Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 12

சொல்வழிப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்!

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

கடந்த வருடங்களின் பெருந்தொற்று காலத்தில் நாமெல்லாம் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். இறுக்கம், தனிமை, நோய் பயம் நம்மைச் சூழ்ந்துகிடந்தது. அந்தச் சமயத்தில் பலருக்கும் இளைப்பாறுதலாக, நம்பிக்கையாக இருந்தவை இசை, பாடல்கள், திரைப்படங்கள்தான். இதைப் பலர் என்னிடம் கூறியிருக்கின்றனர். மனிதர்களோடு சேர்ந்து கதைத்து வாழ்ந்து பழகிய நமக்கு, மனிதர்களைச் சந்தித்திடாத அந்தக் காலகட்டத்தில் துணை நின்றது கலைதான். கலை, கைவிடப்பட்ட நேரங்களில் மனிதர்களும் உடனில்லாத கொடுங்கணங்களில் நமக்கு உறுதுணையாக நிற்கிறது. கலையால் மட்டுமே பல நேரங்களில் மனிதர்களை அரவணைத்துச் செல்லமுடிகிறது.

ஆனால் ஒரு முரணாக, கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை. கலைஞர்கள் ஏதோ ஒரு வகையில் எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள்தான். குடும்பத்தாரால் அல்லது தங்கள் சக படைப்பாளிகளால் அல்லது ஒட்டுமொத்தமாக சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைத்துவம் வாய்ந்தவர்களாகத்தான் கலைஞர்கள் தனித்து விடப்படுகிறார்கள். ஆனாலும் தங்களின் இறுதிக்காலம் வரையிலும் அவர்கள் கலையோடு மல்லுக் கட்டிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே சதா நடக்கிற சமர்தான் அவர்களின் வாழ்வு.

தன் 50 ஆண்டுக்கால வாழ்வை, கலைக்காகவும் இலக்கியத்திற்காகவும் இலக்கிய கலை விமர்சனங்களுக்காகவும் அர்ப்பணித்த சி.மோகனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து விழா நடத்தினோம். விழாவில் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், ‘சூரிய வெளிச்சம் படாத ஊற்றுத் தண்ணீரைப் போன்றது கலைஞனுடைய வாழ்க்கை' என்று குறிப்பிட்டார். அந்த வரி மறுபடியும் மறுபடியும் என்னை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.

ஒரு வகையில் தனித்துவிடப்பட்ட கலைஞர்கள், பொதுச் சமூகத்தில் கலந்துவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பாத அல்லது அவர்களுக்கு விருப்பமில்லாத அன்றாடங்களில் வாழ்க்கை அவர்களை நுழைத்துவிடுகிறது. கிராம நிர்வாக அலுவலர்களாக, சிப்பந்திகளாக, இரவுக் காப்பாளர்களாக, சினிமா கம்பெனிகளின் வாயிற்காப்பாளனாகப் பணிசெய்து கிடக்கிறார்கள். வாழ்க்கையை நடத்துவதற்காக இந்தப் பணிகளில் உழன்றுகிடந்தாலும், தங்கள் கலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தொடர்ந்து இயங்குபவர்களாக இருக்கிறார்கள். வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு வார இறுதி நாள்களில் ஏதோ ஒரு ஊரில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று பங்கேற்பர். அந்தத் தருணங்களில் அவர்கள் பெறும் ஆசுவாசத்திற்கு அளவிருக்காது. தங்கள் பணியிடங்களில் அவர்கள் சாதாரணமானவர்கள். எதிர்த்துக்கூடப் பேசாதவர்கள். மேலதிகாரிகளுக்குக் கீழ்படிந்தவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், வார இறுதி நாள்களில் அவர்கள் வேறு மனிதர்கள். உலகின் அத்தனை மனிதர்களையும் எதிர்கொள்கிற திறன் கொண்டவர்களாக ரூபமெடுப்பார்கள். ஆம், அவர்களின் கலை மனம் அவர்கள் விரும்பும் மணத்தைக் கொடுக்கிறது.

சொல்வழிப் பயணம்! - 12

``நண்பா, கதை நல்லா வந்திருக்கு. இதே மாதிரி கதைகள மட்டுமே புத்தகமா கொண்டு வரலாம்னு இருக்கேன்’’ என வங்கியில் பணிபுரியும் நண்பன் அதிகாலையில் அழைப்பான். ``அண்ணே, தூங்கவே விடாம பாடுபடுத்துன மனசை மொத்தமா இறக்கி சில கவிதைகள் எழுதியிருக்கேன். படிச்சுப் பாத்துட்டு சொல்லுங்கண்ணே!’’ என கத்தாரில் சிவில் இன்ஜினீயராக இருக்கும் தம்பி ஒருவன் பேசுகிறான். ``ஊர்ல நான்தான் டி.எம்.எஸ். மாதிரி. என் பாட்டைக் கேக்குறதுக்காகவே கூட்டம் அலைமோதும். பாடகராகலாம்னு வந்தேன். ஜவுளிக்கடைல துணி எடுத்துப் போட்டே வாழ்க்கை முடிஞ்சுரும்போல. நம்ம வயித்துக்கு பாட்டு போதும். வூட்ல நாலு வயிறு இருக்கே!’’ என மனம் நொந்து போகிற அண்ணன், கடைகள் மூடிய நள்ளிரவு ரங்கநாதன் தெருவில் பெருங்குரலெடுத்துப் பாடிச் செல்கிறார். `ஆறு நாளா வரைஞ்சது சார். அதுமேலயே ஸ்பான்சர் லோகோ வச்சிட்டானுக; அந்தக் கைகள்தான் அந்த பெயின்ட்டிங்கோட ஜீவனே!' - ஒரு மழைப் பொழுதில் சுவர் ஓவியக் கலைஞன் அரற்றியது இன்றும் நினைவிருக்கிறது. வங்கிப் பணியில் ஓய்வுபெற்ற பிறகு, வருகிற தொகையில் கேமராவும் லென்ஸும் வாங்கிக்கொண்டு வட இந்தியக் காடுகளில் வைல்டுலைஃப் புகைப்படக்காரர்களாகப் படமெடுக்கிறவர்களை ரிட்டயர் ஆகச் சொல்ல முடியுமா என்ன?!

தங்களுடைய கலை மனத்தைப் பணியிடங்களில் பறிகொடுத்து விடாமல், தொடர்ந்து அதைத் தங்கள் கலைக்காக அர்ப்பணித்து, அதற்காக வாழ்ந்தே மரித்துப்போகிறார்கள். அவர்களில் அங்கீகாரம் கிடைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை அடைந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் என்றால் வெகு சிலர்தான். ஆனால், அந்த இலக்கை அடையே வாழ்வின் இறுதிவரை முயன்றுகொண்டே இருந்தவர்கள். வெற்றி, தோல்வி என்ற வரையறைகள் அவர்களைச் சோர்வடையச் செய்யுமளவிற்கு வலு கொண்டிருக்கவில்லை.

ஏறக்குறைய என் வாசிப்பில், தமிழில், கலைஞர்களைப் பற்றியும் கலையைப் பற்றியும் எழுதாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம். தங்கள் கலையில் வெல்பவர்கள் பலர் பொதுச் சமூகத்தில் இயங்க முடியாதவர்களாக, குடும்பத்துடன் ஒட்ட முடியாதவர்களாக, தனித்து விடப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஏறக்குறைய ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமியினுடைய ‘ஆத்மாராம் சோயித்ராம்' என்கிற கதையை மிகவும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். கலையின் மீதும் நவீன சினிமாவின் மீதும் எழுத்தின் மீதும் ஆர்வம் கொண்ட ஒரு பையன், விற்பனைப் பிரதிநிதியாக ஒரு ஜவுளிக்கடையில் வடநாட்டு சேட்டிடம் வேலை பார்க்கிறான். அந்த சேட்டின் மனைவிக்குக் கலையின் மீது அப்படியொரு ஆர்வம் இருக்கிறது. ஒரு வகையில் இவனுடைய ஆர்வமும் இவனுடைய ரசனைகளும் சேட்டின் மனைவியின் ரசனையோடு ஒத்துப்போகிறது. ஆனால் தொடர்ந்து வாழ்க்கை, அவனை ஊர் ஊராக விற்பனைப் பிரதிநிதியாக அனுப்பும். அங்கிருந்து சாம்பிள்களைக் கொண்டு போய் ஒவ்வொரு ஜவுளிக்கடையிலும் நீட்டி எப்படியாவது அவர்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொள்பவனாக அவனை அலைக்கழிக்கும். இந்தக் கதையை சுந்தர ராமசாமி, தமிழின் மிக முக்கிய கவிஞரான சுகுமாரன் அவர்களை முன்வைத்து எழுதியதாக நிறைய பேர் சொல்வார்கள். நான் பலமுறை கேட்டிருக்கிறேன், சுந்தர ராமசாமி தன்னை முன்வைத்து, தன்னுடைய வாழ்க்கையை முன்வைத்து, தன்னுடைய கலைக்கு சம்பந்தமில்லாத வியாபார வாழ்க்கை தனக்கு விதிக்கப்பட்டதை முன்வைத்து, ஏதாவது ஒரு கதை எழுதியிருக்கிறாரா என்று.

ஒருமுறை சி.மோகன் எனக்கு அந்த விஷயத்தை, அந்த ரகசியத்தின் முடிச்சை அவிழ்த்துக் காட்டினார். ‘ரத்னாபாயின் ஆங்கிலம்' என்கிற கதையில் வருகின்ற ரத்னா பாய் வேறு யாரும் இல்லை, சுந்தர ராமசாமிதான் என்றார். ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்ட, ஆங்கில மொழியின் மீது வெறி கொண்ட ரத்னா பாய்க்கு வாழ்க்கை, அவள் விரும்பியபடி அமையாமல் டெல்லியில் யாரோ ஒரு பல் டாக்டரோடு வாழ நிர்பந்திக்கிறது. ஆனால் அவள் தன்னுடைய கலை மேதமையை, தன்னுடைய மொழியின் வசீகரத்தை, தன்னுடைய சினேகிதிகளுக்கு எழுதுகின்ற தொடர்ச்சியான கடிதங்களின் மூலமாகத் தீர்த்துக்கொள்பவளாக இருப்பாள். அவ்வாறு வருகின்ற ஒரு கடிதம்தான், இத்தனைக்கும் காரணமாக அமைந்துவிட்டது என்று சுந்தர ராமசாமி, ‘ரத்னாபாயின் ஆங்கில’த்தில் எழுதியிருப்பார்.

சொல்வழிப் பயணம்! - 12

‘கனவையும் பளிங்கையும் உழைத்துச் செய்த பட்டுப்புடவை இது..!’ என்ற ஒரு பட்டுப் புடவையைப் பற்றிய வர்ணிப்பில் அந்தக் கதை ஆரம்பிக்கிறது. இவ்வளவு அழகான பட்டுப்புடவையை எங்களுக்கும் வாங்கி அனுப்பு என்று சினேகிதிகள் எல்லோரும் பணம் சேர்த்து அவளுக்கு அனுப்பிவிடுவார்கள். அவள் தன்னுடைய கணவனை அழைத்துக் கொண்டு, டெல்லியின் எல்லா வீதிகளிலும் அப்படி ஒரு பட்டுப் புடவைக்காக அலைவாள். உண்மையில் அவள், அப்படியொரு பட்டுப் புடவையை வாங்கவே இல்லை. கனவையும் பளிங்கையும் குழைத்து உலகத்தில் ஒரு பட்டுப் புடவை நெய்யப்பட்டதே இல்லை. தன்னுடைய மொழியின் வசீகரம் தெரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே, அவள் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பாள். அதை எந்தக் கடையில் வாங்கிவிட முடியும். எந்த நெசவாளி அப்படி நெய்துவிட முடியும்?!

இந்தப் பெரும் மானுட சமுத்திரத்திலிருந்து ஒரு கலைஞனை, எழுத்தாளனை எப்படி அடையாளப்படுத்துவது என்ற பெரும் குழப்பம், பெரும்பான்மையான மனிதர்களுக்கு எப்போதுமே உண்டு. ஆனால் ஒரு கலைஞன், துடித்துக்கொண்டு ‘நான் கலைஞன்தான்' என்று எங்கேயுமே சொல்வதில்லை. ஆனால் அவன் வேறு வகையானவன் என்பதை, அவனுடைய தொடர் நடவடிக்கையின் மூலமாக நாம் அனுமானித்துவிட முடியும். எழுத்தாளர்கள் இந்த நுட்பத்தைத்தான் கதையாக்குகிறார்கள். இங்கிருந்துதான் ஒரு கதாபாத்திரத்தையோ அல்லது தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றியோ எழுதத் தொடங்குகிறார்கள்.

அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்' என்கிற கதையை அதற்கொரு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்ல முடியும். அந்தக் காதர் பாய், ‘நான் நல்லா புலி வேஷம் போடுவேன் சார்' என்று தயாரிப்பாளர் அறையில், மேஜையில் ஏறி நின்று, ஒரு புலியாக மாறி கர்ஜித்ததை, அவர்கள் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ஆனால் ஒரு நிமிடம் அந்த உக்கிரத்திலிருந்து விடுபட்டு, அவன் சாதாரண காதர் பாயாக மாறுகின்ற போது ‘வீட்டுக்குப் பணம் அனுப்ப வேண்டும், பொண்டாட்டிக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்’ என்கிற பல்வேறு வகையான யதார்த்த சிக்கல்களால் அலையுறுவதைப் பார்க்கலாம். நான் 25, 30 வருடங்களுக்கு முன்னால் எழுதிய ‘ஏழுமலை ஜமா' என்கிற ஒரு கதையும்கூட, இப்படி ஒரு கலைஞனை முன் வைத்ததுதான். தெருக்கூத்தில் 20, 30 பேர் பங்கேற்பார்கள். இசைக்கலைஞர்களாக, ஹார்மோனியம் வாசிப்பவர்களாக, தவில் வாசிப்பவர்களாக என்று நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் அதில் ஒருவன் மிகப்பெரிய கலைஞனாக எப்போதுமே அந்தக் குழுவை முன்னகர்த்திச் செல்கிறான்.

அப்படித்தான், நான் எழுதிய கோணலூர் ஏழுமலை என்கின்ற அந்த மகா கலைஞன் இருப்பான். ஆனால் நவீனத் தொழில்நுட்பங்களின் வருகையால் வாய்ப்பிழந்து, அவர்கள் எல்லோரும் தங்களுடைய தெருக்கூத்து என்கிற கலையை இழந்து, எங்கெங்கோ வேலைக்குப் போய் விடுவார்கள். ஒருவகையில் லெளகீக வாழ்க்கையில் வெற்றிபெறாத கலைஞர்களை, சமூகம் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புறக்கணிக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதாசீனப்படுத்துகிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலில் போட்டு நசுக்குகிறது.

பீமனாக, துரியோதனனாக, தருமனாக வேஷம் கட்டி வட ஆற்காடு மாவட்டத்தின் பல கிராமங்களைத் தன்னுடைய ஆடலினாலும் தன்னுடைய குரலாலும் கட்டிப்போட்டவன் ஏழுமலை. பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் காய்கறிக் கூடையைத் தூக்குபவனாகவும், பழக்கூடைகளைச் சுமந்து திரிபவனாகவும் தன்னுடைய வளர்ந்த முடியைக் கொண்டை போட்டுக்கொண்டு, அன்றாடத்தில் சிக்கிச் சிதறுண்டுபோகின்ற அவனை, எப்போதுமே வாழ்க்கை வேடிக்கைக்காக அழைத்துக்கொண்டே இருக்கும். `அந்தப் பழக்கூடையோடு துரியோதனன் போன்று ஒரு ஆட்டம் போடு!' என்று அவனை நிர்பந்திக்கும். கலைஞர்கள் இந்த அவமானங்களை அப்போதைக்குப் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன்பிறகு ஏதோ ஒரு தனிமையில், அவர்களுக்குக் கிடைக்கின்ற ஒரு பின்னிரவில் அல்லது வேலையற்ற நேரங்களில், அதற்காக மனம் கசந்து அழுகிறார்கள். ‘நம் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே’ என்கிற துயரம் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.

அந்த மனப்போராட்டத்தால் ஏற்படுகிற மல்லுக்கட்டலில் ‘ஏதாவது ஒன்றிலிருந்து விலகிவிட வேண்டும்’ என்கிற பெரும் மனத்துயரம் ஏற்படுகின்றபோது, பல பேர் கலை வாழ்வைத் துறந்துவிட்டு அன்றாட வாழ்விற்குச் செல்கிறார்கள். மாத வாடகை செலுத்த வாழ்வில் போராடுகிறவர்களாக, இ.எம்.ஐ கட்ட வேண்டியதை நினைத்து அவமானங்களைச் சகித்துக்கொள்பவர்களாக, மகன் மகளைப் படிக்கவைத்து செட்டில் செய்பவர்களாக, பேரக் குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் முதியவர்களாக மாறிப் போகிறார்கள். கடைசி வரையிலும் கலைக்காகவே நிற்பவர்களும் உண்டு. சி.மோகன், பிரபஞ்சன், கோணங்கி என்கின்ற ஒரு பெரும் வரிசையை என்னால் இந்த நேரத்தில் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது.

சொல்வழிப் பயணம்! - 12

ஒருவகையில், நிறைய கலைஞர்கள் ஏதேதோ காரணங்களால், லௌகீகத்தில் ஏதேதோ வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியென்றால், ஒரு பெரிய கேள்வி எழலாம். கலைஞர்கள் என்பவர்கள் ஏதாவது வேலை பார்க்க வேண்டாமா என்று! அப்படியில்லை. அந்த வேலை இவர்களுடைய மன இயல்புகளுக்குப் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. இவர்களைப் போன்ற கலைநுட்பமும், பணத்தைத் தன்னுடைய இடது கையால் தள்ளிவிடுகின்ற மேன்மையும் அற்ற மேலதிகாரிகள், இவர்களை ஏதோ ஒரு வகையில் அவமதித்துவிடக் கூடும். குடும்பம், உறவினர்கள் எனப் பலரும் கலையின் உன்னதம் புரியாமல் சதா காயப்படுத்திக்கொண்டே இருப்பர். `பணம் இருக்கா?' என்கிற கேள்வி விடாமல் துரத்தும். ஆனால், கலை மனம் இந்த எல்லாவற்றையும் தூக்கி வீசி எறியச் சொல்லும்.

கலைஞன் ஒரு வகையில், இந்த அவமானங் களைத் தாங்கிக்கொண்டே, தன்னுடைய ஆகச்சிறந்த பயணத்தை நோக்கி முன்னகர்ந்து கொண்டே இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரியும், வரலாறு எப்போதுமே மேலதிகாரிகளை, மேலதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. அவன் ஏதோ ஒரு வகையில், வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் அவன் நிலை நிறுத்தப்படப் போகிறான். ஏனென்றால் கலைஞர்களைச் சமூகம் கைவிடலாம். கலைஞன் இந்தச் சமூகத்தைக் கைவிடுவதேயில்லை. அவன் கலை மனது சமூகத்துக்காகவே இயங்கும்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்