சினிமா
தொடர்கள்
Published:Updated:

டிலேலா டீச்சர்! - சிறுகதை

டிலேலா டீச்சர்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
டிலேலா டீச்சர்! - சிறுகதை

- முகுந்த் ரத்னம்

இப்போதும் அந்த இரும்புக் கோபுரம் மெல்லச் சாய்வது போலவே இருந்தது பன்னீருக்கு. பின்னணியில் நீந்தும் மேகங்கள் அவனைப் பழைய ஸ்கூல் யூனிபாரத்துக்குள் திணித்திருந்தன. அவன் படித்த அதே கிறித்துவப் பள்ளி. எதிரில் போலீஸ் ஸ்டேஷன். அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள டவர்தான் அது. எதற்காக என்பதெல்லாம் அப்போதும் தெரியாது, இப்போதும். டவர் என்று மட்டும் சொல்வார்கள். இருநூறு அடிக்கும் மேலிருக்கும். பள்ளி மைதானத்தில் உட்கார வைத்து பீட்டர் சார் கிளாஸ் எடுக்கும்போது அந்த டவரையே பார்த்துக்கொண்டி ருந்ததற்காகப் பிரம்பால் அடித்திருக்கிறார். விதவிதமான மேகங்கள் டவரைக் கடந்து போகும்போது அது அப்படியே சாய்ந்து விழுவதைப் போலவே தோன்றும். ஆனால் டவர் இன்றுவரை சாய்ந்ததே இல்லை.

அவனுக்குக் கரூருக்குப் போய்ப் படிக்கவெல்லாம் ஒருநாளும் விருப்பம் இருந்ததில்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தது அப்பாவுக்கு வசதியாகப்போய்விட்டது. `இங்க இருந்தா இவன் பசங்களோட சேந்து மீனு புடிக்கப் போயே கெட்டுப்போயிருவான்’ என்று சொல்லி, அவனைக் கருரில் சேர்த்துவிட்டார். ஆரம்பத்தில் அவனும் பிடிக்காமல்தான் கரூருக்குப் போய் வந்தான். அவனுக்கு இந்தப் பள்ளியைப் பிடிக்க வைத்த ஒரே பெயர்...

டிலேலா டீச்சர்!

அப்படின்னா... யாருக்குத் தெரியும்? அது அவங்களோட பேர். அவ்ளோதான். கணக்கும் அறிவியலும் எடுத்தவங்க.

“யாருங்க வேணும்?” என்ற குரல் கேட்டு நினைவுக்கு வந்தான் பன்னீர்செல்வம். தன் எதிரில் நிற்பவருக்கு `என்னை அடையாளம் தெரியுமா’ என்ற சந்தேகத்தோடு சிறிதாகப் புன்னகைத்தான். அவர் லேசாகப் புருவத்தைச் சுருக்கி யாரோ பழைய மாணவன்தான் என்பதுபோல சின்ன சிந்தனைக்குப் பின், ஆள்காட்டி விரலை நீட்டி “பன்னீரு..?” என்றார்.

அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அனிச்சையாக அவனது வலது கை சல்யூட் வைக்க நெற்றிக்குச் சென்றது.

“என்னைய இன்னும் நினைவிருக்கா சார்?”

“ஒன்னைய எப்டிப்பா மறக்க முடியும், நெத்தில இருக்கற அதே தழும்பு… ஒங்கப்பாகூட பால்காரரு இல்ல?”

“ஆமா சார். அதே பன்னீர்தான் சார் நான்.”

அவருக்கும் பழைய ஞாபகங்கள் வந்திருக்க வேண்டும். பின்னே, இவன் என்னென்ன வேலை பார்த்திருக்கிறான்?

“ஒங்கப்பாமாரி ஒரு மனுசன பாக்க முடியாதுங்க தம்பி...” சொல்லிக் கொண்டி ருக்கும்போதே இடைமறித்தான்.

“சார், நீங்க என்னைய எப்பவும் போல வாடா போடான்னே கூப்புடுங்க சார். நீங்க இன்னைக்கும் எனக்கு சார்தான்.”

மெலிதாகச் சிரித்துத் தலையசைத்துக் கொண்டார். அவர் நிறைய பேசிக் கொண்டிருந்தார். இவனால்தான் அதோடு ஒட்ட முடியவில்லை.

டிலேலா டீச்சர்! - சிறுகதை

“என்னடா, நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கேன். நீ அப்பமாரியே இப்பவும் இருக்க. சரி, வா… போயி கேன்டீன்ல ஒரு டீ சாப்பிடலாம்” என்று சொல்லிச் சிரித்தார்.

இந்த கேன்டீன் அப்போது சத்துணவுக் கூடமாக இருந்தது. எல்லாமே மாறிவிட்டன. பெரிய பெரிய வேப்பமரங்களும் புங்க மரங்களும் இருந்த இடம் கட்டடங்களாகி மெட்ரிகுலேஷனாக மாறியிருந்தன.

மெயின் பில்டிங் பெரிய பெரிய தூண்கள், அகலமான சுவர்கள் என அப்படியேதான் இருந்தது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டியது. கதவு ஜன்னல்களெல்லாம்கூட அந்தப் பழைமை மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன. முகப்பில் இரண்டு பக்கமும் வில்லை வளைத்ததுபோல் சுவர். அதில் நாங்கள் அவ்வப்போது சறுக்கி விளையாடுவோம். நடுவில் பத்துப் பன்னிரண்டு படிக்கட்டுகள். அதற்கு மேல் மெயின் பில்டிங்கின் வராண்டா. அதில் நின்றுகொண்டுதான் காலை பிரேயரில் ஏசுநாதர் பாட்டு பாடுவார்கள். அப்போதெல்லாம் கருப்பசாமியைக் கும்பிட்டால்கூட கைகளால் எதேச்சையாகச் சிலுவைக் குறியிட்டுக் கொள்ளுவான். ஆண்ட்ரூஸ் சார் பாடினால் அப்படியே யேசுதாஸ் பாடுவதுபோலவே இருக்கும்.

`அல்லேலுயா அல்லேலுயா என்றெல்லாரும் பாடிடுவோம்… அல்லலில்லை என்றும் அல்லலில்லை ஆனந்தமாய்ப் பாடிடுவோம்’ என்று அவர் ஆர்மோனியத்தை வாசித்துப் பாடினால் எல்லோரும் உருகிவிடுவார்கள். உடன் சேர்ந்து நாங்களும் பாடுவோம். ஒருவேளை இந்த இசைதான் கடவுளாக இருக்குமோ?!

டீ குடித்து முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். டேவிட் சார் மாணவர்களிடத்தில் பழகுவதிலும் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.

“சார், ஒங்களுக்கு கிளாஸ் இல்லியா சார்?”

“லெஷர் பீரியட் இப்போ. கிளாஸ் முடிச்சிட்டு வரும்போதுதான் ஒன்னப் பாத்தேன்.”

பன்னீருக்கு வேறு ஒன்று இருந்தது. அதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் விழித்தான்.

“சார், நீங்க… டிலேலா டீச்சர்..?’’ அவரது முகத்தில் ஏதாவது நினைவு ரேகைகள் படர்கிறதா எனப் பார்க்க முயன்று தோற்றான். மறுபடியும் சிரித்தாரே தவிர, வேறெதுவும் தெரியவில்லை.

“ஒனக்கு ஞாபகம் இருக்கா… ஒன்னோட மொத காதல் யாரோடன்னு?” ஒரு தூண்டில் முள் தொண்டையில் லபக்கென்று மாட்டிக்கொண்டது போல் உணர்ந்தான்.

‘`(a+b)2 = a2+b2+2ab. இப்போ a-ங்கறது ஒரு பையன்னு வச்சிக்கோங்க… b-ங்கறது ஒரு பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுனா கொழந்த பொறக்கும்ல… எத்தனை கொழந்த? ரெண்டு பேத்துக்கும் சேத்து ரெண்டு கொழந்த… அதான் 2ab. சரி, a-வும் b-யும் எப்படி ரெண்டு மடங்காச்சி? கல்யாணமானாவே அப்பாவும் அம்மாவும் ரெண்டு மடங்கா குண்டாயிடறாங்கில்ல… அப்பிடி.”

ஏனென்றே தெரியாமல் நாங்கள் படுபயங்கரமாகச் சிரிப்போம். இப்படித்தான் பாடம் நடத்துவார் டேவிட் சார். டிலேலா டீச்சருக்கும் அவருக்கும் ஒரு ‘இது’ இருப்பதாக பசங்களெல்லாம் பேசும்போது நரம்புக்குள் யாரோ ரயில் ஓட்டுகிற மாதிரி கொஞ்சம் குறுகுறுப்பாகத்தான் இருக்கும்.

ஸ்டாஃப் ரூமுக்குள் அழைத்துச் சென்று அமரச் சொன்னார் டேவிட் சார். அதே அறைதான் இன்றும். மரப் பெஞ்சுக்கு பதிலாக ஸ்டீல் பெஞ்ச், அவ்வளவுதான் வித்தியாசம். அதே டைம் டேபிள் போர்டு. அதே வாஷ் பேசின். அதே டொர டொர ஃபேன். அறையில் யாருமில்லை. எல்லோரும் வகுப்புக்குச் சென்றிருப்பார்கள். இதுதான் சரியான தருணம் என்று தோன்றியது பன்னீருக்கு.

“சார், தப்பா எடுத்துக்காதீங்க. டிலேலா டீச்சர் இன்னும் வேல பாக்கறாங்களா சார்?”

டேவிட் சார் தன் முன்னாலிருந்த டேபிளில் இரு முழங்கைகளையும் ஊன்றி விரல்களை இறுகப் பிணைத்திருந்தார். அவன் கேட்டவுடன் இன்னும் கொஞ்சம் இறுக்கம் அதிகமாகியிருக்க வேண்டும். ஆனால் டேபிளைப் பார்த்தவாறே மெலிதாகப் புன்னகைத்தார். அதற்குள் வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்தது.

“நீ இங்கியே இரு. நான் கிளாஸ் முடிச்சிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு, கிளம்பிச் சென்றுவிட்டார்.

கேட்டிருக்கக்கூடாதோ? இருட்டு கப்பிய சுரங்கப்பாதைக்குள் ரோலர் கோஸ்டரில் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே படுவேகமாக வளைந்து வளைந்து மேலும் கீழும் ஏறி இறங்கிச் செல்வதுபோல் இருந்தது அவனுக்கு.

டிலேலா டீச்சர்… என்ன அற்புதமான பெயர். தேவதை என்ற வார்த்தையை விடவும் மென்மையான வார்த்தை டிலேலா டீச்சர். நிலவை ஒவ்வொரு நாளும் இரவு செதுக்குவதைப் போல, விழிக்கு வலிக்காமல் இமைகள் செதுக்குவது போல… பார்வைகளால் மட்டுமே செதுக்கி வைத்த உருவம். பச்சை நரம்புகள் படரும் புறங்கைகளைத் தாண்டி நீளும் விரலில் மினுக்கும் சிறு மோதிரம். சாக்பீஸ் பிடித்து போர்டில் எழுதும்போதெல்லாம் அந்த மோதிரம் விரல்களுக்கு வலியைக் கொடுக்காதா என்று துடிக்க வைத்த என் பதின்பருவத்து டீச்சர் தேவதை. மேகப்பொதியில் ஒரு டெடி பியர் செய்ததுபோல அப்படியொரு அழகு. தலைமுடி அவ்வளவு அடர்த்தியாக, நீளமாக இருக்கும். எந்த ஹேர் பின்னும் தேவைப்படாது. வீசுகின்ற காற்றுக்குப் பிரிந்துவிடாத, சொல்பேச்சு கேட்கின்ற அமைதியான நேர்த்தியான கேசம். கழுத்தில் அறுகம்புல் மாதிரி சின்னதாக செயின், அவரது நிறத்தோடு எப்போதும் போட்டி போட்டபடி கழுத்தில் புரண்டுகொண்டே இருக்கும். வலது கை மணிக்கட்டில் கறுப்பு ஸ்ட்ராப் டைட்டன் வாட்ச். அவர் நிறத்தை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டும். பாதத்தைக் கண்களுக்குக் காட்டவே காட்டாத பருத்திப் புடவைதான் எப்போதும். இதைத்தாண்டி அவன் எதையும் ரசித்ததில்லை. அதற்கு மேல் எதுவும் அந்த வயதில் அவனுக்குத் தேவையாகவும் இருக்கவில்லை. அவ்வளவு எழிலான டிலேலா டீச்சர் கைகளில் பிரம்பு மட்டும்தான் ஒரே பிரச்னை. அவருடைய பிரம்புக்கு எல்லாரும் கணக்கில் சென்டம் எடுக்கவேண்டும், அது மட்டும்தான் தெரியும். முகத்தில் அவ்வளவு கண்டிப்பு.

பக்கத்து அறையில் யாரோ ஒரு டீச்சர் பாடம் நடத்துவது காதில் கேட்டது. ஊன்றிக் கவனித்துப் பார்த்தான். எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை. அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தான். ஏதோ திருடனைப் போல பக்கத்து வகுப்பின் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

`மெசபடோமியா டீச்சர்தான அவங்க! மெசபடோமியாவா... அவங்க பேரு… ஆங்… மார்கரெட் சுசீலா! ஹிஸ்ட்ரி டீச்சர். இருப்பதிலேயே `மெசபடோமிய நாகரிகம் பற்றி எழுது’ங்கிற கேள்விதான் பெரியது. அவருக்குத் தூக்கம் வந்தால், இதை யாரையாவது படிக்கச் சொல்லிட்டு, சேரில் உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார். அதனாலேயே அவர் ‘மெசபடோமியா டீச்சர்.’ பசங்களுக்கு ஏதாவது காய்ச்சல், தலைவலி என்றால் துடித்துப் போய்விடுவார். தன் கைக்காசைக் கொடுத்து மாத்திரையும் டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்து, தூங்க வைத்துவிடுவார். டீயும் பன்னும் தின்பதற்காகவே தலைவலி என்று பொய் சொன்ன பயல்கள் உண்டு. நானும்தான். இப்போது பல் செட் கட்டியிருப்பார்போல. கொஞ்சம் முகம் மட்டும் மாறியிருக்கிறது. ஆனால் அதே தூக்கம். அதே தாய்மை.

இவனாகவே வலியச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். மெசபடோமியா டீச்சருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவர் அப்படித்தான். எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படுவார். ஒருமாதிரி ஹஸ்கி வாய்ஸ் அவருடையது. இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது போலிருந்தது. வகுப்பு நேரமாக இருந்ததால் அவரோடு அதிக நேரம் பேசக்கூடாது என்று நினைத்தான். ஆனால் அதற்கெல்லாம் அசருகிற ஆளில்லை மெசபடோமியா டீச்சர். அவனை உள்ளே வரச் சொல்லி உட்கார வைத்துப் பேச ஆரம்பித்து விட்டார். கொஞ்ச நேரத்துலேயே டிலேலா டீச்சரைப் பற்றிப் கேட்டுவிட்டான். டிலேலா பேரைக் கேட்டதும் மெசபடோமியா டீச்சர் சிரித்தாலும், கண்ணீரும் கூடவே வந்தது. எப்போதும் சத்தமாகவே பேசும் டீச்சர், மாணவர்கள் இருந்ததால் தணிந்த குரலிலேயே பேசினார்.

“அதையேண்டா கேக்கற... ஒனக்குத் தெரிஞ்சிருக்கணுமே, நம்ம டேவிட்டும் டிலேலாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் உசுரா விரும்புனாங்க. யார் கண்ணு பட்டுச்சோ, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துபோச்சு...”

டீச்சர் சொல்லச் சொல்ல அவனுக்கு ஏதோ செய்தது.

“நாங்கெல்லாம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்துட்டோம். கர்த்தரோட கிருபை அவ்ளோதான். டிலேலாவோட அப்பன் ரொம்பப் புடிவாதமா இருந்துட்டான். இவன் பெந்தகொஸ்தேவாம்… டேவிட்டு ஆர்.சி-யாம். அதனால பொண்ணக் கட்டி வைக்க முடியாதுன்னு ரொம்பக் கறாரா சொல்லிட்டான். டிலேலா ரிஜிஸ்டர் மேரேஜ்கூட பண்ணிக்கிறேன்னு இவனத் தேடிக்கிட்டு வந்துருச்சு. ஆனா இவன்தான் ‘அப்பா அம்மாவோட சாபத்துல நாம குடும்பம் நடத்த வேணா’ன்னு அவள திருப்பி அனுப்பிட்டான். அதுக்கப்பறம் அவங்கப்பன் எதோ மிலிட்ரிகாரனுக்குக் அவளக் கட்டிக்குடுத்து, கல்யாணம் பண்ணுன நாலே வருசத்துல அவன் கார்கில் போர்ல செத்தும் போயிட்டான். கொழந்த குட்டிகூட இல்லாம அநாதையா திரும்பி வந்தப்ப…”

பியூன் மாணிக்கம் வந்து இடைமறித்தார். “டீச்சர், ஒங்கள ஹெட் மாஸ்டர் கூப்பிடறாங்க.”

இடுப்பில் செருகி வைத்திருந்த தன் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே மெசபடோமியா டீச்சர் சென்று விட்டார். `ஏண்டா இங்க வந்தோம், ஆறிய புண்ணை நோண்டினோம்’ என்பதுபோல் இருந்தது பன்னீருக்கு. தன் இடது முழங்கை முட்டியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். டிலேலா டீச்சர் கொடுத்த அந்தப் பரிசு தழும்பாய்ச் சிரித்தது.

டிலேலா டீச்சருக்குப் பிடித்த வார்த்தைகளில் ஒன்று ‘பின்ராப் சைலன்ஸ்!’

டிலேலா டீச்சர்! - சிறுகதை

மூச்சு விடுகின்ற சத்தம் மட்டுமே கேட்குமளவுக்கு அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பயம். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. பக்கத்து கிளாஸில்தான் டிலேலா டீச்சர் இருந்தார். டிலேலா டீச்சர் வந்து “பின்ராப் சைலன்ஸ்” சொல்லிவிட்டுப் போனார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்து, இரைச்சலாய் மாறியது. பன்னீர் எழுந்து “டேய் பேசாதீங்கடா” என்று கத்தவும், அவன் முதுகிலும் கைகளிலும் பிரம்படி விழவும் சரியாயிருந்தது. ஒரு அடி அவனது இடது முழங்கை முட்டியில் பட்டுவிட பன்னீருக்கு கரன்ட் ஷாக் அடித்தது போலிருந்தது. எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ, அவ்வளவையும் திரட்டித் திரும்பி அடிக்கக் கை ஓங்கி…

டிலேலா டீச்சர்..! ஓங்கிய கை அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டது.

பிரச்னை ஹெட் மாஸ்டர் வரை போய், அப்பாவோடு வந்தால்தான் ஸ்கூலுக்குள் நுழைய முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

மறுநாள் காலையில் அப்பா பிரார்த்தனை வகுப்பில் நின்றிருந்தார்.

“ஒங்க பையன் பாடம் சொல்லிக் குடுக்கற டீச்சரையே அடிக்கக் கை ஓங்கிட்டான். இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட பிள்ளைங்கள வெச்சிக்கிட்டு நாங்க எப்படிங்க பாடம் நடத்தறது?” என்று சொன்னதுதான் தாமதம், பன்னீரைப் போட்டு அடிஅடியென்று அடித்துவிட்டார். அத்தனை பேரின் முன்பும் அடித்தது அவனுக்கு அவமானமாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் அவன் இடது முழங்கை முட்டியிலிருந்த காயத்தைக் காட்டினான். அது சூடு வைத்தது போல் நீர் கட்டிப் பழுத்திருந்தது.

“நான் தப்பே பண்ணலப்பா. பேசாதீங்கடான்னுதான் சொன்னேன். டீச்சர் வந்து என்னைய அடிச்சிட்டாங்க” என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான். அப்பாவுக்குத்தான் பொறுக்க முடியவில்லை. மனதுக்குள் தன் மகனை நினைத்து மருகினார்.

“என்னதான் இருந்தாலும் டீச்சர அடிக்கக் கை ஓங்கக் கூடாதுப்பா. அது பெரிய தப்பு.”

“டீச்சர்தான் அடிச்சாங்கன்னுகூட எனக்குத் தெரியாதுப்பா. கைய ஓங்கினதுக்கப்பறந்தான் நான் அவங்களயே பாத்தேன். டிலேலா டீச்சர எனக்கு ரொம்பப் புடிக்கும்ப்பா. அவங்க முன்னாடி என்ன அடிச்சிட்டியேப்பா” என்று அழுதுகொண்டே உறங்கிப்போனான்.

அதன்பிறகு வகுப்பில் அவனைப் பார்க்கும்போதெல்லாம் டிலேலா டீச்சருக்கு பாவமாக இருக்கும். ஆனால் அவன் பெரிதாக டீச்சரிடம் பேசியதேயில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைசி நாள் வகுப்பு. மாணவர்களில் ஒருசிலர் டிலேலா டீச்சர் முன்பு மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கினார்கள். எல்லோருக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து அவர் ஆசீர்வதித்தார். டிலேலா டீச்சர் பன்னீர் வருவானா என்று ஓரக்கண்ணால் பார்த்தபடியே இருந்தார். ம்ஹும்...

ஸ்டாஃப் ரூமில் டிலேலா டீச்சர் அமர்ந்திருந்தார். யாருமில்லை. வாசலில் ஏதோ நிழலாடியதுபோல் தெரிய, நிமிர்ந்து பார்த்தார். அங்கு பன்னீர் நின்றிருந்தான். அவன் முகத்தில் கோபம் இருப்பதுபோல் இருந்தது. டிலேலா டீச்சருக்கு ஒரு மாதிரி அச்சம் உடலெங்கும் ஊடுருவியது. எழுந்து நின்றார். அருகில் வந்து நின்று டீச்சரையே பார்த்தபடி நின்றான்.

“என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க டீச்சர்.” தடாலென்று மண்டியிட்டான்.

எங்கிருந்து அவ்வளவு கண்ணீர் வந்ததோ டிலேலா டீச்சருக்கு. விசும்பல் சின்னதாக இருந்தாலும் கண்ணீர் மட்டும் அருவியாய்க் கொட்டியது. மண்டியிட்ட நிலையிலேயே அவனை அப்படியே அணைத்துக் கொண்டார். டிலேலா டீச்சரின் கண்ணீர் அவனது தலைமலையெங்கும் விரவி ஓடி ஒரு புது நாகரிகத்தைப் புத்துயிர்ப்பு செய்து கொண்டிருந்தது.

அவனது முகத்தை நேராகப் பார்த்து அழுத விழிகளோடு டிலேலா டீச்சர் சொன்னார், “ஸாரிடா பன்னீர்! அம்மாவ மன்னிச்சிரு!”

பதினாறு வருடங்கள்… அவன் தலைமுடியை அலைந்த விரல்களை, சாக்பீஸ் பிடித்து எழுதும்போது அணிந்திருக்கும் மோதிரத்தால் வலிக்காதா என்று ஏங்க வைத்த விரல்களை… மறந்து பதினாறு வருடங்கள் ஓடிவிட்டது. இன்று வந்திருக்கிறான் மறுபடியும். அந்த அன்னையின் வருடும் விரல்களின் ஒரு தலைகோதலுக்காக.

லைட்ஹவுஸ் தியேட்டருக்குப் பக்கத்திலிருந்த அமராவதி ஆற்றுப்பாலம் இப்போது நடைபாதைப் பூங்காவாக மாறியிருந்தது. சிலர் நடந்துகொண்டும் அங்குள்ள கல் பலகைகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டுமிருந்தனர். பக்கத்திலேயே கட்டியிருந்த புதிய பாலத்தில் வாகனங்கள் சீறிக்கொண்டிருந்தன. அமராவதி ஆற்றின் நீரில் மிதந்தபடி சூரியன் ‘இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேனே’ என்பதுபோல் சிவந்துகொண்டிருந்தான். டேவிட் சாரும், பன்னீரும் ஒரு பலகையில் அமர்ந்திருந்தனர்.

“சார், நீங்க… டிலேலா டீச்சர…”

வார்த்தைகள் வராமல் தவித்தான். அவனுக்குள் உணர்வுகள் கொதிநிலையைக் கடந்து கொப்பளித்துக்கொண்டிருந்தது.

“இன்னமும் சின்னப் பையனாவே இருக்கியேடா” அவரின் ஆழ்ந்த பெருமூச்சில் ஆயிரம் உணர்ச்சிகள் கொட்டின. “உன்ன ஒன்னு கேட்டேனே, பதில் சொல்லவே இல்ல.”

`என்ன’ என்பதுபோல் பார்த்தான்.

“ஒன்னோட மொத காதல உனக்கு ஞாபகம் இருக்கான்னு கேட்டேனே?”

அவன் அப்போதும் பதில் எதுவும் சொல்லவில்லை.

“எனக்குத் தெரியும். அது பப்பி லவ்வா இருந்தாலும் அதுதான் உண்மையானது. அந்த வயசுல வர்றதுதான் எதையும் எதிர்பார்க்காம அந்த லவ்வுக்காக தன்னையே அர்ப்பணிக்கும். எனக்கும் இன்னும் அந்த பப்பி லவ் இருக்கு. அதனாலதான் நான் இன்னும் டிலேலாவோடயே வாழ்ந்தும் வாழாமயும் இருக்கேன்.”

அவனுக்குப் புரியவில்லை. டேவிட் சார் தொடர்ந்தார்.

“டிலேலா… ரொம்ப வித்தியாசமான பேரு இல்ல. சும்மா சொல்லுவாங்க… மனசப் பாத்து வர்றதுதான் காதல்… அது இதுன்னு. அதெல்லாம் கெடையாது. மொதல்ல கண்ணு பாக்கணும், கவரணும். அதுக்கப்பறம் மனசு இழுக்கும். இவங்களவிட்டு இருக்கவே முடியாதுன்னு குதியா குதிக்கும். நீ கல்யாணமாகி குடும்பத்தோட இருக்கற வயசுங்கறதால உன்கிட்ட இத என்னால பேச முடியுது. டிலேலா அழகுடா. கொட்டிக் கெடந்த அழகு. யாருக்குத்தான் புடிக்காது அவங்கள... இந்த நாப்பத்திரண்டு வயசுலயும் நான் அவங்கள ரசிக்கிறேன். அவங்களுக்கு முடி ரொம்ப நீளமா இருக்கும். ஜடைக்கு அடங்காத அடர்த்தியான முடி.”

அவர் பழைய நினைவுகளில் மூழ்கிப்போவதை பன்னீரால் விரும்ப முடியவில்லை.

“போரடிக்குதா, ஒன்னு சொல்லவா? ரெண்டு பேரும் ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் வாழ முடியாதுங்கற மாதிரி ஸ்கூல்ல படிக்கற காலத்துலேருந்தே லவ் பண்ணினோம். ஆனா ஒருத்தர ஒருத்தர் தொட்டுக்கிட்டதுகூட கெடையாது. கண்ணால பாத்துக்கும்போதே ஏதோ பல ஜென்மம் குடும்பம் கொழந்தைகளோட வாழ்ந்தா மாதிரி ஒரு நெனப்பு.”

“சார், டீச்சர் இப்ப எங்க இருக்காங்க?” என்று மறித்துக் கேட்டான். அவர் சிரித்துக்கொண்டார்.

“அதுக்குத்தான இங்க ஒன்னைய கூட்டி வந்திருக்கேன். போன் பண்ணியிருக்கேன். இங்க லைட்ஹவுஸ் தியேட்டர் பக்கத்துலதான் என் வீடு. வந்துருவாங்க. ஒன்ன பாக்க ஒரு கெஸ்ட் வந்திருக்காங்கன்னு சொன்னேன். உன் பேரச் சொல்லல. வந்து தெரிஞ்சிக்கட்டும்.”

டிலேலா டீச்சர்! - சிறுகதை

அவனுக்கு என்னவோ செய்தது. டீச்சரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தான். காற்றில் அங்கு படர விட்டிருந்த கொடிகள் மெல்ல ஆடின. அதிலிருந்து ஒரு இலையைக் கிள்ளி எடுத்து துளித்துளியாகப் பிய்த்துப் போட்டான். பாலத்தின் எதிர்முனையில் ரொம்ப தூரத்தில் மங்கலாக ஒரு பெண் முக்காடிட்டு மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தாள். யாரோ வாக்கிங் போகிறவங்களா இருக்கும் என்று எண்ணினான்.

“வாழ்க்கை நாம நெனைக்கறமாரியே அமைஞ்சிட்டா அதவிட கொடுப்பின வேறெதுவும் இல்ல பன்னீரு. நாம எதையெல்லாம் பெருசா பொக்கிஷமா நெனைக்கிறமோ அதையெல்லாம் இந்த வாழ்க்கை ஒரு சூறாவளிமாரி வந்து நாசம் பண்ணிட்டுப் போயிருது. அதுக்காக நாம நேசிச்சத விட்றவா முடியும்? அவங்களா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு என்னைத் தேடி வந்தப்ப, ஏதோ தத்துவம் பேசி அவங்கள விட்டுட்டேன். ஆனா நானா போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு எட்டு வருஷமா கேக்குறேன். இப்போ அவங்க மாட்டேங்கறாங்க. இருந்தாலும் டிலேலா நான் நேசிச்ச பொண்ணு. அவங்களுக்கு யாருமில்ல. அவங்க என் வீட்டுலதான் என்னோட பாதுகாப்புலதான் இருக்காங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்காம இருக்கோம். ‘இந்த உடம்பத் தந்து ஒங்க காதல நான் கொச்சைப்படுத்த விரும்பலே’ன்னு சொல்லி அவங்க கல்யாணம் பண்ணிக்கவே விடல.”

டேவிட் சார் சொல்லுவது எதுவும் பன்னீருக்கு விளங்கவில்லை.

“அவங்களுக்கு என்னதான் சார் ஆச்சு?”

“டிலேலா காஷ்மீர்லேருந்து திரும்பி வரும்போது விடோவா மட்டும் வரலடா, கேன்சரோடும்தான் வந்தாங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள், முக்காடிட்ட அந்தப் பெண்மணி அவர்கள் அருகில் வந்து நின்றாள். அவனுக்கு யாரென்று தெரியவில்லை. கடவுளே என் மனம் நினைக்கிற மாதிரி மட்டும் இருந்துவிடக்கூடாது.

காற்றில் மெல்ல அந்த அம்மாளின் முக்காடு விலக, அங்கே நின்றிருந்தது அதே டிலேலா டீச்சர்தான்.

“டீச்சர்..!”

அவன் மூளைக்குள் மின்னல் முறிந்து விழுந்தது. ‘நடக்கும்போதும், பாடம் நடத்தும்போதும் நான் ரசித்த அந்த அழகு தேவைதையா இவங்க? இல்ல… ஐயோ அந்த முடி? உதிர்ந்த முடிகளைப் பத்திரப்படுத்தி அதில் சட்டைப் பொத்தான் தைத்தேனே… அந்த முடி எங்க? ஏன் இந்த வழுக்கைத் தலை? கண்ணாடிக்குண்டுபோல இருந்த அந்தக் கருவிழிகள் எங்க போயிருச்சு? இப்படியும் ஒளியிழக்க முடியுமா? எலும்புகள் துருத்தி சதைகளே இல்லாமல் இப்படி ஒரு கன்னமா? ஊருணி போல இருந்த அந்த உதடுகளில் நூற்றாண்டுகளின் வறட்சி ஏன்?’

இவனால் அங்கு நிற்கவே முடியவில்லை. கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது.

`இல்ல… இவங்க டிலேலா டீச்சர் இல்ல. இவங்க என்னோட டிலேலா டீச்சர் இல்ல. அவங்க தேவதை… அவங்க என்னோட ஸ்கூல்ல கணக்குப் பாடம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. வலது கைல கறுப்பு கலர் ஸ்ட்ராப் டைட்டன் வாட்ச் கட்டிக்கிட்டு ரொம்ப ஸ்டைலா காட்டன் புடவைல வருவாங்க. கைல பெரம்ப வச்சிக்கிட்டு ‘பின்ராப் சைலன்ஸ்’னு சொன்னா அத்தனை ஸ்டூடன்ஸும் கப்சிப்னு வாய மூடிக்குவாங்க. அவங்க அப்படியே இருக்கட்டும். இவங்க வேற யாரோ…’

அவன் மனம் உரக்கக் கத்தினாலும் முகத்தில் எதையும் காட்டாமல், உள்ளே சுழி இருந்தாலும் அமைதியாகத் தெரியும் நீரோட்டம் போல் இருந்தான். டிலேலா டீச்சர் அவனைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார்.

மொபைல் போனிலிருந்து மணி அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு, “சார், அவசரமா போணும். நான் கௌம்பறேன் சார். வர்றேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கடைசி வரை டேவிட் சார் கேட்ட அந்த முதல் காதலைப் பற்றிச் சொல்லாமலே சென்றுவிட்டான். ஆனால் ‘டிலேலா டீச்சர்’ என்று மரப்பெஞ்சில் காம்பஸால் எழுதி வைத்த அவனுடைய வகுப்பு இருக்கையில் எத்தனை முறை அமர்ந்து பாடம் நடத்தியிருப்பார். அவருக்குத் தெரியாதா என்ன?

பன்னீர் பாலத்தின் கோடிக்குச் சென்று திரும்பிப் பார்த்தான். மங்கலாய் டிலேலா டீச்சர், டேவிட் சாரோடு நடந்து வந்து கொண்டிருந்தார். மேற்கே சூரியன் தண்ணீராய் அழுதுகொண்டிருந்தது.