Published:Updated:

புறாக்கள் பறக்கும் வானம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- வி.உஷா

புறாக்கள் பறக்கும் வானம் - சிறுகதை

- வி.உஷா

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

அன்றைய விடியல் ஓர் அழகிய தினத்தைக் கொடுக்கப் போகிறது என்று எனக்கு 5 மணிக்கு வந்த விழிப்பில் தெரிய வில்லை.

“சுதா... ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? இந்த செக் இன்னிக்கு என்கேஷ் பண்ணணும்... எனக்கு முழு நாளும் வேலை இருக்கு பிளான்ட்ல. நீ கொஞ்சம் பாங்க் போய் பணம் வாங்கிட்டு வந்துடேன்... பில்டர் இந்தத் தவணையை பணமா கேட்கிறார்” என்று மோகன் வந்து காசோலையை நீட்டினார்.

“அதுக்கென்ன?” என்று வாங்கிக்கொண்டேன். “எனக்கும் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரணும்னு இருக்கு. இந்த வொர்க் ஃபரம் ஹோம் அப்பப்ப போர் அடிக்குதே” என்ற போது அவர் புன்னகைத்தார்.

வி.உஷா
வி.உஷா

“உனக்குப் பிடிச்ச புக், பேர் என்ன, ராய் அல்லது ராவ், யெஸ் யெஸ்... அருந்ததி ராய். அவங்கதானே? ராத்திரி வாங்கிட்டு வந்தேன்... எடுத்துக்கோ” என்று இழுத்து அணைத்து விட்டுப் போனார்.

“ஓ தாங்க்ஸ் அ லாட் மோகன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னபோது மோனியின் நினைவு வந்தது. அவளுக்கும் பிடித்த எழுத்தாளர் அருந்ததி.

நினைவுகள் பின்னோக்கி வேகமாகப் பறந்தன. நானும் அவளும் தமிழ்த்துறையை ஒரு கலக்கு கலக்கிய காலம் எவ்வளவு அழகிய கனாக்காலம், நிலாக்காலம் அது…

`உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை உண்மையுடன் காட்டவல்ல உண்மைக்குருவை’ என்று தமிழ் லெக்சரர் வத்சலா மேடம் ஆரம்பிக்கும் முன்பே மோனி எழுந்து, ‘இது பாம்பாட்டி சித்தர் பாடல்தானே மேம்...’ என்று சிரிப்பாள். ‘ஆமாம் மேம்... நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நச்சுப்பையை வைத்திருக் கும் நல்ல பாம்பே என்று இவர் எழுதிய பாடல் சிறப்பானது மேம்’ என்று நானும் சொல்வேன்.

அவ்வளவு ஆர்வம், உற்சாகம், வேகம், துடிப்பு. தமிழ் மட்டுமல்ல, அவள் ஷட்டில் கூட அருமையாக விளையாடுவாள். பள்ளிச் சீருடை எங்களுக்கெல்லாம் தலையணை உறை மாதிரி இருக்கும். அவளுக்கு தேவதை உடையாக அழகு சொட்டும். முகம் கழுவி ஒரு கீற்று சாந்து வைத்து தலையை நிமிடத்தில் சீவி வந்து அவள் நிற்கும்போது, மேகத்திலிருந்து ஒரு நட்சத்திரப் பெண் வந்து என் அருகில் உட்கார்ந்து தோள் சாய்வது போலவே இருக்கும்.

“நீ இங்கே இருக்க வேண்டியவளே இல்லே மோனி... ஜெய்ப்பூர், உதய்பூர் இப்படி அரண்மனைல ராணியாக இருக்க வேண்டியவள்... என் அதிர்ஷ்டம் இப்படி அரசுக் கல்லூரியில் வந்து படிக்கிறாய் எனக்காக” என்பேன் அடிக்குரலில்.

சிரித்துவிட்டு அவள், “தோற்றம் எப்போதும் உண்மையைக் காட்டாது சுதா. இந்தப் படிப்புதான் என்னைக் கரையேற்ற வேண்டும். என் மூலமாக என் ஏழைப் பெற்றோரையும்... எனக் கொன்றும் வருத்தமில்லை சுதா. வாய்ப்பு வரும்போது அது நமக்குக் கிடைக்கும்படி தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஜாவா சேரப் போகிறேன் சுதா, இந்த விடுமுறையில் நீ என்ன உன் அத்தை மகன் மோகனுடன் அத்தை வீட்டில் பல்லாங்குழி ஆடப் போகிறாயா?” என்று சிரிப்பாள்.

புறாக்கள் பறக்கும் வானம் - சிறுகதை

காலம் எத்தகைய கொடூரமான வில்லன் என்பதை அதற்கடுத்து வந்த வருடங்கள் உணர்த்தின.

தமிழ் படித்தாலும் இருவரும் ஏதேதோ நிறுவனங்களில் ஊழியராகச் சேர்ந்தோம். எங்கள் கல்யாணம் நடந்த அதே வருடத்தில் அவளுக்கும் சந்திரனுக்கும் திருமணம் ஆனது.

அவள் தாம்பரம், நான் மாம்பலம் என்று குடித்தனம் நடத்தினோம். என் வாழ்க்கை, நூல் பிடித்த மாதிரி சீராகப் போனது. மோகன் மிகக் கச்சிதமான, வாழ்வின் ஒழுக்க விதி களைக் கடைப்பிடிக்கிற, அலுவலக வாழ்வின் நியதிகளுக்குக் கட்டுப்படுகிற யதார்த்த மனிதர் என்பதாலும், எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததாலும் நீரோடையாக நகர்ந்தன நாள்கள்.

மோனிக்கு அப்படி இல்லை.

சந்திரன் படித்தவன், நல்ல வேலையில் இருப்பவன். ஆனால், நல்ல பண்புகள் கொண்டவன் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. லாட்டரி பழக்கம், மதுப்பழக்கம் என்று மிக வேகமாக அவன் தன் கட்டுப்பாட்டை இழந்தான். அலுவலக பணத்தில் கை வைத்தான். வேலை போனது. இவளை பணத்துக்காக கசக்கிப் பிழிந்தான். குடித்துவிட்டு அவள் அலுவலகம் போய் கத்தி, தரமற்ற வார்த்தைகள் பேசி அவமானப்படுத்தினான். மோனியின் அப்பா இந்தக் கவலை யிலேயே கல்யாணமான இரண்டாம் வருடமே மாண்டு போனார். அம்மாவுக்கு இதய நோய் வந்தது. உடனடியாக வால்வுகள் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நண்பர்கள், வங்கிக் கடன், அலுவலகக் கடன் என்று தேற்றி வைத்தாள். இரவே அம்மாவுக்கு கடும் நெஞ்சு வலி வந்தது. ஆம்புலன்ஸில் ஏற்றி ஐ.சி.யு சேர்த்து அடுத்த இருபது மணி நேரங்களுக்குள் சிகிச்சை கொடுக்க வேண்டும், உடனே பணத்தைக் கட்டி விடுங்கள் என்றார்கள். ஓடி வந்தாள் வீட்டுக்கு. பீரோ லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. ஒரு லட்சம் ரூபாய். அவன் அந்தப் பணத்துடன் ஒரு போதைப்பெண் வீட்டில் கிடந்தான். அவள் முடிந்தவரை போராடினாள். அந்தப் பெண் தன் ஜிம் பவுன்சர்கள் மூலம் மோனியை விரட்டி அடித்தாள். அடுத்த நாள் சூரியன் மறையும்போது அம்மாவும் மறைந்துவிட்டார்.

மோனி அழவில்லை. அவள் உடம்பில் கண்ணீரை உற்பத்தி செய்யும் சக்திகூட இல்லை, பனிக்கட்டி போல உறைந்தவளாகி யிருந்தாள்.

நானும் அதிர்ச்சிக்கு ஆளாகி துவண்டு போயிருந்தேன். இது முழுக்க அநீதி. கோபம் கொப்பளித்தது. யார் மீது அதைக் காட்டுவது என்று தெரியவில்லை. மோனியைவிட அன்பு காட்ட, மோனியைவிட பண்பு நிறைந்த, மோனியைவிட விட்டுக்கொடுக்க இந்த உலகில் வேறு மனிதரே இல்லை எனும் போது அவளுக்கு ஏன் இவ்வளவு அடிகள், வலிகள்? அந்த சந்திரன் ஏன் இவள் வாழ்வில் வந்தான்? அரவம் புகுந்த வீடு போல அவளை ஏன் எப்போதும் கலவரத்திலேயே வைத்தான்? ஏன் இரண்டு உயிர்களைக் குடித்தான்? போர் நடக்கும் ரத்தபூமி போல அவள் இந்த நரகத் தில்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டுமா?

நல்ல வேளையாக அவன் ஓடிப்போனான். தன் போதைகளுடன் ஒத்துப்போன ஒருத்தி யுடன் வீட்டை விட்டுப் போனான். சட்டப் படி மணவிலக்கு கேட்டான். அவள் ஒரே ஓர் ஆழ்ந்த இரவுத் தூக்கத்துக்காக எந்தத் தாளிலும் கையெழுத்து போட தயாராக இருந்தாள். சிதைந்த கோயிலுக்குள் அடிபட்டு நிற்கும் பெண் சிற்பம் போல அவளைப் பார்க்கும்போதெல்லாம் அடி வயிறு துடிக்கும்.

மெள்ள மெள்ள அவள் தன்னை மீட் டெடுக்க ஆரம்பித்தாள். புல்லாங்குழலுக்காக அத்தனை ஓட்டைகளையும் தாங்கிக்கொண்ட மூங்கில் போல, அவள் மனதில் இருந்த காயங்களை கவிதை, உடற்பயிற்சி, அரசு வேலை பரீட்சை கோச்சிங், தோட்டம் என்று மாற்றிக்கொண்டாள். நானும் மோகனும் அவளுக்கு உறுதுணையாக இருந்தோம்.

மோகனுக்கு அலுவலகம் இடைக்கால பதவி உயர்வு கொடுத்து பாட்னாவுக்கு அனுப்ப, நானும் மோனியும் பிரிகிற நாள் வந்தது. விவரம் சொல்லிவிட்டு வருவதற்காக அவள் வீட்டுக்குப் போன எனக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. சந்திரன் வந்திருந்தான்.

அடிபட்ட தெருநாய் போலிருந்தான். காலம் அவனுக்கு ஒரு காட்டு காட்டியிருந்தது. போதையில் தெருவில் கிடந்தவன் மேல் ஆட்டோ ஏறி இறங்கி இரண்டு கால் முட்டி களும் எலும்பு முறிவுகளால் தூளாகி இருந்தன. பிச்சைக்காரனைப்போல அவனை தெருவில் வீசிவிட்டு புது நண்பர்கள் அடுத்த இலக்கு நோக்கிப் போய்விட்டார்கள். மோனி வீட்டு வாசலில் , குதறப்பட்ட இறைச்சி போல வந்து விழுந்து, அவள் கால் பற்றி அழுதிருக்கிறான்.

“என்ன மோனி இது?” என்று படபடத்தேன். “இவனை வீட்டுக்குள் சேர்த்து, மருத்துவம் பார்த்து, கஞ்சி கஷாயம் கொடுத்து பணி விடைகளா நடத்துகிறாய்? உன்னை தெரசா வாக மாற்றிக்கொண்டாயா? ஏன் மோனி? அவன் செய்தது எல்லாமே கொடுங்குற்றம். தெரிந்தே, அறிந்தே செய்த பெரும் துரோகம். இரண்டு அரிய உயிர்களைக் கொன்றவன் அவன்... அவனுக்கா நீ கால்பிடிக்கிறாய்?”

“விடு சுதா... நீ மாற்றலில் கிளம்புகிறாய். போகும் இடம் நல்லபடியாக இருக்கட்டும்… உன்னை மறக்கவே மாட்டேன் சுதா” என்று அவள் கைபிடித்து அழுதாள்.

வேதனையுடன் வெளியேறினேன்.

அதன்பிறகு தொடர்புகள் மெள்ள மெள்ள குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போயின. அவளை மன்னிக்கவே முடியவில்லை.

புனிதமான திருமண உறவுக்கு அவன் என்ன மரியாதை கொடுத்தான்? அவளிடம் எதை மிச்சம் வைத்தான்? உடலை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்புக்கு ஓர் உலர் வாழ்க்கையை அந்த ஒப்பற்ற பெண்ணுக்குக் கொடுத்ததைத் தவிர, வேறு என்ன செய்து விட்டான்? அந்தக் கிராதகனுக்கு இவள் இன்னும் அடிபணிவது நியாயமே இல்லையே. பாலுக்கு அழுகிற சிசுவுக்கு நஞ்சைத்தானே கொடுத்தான் அவன்? இவள் என்னடா வென்றால் அவனைத் தொட்டிலில் இட்டு தாலாட்டுகிறாளே. பெண் என்றால் ஏமாளி என்று முடிவெடுத்துவிட்டாளா?

வங்கியில் காசோலையைக் கொடுத்து விட்டு நின்றேன்.

ஏதோ பேசிக்கொண்டார்கள். கையெழுத்து மாட்ச் ஆகவில்லை என்று ஏற இறங்க பார்த் தார்கள். நானும் மோகனும் வைத்திருக்கும் ஜாயின்ட் அக்கவுன்ட் இது என்று கணினி சொன்னாலும் கையெழுத்து, கையெழுத்து என்றே தலை சொறிந்தார்கள்.

‘`ஓகே சார்... உங்கள் சீஃப் மானேஜரை பார்த்துவிடுகிறேன். அவர் சொன்னால் உங்களுக்குப் பிரச்னை இல்லையே” என்று கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்து விட்டேன்.

அங்கே நான் பார்த்தது... மோனி!

அவளா மேலதிகாரி? அவளா இந்த வங்கிக் கிளையின் தலைவி?

“சுதா சுதா... நீயா? வா வா... உன்னை பார்க்கிறேனா நேரில்? உண்மையா இது?” என்று சட்டென கசிந்த கண்களுடன் எழுந்து வந்து இறுக அணைத்தாள்.

“உட்கார் சுதா... இடையில் எத்தனை காலம் ஓடிவிட்டது சுதா? எப்படி இருக்கிறாய்? நீ ஹீரோயின் சுதா. உன் வாழ்க்கை இசை போல இருக்கும்... கரெக்டா?” என்று சிரித்தாள்.

“என்ன மோனி இது? நீ எங்கே இப்படி? இந்த நாலு வருடங்களில் என்ன செய்தாய், எங்கே இருந்தாய்? சீஃப் மேனேஜராக... ஓ குட்னஸ். இன்னும் அழகாக, கம்பீரமாக மோனி... நீதானா இது? நம்பவே முடியலே மோனி” என்று தடுமாறினேன்.

வங்கி அதிகாரி பரீட்சைக்குப் படித்தது, தேர்வானது, பயிற்சி எடுத்தது, போஸ்டிங் கிடைத்தது என்று கோவையாக அழகாகச் சொன்னாள்.

“மோனி... உன்னைப் பார்க்கும்போது காலேஜ் தினங்களில் பார்த்த மோனிதான் தெரிகிறாள். அதே சிரிப்பு. அதே நம்பிக்கை. அவன்... அவன்... அந்த சந்திரன். மறுபடி வந்தானே... தாய் போல தாங்கினாயே... அந்தக் கோபம் இன்னும் குறையவே இல்லை எனக்கு... எங்கே அவன்?”

“தெரியவில்லை சுதா... என்னுடன் இல்லை.”

“என்ன? தெரியும் எனக்கு... அயாம் சாரி, நீ ஏன் அவனை மறுபடி வீட்டுக்குள் விட்டாய்? தியாகமா, கண்ணகியா? நம் படிப்பு, அறிவு, சிந்தனை எதுவுமே ...” என்று நான் முடிப்பதற் குள் அவள் மெள்ள என் கைப்பற்றினாள்.

“அப்படி இல்லை சுதா ... நான் சொரணை யற்றவள் இல்லை. பயந்தவளும் இல்லை. சந்திரன் செய்தது எல்லாமே அராஜகத்தின் உச்சம்... அந்தக் கொடுமைகள் இன்னிக்கும் என் தூக்கத்தின் சில மணித்துளிகளைத் தொந்தரவு செய்யுது. ஆனாலும், அவனை நான் காப்பாற்றினேன்... ஏன் தெரியுமா? அப்போது அவன் பலகீனமாக இருந்தான். உயிர் போகும் நிலையில் இருந்தான். நான் பழி தீர்க்கும் நேரமல்ல அது. அவனுடைய அந்தத் துயரமான நிலைமையை எனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வது எளிது. ஆனால், என் குணம் அதுவல்ல சுதா. காயம் பட்டவனை காப்பாற்றுவதுதான் என் குணம். அப்படித்தான் அவனையும் எழுப்பி உட்கார வைத்தேன். மூன்று மாதங்கள் தாதி போல... அவன் சரியாகி விட்டான். பழைய மூர்க்கம் தலையெடுக்க ஆரம்பித்தது... துரத்தி விட்டேன். துன்பங்கள் எனக்கு அபார பலம் கொடுத்திருந்தன.இப்போது மனம் அமைதி யாக இருக்கிறது சுதா... பாடல்கள் கேட்கிறேன். ஒரு அதிகாரியாக மக்களிடம் இனிமையாகப் பழகுகிறேன். தமிழில் நல்ல கவிதைகள் படிக் கிறேன். இரு, நாம் நல்ல காப்பி குடிக்கலாம்.”

அவள் கரங்களைப் பற்றி என் முகத்தில் வைத்துக்கொண்டேன் நான்.