Published:Updated:

அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

- ப.உமாமகேஸ்வரி

அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

- ப.உமாமகேஸ்வரி

Published:Updated:
அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

ஜன்னலுக்கு வெளியே மங்கலான பனி நிலவு, நள்ளிரவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

வெளியில் வெறித்த தன் பார்வையை சலனமில்லாமல் திருப்பி, நீண்ட நேரம், விட்டத்தை பார்த்தபடியே, எந்தச் சிந்தனையும் இன்றி மெத்தையில் படுத்துக் கிடந்தாள் வந்தனா.

அவளை ஒரு பஞ்சுபோல தாங்கிக் கிடந்தது மெத்தை. ஆனால், அவள் மனதின் பாரம் கட்டிலை அழுத்தியது.

விட்டத்தில், மின்விசிறி காற்றுக்குள் காலத்தை சுழற்றிக்கொண்டிருந்தது. சுவர்க் கடிகாரம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

திடீரென, ஏதோ நினைவு வந்தவளாக, பருத்தி வெடித்தது போல வெடுக்கென எழுந்தாள். அதே நினைவு. எதை மறக்க நினைக்கிறாளோ, அது மட்டுமே நினைவுக்கு வருகிறது.

மீண்டும் மீண்டும் தற்கொலை செய்யும் எண்ணம், அவள் மனம் முழுவதும் ஒரு வெம்மையான பனிமூட்டம்போல பரவிக் கொண்டிருந்தது.

ப.உமாமகேஸ்வரி
ப.உமாமகேஸ்வரி

அவன் செய்த துரோகத்தை வெளியே சொல்லவும் முடியவில்லை... மனதுக்குள் வைத்து ரகசியமாக மெல்லவும் முடிய வில்லை. எப்போதும் எதிலும் வெற்றியே பெற்ற அவள் சுபாவத்தால், இந்தத் தோல்வி யைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

கண்ணீர் வற்றி, இமைகள் வறண்டு, நா ஒட்டிக்கொண்டது.

‘இந்தப் பழியோடு பெற்றோர் முன்பும், சமூகம் முன்பும் தினமும் செத்து செத்து வாழ்வதைவிட, ஒரேடியாக செத்து, களங்கத்

தைத் துடைத்து, எல்லோர் மனதிலும் மானத் தோடு வாழலாம்’ என்று மனம் அவளுக்குள் தூபம் போட்டது.

யாருக்கும் தெரியாமல், கொஞ்சம் கொஞ்ச மாக வாங்கி வைத்த தூக்க மாத்திரைகள் ஒரு கையில் டப்பாவில் இருந்தன. தன் தூக்கத்தைக் கெடுத்த அந்த நினைவுகளை தூக்க மாத்திரை களாலேயே கொல்லப்போகிறாள்.

சொல்லப்போனால், இப்போதுதான், அவள் வாழ்க்கை அவள் கையில் இருக்கிறது.

உறவினர்களின் மரணங்களைத் தூர இருந்து பார்த்திருக்கிறாள். ஆனால், தன் மரணத்தை தானே முடிவு செய்வதை நினைக்கும்போது கொஞ்சம் நடுக்கமாக

வும், இனம்புரியாத ஆர்வமாகவும் இருந்தது.ஆனாலும், மரணத்தில் அவள் உறுதியாக இருந்தாள்.

இதோ... அவள் வாழ்க்கை, கைக்கும் வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தில்தான் இருக்கிறது. என்ன செய்வது... வாய்க்கு எட்டிய வாழ்க்கை கைக்கு எட்டவில்லையே!

நாளைய விடியல் தனக்கு இல்லை என்று நினைத்தபோது, ஏனோ அவளுக்கு, யாரிட மாவது பேச வேண்டும்போல இருந்தது.

‘என் நியாயங்களை... ஏக்கங்களை... ஏமாற்றங்களை... ஏன், என் ஆசைகளைக்கூட யாரிடமாவது நான் சொல்ல வேண்டும்.இல்லை... இல்லை... கொட்ட வேண்டும்.அவை குப்பைகள்தானே. கொட்டத்தானே வேண்டும்...'

தனக்குள் தறிகெட்டு ஓடும் தன் வலிய எண்ணங்களுக்கு, தடை போட சிரமப் பட்டாள். நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது.

ஆனால், யாரிடம் பேசுவது..? யாரோடு பேசினாலும் அழுது காரியம் கெட்டுவிடும். அது மட்டும் கூடாது. யார் முன்னும் தான் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

ஒவ்வொருவராக, நினைவுக்குள் கொண்டு வந்து அழித்துக்கொண்டே இருந்தாள். அனைவரின் நினைவுகளும் ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு வெறுப்புதட்டிக் கொண்டே வந்தன.

நெருங்கிய தோழி நெருப்பாய் தகித்தாள்... `துரோகி... விலைமாதைவிட கேவலமானவள். கூடவே இருந்து என் வாழ்க்கையை அபகரித்தவள்...'

அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

அப்பா, அம்மா. சே... சே... வேண்டாம். அவர்களைப் பார்க்க முடியாமல் கூசித்தானே இந்த முடிவுக்கே வந்தேன். மனம் அழுதது.

அப்போது, அவளுக்கு அப்பாவின் நண்பர் கதிரவன்தான் ஞாபகத்துக்கு வந்தார். ஆனால், அவர் நினைவு ஏன் வந்தது என்று தெரிய வில்லை. அவர் ஜாலியாகவும் சகஜமாகவும் பேசக்கூடியவர்.

அவரிடம் பேசியும் நாளாகிவிட்டது. ஒருவேளை உயிர் ஆறுதல் தேடுகிறதா... மரணத்தில் ஒரு மகிழ்ச்சி தேடுகிறதா... தோளில் சாய்ந்துகொள்ள தோழனைப்போல ஒரு தகப்பன் உணர்வைத் தேடுகிறதா...

யோசனையோடு பெயரைத் தேடி நம்பருக்கு போன் செய்தாள்.

உச்சி நிலவு சற்றே மேகத்தில் இருந்து வெளியே வந்த அந்த நள்ளிரவு நேரத்தில், கதிரவனின் செல்போன் ரிங்கியது.

‘யாரது இந்த நேரத்தில்!’ சோர்வுடன் எழுந்து வந்த கதிரவன், செல்லை எடுத்து, ‘வந்தனா சுந்தர்’ என்ற பெயர் பார்த்து புருவம் சுருக்கினார்.

‘இது, சுந்தரத்தின் பொண்ணாச்சே... காலேஜ் கடைசி வருடம் படிக்கிறாள்.

இவள் எதுக்கு இந்நேரம்!’ என்று யோசிக்கும் போதே ரிங்டோன் நின்றுவிட்டது.

‘விட்டு விடலாமா!’ என நினைத்தவர், என்ன நினைத்தாரோ... அழைப்பு வந்த நேரத்தின் தன்மை கருதி, அவரே எடுத்து டயல் செய்ய, எதிர் முனை ரிங்டோனின் கடைசி பெல்லில் ஆன் ஆனது.

ஆனால், செல்லுக்குள் ஒரு மெளனம் நிலவியது. காற்றை அசைக்கும் மின் விசிறியின் ஓசை மட்டும் கேட்டது.

“ஹலோ, ஹலோ!” இரண்டு ஹலோக்

களுக்குப் பின், சன்னமான குரலில் வந்தனா கனைக்கும் குரல் கேட்டது.

“சொல்லுமா வந்தனா!” என்றார்.

“அட... ஆச்சர்யமா இருக்கே. என் நம்பர் கூட உங்ககிட்டே இருக்கா அங்கிள்!” என்றாள் வந்தனா.

“இருக்குமா., என்ன திடீர்னு, இந்த நேரத்தில?”

“சும்மாதான் செஞ்சேன் அங்கிள்!” மௌன மானாள்.

“ஹலோ, ஹலோ... என்னம்மா... உடம்புக்கு ஏதாவது சரியில்லையா... அப்பா அம்மாவுக்கு முடியலையா...”கரிசனமாகக் கேட்டார்.

“இல்லை, அங்கிள்” என அவசரமாக மறுத்தவள்...

“ஏதோ, போன் செய்யணும்னு தோணுச்சு. அதான் பண்ணினேன்!” என்றாள் குரலில் விரக்தியுடன்.

“அப்படியா ரொம்ப சந்தோசம் வந்தனா. உன்னிடம் பேசியே ரொம்ப நாளாச்சு. எனக்கும் ஆறுதலா இருக்கு. எங்கிருந்து பேசுற, ஹாஸ்டலா?”

“இல்ல அங்கிள், வீட்டுல இருந்துதான். மாடியில் இருக்கேன்!”

“கொஞ்சம் பொறும்மா. எழுந்து உட்கார்ந்து கறேன். காலும் மனசும் கொஞ்சம் சரியில்லை. வயசாயிருச்சுல்ல!” என்றவர், சற்று இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்...

“ஒரு ஆச்சர்யம் தெரியுமா உனக்கு... உன் போன் வரும் வரை எனக்கு என் வாழ்க்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது. ஆனால், உண்மையிலேயே இறைவன் இருக் கிறான்னு இப்போ நல்லா தெரிஞ்சுக் கிட்டேன்” என்று நிறுத்தினார்.

“என்ன... என்ன அங்கிள் சொல்றிங்க...

ஏன் அங்கிள் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு...” சற்றே பதற்றமானாள்.

அந்தக் கடைசி நிமிடங்கள்! - சிறுகதை

“உனக்கு எதுவும் தெரியாதும்மா... நீ சின்ன பொண்ணு. கல்யாணம் குடும்பம்னு ஆனாதான் இது புரியும். இது என் கஷ்டம். நல்லா இருந்த என் குடும்பம், இப்போ ஒண்ணுமில்லாம போச்சும்மா!” குரல் தழுதழுத்தது.

“அப்பா, இதுபற்றி என்கிட்டே எதுவுமே சொன்னது இல்லையே அங்கிள். நீங்கள் ஜாலியான ஆளாச்சே. உங்களுக்குக் கூடவா இப்படியாகும்...”

“ஆயிருச்சே! என் விஷயம் அவனுக்கே தெரியாது. இப்போ, என் குடும்பமே, என் கூட இல்லை. என்னைக் கவனிக்க, என்

கூட பேச ஆள் இல்லாம இருந்தேன். வெறுத்துப் போய், தனியா இந்த உலகத்தில வாழுறதைவிட சாகலாம்னு இப்பதான் முடிவெடுத்தேன்!”

“அங்கிள்... நீங்க என்ன... சொல்றீங்க? நானும்...” என்று ஆரம்பித்தவள், சட்டென நிறுத்திக்கொண்டாள். அவள் குரலில் இருந்த பதற்றம் தொடர்ந்தது.

“ஆமாம்மா... ஒரு ஆச்சர்யம் என்னன்னா, நீ பிறந்ததும், குட்டி குழந்தையா என் கையில் கொடுத்தாங்க. உன்னையும் என் மகளாகத் தான் நினைச்சிருந்தேன். ஆனா, இன்னிக்கு என்னையும் என் பொண்ணு மாதிரி இருக்கும் உன் மனசுல நினைக்க வைச்சு, எனக்கு ஆறுதல் தேவைப்படும்போது, உன்னை என் கூட பேசவும் வைச்ச ஆண்டவன் கிரேட் இல்லையா...”

“உண்மைதான் அங்கிள். ஆனா, நான் எதுக்கு போன் பண்ணேன்னா...”

அவள் குரல் கம்மி, நடுங்கி அழ ஆரம்பிக்கும் போது, ‘தட தட’என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு கதவுப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன், கதவு தாழ்ப்பாள் உடைந்து நெளிய... கதவு ‘படார்’ என்று திறந்தது.

திறந்த வேகத்தில், புயல் போல உள்ளே நுழைந்த வந்தனாவின் அப்பா சுந்தரம், வந்தனாவின் கையில் மாத்திரை பாட்டிலைப் பார்த்ததும் அதிர்ச்சியானார்.

சற்றும் தாமதிக்காமல் சட்டென அவள் கையில் இருந்த டப்பாவைத் தட்டி விட, அது உருண்டு ஓடி தரையில் கொட்டியது.

“என்ன காரியம்டி செய்யப்போன?” என்று, சுந்தரத்துக்குப் பின்னாலேயே பதறிப்போய் ஓடிவந்த வந்தனாவின் அம்மா, அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டாள்.

அதிர்ந்து விழுந்த டப்பாவில் இருந்து தெறித்து ஓடிய மாத்திரைகளை வந்தனா அதிர்ச்சியுடன் பார்க்க, டப்பாவோடு கீழே கிடந்த வந்தனாவின் செல்லை எடுத்த சுந்தரம், அதைக் காதில் வைத்து, “டேய் கதிரவா... ‘எனக்கு சந்தேகமாயிருக்கு... அவளை உடனே நீ போய்ப் பாரு’ன்னு

நீ மெசேஜ் கொடுத்தது உண்மைதான்டா. தற்கொலை செஞ்சுக்கற முடிவுல இருந் திருக்கா... அவள் கூட பேச்சு கொடுத்துக் கிட்டே மெசேஜ் கொடுத்து அவள் உயிரைக் காப்பாத்த உதவினதுக்கு ரொம்ப நன்றிடா...” என்றார் கண்ணீருடன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசகிகளிடம் இருந்து சிறுகதைகளை வரவேற்கிறோம்!

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதளம், சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

சிறுகதைகள், அவள் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism