கேட்கிறதா பார்த்தாள். சத்தம் எதுவும் கேட்கவில்லை. வாசற்கதவுகளைத் திறந்து வைத்து சத்தம் வருகிறதா என்று பார்த்தாள். சத்தம் எதுவும் கேட்கவில்லை. பானையிலிருந்த தண்ணீரைக் குடிக்கச் சென்றாள். பானையிலிருந்த தட்டை எடுத்தாள். அவளது காதிற்கு அருகில் குழாய்த் தண்ணீர் விழுகிற சத்தம் கேட்டது. கூடவே பானை நிறைந்து வடிவதுபோலக் கேட்டதும் குழாயை அடைக்க ஓடிச் சென்றாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism