Published:Updated:

நட்சத்திரங்கள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

பொதுவாக வயதில் குறைந்த நடிகைகளுடன் நடிக்கும்போது அவர்கள் எப்போதும் சொல்வதுதான் இது.

நட்சத்திரங்கள் - சிறுகதை

பொதுவாக வயதில் குறைந்த நடிகைகளுடன் நடிக்கும்போது அவர்கள் எப்போதும் சொல்வதுதான் இது.

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சுமதி அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைத் தள்ளியபடி நேரு உள் விளையாட்டரங்கில் நுழைந்தேன். ஆயிரக்கணக்கான ரசிகர்களால் நிரம்பிவழிந்த அரங்கு, மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. தமிழ்நாட்டின் நம்பர் 2 டிவி சேனலான க்யூ டிவியின் ‘சினிமா விருதுகள்-2020’ நிகழ்ச்சியில், ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வாங்குவதற்காக வந்திருக்கிறேன். உள்ளேயிருந்த பெரிய திரையில் எங்களைக் காண்பித்தவுடன், ரசிகர்கள் உற்சாகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்ய… உள்ளுக்குள் சந்தோஷம். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக எவ்வளவோ வெற்றிகளை ருசித்த பிறகும், 65 வயதிலும் ரசிகர்களின் கரகோஷம் பரவசத்தைத் தருகிறது.

க்யூ டிவி சி.இ.ஓ எங்களை அழைத்துச் சென்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த இளைய தலைமுறை நடிகர்கள் என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று வரவேற்றனர். நாங்கள் முதல் வரிசையில் நடுநாயகமாக அமர்ந்தவுடன், திடீரென்று ரசிகர்களின் சத்தம் அதிகரித்தது. யார் வருகிறார்கள் என்று திரையைப் பார்த்தேன். 90-களின் மலையாளம் மற்றும் தமிழ் முன்னணி நடிகையான யாத்ரா, தன் கணவர் பத்ரியுடன் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தவுடன் இதயம் ஒரு விநாடி ததும்பி அடங்கியது. எத்தனை வயதானாலும், முன்னாள் காதலிகளைப் பார்க்கும்போது மனசுக்குள் ஒரு ஈரக்காற்று வீசிவிட்டுதான் ஓய்கிறது.

இப்போது திரையில் என்னையும் யாத்ராவையும் காண்பிக்க… ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டு விசிலடித்தனர். அடுத்த தலைமுறை வரை எங்கள் காதல் கதை சென்று சேர்ந்தி ருக்கிறது. நான் சங்கடத்துடன் திரும்பி சுமதியைப் பார்த்தேன். சுமதி முகத்தில் எந்த உணர்வுமி ன்றி, திரையில் தெரிந்த எங்களையேபார்த்துக்கொண்ருந்தாள்.

அனைவருக்கும் வணக்கம் சொன்னபடி வந்த யாத்ரா, என்னைப் பார்த்தவுடன் ஒரு விநாடி தயங்கி நின்றாள். யாத்ரா அளவான மேக்கப்பில் தங்கநிறப் பட்டுச் சேலையில், 54 வயதிலும் அழகாகத்தான் இருந்தாள். எத்தனை வயதானாலும் காதலன்களுக்குத் தங்கள் காதலிகள் அழகாகத்தான் தோற்றமளிக்கிறார்கள். அப்போது பத்ரி என்னைப் பார்த்து வணங்க… நான் எழுந்து நின்று வணங்கினேன். 90-களில் நான் டாப் 5 ஹீரோக்களில் ஒருவனாக இருந்தபோது, பத்ரி தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளர். என்னையும் யாத்ராவையும் வைத்தே 3 படங்கள் தயாரித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, துபாயில் ஏதோ பிசினஸில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார். “சஞ்சய்…” என்ற பத்ரி என்னைக் கட்டி அணைத்தபடி, “நல்லாருக்கீங்களா?” என்றார். “நல்லாருக்கேன் பத்ரி… நீங்க?” “ஃபைன்… ஃபைன்…” என்றார். அப்போது யாத்ரா எனக்கு வணக்கம் சொல்ல… நானும் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். அப்போது இருவர் கண்களும் சந்தித்த புள்ளியில் இரண்டு விநாடிகள் அப்படியே நின்றன. அந்த இரண்டு விநாடியில் எங்கள் மூன்றாண்டுக்கால காதல் வாழ்க்கை ஒரு மின்னல் போல் மனதில் ஓடி அடங்கியது.

க்யூ டிவி சி.இ.ஓ எங்களுக்கருகில் காலியாக இருந்த நாற்காலிகளில் அவர்களை அமரச் சொன்னார். பத்ரி என்னருகிலும், யாத்ரா சுமதி அருகிலும் அமர்ந்தனர். சில விநாடிகள் ஓரக்கண்ணால் சுமதியைப் பார்த்துக் கொண்டிருந்த யாத்ரா சிறிது தயக்கத்துடன் சுமதியிடம், “இப்ப உடம்பெல்லாம் பரவா யில்லையா?” என்றாள். திரும்பி யாத்ராவை ஒரு கணம் உற்றுப் பார்த்த சுமதி, “பரவால்ல…” என்றாள். பிறகு இருவரும் கண்களை அகற்றாமல் பல விநாடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.

நட்சத்திரங்கள் - சிறுகதை

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு, ‘பூக்காலம்’ படப்பிடிப்பில், ஊட்டி, எமரால்டு ஏரிக்கரையில் யாத்ராவை முதன்முதலாகப் பார்த்தது நினைவிற்கு வந்தது.

ஊட்டியில் 45 நாள் படப்பிடிப்பு என்பதால், நான் சுமதியையும் என் மூன்று மகள்களையும் அழைத்துக்கொண்டு ஊட்டி சென்றிருந்தேன். காலை ஒன்பது மணியாகியும் பனிப்புகை கலையவில்லை. போதிய வெளிச்சமில்லாததால் இன்னும் ஷாட் வைக்கவில்லை. நான் பனிப்புகைக்கு நடுவே தனியாக அமர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தேன்.அப்போது, “சஞ்சய்… மீட் தி ஃபேமஸ் யாத்ரா…” என்று டைரக்டர் ஸ்டீபனின் குரல் கேட்க… நிமிர்ந்தேன். எதிரேயிருந்த பனிப்போர்வை மெல்ல விலக… பனிக்கு நடுவே தெரிந்த யாத்ராவின் முகத்தைப் பார்த்தவுடன் சிலிர்த்துப்போனது. பனிப்படலத்திற்குள்ளிருந்து யாத்ரா ஒரு சூரியன்போல் பிரகாசத்துடன் ஒளிர்ந்தாள்.

யாத்ரா, மலையாளத்தில் நடித்த முதல் படமான ‘ப்ரணய காலத்து ஓர்மைகள்’ படம் ஹிட்டாக… உடனே டைரக்டர் ஸ்டீபன் எனது படத்திற்கு யாத்ராவை புக் செய்துவிட்டார். யாத்ராவை அந்த மலையாளப் படத்தில் பார்த்தபோதுகூட பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இப்போது நேரில் மேக்கப் இல்லாமல் ஒரு அபூர்வமான இயற்கை அழகுடன் தோன்றினாள். சம்பிரதாயமாக என் காலில் விழுந்து வணங்கிய யாத்ராவை ஆசீர்வதிக்கக்கூடத் தோன்றாமல் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். யாத்ராவின் அம்மா, “சார்… குட்டி நன்னாய்ட்டு வரணும்னு அனுகிரகிக்கணும்” என்று கூறியவுடன்தான் சுய நினைவுக்கு வந்து, “நல்லா இரும்மா” என்று ஆசீர்வதித்துவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னேன்.

யாத்ரா, “ஸ்கூல் டேஸ்லேருந்து நான் உங்களோட பெரிய ஃபேன் சார்” என்றாள். பொதுவாக வயதில் குறைந்த நடிகைகளுடன் நடிக்கும்போது அவர்கள் எப்போதும் சொல்வதுதான் இது. எனவே அதைப் பொருட்படுத்தாமல், “தமிழ் நல்லா பேசுற…” என்றேன். “இங்கதான் ஊட்டி கான்வென்ட்ல படிச்சேன்…” என்றவளின் பேச்சைக் கவனிக்காமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில விநாடிகளிலேயே அவளுடைய அசாதாரணமான அழகின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் அவளைப் படைக்க எடுத்துக்கொண்ட நேரத்தில், முக்கால்வாசி நேரத்தை அவள் கண்களைப் படைக்க மட்டும் செலவழித்திருந்தார். அவ்வளவு அகன்ற விழிகளில் மின்னல்போல் தெரிந்த உயிர்த்துடிப்பு, யாத்ராவின் அழகைப் பன்மடங்கு ஆக்கியிருந்தது.

“சார்… நான் எய்த்து படிக்கிறப்ப முத முதல்ல ஊட்டி ‘அசெம்ப்ளி ஹவுஸ் தியேட்டர்’ல உங்களோட, `விண்ணில் பூத்த மலர்’ பார்த்தேன். அன்னைலேருந்து உங்கள ரொம்பப் பிடிக்கும்” என்றவளை நான் கூர்மையாகப் பார்த்தேன். ரசித்தேன். சிரித்தேன். தினம் தினம் பார்த்தேன். தினம் தினம் ரசித்தேன். தினம் தினம் சிரித்தேன்.சுமதி இருந்த ஒரு வாரம் வரையிலும் அடக்கி வாசித்தேன். சுமதியும், மகள்களும் சென்ற பிறகு யாத்ராவிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். ஷாட் இடைவெளிகளில் நிறைய பேசினோம். சில நாள்களிலேயே, யாத்ராவின் அம்மாவுக்கு ஊட்டி குளிர் ஒத்துக்கொள்ளவில்லை என்று அவரும் கேரளா திரும்பிவிட்டார். 15 நாள் பழக்கத்தில் எங்களிடையே ஒரு இனிய நட்பு வேர் விட்டிருந்தது.

நட்சத்திரங்கள் - சிறுகதை

ஒரு நாள் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் மழை பெய்ய… கெஸ்ட் ஹவுஸிலேயே மழை விடுவதற்காகக் காத்திருந்தோம். நான் சிட் அவுட்டில் தனியாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி வெளியே பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது யாத்ரா கையில் ஒரு பேக்குடன் சிட் அவுட்டிற்கு வந்தாள். “குட்மார்னிங் சார்…” என்று எனக்கு எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்த யாத்ரா, வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். தனது பேக்கைத் திறந்த யாத்ரா, “இன்னைக்கி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்று ஒரு பழைய ஆல்பத்தை வெளியே எடுத்தாள். ஆல்பத்தின் முதல் பக்கத்தில் இருந்த ஒரு பழைய ஃபோட்டோவை யாத்ரா காண்பிக்க… எனக்குள் இன்ப அதிர்ச்சி. ஒரு மரத்திற்குக் கீழ் நாற்காலிகளில் நானும், நடிகை வினோலியாவும், டைரக்டர் பிரதீப்குமாரும் அமர்ந்திருந்தோம்.

மேல் வரிசையில் ஐந்து மாணவிகள் பள்ளி யூனிஃபார்முடன் இருந்தனர். “ஹேய்… இது ‘மேகம்’ படம் ஷூட்டிங்கில்ல?” என்றேன் ஆச்சர்யத்துடன். “ஆமாம்… இந்த ஃபோட்டோல நான் எங்க இருக்கேன்?” என்றாள் யாத்ரா. ஐந்து மாணவிகளுக்கு நடுவே யாத்ராவின் கண்கள் அவளைத் தனித்துக் காட்டின. ``இதோ…” என்றேன் புன்னகையுடன். “அப்ப நான் டென்த் படிச்சுட்டிருந்தேன். உங்களப் பாக்குறதுக்காக ஸ்கூல் கட் அடிச்சுட்டு வந்தோம்” என்ற யாத்ரா அடுத்தடுத்த பக்கங்களைத் திருப்பினாள். ஒரு பக்கத்தில் எனது ஆட்டோகிராப் பேப்பர். மற்ற பக்கங்களில் அன்றைய பத்திரிகைகளில் வந்திருந்த எனது புகைப்படங்களை எல்லாம் வெட்டி ஒட்டி வைத்திருந்தாள். நான் நடப்பதையெல்லாம் நம்பமுடியாமல் பிரமிப்புடன் யாத்ராவைப் பார்த்தேன். ஒரு காலத்தில் எனது தீவிர ரசிகையாக இருந்தவள், இன்று என்னோடு கதாநாயகியாக நடிக்கிறாள். இப்போது யாத்ரா தனது பேக்கிலிருந்து ஒரு மெரூன் கலர் தொப்பியை எடுக்க, நான் அதிர்ந்தேன். “ஏய்… இது…” என்றேன் பரபரப்புடன்.

“உங்க தொப்பிதான்…” “இது ஒரு பணக்கார ரசிகர் கிஃப்ட்டா கொடுத்த தொப்பி. ரொம்ப காஸ்ட்லியான தொப்பி. எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்ப ஷூட்டிங் பிரேக்லல்லாம் இந்தத் தொப்பிய போட்டுக்கிட்டுதான் உக்காந்திருப்பேன். ஊட்டிக்கு ஷூட்டிங் வந்தப்பதான் தொலைஞ்சுபோச்சு…” என்றேன். “தொலையல. நான்தான் திருடிட்டேன். அன்னைக்கி ஃபோட்டோ எடுத்த பிறகு நீங்க நடிக்கப் போய்ட்டீங்க. உங்க சேர்ல தொப்பி தனியா கிடந்துச்சு. உங்க பொருள் எதாச்சும் வேணும்னு தோணுச்சு… நைஸா தூக்கிட்டு வந்துட்டேன்” என்ற யாத்ரா அந்தத் தொப்பியைத் தனது தலையில் அணிந்துகொண்டாள். “அவ்ளோ பிடிக்குமா என்னை?” “ஆமாம். உங்கள விட உங்க ஸ்மைல் ரொம்பப் பிடிக்கும்” என்றவுடன் என் ரசிகைகளைத் தூங்கவிடாமல் அடிக்கும் அந்தத் தனித்துவமான சிரிப்பை உதிர்த்தேன். “தட்ஸ் இட்…” என்ற யாத்ரா சட்டென்று தனது கைவிரல்களை கேமரா போலாக்கி, ஒற்றைக் கண்ணைச் சுருக்கிக்கொண்டு, “க்ளிக்…” என்றாள். தொடர்ந்து யாத்ரா, “உங்க மேல அவ்வளவு பைத்தியமா இருந்த ரசிகை நான். இப்ப உங்களுக்கு ஜோடியாவே நடிக்கிறேன்னவுடனேயே எனக்கு எவ்வளவு த்ரில்லாயிடுச்சு தெரியுமா? அன்னைலேருந்து உங்கள எமரால்டு லேக்ல பாக்குற வரைக்கும் எனக்குத் தூக்கமே வரல…” என்றாள்.சட்டென்று நான், “அதுக்குப் பிறகு எனக்குத் தூக்கம் வரல…” என்றவுடன் யாத்ரா அமைதியானாள். கண்களில் கேள்வியுடன் என்னைப் பார்த்தாள். நான் பேச்சை மாற்றும் விதமாக, “என் தொப்பியத் தா…” என்று கையை நீட்டினேன். “நோ… நோ…” என்று தொப்பியை பேக்கில் வைக்கப்போனாள். உடனே நான், ``யாத்ரா… எனக்கு ரொம்பப் பிடிச்ச தொப்பி அது… தா…” என்று அவள் கையிலிருந்து தொப்பியைப் பறித்துவிட்டேன். சட்டென்று முகம் மாறிய யாத்ரா என் கையிலிருந்து தொப்பியைப் பிடுங்க முயன்றாள். நான் அவளைத் தள்ளிவிட்டு 35 வயதில் சிறு குழந்தை போல் ஓட… யாத்ரா, “சார் ப்ளீஸ்… தொப்பிய தாங்க…” என்று என்னைத் துரத்தினாள்.

நான் சிட் அவுட்டிலிருந்து வெளியே வந்து தோட்டத்தில் மழையில் நனைந்துகொண்டே ஓடினேன். விடாமல் என்னைத் துரத்திப் பிடித்து நிறுத்திய யாத்ரா, “சார்… ப்ளீஸ் தந்துருங்க. அதை நான் எட்டு வருஷமா பொக்கிஷம் மாதிரி வச்சிருக்கேன். தினம் தினம் ராத்திரி அதைப் போட்டுகிட்டு கண்ணாடில பாத்துப்பேன்…” என்றவளின் கண்கள் கலங்கிவிட்டன. நான், “ஏய்… இதுக்குப்போய் ஏன் கண் கலங்குற? வச்சுக்கோ…” என்று தொப்பியை அவள் தலையில்அணிவித்தேன். “தேங்க் யூ சார்…” என்ற யாத்ரா முகத்தில் மழைநீர் வடிய என்னைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவளுடைய பார்வையில் தெரிந்த பிரத்யேக பிரியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நான் கண்களைத் திருப்பிக்கொண்டேன். அன்று முதல் நாங்கள் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டோம். ஊட்டி படப்பிடிப்பின் இறுதிநாள். எங்கள் காட்சியை நடித்து முடித்துவிட்டு நானும், யாத்ராவும் தனியாக பைன் மரக்காட்டில் நடந்துகொண்டிருந்தோம். நாளை முதல் யாத்ராவைப் பார்க்கமுடியாது என்று நினைக்கும்போதே மனதை என்னவோ செய்தது. நான், “யாத்ரா… நாளைக்கி இந்நேரம் நம்ப இங்க இருக்கமாட்டோம்…” என்றேன். யாத்ரா, “ஆமாம்…” என்றபோது எங்கிருந்தோ வந்த அடர்த்தியான பனிப்புகை எங்களைத் தழுவிக்கொண்டது. யாத்ரா குளிரில் நடுங்க… நான் எனது தோளில் போட்டிருந்த பச்சை நிற சால்வையை யாத்ராவின் உடம்பில் போர்த்திவிட்டேன். இப்போது குளிரைத் தாங்கமுடியாமல் எனது உடல் வெடவெடக்க, யாத்ரா சால்வையை எனது தோளிலும் சேர்த்துப் போர்த்தினாள்.

ஒரே சால்வைக்குள் நெருக்கமாக நின்றிருந்த யாத்ராவைப் பார்த்தபடி, “இனிமே உன்னைப் பாக்க முடியாதுன்னு நினைக்கிறப்ப… நெஞ்சு மேல ஏறி யாரோ உக்காந்திருக்கிற மாதிரி பாரமா இருக்கு. உனக்கு?” என்றேன். “எனக்கு…” என்ற யாத்ராவின் தொண்டை அடைத்துப் பேச்சு நின்றது. கண்கள் கலங்கின. சட்டென்று என் தோளில் சாய்ந்த யாத்ரா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்து, “ஏன் சார் என் வாழ்க்கைல வந்தீங்க? ஏன் சார் என்கூட நடிச்சீங்க? என்னால முடியல சார்… முடியல…” என்றவள் சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டாள். கலங்கிப்போன நான், “யாத்ரா…” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டேன். என்னை மேலும் இறுக்கிக்கொண்ட யாத்ரா, “கல்யாணமான ஒருத்தர காதலிக்கக்கூடாதுன்னு புத்தி சொல்லுது. ஆனா மனசு புத்திய ஜெயிச்சுடுச்சு…” என்றவள் சட்டென்று, “ஐ லவ் யூ சஞ்சய்…” என்றாள். அதற்கு மேல் தாங்கமுடியாத நான், “ஐ டூ லவ் யூ யாத்ரா…” என்று யாத்ராவின் உதட்டில் என் உதட்டைப் பதித்தேன்.

மறுநாள் காலை. கெஸ்ட் ஹவுசிலிருந்து நான் காரில் ஏறுவதற்கு முன்பு யாத்ரா, “சஞ்சய்… அந்த ஸ்மைல நான் பாக்கணும்” என்றாள். நான் புன்னகைத்தேன். வழக்கம்போல் யாத்ரா தனது கைவிரல்களை கேமிரா போல் வைத்து, “க்ளிக்…” என்றாள். அந்த ‘க்ளிக்’கை ஒரு பத்திரிகை போட்டோகிராபர் நிஜமாகவே ‘க்ளிக்’ செய்திருந்தார்.

மறு வாரம் ஒரு பிரபல வார இதழில் அந்தப் புகைப்படம் அட்டைப்படமாக வந்தது. என் கண்களிலும், யாத்ராவின் கண்களிலும் எங்கள் காதல் அப்பட்டமாகத் தெரிந்தது. கவர் ஸ்டோரியாக, “சஞ்சய்குமார்-யாத்ரா காதலா?” என்று எழுதியிருந்தார்கள். வீடு ரணகளமானது.

அதன் பிறகு என் வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான மூன்று ஆண்டுகள். தொடர்ந்து பத்திரிகைகளில் எங்கள் காதல் குறித்து எழுதினார்கள். நாங்கள், “அதெல்லாம் பொய்…” என்று சொல்லிக்கொண்டே வெகு உண்மையாகக் காதலித்துக்கொண்டிருந்தோம். மூன்று ஆண்டுகளில் இருவரும் சேர்ந்து எட்டுப் படங்களில் நடித்தோம். எங்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆக, நாங்கள் நடித்த அத்தனை படங்களும் ஹிட்.

சுமதி எங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு திடீர் திடீரென்று விசிட் அடித்து கலாட்டா செய்தாள். ஒரு படப்பிடிப்பில் யாத்ராவிடம், “இனிமே நீ என் புருஷன்கூட நடிக்கக்கூடாது…” என்று சொல்ல… யாத்ரா, “அதை உங்க ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லுங்க…” என்று கூறிவிட்டாள்.

நாள்கள் செல்ல… சுமதி என்னிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டாள். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் என் மகள்கள் என்னிடமிருந்து விலகியதுதான் மிகவும் வலித்தது. இருப்பினும் ஒரு மழைக்காலத்து அருவி போல் எங்கள் காதல் பெருகிக்கொண்டேயிருந்தது. சுமதியை டைவர்ஸ் செய்துவிட்டு யாத்ராவைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று யோசித்தேன். இதை யாத்ராவிடம் சொன்னதும், யாத்ராவின் காதல் பன்மடங்கு பெருகியது. சொல்லிவிட்டேனே தவிர, மகள்களை நினைத்து இறுதி முடிவை எடுக்கவில்லை.

ஒரு ஜூலை மாதத்தில் நானும், யாத்ராவும் பம்பாய் சென்று பிலிம்பேர் விழாவில் விருது வாங்கிக்கொண்டு, ஒரே விமானத்தில் சென்னை திரும்பினோம். சென்னை ஏர்போர்ட் வாசலில் நாங்கள் ஜோடியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அங்கு புயல் போல் வந்த சுமதி, “இவளும் உங்க கூட பம்பாய் வரான்னு ஏன் என்கிட்ட சொல்லல, தனியா ஜோடியா போய்ட்டு வர்ற அளவுக்கு வந்துடுச்சா?” என்று கத்தினாள். சுற்றிலும் பார்த்த நான், “சுமதி… ப்ரஸ்ஸெல்லாம் இருக்கு. எதா இருந்தாலும் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்…” என்றேன் மெதுவாக. “எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே…” என்றவள் பத்திரிகையாளர்களை நோக்கி, “நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க. யாத்ரா… பாப்புலர் நடிகை. மூணு பொம்பளப் பிள்ளைங்கள பெத்தவரோட ஊர் மேய வெக்கமா இல்ல?” என்று கேட்டவுடன் யாத்ரா கொந்தளித்துவிட்டாள்.

“வார்த்தைய அளந்து பேசுங்க… நான் மட்டும் உங்க புருஷனக் காதலிக்கல. உங்க புருஷனும்தான் என்னைக் காதலிக்கிறாரு…” என்று யாத்ரா ஆவேசத்துடன் கூற… மொத்த இடமும் அமைதியானது. நான், “யாத்ரா…” என்று பல்லைக் கடித்தபோதுதான் கவனித்தேன். சற்றுத் தள்ளி என் மூன்று மகள்களும் நின்றுகொண்டிருந்தார்கள். “நீங்க யாத்ராவ காதலிக்கிறீங்களா சார்?” என்று பத்திரிகையாளர்கள் சேர்ந்தாற்போல் கேட்டனர். நான் திரும்பி யாத்ராவைப் பார்த்தேன். யாத்ராவின் கண்களில் ஒரு இறைஞ்சல் இருந்தது. திரும்பி என் மகள்களைப் பார்த்தேன். இப்போது மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி அழுதுகொண்டிருந்ததைப் பார்க்க சகிக்கவில்லை. சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு நான் சட்டென்று, “யாத்ரா கோபத்துல சொல்றாங்க. நான் யாத்ராவ காதலிக்கல…” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று என் மகள்களை நோக்கி நடந்தேன். பின்னால் யாத்ரா பெரிதாக அழும் சத்தம் கேட்டது.

அன்றிலிருந்து யாத்ரா என்னைப் பரிபூர்ணமாக வெறுத்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்த படங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு யாத்ராவிற்கு இறங்குமுகம்தான். நான்கைந்து ஆண்டுகள் கண்ட படங்களில் நடித்துவிட்டு ஓய்ந்தாள். எங்கள் விஷயமெல்லாம் தெரிந்தும் தயாரிப்பாளர் பத்ரி யாத்ராவைக் காதலிப்பதாகச் சொன்னார். உடனே யாத்ரா பத்ரியைத் திருமணம் செய்துகொண்டு திரை வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டாள். துபாயில் பத்ரியுடன் செட்டிலானாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் யாத்ராவைப் பார்க்கிறேன்.

இரவு 11 மணிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற என்னை அழைத்த அறிவிப்பாளர், “திரு. சஞ்சய்குமாருக்கு விருதை அளிக்க இருப்பவர்…” என்று சற்று இடைவெளி விட்டு, “யாத்ரா” என்று கூற… அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திரும்பி யாத்ராவைப் பார்த்தேன். யாத்ரா பத்ரியைப் பார்க்க… பத்ரி புன்னகையுடன், “போ…” என்பது போல் தலையை ஆட்டினார். சுமதியும் என்னைப் பார்த்து, “போங்க…” என்றாள். நானும் யாத்ராவும் சேர்ந்தாற்போல் மேடையேறினோம். யாத்ரா எனக்கு விருதை அளித்தபோது, நேரு உள் விளையாட்டரங்கம் அதுவரையிலும் சந்தித்திராத கரகோஷத்தைச் சந்தித்தது.

விழா முடிந்து அனைவரும் வெளியேறிய பிறகு, கடைசியாக நானும் சுமதியும் அரங்கிலிருந்து வெளியே வந்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. எங்கள் காரருகில் குடையோடு காத்துக்கொண்டிருந்த யாத்ராவைப் பார்த்தவுடன் நானும் சுமதியும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டோம். சற்று தள்ளி ஓரமாக நின்று பத்ரி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் வேகமாக வந்த யாத்ரா சுமதியின் தலைக்கு மேல் குடையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அப்போது யாத்ரா சில விநாடிகள் என்னைப் பார்த்த பார்வையில், அந்தப் பழைய காதல் மின்னிவிட்டுச் சென்றது. இருவரும் சேர்ந்து சுமதியை காரில் ஏற்றினோம்.

நட்சத்திரங்கள் - சிறுகதை

மழை இப்போது மேலும் அதிகரிக்க… யாத்ரா காருக்குள் ஏறினாள். சுமதி சீட்டில் போட்டிருந்த டவலை எடுத்து யாத்ராவிடம் நீட்டினாள். யாத்ரா தலையைத் துவட்டிவிட்டு சுமதியைப் பார்த்து, “க்யூ டிவில என்னை கான்டாக்ட் பண்ணி `சஞ்சய் சாருக்கு விருது தரப்போறோம். நீங்களும் வந்தா நல்லாருக்கும்’னு சொன்னவுடனே ஒத்துக்கிட்டேன். ஏன்னா உங்கள்ட்ட ஒண்ணு கேக்கணும்னுதான் வந்தேன்…” என்று கூற… சுமதி அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். சில விநாடிகள் மௌனமாக காருக்கு வெளியே பெய்த மழையைப் பார்த்த யாத்ரா பிறகு திரும்பி சுமதியைப் பார்த்து, “அன்னைக்கி நான் சஞ்சய் சாரக் காதலிச்சது ரொம்பப் பெரிய தப்பு. இன்னைக்கி நான் ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மாவா யோசிக்கிறப்ப… பத்ரி யாராச்சும் லேடிகிட்ட சிரிச்சுப் பேசினாலே, ‘என்னமோ… ஏதோ’ன்னு கவலைப்படுற மனைவியா யோசிக்கிறப்ப… நான் பண்ணுனது எவ்ளோ பெரிய பைத்தியக்காரத்தனம்னு தெரியுது. நடந்த எல்லாத்துக்கும் என்னை நீங்க மன்னிக்கணும்…” என்றாள் கண்கள் கலங்க.

சில விநாடிகள் யாத்ராவை உற்றுப் பார்த்த சுமதி அவள் கையைப் பிடித்துக்கொண்டு புன்னகையுடன், “அதுக்கெல்லாம் அவசியமில்ல யாத்ரா. ஏன்னா, அப்ப நீ வேற ஒரு பெண்ணா இருந்த…” என்றவுடன் நான் அசந்துபோனேன். தொடர்ந்து சுமதி, “நானும் உன்னை அந்த அளவு அசிங்கப்படுத்தியிருக்க வேண்டாம். யாருக்கும் தெரியாம ஒரு ரூமுக்குள்ள பேசி முடிச்சிருக்கலாம். செய்யல. ஏன்னா, அப்ப நானும் வேற ஒரு பெண்ணா இருந்தேன். இப்ப அறுபது வயசுக்கு மேல கிட்னி ஃபெயிலியராயி, வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணிகிட்டு… ஸ்ட்ரோக்கெல்லாம் வந்து நடக்க முடியாமப் போன பிறகு, அன்னைக்கி நான் பண்ணுனதெல்லாம் ரொம்ப ஓவரா தோணுது” என்றாள். “ஆனா, அப்ப நீங்க அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்றாள் யாத்ரா. “எஸ்… ஆனா இப்ப நாம இப்படித்தான் இருக்கணும்” என்ற சுமதி யாத்ராவைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டாள். “தேங்க்ஸ்கா…” என்ற யாத்ரா சுமதியை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். நான் கண்கள் கலங்க இருவரையும் பார்த்தேன். இப்போது சுமதியும் யாத்ராவும் என்னைவிட மகா பெரிய நட்சத்திரங்களாக உச்சி வானில் ஜொலித்தார்கள்.