சினிமா
தொடர்கள்
Published:Updated:

பூட்டு - சிறுகதை

பூட்டு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
பூட்டு - சிறுகதை

- தங்கர் பச்சான்

நாள்கள் உருண்டோடுவதில் எந்த மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போல் பொழுது விடிகின்றது. பகல்பொழுது கழிகின்றது. இரவு நகர்கின்றது. சங்கமித்திரன் மற்ற நாள்கள் போல் இல்லாமல் இன்று யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தார். சிறை அதிகாரியிடமிருந்து இருமுறை அழைப்பு வந்திருந்தது. மனம் மட்டுமல்ல, உடலும் ஒத்துழைக்க மறுத்தது. காய்ச்சலும் இருமலும் உடலை வருத்தினாலும் மருந்து உட்கொள்ள மனமின்றி மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தார்.

தனது அறைக்கு எதிரிலேயே இருக்கின்ற இந்த மரத்தில் மட்டும் அப்படி என்னதான் சிறப்போ தெரியவில்லை. கிளைகள் அடந்த மரம் எனவும் கூற முடியாது. ஆனால் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு இந்த மரம்தான் வீடு. மாலை ஆறு மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகிற சத்தம் சில நாள்களில் அடங்குவதற்கு இரவு பத்து மணிக்கு மேல்கூட ஆகிவிடும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பார்த்துக்கொண்டிருப்பதால் சில பறவைகளை மட்டும் சங்கமித்திரன் அடையாளம் கண்டுவிடுவார். எதற்காக இவை காரணமில்லாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றன என நினைத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் காரணம் புரிந்தது.

தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தனக்கு நெருக்கமான பறவைகளுக்கும் சேர்த்து இடம் பிடிக்க முயலும்போதும் மட்டுமே அவை அதிக சத்தமிட்டுக் கத்துவதைக் கண்டுபிடித்தார். உறக்கத்தை இழந்து இரவைக் கடக்க முயலும் மனிதர்கள் போலவே சில பறவைகளும் இரவைக் கடக்க முடியாமல் அவ்வப்போது கத்திச் சத்தமிடும். தனது இடத்தை வேறொரு பறவை எடுத்துக்கொண்டதற்காகவா, உடல்நலம் சரியில்லாததாலா, போதுமான உணவு கிட்டாமல் வயிற்றுப் பசியுடன் இருப்பதாலா என புரியாமல் சங்கமித்திரன் அரைத் தூக்கத்துடனேயே இரவுகளைக் கடத்துவார்.

சிறையின் துணை அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. இனிமேலும் தாமதிக்கக்கூடாது என எண்ணியதால் அவரைச் சென்று பார்த்தார். அவர் பேசுவதற்கு முன்பாகவே என்ன பேசுவார் என்பது புரிந்தது. அவர் நினைத்தது போல்தான் துணை அதிகாரி கேட்டார்.

“ஏங்க இப்பிடிப் பண்றீங்க? போங்க, டாக்டர் போயிடுவாரு. பாத்துட்டு, போய் சாப்புட்டு வாங்க. முக்கியமான ஒருத்தர் ஒங்களப் பாக்கணுன்னு சொல்றாரு. மூணு மணிக்கெல்லாம் வந்துடுவாரு” என்றார் துணை அதிகாரி.

எதற்காக அவர் வருகிறார், என்ன கேட்டார் என்பது புரிந்ததால் பதில் பேசாமல் சங்கமித்திரன் நின்றிருந்தார்.

“எனக்கு வேண்டியவர்னு நெனைச்சிக் காதீங்க. ஜெயிலர் சாரோட ரிலேஷனாம். இத கட்டாயம் பண்ணிக் குடுக்கச் சொன்னாரு.”

சங்கமித்திரனால் பதில் கூறாமல் இருக்க முடியவில்லை. அவர் தவறாக நினைக்காத அளவிற்குப் பக்குவமாகக் கூறினார். “சாரி சார்… என்னை கம்ப்பல் பண்ணாதீங்க.”

இந்த நேரத்தை நழுவவிடக்கூடாது எனத் துணை அதிகாரி நினைத்தார். எழுந்து சென்று அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு வந்து அவரின் எதிரில் நின்றார்.

“இங்க பாருங்க சார்… இதுவரைக்கும் செஞ்சதுல ஏதாச்சும் பிரச்னை இருக்கா? நாங்க எல்லாரும் எவ்வளவு கவனமா ஒங்களப் பாத்துக்கறோம். ஒங்கள என்னைக்காச்சும் யாராச்சும் கைதி மாதிரி நடத்தியிருக்கோமா? எதை எதையோ செய்யற நாங்க இதச் செய்ய மாட்டோமா? இதச் செய்யறதால ஒங்களுக்குப் புண்ணியந்தான் கெடைக்கும். இந்த ஒரே ஒரு தடவ இதச் செஞ்சி குடுங்க. அதுக்கப்பறம் நாங்க கஷ்டப்படுத்த மாட்டோம்.”

பூட்டு - சிறுகதை

இதைச் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றவுடனேயே சங்கமித்திரனுக்குக் கடுங்கோபம் வந்தது. காண்பித்துக் கொள்ளாமல் நின்றிருந்தார். காய்ச்சல் அதிகமாக இருப்பதை உணர்ந்ததால் நிற்க முடியாமல் நின்றிருந்தார். கோபத்தைத் தணிக்க இருமிக்கொண்டார்.

அதற்கு மேலும் பேசுவதற்கு அவருக்கு விருப்பமில்லாமல் சங்கமித்திரனை முறைத்துப் பார்த்தார்.

“கொற காலத்த நீங்க நிம்மதியா கழிக்கணும் சார். எனக்கு ஒண்ணுமில்ல. நான் டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடுவேன். ஜெயலரப் பத்தி நான் சொல்லாமலேயே தெரியும். புரிஞ்சிக்குங்க… மொதல்ல போய் டாக்டரப் பாத்துட்டு சாப்புடுங்க. ஒங்களுப் புடிச்ச ஓட்டல்லேருந்தே சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.” இவ்வாறு சொல்லிக்கொண்டே துணை அதிகாரி கதவருகே சென்று நின்றுகொண்டு கூறினார்.

“என்ன பாக்குறீங்க. ஏங்கிட்ட சொல்லச் சொன்னத நான் சொல்லிட்டேன். அப்பறம் ஒங்க இஷ்டம். கூப்படாமலேயே மூணு மணிக்கி இங்க வந்துடுங்க.”

கண்டிப்பான குரல் மட்டுமல்ல, பார்வையும் கடுமையானதாக இருந்தது. தாழ்ப்பாளைத் திறந்து சங்கமித்திரனை வெளியில் அனுப்பிவிட்டுப் போய் அதே இடத்தில் உட்கார்ந்துகொண்டார்.

101 டிகிரி காய்ச்சலை சங்கமித்திரன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது சிறை மருத்துவருக்கு வியப்பாக இருந்தது. தன்னைப் போன்றே சங்கமித்திரனும் ஒரு மருத்துவர் என்பதால் மட்டுமல்ல, உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறைக்குள்ளேயே வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி அவர்மீது கழிவிரக்கம் ஏற்பட்டிருந்தது.

பெஞ்ச்சில் படுத்துக் கொண்டிருந் தவருக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துக்கொண்டே கேட்டார்.

“சொன்னா கேக்க மாட்றீங்களே சார். அப்பீல் ஃபைல் பண்ணினீங்கன்னா கட்டாயம் இந்த கேஸ்லேருந்து வெளிய வந்துடுவிங்க. இத நான் மட்டும் சொல்லல. ஏதோ பேட் டைம், இப்பிடி நடந்துடுச்சி.” மருத்துவத்திற்காக அங்கு வந்திருந்த மற்ற கைதிகளும் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சங்கமித்திரன் எப்பொழுது உறங்கினார் என்பது தெரியவில்லை. சோதனைக்காகப் பார்வையிட வந்திருந்த துணைக் கிளைச்சிறை அதிகாரி, அவர் உறங்குவதைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

சென்னை அமைந்தகரையில் எப்பொழுதுமே நோயாளிகள் நிறைந்திருக்கும் மருத்துவமனையின் உரிமையாளராகவும், பொது நல மருத்துவராகவும் இருந்த சங்கமித்திரன் மக்களுக்கு நெருக்கமான மருத்துவராக விளங்கினார். பணம் இல்லை எனச் சொன்னாலும் மருத்துவம் செய்து அனுப்பி வைப்பவராக இருந்ததால் அனைவருக்கும் பிடித்தவராக அவர் இருந்தார். வீட்டிற்குச் சென்று நேரத்தைப் போக்குவதற்குப் பதிலாக மருத்துவமனையிலேயே இருந்து விடலாமென இருந்துவிடுவார். குழந்தைப் பேறு இல்லாததை நினைத்து அடிக்கடி வருந்துவார். இவரைக் காட்டிலும் மனைவிக்கு அதுகுறித்துப் பெருங்கவலை இருந்தது. இருவருக்கும் பேச்சும் உரையாடலும் குறைந்திருந்தது.

எதற்காக அன்றைக்கு அந்தச் செய்தியை மனைவியிடம் பகிர்ந்துகொண்டோம் என நினைத்து பின்நாள்களில் வருந்தினார். கூர்மையான அறிவில்லாதவராக மனைவி இருந்தாலும், அவர் கூறியதைக் கேட்டவுடன் அச்சத்தால் பதைபதைத்துப்போனாள். அவள் பயந்தது போவே பின்னாளில் அவ்வாறு நடந்து முடியும் என சங்கமித்திரன் நினைத்துப் பார்க்கவில்லை.

மாரியப்பன் அவருடைய மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் சங்கமித்திரனிடம் தனிமையில் தன் மனதில் உள்ளதைக் கூறி உதவி கேட்கலாம் என நினைத்ததுண்டு. சுற்றி ஆட்கள் இருந்ததால் அதற்கான சூழல் அன்று வரை அமையவில்லை. தன்னுடைய ஆட்டோவில் அவர் பயணிக்கப் போகிறார் என்பதை மாரியப்பன் எப்பொழுதுமே நினைத்துப் பார்த்ததில்லை.

மருத்துவமனை ஊழியர் ஆட்டோ வேண்டும் எனக் கேட்டபொழுது நண்பனிடத்தில் கெஞ்சிக்கேட்டு அனுமதி வாங்கிய பின்தான் மாரியப்பன் வந்தான். அன்றைய நாளின் கடைசி நோயாளியை அனுப்பியபின் சங்கமித்திரன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். எங்கே செல்ல வேண்டும் என அவன் கேட்பதற்கு முன்பாகவே “நான் சொல்ற எடத்துக்கு மொதல்ல போ” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.

மதுக்கடை மூடுகின்ற நேரம். ஆட்டோவை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கப் போனவரை இறங்க விடாமல் மாரியப்பன் தடுத்து நிறுத்தி, ‘என்ன வேண்டுமோ அதை நான் வாங்கி வருகிறேன்’ எனக்கூறி வாங்கி வந்து கொடுத்தான். மதுப் புட்டியை வாங்கி வந்தவன் கொறிப்பதற்குத் தின்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததுடன் ஆளரவம் குறைந்த இடத்தில் நிறுத்தி வசதி ஏற்படுத்தித் தந்தான்.

மன அமைதிக்காக ஏங்கும் மருத்துவர் சங்கமித்திரனுக்கு மாரியப்பனின் தோற்றமும் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அவன்மீது நெருக்கத்தை ஏற்படுத்தியது. மாதத்திற்கு இரண்டு மூன்று நாள்கள்கூட இவ்வாறான சந்திப்புகள் நிகழ்ந்தன. மழைக்காலத்தில் ஒரு நாள்தான் இது நிகழ்ந்தது. ஆட்டோ நிறுத்தத்தில் மாரியப்பன் மட்டும் ஆட்டோவை நிறுத்தியிருந்தான். ஒரு வார காலமாகவே அவனுக்கு மனது சரியில்லை. இரவில் படுத்துறங்க வேறிடம் இல்லாததால்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

உயிரோடு வாழும் ஒவ்வொரு நாளையுமே தண்டனைக் காலமாகத்தான் நினைத்திருந்தான். மழைச்சாரலில் நனைந்தபடி ஆட்டோவின் உள்ளே படுத்திருந்தவனை மருத்துவமனை ஊழியர் மருத்துவர் அழைப்பதாக வந்து அழைத்தார். எப்பொழுதும் பேசிக்கொண்டு வரும் மாரியப்பன் அன்றைக்குப் பேசாமல் வருவது சங்கமித்திரனை ஏதோ செய்தது. அவனிடம் பேச வேண்டும்போல் தோன்றியதால் மதுக்கடைகளைத் தேடினார். நேரம் முடிந்து போனதால் அனைத்துக் கடைகளும் மூடியிருந்தன. ஆட்டோவை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மாரியப்பன் எங்கோ போனான். திரும்பி வந்தவன் மதுப் புட்டியுடனும் தின்பண்டங்களுடனும் திரும்பி வந்தான்.

அப்பொழுதும் அவன் பேசாததை உணர்ந்த சங்கமித்திரன் உரிமையுடன் அவனிடம் பேசினார். எத்தனையோ நாள்களாக மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு கேட்பதற்குத் தயங்கிய மாரியப்பனுக்கு இந்த வாய்ப்பு இறைவன் தனக்காக உருவாக்கியதாக உணர்ந்தான்.

“என்னப்பா ஒன் பிரச்சின” என ஒரே ஒரு சொல்தான் கேட்டார். “எனக்கொரு பிரச்சின சார். ரொம்ப நாளா இத ஒங்ககிட்ட கேக்கணுன்னு நெனைச்சேன். ஏதாச்சும் தப்பாயிடுமோன்னு நெனைச்சி கேக்காமயே இருந்துடுவேன்.”

மாரியப்பன் அப்படி என்ன கேட்கப் போகிறான் என நினைத்ததால், அவனது தோளில் கை போட்டு சங்கமித்திரன் கேட்டார்.

“என்னப்பா ஒம் பிரச்சின, சொல்லு.”

அதற்குப் பிறகும் கேட்காமல் இருக்கக்கூடாது என நினைத்து உடனே கேட்டுவிட்டான்.

“என் வீடு பக்கந்தான் சார். ஒரே ஒரு தடவ நீங்க அங்க வரணும்.”

எதற்காக வீட்டுக்கு வரச் சொல்கிறான் என அவருக்குப் புரியவில்லை. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “மழை நிக்கட்டும். போவலாம்.”

அதன்பின் மீதி இருந்த மதுவை வேகவேகமாகக் குடித்தார். மழை நின்றிருந்தது.

பூட்டு - சிறுகதை

வீட்டின் எதிரில் ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அவருக்குத் தோன்றியது. “குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றது தப்பில்லையா?”

ஆட்டோவை விட்டுக் கீழிறங்காமல் சங்கமித்திரன் கேட்டார்.

“ஒன்னும் பிரச்சின இல்ல சார். எல்லாரும் தூங்கிருப்பாங்க.”

மாரியப்பன் வேகவேகமாக இரண்டாவது மாடிக்கு ஏறி, கதவருகே சென்று தட்டுவதற்குள் அவன் அம்மா வந்து கதவைத் திறந்தாள்.

வீட்டினுள் இருந்த சில நிமிடங்களுக் குள்ளாகவே சங்கமித்திரன் அவனது நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்டார். மகிழ்ச்சி என்பதையே அனுபவிக்காத வீடும், அவனது குடும்பத்தினரின் முகங்களும் அவரை என்னவோ செய்தன. நடக்க இயலாமல் இரண்டு கால்களும் துவண்டு கிடக்கும் மாரியப்பனின் அருமைத் தங்கை, ஓரமாக இருந்துகொண்டு அவர்கள் பேசுவதைக் கவனித்தாள். எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் எனும் நிலையிலிருந்த அரசுக் குடியிருப்பு வீடு, மாரியப்பன் கூற நினைத்த அனைத்துக் கதைகளையும் சொன்னது.

எப்பொழுது வேண்டுமானாலும் விடை பெற்றுக்கொள்ளலாம் எனும் நிலையிலிருந்த அவன் அப்பாவின் அறைக்குள் அழைத்துச் சென்று காண்பித்தபொழுது இருவருமே பேசிக் கொள்ளவில்லை. இருண்டு குழிவிழுந்து ஒளியிழந்த அவரது கண்கள், பாதி உறக்கத்தில் இருந்த நிலையில் சங்கமித்திரனைப் பார்த்தன. எப்பொழுதோ படுக்கையில் விழுந்துவிட்ட அவரைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கருவிகளும், கலைந்து கிடந்த மருந்து, மாத்திரைகளும் மாரியப்பன் கூற வந்ததை அவருக்கு உணர்த்தின.

அப்பாவை வைத்துக்கொண்டு எதையும் பேச வேண்டாமென மாரியப்பன் அவரை வெளியில் அழைத்து வந்துவிட்டான். யார் இவர், எதற்காக இங்கே அழைத்து வந்து காண்பிக்கிறான் என அம்மாவுக்கும் தங்கைக்கும் புரியவில்லை. ஆட்டோவினுள் உட்கார்ந்த பின்தான் மனதில் உள்ளதைக் கொட்டினான். பதின்மூன்று ஆண்டுகளாகப் படுக்கையில் விழுந்துவிட்ட அப்பா, திருமணமாக வேண்டிய வயதில் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போன தங்கை, இந்த நரக வாழ்க்கை வேண்டாமென தப்பித்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட அண்ணன், முப்பத்தாறு வயதான பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் அன்றாட வாழ்க்கைச் செலவுக்காகக் குடும்பத்தின் முழுச் சுமையையும் சுமந்துகொண்டு அல்லும் பகலும் போராடும் வாழ்க்கை என முழுவதையும் சொல்லச் சொல்ல அவனையும் அறியாமல் கண்கலங்கிவிட்டான்.

தன்னிடம் பண உதவிதான் எதிர்பார்க்கிறானோ என நினைத்தவரை மாரியப்பன் தெளிவுபடுத்தினான். சிறுநீரகம் பழுதடைந்ததால் மாதம் இருமுறை டயாலிசிஸ் என்று இருந்தது இப்போது வாரம் இருமுறையாகிப் போனது. இரண்டாவது மாடியிலிருந்து அப்பாவை இறக்கி ஏற்றி மருத்துவனைக்குக் கொண்டு சென்று வருவது என தனது துயரநிலை குறித்துக் கூறினான். சம்பாதிக்கின்ற பணம் முழுவதுமே அப்பாவின் மருத்துவச் செலவுக்கே பற்றாக்குறையாக இருப்பதையும், மேற்கொண்டு குடும்பத்தின் எதிர்காலம் என்ன நிலைமைக்குப் போகுமோ என்பது தெரியாமல் நிலை தடுமாறி நிற்பதையும் கூறி முடித்தான்.

மருத்துவர் என்கின்ற முறையில் சங்கமித்திரனிடமிருந்து மாரியப்பன் எதிர்பார்ப்பதெல்லாம் அப்பாவுக்கு நிரந்தரமான அமைதியைத் தருவது குறித்துதான். அதை மட்டும் அவர் செய்துவிட்டால் பெரும் சுமை குறையும்.

அப்போதைக்கு அவர் அவனிடம் எவ்வித பதிலையும் கூறவில்லை. எப்போதும் போல் காலங்கள் உருண்டோடின. எப்பொழுதாவது அவன் ஆட்டோவில் அவர் பயணம் மேற்கொள்ளுவார். ஆனால் இருவருமே அதுகுறித்துப் பேசிக்கொள்ளவில்லை. அவசரப்பட்டுக் கூறியதால் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டோமோ என மாரியப்பன் நினைத்தான். அதனால்தான் அதுகுறித்து மட்டும் அவரிடம் பேசாமல் தவிர்த்தான்.

தாங்கள் பட்டினியில் கிடந்தாலும் அப்பாவின் உயிரைக் காப்பாற்றி அவரை நல்லவிதமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தனக்கான வாழ்வு குறித்துகூட அவன் கவலைப்படாமல் காப்பாற்றி வந்தான். ஒவ்வொரு முறையும் டயாலிசிஸ் செய்யக் கொண்டு வருவதற்காக அக்கம்பக்கத்தில் ஆட்கள் பிடித்து இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறக்கிப் பின் ஏற்றிப் படுக்கையில் படுக்க வைப்பதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இப்பொழுது வாரத்திற்கு மூன்று முறை என்றாகியதும் அவனால் சமாளிக்க முடியவில்லை.

அன்றைக்கு அப்பாவை மாடியிலிருந்து தூக்கிக் கீழே இறக்கி ஆட்டோவில் உட்கார வைப்பதற்காக காலையிலிருந்து ஒருவரும் கிடைக்காததால் சோர்ந்துபோனான். எவ்வளவு காலத்துக்குத்தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவுவார்கள். அன்றைக்கு ஒருவரும் வீட்டில் இல்லாததுடன், இருந்த ஒன்றிரண்டு பேரும் சாக்குப் போக்குக் காரணங்களைக் கூறி நழுவிக் கொண்டார்கள். என்ன ஆனாலும் ஆகட்டும் என இறுதியாக மாரியப்பன் மட்டுமே தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அரும்பாடுபட்டு இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வந்தான். அம்மா மட்டும் கைகால்களைப் பிடித்துக்கொண்டு சிறு உதவிபுரிந்தாள். தன்னால் மகன் படும் இன்னல்களையும் துயரத்தையும் அவன் அப்பாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அவரால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.

இரவு படுக்கைக்குப் போகும்போது அம்மா சொன்னாள். “என்னால நீ படற பாட்ட பாக்க முடியலப்பா. அந்த டாக்டருகிட்ட மறுபடியும் பேசிப் பாத்தா என்ன? இதுக்கப்பறமும் நீ அவர வச்சிக்கிட்டு கஷ்டப்பட வேணாம். ஒன்னால முடியலன்னா நானே வேணுன்னாலும் கேக்கறேன்.” யாருக்கும் கேட்காதபடி தன் அருகில் வந்து அம்மா அழுதுகொண்டே அவ்வாறு சொன்ன பிறகு மருத்துவரிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுவிட முடிவு செய்தான். தாயும் மகனும் பேசிக்கொண்டதை, படுக்கையில் கண்ணீர் வழிய படுத்துக்கொண்டிருந்த அப்பாவும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

மறுநாள் காலையில் தூங்கி எழுந்தபின் மருத்துவமனைக்கே நேராகச் சென்று முதல் ஆளாகக் காத்திருந்து மருத்துவரைச் சந்தித்து அவர் மறுத்து மறுசொல் கூறாதபடி தன் நிலைமையை விளக்கினான். பெற்ற மகனே அப்பாவைக் கொல்லச் சொல்லும் செயலாகவே சங்கமித்திரனுக்கு அது தோன்றியது. மாரியப்பனின் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது சரி எனத் தோன்றினாலும் ஒரு மருத்துவரின் பார்வையிலிருந்து மிகவும் தவறான செயல் என்பதை அவனுக்குப் புரிய வைக்க அவரால் இயலவில்லை. தன் மனசாட்சிக்கு அது சரியில்லை எனத் தோன்றினாலும் அவனிடம் ‘தன்னால் செய்ய முடியாது’ எனச் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போதைக்கு “கொஞ்ச கால அவகாசம் கொடு” என மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.

மாரியப்பன் நினைத்துப் பார்க்காத நாளில்தான் அது நடந்தேறியது. ஊர் அடங்கிய பின் மதுபோதை மனதுக்குக் கொடுத்த துணிச்சலுடன் மாடிப்படிகளை ஏறிக் கடந்து சென்று கதவைத் தட்டினார். மாரியப்பன் அவருடைய வருகையை எதிர்பார்க்காததால் செய்வதறியாது தவித்தான். அப்பாவின் அறைக்குள் சென்ற இருவரும் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபொழுது உறக்கமில்லாத அம்மாவும் தங்கையும் இருவரையும் முறைத்துப பார்த்தார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்கு மேலும் சங்கமித்திரன் அங்கு நிற்கவில்லை.

அதற்குப் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆறேழு மாதங்கள் கடந்திருக்கும். உடல்நலமற்றிருந்த அம்மாவுடன் மாரியப்பன் மருத்துவமனைக்கு வந்திருந்தான். எப்பொழுதுமில்லாதபடி இருவரின் முகத்திலும் மாற்றம் இருந்ததை சங்கமித்திரன் கவனித்தார். மருத்துவம் முடிந்து போகும்போது மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க விரும்புவதாகவும் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் அம்மா கூறினாள். அதன்பின் மாரியப்பன் கண்களில் படவே இல்லை. சங்கமித்திரனின் நினைவிலிருந்து மாரியப்பன் மறைந்தே போனான்.

காய்ச்சல் குறைந்திருந்தது. சாப்பிடும்முன் ஈ, எறும்புகளுக்கும் பறவைகளுக்கும் உணவை எடுத்து வைத்தபின்தான் சங்கமித்திரன் சாப்பிடுவது வழக்கம். உடனிருந்து கவனித்துக் கொள்ளும் சிறைவாசி தனபால் கஞ்சி ஆறிப் போவதைக் கூறி, சாப்பிடும்படி துரிதப்படுத்தினான். கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்கும் முன் கஞ்சிக்குள் கைவிட்டுச் சோற்றுப் பருக்கைகளைப் பீராய்ந்து அள்ளி எடுத்து எப்பொழுதும் வைக்கும் மரத்தின் வேர்ப்பகுதியிலேயே வைத்தார். தொட்டுக் கொள்வதற்காக குழம்பில் கிடந்த கத்தரிக்காயை, காய்ந்த வாதாம் மரத்தின் இலையில் தனபால் எடுத்து வைத்திருந்தான்.

சிறை அதிகாரி வந்துவிட்டதாகவும் உடன் அழைத்து வரும்படி சொன்னதாகவும் சிறைக்காவலர் சொல்லிவிட்டுக் காத்திருந்தார். போவதா வேண்டாமா என மனம் நிலையின்றித் தவித்தது. சங்கமித்திரனின் தவிப்பைப் புரிந்துகொண்ட தனபால் அவருக்குக் கேட்கும்படி மட்டும் கூறினான்.

“ஆதாயம் இல்லாம பாசம் வைக்க மாட்டாங்களே! இந்த நாய்ங்கள எதுத்துக்க வேணாம். போய் என்னான்னு கேட்டுட்டு மட்டும் வந்துடுங்க டாக்டர்.” பொருள் பொதிந்த அவனது சொற்களை உள்வாங்கிக்கொண்டார்.

பூட்டு - சிறுகதை

சிறை அதிகாரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உட்காரச் சொல்ல மாட்டார். ஆனால் சங்கமித்திரனை மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தாத பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. கைப்பேசியிலிருந்த தகவல்களையும் காணொலியையும் காண்பித்தார். பெரும் செல்வந்தர் தோற்றமுடைய மாளிகை வீட்டின் அறையொன்றில் தனித்து படுக்கையிலேயே மருத்துவ உதவியுடன் வாழும் மூதாட்டி ஒருத்தியைக் காண்பித்து, தனக்காக அந்த உதவியைச் செய்து காரியத்தை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார். கணக்கற்ற சொத்துகளை அனுபவிக்கத் தடையாக இருப்பதால் வெளிநாட்டிலும் சென்னையிலும் வாழும் மூன்று பிள்ளைகளின் வேண்டுகோள்தான் இது என்றும் கூறியதுடன், இதைச் செய்துகொடுத்தால் பதவி உயர்வு பெற உதவியாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார். வெளியில் சென்று வருவது யாருக்கேனும் தெரிந்துவிடும் என ஆச்சர்யப்பட வேண்டாம் எனவும், தெரியாதபடிக்கு அனைத்து வழிவகைகளையும் செய்து முடித்துவிட்டதாகவும் கூறியபோது மருத்துவரால் எந்த பதிலையும் உடனடியாகச் சொல்ல இயலவில்லை. பின் அங்கே நிற்க மனமில்லாமல் ‘உடல்நிலை சரியில்லை’ எனக் கூறிவிட்டு வந்துவிட்டார்.

தனபால் துருவித் துருவிக் கேட்டும்கூட எதையும் சொல்லவில்லை. சிறையில் அவரைத் தவிர அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இந்த தண்டனையைத் தந்ததற்குப் பதிலாகத் தூக்கிலேயே போட்டிருக்கலாம். நிம்மதியாக இருந்திருக்கும்! பிறரின் நிம்மதிக்காகத் தன் நிம்மதி தொலைந்துபோனது குறித்து நினைத்துக்கொண்டார்.

உடன்பிறந்த ஆறு பேரில் சங்கமித்திரன் மட்டுமே மருத்துவரானார். இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் வெளி நாடுகளிலும் உள் நாட்டிலும் வசதியோடு வாழ்கின்றனர். யாருடனும் தங்கி வாழப் பிடிக்காமல் தான் வாழ்ந்த கிராமத்து வீட்டில்தான் தன் உயிர் பிரியவேண்டும் என தொண்ணூற்று ஆறு வயதான அம்மா பிடிவாதமாகக் கூறிவிட்டாள்.

இதேபோல் இதற்கு முன்பு இரண்டு முறை உடன்பிறந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் கிராமத்திற்கு வந்து அம்மாவின் அருகில் இரண்டு வார காலம் வரையில் காத்திருந்தார்கள். உயிர் பிரிவதாக இல்லை என்பது தெரிந்தவுடன் அவரவர் வாழும் ஊர்களுக்கே திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

இம்முறை எப்படியும் அம்மா தப்ப மாட்டாள் என சங்கமித்திரனுக்குத் தோன்றியது. முன்பு இரண்டு முறையும் அவசரத்தோடு புறப்பட்டு வந்தது போலல்லாமல் அனைவரும் நிதானமாகவே வந்து சேர்ந்தார்கள். அம்மாவின் இறப்பைத் துயரமான காரியமாக எண்ணாமல் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றிவிட வேண்டும் என அனைவரும் ஒன்றுகூடித் திட்டமிட்டார்கள். சிறு கிராமத்தில் பிறந்த தங்களை வளர்த்து ஆளாக்கி செழிப்பான வாழ்க்கையைத் தந்ததை நினைவுபடுத்தியும் தங்களின் கடந்த கால நினைவுகளையெல்லாம் ஒவ்வொன்றாகவும் பகிர்ந்துகொண்டார்கள்.

அம்மாவின் நினைவு தேய்ந்துகொண்டே வந்ததால் உடனே முடிந்து அடங்கிவிடும் என எண்ணினார்கள். நான்கு நாள்களைக் கடந்திருந்ததால் அனைவருமே பொறுமையிழந்திருந்தனர். அன்றாடப் பணி, பிள்ளைகளின் படிப்பு, தொழில் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதால் பரபரத்தனர்.

அம்மா தங்களை விட்டுப் பிரிந்துவிடுவாளோ எனும் நிலை மாறி ‘எப்பொழுது இறப்பாள்’ என எண்ணத் தொடங்கிவிட்டனர். சென்ற முறைகள் போல போய் மீண்டும் வருவது சாத்தியமற்றது என்பதை முடிவு செய்து கொண்டனர். அம்மா அறைக்குள் முனகிக்கொண்டே கிடந்தாள். பெரிய பெரிய கறுப்பு எறும்புகள் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. ஒரே இரவில் கண்கள், புருவங்கள், நெற்றி, கன்னங்கள் என முகம் முழுவதையும் தின்று அரித்து விட்டன. காலையில் வந்து அம்மாவைக் கண்டபோது சங்கமித்திரன் பயந்து போனார். ஊரிலுள்ளவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பிள்ளைகளின் மீது அவள் கொண்டுள்ள பாசத்தால்தான் உயிர் பிரிய மறுக்கிறது எனச் சொல்லிக்கொண்டார்கள். அம்மாவின் உடல் மூன்று அடிகளாகச் சுருங்கியது போல் சங்கமித்திரன் உணர்ந்தார். இதற்கு மேலும் அம்மா படும் வேதனையைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் எவருக்கும் இல்லை.

சங்கமித்திரனிடம் அவரின் கடைசித் தம்பி, ‘அம்மாவை வேதனையிலிருந்து மீட்க உன்னால் முடியும். உடனடியாக ஏதாவது ஊசி போட்டு முடித்துவிடு’ எனக் கூறினான். பெற்றெடுத்த தாயைக் கொல்லும் துணிவு தனக்கில்லாமல் போனதை எண்ணிப் பலமுறை சங்கமித்திரன் நினைத்துப் பார்த்துக் கொண்டதுண்டு. தம்பியின் விருப்பம் போலவேதான் உடன் பிறந்தவர்களின் விருப்பமும் இருந்தது. மூத்த அக்கா மட்டும் அவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் வாதிட்டாள்.

அம்மாவை வழியனுப்பி வைப்பது குறித்து உற்றார் உறவினர்கள் விவாதித்து செயல்படுத்திவிட முடிவெடுத்துவிட்டபின் பிள்ளைகள் எவரும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. காரியத்தைச் செய்து முடிக்க மூதாட்டி வந்துவிட்டாள். தோட்டத்திலிருந்து ஒரு குலை இளநீரும், விளக்கெண்ணெயும் ஆயத்தமாக வைத்திருந்தனர். கடைசியாக ஒருமுறை அம்மாவைப் பார்க்கச் சென்ற சங்கமித்திரன் எறும்புகள் குதறிய தாயின் முகத்தை உற்றுப் பார்த்தார். இன்னும் சிலமணி நேரம் மட்டுமே அம்மா உயிரோடு இருப்பாள் என முடிவு செய்துகொண்டு காலைத் தொட்டு வணங்கிவிட்டு வந்துவிட்டார்.

எல்லாம் செய்து முடித்து எட்டு மணி நேரமாகியும் அம்மாவின் உயிர் பிரிவதாக இல்லை. இரவு பதினொரு மணியை நெருங்கியதிலிருந்து அந்தத் தாயின் ஆறு பிள்ளைகளுமே வீட்டின் கூடத்தில் படுக்கையை இட்டனர். அம்மாவின் பக்கத்திலேயே இருக்கவும் முடியாமல், பிரிந்து வரவும் மனமில்லாமல் தவித்தார்கள். ‘விடிந்தால் பார்த்துக் கொள்ளலாம், எல்லாம் நல்லவிதமாக நடந்து முடிந்துவிடும், அம்மா வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவார்’ எனப் பேசிக்கொண்டனர். விடிய விடிய மணிக்கொரு முறை ஒவ்வொருவராகச் சென்று பார்த்துவிட்டு வந்தனர். சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் அம்மா உயிருடன் அவ்வப்போது நெளிந்து கொண்டிருந்தாள்.

அடிக்கடி சென்று பார்த்தபோதும் யாரும் பார்க்காத நேரம் அம்மா இறந்திருந்தாள். இறுதிப்பயணத்தைச் சிறப்பாக நடத்தி முடிக்கும் வேலைகளில் அனைவரும் பங்கெடுத்தனர். உற்றார் உறவினர்கள் திரண்டு வந்திருந்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாடையை தானும் தோள்களில் தாங்க நினைத்த சங்கமித்திரன் தூக்குவதற்குச் சென்றபோது சென்னையிலிருந்து காவல்துறை காவலர் இருவர் தனியாக அழைத்துச் சென்று தாங்கள் வந்ததற்கான செய்தியைக் கூறினர். அவர் எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்பும் அதற்கு உடன்படாமல் அவரை இறுதிச் சடங்குகூடச் செய்ய விடாமல் அழைத்துச் சென்றனர்.

பூட்டு - சிறுகதை
Elumalai PM

சங்கமித்திரன் நீதிபதி முன்பாகக் கொலைகாரனாக நிறுத்தப்பட்டிருந்தார். வழக்கு இவருக்குச் சாதகமாக முடியவில்லை. வழக்கைத் தொடுத்திருந்த மாரியப்பனின் அண்ணன் அடிக்கப் பாய்ந்தபோது மாரியப்பனால் அதைத் தடுக்கத்தான் முடிந்தது. மாரியப்பனின் அம்மாவும் தங்கையும் கூறிய சாட்சியால் சங்கமித்திரனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மாரியப்பனைக் கேள்வி கேட்டபொழுது இல்லை என மறுத்து பதில் கூற இயலவில்லை. தனக்கு உதவிய மருத்துவரைச் சிறையில் தள்ளிவிட்டோமே என மாரியப்பன் கலங்கினான்.

விடிந்தால் மனைவி குழந்தையுடன் தன்னைப் பார்க்க வரப்போகும் மாரியப்பனைச் சந்திப்பதா, வேண்டாமா? சிறை அதிகாரியின் அன்புக் கட்டளையை நிறைவேற்றுவதா, வேண்டாமா? மனது குழம்பியது. மற்ற இரவுகளைக் காட்டிலும் இந்த இரவு மிகவும் நீளமானதாகத் தெரிந்தது. பறவைகள் அடையும் மரத்தில் சங்கமித்திரனைப் போலவே உறங்காமல் அங்குமிங்கும் மாறி மாறி அமர்ந்து கூகை ஒன்று நிம்மதியிழந்து தவித்தது.