Published:Updated:

இல்(லாத) அறம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- திலகவதி

இல்(லாத) அறம் - சிறுகதை

- திலகவதி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

பூங்காவில் கொன்றை மரத்தினடியில் உட்கார்ந்திருந்தாள் சந்தியா. மஞ்சள் வெயிலில் தூரிகை தோய்த்தெடுத்து தீற்றிய தினுசில் தகதகத்துக் கொண்டிருந்தது மரம். கீழே மஞ்சள் பட்டுச்சேலை விரித்தாற்போல இறைந்து கிடந்தன பூக்கள். பத்து வயது சந்தியாவாக இருந்திருந்தால் பாய்ந்து சென்று பூக்களை அள்ளி பையில் திணித்திருப்பாள். முப்பத்திரண்டு வயது சந்தியா அப்படிச் செய்ய முடியுமா... செய்தால் பார்ப்பவர்கள் `பைத்தியம்’ என்றல்லவா நினைப்பார்கள்.

அதென்னவோ, பூக்களைச் சேகரிப்பதென்றால் சந்தியாவுக்கு ரொம்ப பிடிக்கும். ‘ஏண்டீ இப்படி வீட்டுக்குள்ள குப்பைய சேர்க்குற?’ என்று அம்மா திட்டினாலும், கேட்க மாட்டாள். அம்மா சொல்வதைப் போன்றே இரண்டு நாள்களில் பூக்கள் சருகாகி குப்பையாகிவிடும். அப்படித் தான் குப்பையாகிப் போயிற்று அவள் சூர்யாவை மணந்துகொண்ட ஆரம்ப கால நினைவுகள்.

இல்(லாத) அறம் - சிறுகதை

கல்யாணமான புதிதில் எல்லாம் சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நேரம் காலம் பாராமல் சூர்யாவின் தீண்டல்கள், சில்மிஷங்கள் தாம்பத்யத்தைத் தழைக்கச் செய்துகொண்டிருந்தன. நவீனா வயிற்றில் தங்கியபோது, ‘உன்னைப் பார்த்துக்க ஊர்லேர்ந்து அம்மாவைக் கூப்பிடேன்’ என்று அக்கறையுடன் சொன்னவன்தான் சூர்யா.

நவீனா பிறந்து மூன்று மாதங்கள் ஆன பிறகு ‘கட்டிக் கொடுத்த வீட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது தகாது’ என நினைத்து அம்மா கிளம்பத் தயாரான போது கணவனிடம் குழைந்தாள்... ‘`அம்மா எதுக்குங்க ஊருக்குப் போய் தனியா இருக்கணும்? நம்ம கூடவே இருக்கட்டுமே...’’ அப்போதுகூட அவன் பட்டென்று மறுப்பு சொல்ல வில்லை.

‘`இருக்கலாம்தான்... ஆனா, நம்ம ப்ரைவசி பாதிக்குமே...’’ என்று இழுத்தவாறு அவளது இடுப்பைத் தடவினான். அவள் முகம் வாடியதைப் பார்த்தபின், ‘`சரி சந்தியா. நான் டபுள் பெட்ரூம் ஃபிளாட் பார்க்கறேன். நமக்கு ஒண்ணு. அம்மாவுக்கு ஒண்ணு’’ என்று இறங்கிவந்தான்.

சூர்யாவின் அண்ணனோடு வசித்து வந்த அவனின் பெற்றோர், ‘தலையாட்டி பொம்மையா மாறிட்டி யேடா’ என்று பரிகாசம் செய்தார்கள். அப்போதும் மனைவியை விட்டுக்கொடுக்காமல், ‘வீட்ல பெரியவங்க இருக்குறது ஒத்தாசைதானேம்மா’ என்று சொன்னபோது சந்தியா பெருமிதமாய் உணர்ந்தாள்.

எல்லாம் சரியாய்த்தான் போய்க்கொண்டிருந்தது. `ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்றதற்கு மாறாக ஐந்து ஆண்டுகளாக நீடித்த அந்நியோன்யத்தில் எப்படி விரிசல் வந்தது... அந்த அழகான குருவிக்கூட்டை யார் கலைத்துப் போட்டது...

`96’ படத்துக்குப் போகலாம் என்று சந்தியாதான் கணவனை அழைத்தாள். ‘சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறோம்’ என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இல்(லாத) அறம் - சிறுகதை

படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே சூர்யாவின் முகத்தில் இருள் அப்பிக்கொண்டது. அவனது வழக்கமான சீண்டல், தீண்டல், தாம்பத்யம் எல்லாமும் ஸ்விட்ச் ஆஃப் செய்ததும் அணையும் விளக்கு போல நின்று போயின. அவனது மாற்றத்துக்கான காரணம் கேட்டாலும் மழுப்பலாய் பதில் சொன்னான்.

ஒருநாள் அவன் குளிக்கப் போனபோது அவனுக்கு போன் கால் வந்தது. ‘ப்ரியா காலிங்’ என்ற அறிவிப்புடன் ஒரு பெண்ணின் முகம் டிஸ்ப்ளேவில் ஒளிர்ந்தது.

`யார் இந்த ப்ரியா... நாலு நாள்களாய் இவன் எதையோ பறிகொடுத்த மாதிரி திரிவதற்கும் இந்த ப்ரியாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா... பட்டென்று கேட்டுவிட வேண்டாம். விட்டுப்பிடிப்போம்’ என மெளனம் காத்தாள்.

அதன் பின்னர், அவனிடம் மேலும் மாற்றங்கள்... பாத்ரூமில் பாடும் வழக்கமே இல்லாதவன், ‘மெல்லினமே... மெல்லினமே...’ போன்ற முந்தைய இளம்தலைமுறையின் ‘தேசிய கீதங்களை’ப் பாடியபடி குளித்தான்.

இரவு நேரங்களில் அவனுக்கு போன் அழைப்புகள் வரத் தொடங்கின. பெட்ரூமில் இருந்து வெளியே பால்கனிக்குச் சென்று தாழ்ந்த குரலில் நீண்ட நேரம் பேசித் திரும்புவது வழக்கமானது. ப்ரியாவாக இருக்கலாம் என யூகித்தாள்.

அன்றைக்கு உடைத்துக் கேட்டுவிட்டாள்.

``யார் போன்ல?’’

‘`என் ஃபிரெண்ட்’’

``ஏன் இந்த நேரத்துல கால் பண்றாங்க?’’

‘`அவ யு.எஸ்ல இருக்கா. அங்க இப்ப பகல் நேரம்.’’

‘`யார் அவ... அவங்க?’’

‘`..............''

``கேக்றேன்ல, சொல்லு சூர்யா...''

‘`..............''

இறுக்கமான மெளனத்துடன் தலை கவிழ்ந்து இருந்தான்.

``ப்ரியாவா...’’ என்று அவள் கேட்டதும் துணுக்குற்று நிமிர்ந்தான்.

‘`உனக்கெப்படி தெரியும்?!’’

``எப்டியோ தெரியும். அத விடு. ப்ரியா யாரு?’’

`என்றாவது ஒருநாள் சொல்லத்தான் வேண்டியிருக்கும்... அதை இன்றே சொல்லிவிடலாம்’ என முடிவு செய்து ஆரம்பித்தான்.

ப்ரியாவும் தானும் பள்ளியில் ஒன்றாகப் படித்தது, இருவரும் உருகி உருகிக் காதலித்தது, தியேட்டரில் தோளோடு தோள் உரசி `ஷாஜகான்’ படம் பார்த்தது, ஜாதி வேறுபாட்டால் ப்ரியா வீட்டில் பெண் தர மறுத்தது, கைநிறைய சம்பாதிக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு அவளைக் கட்டிக் கொடுத்தது, இப்போது அவள் தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் இந்தியாவுக்கு வர உத்தேசித்திருப்பது, திருமண வாழ்க்கை கசந்துபோய் விட்டதால் அவளுக்கான மன ஆறுதலைத் தான் தர வேண்டிய நிலை, அதற்காக அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் என தனக்குத் தானே ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தபோது சந்தியா கல்லாய்ச் சமைந்து போனாள்.

‘`அப்ப என்ன சொல்ல வர்ற. நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல குடித்தனம் பண்ணுவீங்க... அதைப் பார்த்துகிட்டு நான் ஒரு மூலைல ஒட்டிகிட்டு இருக்கணுமா?''

இல்(லாத) அறம் - சிறுகதை

‘`ஏன் இப்படில்லாம் சொல்றே ? என்னிக்கிருந்தாலும் நீதானே எனக்குப் பொண்டாட்டி! நான் என்ன அவளுக்குத் தாலியா கட்டப் போறேன்?’’

`ஒரு கேக்கைக் கத்தியால் வெட்டி இரண்டு பேரும் பங்கு போட்டுச் சாப்பிடுங்கள்’ என்பதான பாவனை யில் சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டான். கேட்கக் கூசிற்று சந்தியா வுக்கு.

‘`ச்சீய்... இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்ல... புருஷனைப் பங்கு போட்டுக்குறது எந்த ஊர் கலா சாரம்...’’

‘`பொண்ணைக் கட்டிக் குடுத்த வீட்ல அம்மா டேரா போடுறது மட்டும் எந்த ஊர் கலாசாரம்? பழைய பழக்கங்களையெல்லாம் இப்ப நம்ம செளகர்யத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறதில்லையா? அப்படித்தான் இதுவும்’’ - ரெடி மேடாக பதில் வந்தது அவனிட மிருந்து.

‘`Times are changing சந்தியா. You grow up. போன ஜெனரேஷனோட லைஃப் ஸ்டைல் வேற. நம்ம ஜென ரேஷனோட லைஃப் ஸ்டைல் வேற. புது வாழ்க்கை முறையோடு உன்னைப் பொருத்திக்கோ’’ என்று சொன்னான்.

``நமக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு சூர்யா. நாளைக்கு அவளுக்கு இப்படியொரு நெலைமை வந்தா உன்னால தாங்க முடியுமா?’’

``அதான் சொன்னேன்ல... காலம் மாறிக்கிட்டிருக்கு. அவ காலத்துல இன்னும் எப்படியெல்லாம் மாறுமோ... யாருக்குத் தெரியும்’’ தோளைக் குலுக்கிக்கொண்டான்.

அன்றிரவு பொழுது வாக்கு வாதத்திலும், அவளது கண்ணீரிலும் கரைந்தது. அவன் முடிவாகச் சொன்னான்.

‘`அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு சேர்ந்து வாழ உனக்கு இஷ்டம் இல்லைன்னா, ம்யூச்சுவல் கன்சன்ட் கொடு. டைவர்ஸ் வாங்கிக்கலாம்.’’

பூங்காவில் ஜன நடமாட்டம் குறைந்திருந்தது. தொலைவில் ஒரு இளம் தம்பதி குலுங்கிக் குலுங்கிச் சிரித்துப் பேசியபடி அந்த மாலைப் பொழுதை ரம்மியமாக்கிக் கொண்

டிருந்தார்கள். ‘பழைய காதல் முளைச்சு வந்து குலைச்சுப் போடாம இந்த சந்தோஷம் இவர்களுக்கு நிலைச்சு இருக்கட்டும்’ என்று நினைத்துக்கொண்டாள்.

குழந்தைகளுடன் விளையாடி விட்டு வந்த நவீனா, சந்தியாவின் காலடியில் கிடந்த மஞ்சள் பூக்களை கை நிறைய அள்ளினாள்.

பெஞ்ச்சிலிருந்து எழுந்த சந்தியா சொன்னாள்... ``நவி... கீழ போட் டுட்டு வா, போலாம். அதெல்லாம் குப்பை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism