
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
பெரும்பாலான மனிதர்களுக்குப் பொதுவானதென சிலவற்றை நாம் சொல்வோம் அல்லவா, அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று புன்னகை. குழந்தையை எதிர்கொள்கையில் அனிச்சைச் செயலாக நமக்குள் உதிக்கும் புன்னகை. குழந்தைகளைப் பார்க்கிற, குழந்தைகளோடு நேரம் செலவிடுகிற பொழுதுகளில் நாமும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம். நாம் நமக்குள்ளேயே தொலைத்துவிட்ட குழந்தைமை அந்த நேரங்களில் வெளிப்படுகிறது. ஆனால், அந்த உணர்வை ஏன் நம்மால் தொடர்ந்து வைத்திருக்க முடிவதில்லை. அது ஏன் தொலைந்துபோனது.
இந்தக் குழந்தைமையைத் தங்களின் ஆயுள் முழுக்க நீட்டித்து வைத்துக்கொண்டிருப்பவர்களாக கலைஞர்களைச் சொல்ல முடியும். மகா கலைஞர்கள் எப்போதும் அந்தக் குழந்தைமையுடன் இருப்பதைப் பார்க்கலாம். ஒரு முறை எழுத்தாளர் சா.கந்தசாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘எழுத்தாளன் என்பவன் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென அவசியமே இல்லை. பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்’ என்று சொன்னார். குழந்தைமைத்தனத்தையே முட்டாள்தனம் என்று சொல்கிறார் கந்தசாமி. சதா நம் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும், பரபரப்பு, பதற்றம் இவற்றுக்கு மத்தியில் நாம் குழந்தைமையைத் தொலைக்கிறோம். நாமே அறியாமல் அந்தக் குழந்தைமை உணர்வைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

‘புத்தகத்தின் பக்கங்களில் மறைத்து வைத்திருக்கின்ற மயிலிறகு குட்டி போடாது என்று எப்போது ஒரு குழந்தை கற்றுக்கொள்கிறதோ அல்லது நம்புகிறதோ அப்போது அந்தக் குழந்தை தன் குழந்தைமையை இழந்துவிடுகிறது' என்பார் பிரபஞ்சன். மயிலிறகுகள் குட்டி போடுவதற்காகக் காத்திருக்கிற குழந்தைகளின் உலகம் மிக அபூர்வமானது.
குழந்தைமை ஒருவரை விட்டு வெளியேறுகிற தருணங்களில், கள்ளம், கபடம், துரோகம், வன்மம், மூர்க்கம் போன்ற உணர்வுகள் மனத்தில் ஊறத் தொடங்குகின்றன. ஆனாலும் மனத்தின் அடி ஆழத்தில் குழந்தைமையின் சுவடு எஞ்சி நிற்கிறது. மகா திருடனாக, மகா போக்கிரியாக இருக்கிற ஒரு மனிதன்கூட ஏதோ ஒரு தருணத்தில் அந்தக் குழந்தைமைத்தனத்திற்கு பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றான். தன் மனத்தளவில் பயணப்பட்டுவிட்டு உடனே தன்னுடைய மூர்க்கத்தனத்திற்குத் திரும்புகிறான்.
குழந்தைமை என்கிற சொல்லில், எந்த பேதங்களும் அற்ற ஒன்றாகப் பார்க்கிற பார்வை என்பதையும் காணலாம். குழந்தைகளின் உலகில் எல்லாம் ஒன்றுதானே! குழந்தைமை மனத்தில் எந்தப் பாகுபாடுகளும் இருப்பதில்லை. அந்த மனது ‘இவருடன் பழகினால் ஆதாயம் கிடைக்கும், இவரால் எந்தப் பயனும் இல்லை’ என்பது போன்ற எந்தத் திட்டமிடலுக்கும் உட்படாது. `அவருக்குக் குழந்தை மனசு சார், ரொம்ப நல்லவரு!' என அடையாளப்படுத்தப்படுகிற மனிதர்கள் நம் எல்லோர் வட்டத்திலும் இருக்கிறார்கள். வாஞ்சையாக சக மனிதர்களிடம் பழகுகிற அவர்களிடம் பேசுகையில் நாமும் வாஞ்சையாக மாறிவிடுகிறோம். ஆனால், மற்ற நேரங்களில் நாம் ஏன் ஏதோ கணக்கீடுகளோடு, யோசனையோடு அலைகிறோம். நமக்கே பிடித்த ஒரு குணம், நம்மிடம் இருந்தே அது எங்கே போனது என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. நாம் தொலைத்துவிட்டதாக எண்ணுகிற ஒரு மனது எங்கே போனது?!
கி.ராஜநாராயணனின் `கன்னிமை' என்கிற கதை உண்டு. அந்தக் கதையில், எட்டு அண்ணன் தம்பிகள் கொண்ட பெண் குழந்தை இல்லாத ஒரு பெரிய குடும்பம் இருக்கும். அம்மா ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பாள். இருட்டில் ஒரு தீப ஒளி எரிவது போல் அவள் பிரகாசிப்பாள். அந்தப் பெண்ணிற்கு நாச்சியம்மை என்று பெயர். அழகும் அவ்வளவு பொலிவும் அவ்வளவு அறிவும் அவ்வளவு அன்புமாக அந்த வீட்டிற்குள் பிரகாசிப்பாள். அவள், ஒரு வகையில் அந்த அண்ணன்மார்கள் எல்லோரையும் தன் அன்பினால் கட்டுப்படுத்திக் கொண்டு வருவாள். இந்த உலகம் பெண்களுக்கானது, நம்முடைய வாழ்க்கையே நம் குழந்தைகளுக்கானது, நம் குடும்பத்திற்கானது என்ற எல்லைகளை நாச்சியாரம்மாள் தன்னுடைய சிறிய வயதிலேயே மீறுவாள்.
அவளுடைய உலகத்தில் யாசகம் செய்பவர்கள் இருப்பார்கள்; அவளுடைய உலகத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் இருப்பார்கள்; அவளுடைய உலகத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் இருப்பார்கள்; அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துத் தான் இன்புறுவதை ஓர் அபூர்வமான நிமிடமாகத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்வாள். வேலைக்காரர்கள்கூட நாச்சியம்மை கையால் ஒரு சொம்பு கம்மங்கூழோ, ஒரு கோப்பை தண்ணீரோ வாங்கிக் குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிறுவன் ஒருவன், திருடியதற்காகக் கட்டி வைக்கப்பட்டுப் பலரும் அடித்ததில் ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பான். அவன் தகப்பன் அவனை அடித்தவர்களை வெட்டுவதற்காகத் தயாராவார். இவள் அந்தச் சிறுவனிடம் சென்று அவன் ரத்தக் காயங்களைத் துடைப்பாள். அவனை அக்கறையுடன் பார்த்துக்கொள்வாள். இதனால், சிறுவனின் அப்பாவே இவளை வணங்குவான். இப்படி ஒரு தேவதைபோல இருப்பாள். இந்தத் தன்மைக்குக் காரணம் அவளின் அந்தக் குழந்தைமை மனம்தான்.
பின்னாள்களில் அவள் திருமணமாகிச் சென்றுவிடுவாள். அவளுக்குக் குழந்தை பிறக்கும். காலச் சக்கரத்தின் ஓட்டத்தில், அவள் தன் குழந்தைமையை மெல்ல இழந்துகொண்டே வருவாள். பூம்பூம் மாட்டுக்காரர்கள் சாப்பாடு கேட்டால் எரிந்துவிழுவாள். சாப்பாடில்லை என்பாள். வரவு செலவுக் கணக்குகளை கவனமாகப் பார்ப்பாள். 5 ரூபாய் குறைகிறதே எனத் திரும்பத் திரும்ப எண்ணுவாள். இத்தனை நாள்கள் அவளிடமிருந்த குழந்தைமை தொலைந்துபோனதில் அவள் கணவனுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ‘குழந்தைமையை இழந்துவிட்டால் அவள் எங்கே’ என்பதாகக் கதை முடியும்.
ஒரு வகையில், நாச்சியம்மைகளைக் குடும்பங்கள் விழுங்கிவிடுகின்றன. ஒரு வகையில் கருணையே உருவான, உலகத்திற்கே முலைப்பால் ஊட்டின நாச்சியம்மைகள் குடும்பத்திற்குள் அடங்கிவிடுகிறார்கள். அவர்கள் இப்போது மிகுந்த சுயநலமிக்கவர்களாக, குடும்பத்திற்கு உரியவர்களாக மாறிப்போய் இந்த உலகத்தில் உள்ள சக மனிதர்கள்மீது வைத்திருந்த அன்பையும் பிரியத்தையும் அப்படியே மூட்டை கட்டி வைத்துவிடுகிறார்கள்.
குழந்தைமையை இழக்கின்ற ஒவ்வொரு மனிதரும் கருணையையும் அன்பையும் நிராகரிக்கிறார்கள். சுயநலமும் சொந்தக் குடும்பத்தினுடைய பொறுப்புகளும் அவர்களை அடைத்துக்கொள்கிறது. இதைத்தான் ‘பூப்பறித்தல்' என்கிற ஒரு கவிதையில் மறுபடியும் முகுந்த் நாகராஜன் சொல்கிறார்.
வழியில் அழுது அடம்பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்னக் கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது
இந்தக் குழந்தைமையை உலகத்தில் உள்ள எல்லாப் பெரியவர்களும் ஏதோ ஓர் அபூர்வமான நிமிடத்தில் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடுதலில் அவர்கள் கண்டடைகின்ற உலகம், பூ மாதிரியானது. ஒரு செம்பருத்திப் பூவின், ஒரு ரோஜாப் பூவின் மென்மையை ஒத்தது. ஆனால் வாழ்க்கை, ‘திரும்பத் திரும்ப குழந்தைமையின் மீது நீர் தெளித்தது போதும். நீ உன்னுடைய சமகாலப் பருவத்திற்குத் திரும்பு!' என்று அவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதைப் பல கலைஞர்கள் தங்களுடைய பல எழுத்துகளில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

குழந்தைகளாக இருந்து பெரியவர் களாக மாறுவதே பரிணாமத்தின் இயல்பு. ஆனால், அந்தக் காலகட்டத்தில் நாம் தொலைக்கிற அந்தக் குழந்தைமை, நாம் தகப்பனாகவோ, தாயாகவோ மாறுகிறபோது காணாமல் சென்று எங்கோ ஒளிந்துகொள்கிறது. பொறுப்பு என்கிற ஒற்றைச் சொல்லைக் காரணம் காட்டி நம் மனத்தில் அன்பின் சுனையாக இருக்கிற குழந்தைமையைத் திட்டமிட்டோ, திட்டமிடாமலோ தொலைக்கிறோம். சில நேரங்களில் இயல்பை மீறி குழந்தையாக மாறிவிட நடிக்கிறோம்.
கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு' என்கின்ற கதை... ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெரியவர், மனத்தளவில் எப்போதும் குழந்தையாகவே இருப்பார். பெரியவர்கள் குழந்தைகளாக மாற ஆசைப்படுகிறபோது, அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அதில் ஒரு நாடகத் தன்மை வந்துவிடும். அவர்கள் வலிந்து குழந்தைகளாக மாற முயற்சி செய்வார்கள். குழந்தைகளின் கதையைப் பெரியவர்கள் சொல்லும்போது ‘குழந்தைகளாக மாறி தாங்கள் சொல்ல வேண்டும்’ என்று ஆசைப்படுகிறபோதே அதில் ஒரு நடிப்பு அவர்கள் உடல்மொழியில் வந்துவிடுவதைப் பார்க்கலாம். ‘அன்பளிப்பு’ என்கிற அந்தக் கதையில், அவரைச் சுற்றி எப்போதுமே குழந்தைகள் மொய்த்துக்கொண்டே இருப்பார்கள். அவரைத் தூக்கத்திலிருந்து குழந்தைகள்தான் எழுப்புவார்கள்.
இவ்வாறு எழுப்புகின்ற குழந்தைகளில், லலிதா என்கின்ற குழந்தை சமீப காலங்களில் வரவே மாட்டாள். அந்த லலிதாவைப் பார்ப்பதற்காக ஒருமுறை அவர் தன் மேன்மையான இடத்தை விட்டுவிட்டு வருவார். தாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம், பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறோம் என்பதை எல்லாம் விட்டுவிட்டு அந்தக் குழந்தையை வந்து பார்த்துவிட்டுத் திரும்புவார். வருகின்ற வழியில் சாரங்கராஜன் என்ற ஒரு பையன், ‘சார், எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போங்க!' என்று கூப்பிடுவான். அவருக்கு ஒரு அந்நிய வீட்டிற்குச் செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால், காய்ச்சல் வந்து படுத்துக்கொண்டிருந்த லலிதா தன்னைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்து விட்டதையும், அவளுக்கு இனிமேல் காய்ச்சல் வராது என்பதை அவளின் அப்பா அம்மா நம்பியதையும் நினைத்துப் பெருமிதமாக இருப்பார். சாரங்கராஜனிடம், ‘உங்கள் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்' என்று கூறி விட்டுச் செல்வார்.
குழந்தைகள் மனத்தில் ஞாயிற்றுக் கிழமைகள் அப்படியே பதிந்துபோகும். பெரியவர்கள் தங்களுடைய எத்தனையோ பரபரப்புகளில் அதனைக் கடந்து சென்றுவிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை இவர் செல்ல மாட்டார். 3 மணிக்கு சாரங்கராஜனே வந்து, ‘எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னீங்கல்ல சார், வாங்க!' என்று அழைத்துச் செல்வான்.
முன்பு, ஒரு புத்தாண்டில் அந்த எட்டுக் குழந்தைகளில் இவருக்குப் பிரியமான இரண்டு குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான இரண்டு சிறிய பாக்கெட் டைரிகள் வாங்கி `அன்பளிப்பு' என இவருடைய பெயரை எழுதிக் கொடுத்திருப்பார். அதுதான் கதையின் பிரமாதமான இடம். தனக்கு ஒரு டைரி கிடைக்கும் என சாரங்கராஜன் ஆசையாகப் பார்ப்பான். ‘நீ வளர்ந்துட்ட, பெரிய பையன் ஆகிட்ட, அதனால உனக்கு டைரி இல்லை!' இது எல்லாம் மௌனமாக அந்தக் கதையில் கடந்து போகும்.
அவ்வாறு இவர் சாரங்கராஜனின் வீட்டுக்குச் சென்ற பிறகு, முன் அறையில் அவரை உட்கார வைத்துவிட்டு, உள்ளே சென்று உப்புமா எடுத்து வந்து கொடுத்துவிட்டு, ‘சாப்பிடுங்க! சாப்பிடுங்க சார்!' எனக் கூறுவான். இவருக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிடும். ‘ஒரு அந்நிய வீட்டில், யாரோ ஒரு பையன் கூப்பிட்டான் என்பதற்காக நாம வந்திருக்கக் கூடாது. அவங்க அப்பா அம்மா வந்துகூட நம்மள பார்க்க முடியாம கூச்சத்தால உள்ள இருந்து உப்புமா கொடுக்குறாங்க!' என நினைக்கிறார். சாப்பிட வைத்துவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பையன், அவர் அந்த இரண்டு குழந்தைகளுக்குப் பரிசாக அளித்த அதே போன்ற டைரியை எடுத்து வந்து, ‘சார்’ என்று நீட்டுகின்றான். இந்த இடம், உலகின் மகத்தான இடம். ஒரு பெரிய மனிதன் குழந்தையாக மாறவே முடியாது என்பதை சாரங்கராஜன் அவரிடம் உணர்த்துவான். அவர் உடனே பதறி ‘என்ன இது?' என்று கேட்பார் ‘டைரி சார்!' என்று சொல்வான். ‘எனக்கு எதுக்குக் கொடுக்கிற?' என்று அவர் கேட்பார். சாரங்கராஜன் உடனே, ‘உங்களுக்கு இல்ல சார், எனக்கு' என்று சொல்வான். தான் இரண்டு குழந்தைகளுக்கு டைரி பரிசாக அளித்தது அவருக்கு ஞாபகம் வரும். அப்பொழுது சாரங்கராஜன், ‘எழுதுங்க சார்' என்று சொல்வான். ‘என்ன எழுதணும்' என்று கேட்பார். பல நேரங்களில் குழந்தைகள் ஆசிரியர்களுக்கும், பல நேரங்களில் குழந்தைகள் பெரியவர்களுக்கும் பாடமாக மாறுவார்கள். சாரங்கராஜன் இன்று இந்தப் பெரியவருக்குப் பாடம் எடுப்பான். ‘எழுதுங்க சார், அன்பளிப்பு சாரங்கராஜனுக்கு என்று எழுதுங்கள்!' என்று அவரிடம் சொல்வான். இதோடு கு.அழகிரிசாமியின் புகழ்பெற்ற `அன்பளிப்பு' என்ற கதை முடிகிறது.

இதுதான் இந்த உலகில் அனுதினமும் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் நம்முடைய குழந்தைமையைக் கண்டடைய நமக்கு வழிசொல்கிறார்கள். நாமே குழந்தைகளைப் பொறுப்பானவர்களாக்குகிறோம் என்பதாக நினைத்து அவர்களின் குழந்தைமையை இழக்கச் செய்கிறோம். இந்த உலகில் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. அவர்களே கடவுளையும், மனிதனையும், பூனையையும் சமமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள். ஒருவகையில் நாம் எல்லோருமே அப்படித்தான் பார்த்திருக்கிறோம். காலத்தின் ஓட்டத்தில் நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய குழந்தைமையைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம். ‘யார் என்ன சொல்வார்கள், நம்மை எப்படிக் கட்டமைக்க வேண்டும்’ என்பதெல்லாம் எல்லா நேரங்களிலும் தேவைப்படுகிறதா என்ன? மனத்தின் சாளரங்களைத் திறந்துவிட்டு, உள்நோக்கம், திட்டமிடல், போட்டி, பகைமை கடந்து நாம் கடைசியாகச் சிந்தித்தது எப்போது என யோசித்துப் பாருங்கள். `இதையும் நீயே வச்சுக்கோ!' என எதிர்பார்ப்பின்றி நாம் எதையோ கொடுத்த நண்பர் இப்போது எங்கிருக்கிறார். அந்தத் தருணம் எங்கிருக்கிறது. அந்த இடத்திலேயே மறந்து வைத்துவிட்டோம் நம் குழந்தைமையை!
- கரம்பிடித்துப் பயணிப்போம்