சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல் வழிப் பயணம்! - 5 - அந்தச் சித்திரம்...

சொல் வழிப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் வழிப் பயணம்

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

என் மனதில் ஒரு சித்திரம் அடிக்கடி நினைவில் வந்து சமநிலை கலைப்பதுண்டு. ஒரு மனிதனின் கால்களை மற்றொருவன் பற்றிக்கொண்டு மன்றாடுகின்ற சித்திரம் அது. உறக்கம் தொலைத்த பின்னிரவுகளில், நெடுந்தொலைவு செல்லும் கார்ப் பயணங்களில், மலைப்பாதையில் நின்று வானத்தைப் பார்க்கும் பொழுதுகளில் என்று பல நேரங்களில் அந்தச் சித்திரம் என்னை இம்சித்திருக்கிறது.

சென்னை எழும்பூரிலிருந்து அடையாறுக்கு ஆட்டோவில் போகும்போது, தன்னிச்சையாக வழியில் கடந்துபோகிற மனிதர்களுடைய கால்களைப் பார்க்கத் தொடங்கினேன். மீண்டும் மனதில் அதே சித்திரம் நிலைகொண்டது. யாராவது ஒரு மனிதன் மற்றொருவருடைய கால்களைப் பற்றிக்கொண்டிருக்கிற காட்சி தென்படுமா எனப் பார்த்தபடியே வந்துகொண்டிருந்தேன். அப்படி எதுவும் தென்படவில்லை. ஆனால் அந்த எண்ணமே வழியெங்கும் நிறைந்திருந்தது.

அந்தச் சித்திரம் தோன்றுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஒரு வாசகனுக்கு ஏதோ ஒரு புத்தகத்தில் வாசித்த ஒரு பகுதி அல்லது ஒரு தருணம் மனதிலேயே தங்கிவிடுகிறது. அது தற்போது எங்கும் நடக்கிறதா என மனம் தன்னிச்சையாகத் தேடத் தொடங்கிவிடுகிறது. மனிதர்களின் முகங்களை நோக்காமல், கால்களைப் பார்த்தபடி இருந்ததற்கான காரணம் எழுத்தாளர் பிரபஞ்சன். ‘சிக்கன் பிரியாணியும் ஸ்ரீதேவியின் படமும்' என்ற கதையைப் பிரபஞ்சனும், ‘தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' என்ற கதையைக் கந்தர்வனும் ஒரே காலகட்டத்தில் எழுதியிருப்பது ஆச்சர்யமான ஒற்றுமை.

சொல் வழிப் பயணம்! - 5 - அந்தச் சித்திரம்...

1970, 80-கள்... வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற ஆக்டோபஸ் தன் அத்தனை கரங்களாலும் மனிதர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த காலகட்டம். ஏதாவது ஒரு வேலை, சொற்ப சம்பளத்திற்காவது ஒரு வேலை எனப் பலரும் ஏங்கிக்கிடந்த நாள்கள் அவை. ஒரு நல்ல வேலையை எப்படியாவது வாங்குவதற்காக பல பேருடைய நிலங்கள் விற்கப்பட்டன. பல குடும்பங்கள் கடன்சுமையில் தள்ளப்பட்டன. அந்தப் பணத்தைக் கொடுத்து வேலை வாங்குகிற கோரங்கள் நடந்தன. ‘எப்படியாவது நம்ம பையனை வேலைக்குச் சேர்த்துடணும், நம்ம குடும்பத்துல ஒருத்தருக்காவது அரசாங்க உத்தியோகம் வாங்கிடணும்' எனப் பல பரிதவிப்புகள் இருந்தன.

ஆசையும் தேவையும் ஒன்றை நோக்கிக் குவிகிறபோது அதை வைத்து ஏமாற்றுவதும் வணிகம் செய்வதும் சமூகத்தில் அரங்கேறத் தொடங்கும். அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை, ‘சிக்கன் பிரியாணியும் ஸ்ரீதேவியின் படமும்.' எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் அறை எடுத்துத் தங்கியிருப்பான் ஒருவன். அண்ணாச்சி என்பார்கள் அவனை! ஏமாற்றிப் பிழைப்பவன். ஒரு நாள் யாரோ அவன் தலையில் தட்டுகிற மாதிரி ‘டம்... டம்...' எனச் சத்தம் கேட்கும். இரவு குடித்த போதை தெளியாமல், யாரோ தலையில் தட்டுகிறார்களா அல்லது கதவைத் தட்டுகிறார்களா என்ற குழப்பத்துடன் எழுவான். அவன் எழுந்து போய் ‘‘யாரு'' என்று கேட்கும்போது, வாசலில் ஒருவன் நிற்பான்.

‘‘அண்ணே, என்னைத் தெரியலையா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் தங்கச்சிக்கு ஒரு டீச்சர் வேலைக்காக உங்களை வந்து பார்த்தேன். கொஞ்சம் செலவாவும்னு சொல்லியிருந்தீங்க. ஊருக்குப் போய் பணம் தேத்திக்கிட்டு வந்துட்டேன். எங்களிடம் இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் விற்றுப் பணம் ஏற்பாடு செஞ்சுட்டேன்’’ என்று பரிதாபமாகச் சொல்வான். அவன் பெயர் மண்ணாங்கட்டி. ‘ஒருவன் 400 மைல் கடந்து அழுக்கு மூட்டையுடன் வந்திருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அவன் மஞ்சள் பையில் லக்ஷ்மியுடன் வந்திருந்தான்' என்று அண்ணாச்சி நினைப்பதாக பிரபஞ்சன் எழுதியிருப்பார்.

அவனிடம் ‘‘ரெண்டு டீ சொல்லு!’' என்பான் அண்ணாச்சி. அதிகாலை 5 மணிக்கு டீயுடன் ஆரம்பிக்கும். ‘‘லாண்ட்ரில என்னுடைய துணி எல்லாம் வாங்கிட்டு வந்துடு'’ என்பான். பிறகு டாக்ஸி பிடித்து அவனைத் தலைமைச் செயலகத்துக்குக் கூட்டிப் போவான்.

மண்ணாங்கட்டியின் பிரச்னை, அவனுடைய ஒரே தங்கையின் வாழ்க்கை. அவளுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைப்பார்கள். ஆனால், மூன்று மாதங்களுக்குள் அவள் வாழாமல் வந்து நிற்பாள். ஆசிரியர் பயிற்சி முடித்த தன் தங்கைக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்துக் கரையேற்றி விடப் போராடுகிறான் அண்ணன். கரை வேட்டி கட்டிக்கொண்டு தன்னை அழைத்துச் செல்லும் அண்ணாச்சியிடம் அந்த மஞ்சள் பையைக் காண்பித்து, ‘‘எப்படியாச்சும் என் தங்கச்சிய கரை சேத்துடணும்ணே'' என்று சொல்லுவான். இறுதிவரை, ‘‘சீச்சீ... பணமா, அதை அப்படி வை!'' என்று கூறுவான் அண்ணாச்சி.

காலை உணவும் முடித்து, தலைமைச் செயலகத்துக்குச் சென்று சில பேரிடம் அந்த அண்ணாச்சி அவனை அறிமுகப்படுத்துவான். அதுவே இவனுக்குப் பெருமையாக இருக்கும். மதிய உணவிற்கு புகாரி ஹோட்டல் செல்வார்கள். 917 ரூபாய் பில் வரும். தான் நிலம் விற்ற பணத்திலிருந்து எடுத்துக் கொடுப்பான் மண்ணாங்கட்டி. அடுத்து ஸ்ரீதேவி நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, மஞ்சள் பையெல்லாம் கை மாறி ‘‘கண்டிப்பாக உன் தங்கச்சிக்கு வேலை வாங்கித் தரேன்'' என்று வாக்கு கொடுத்துவிட்டு மண்ணாங்கட்டியை பஸ் ஏற்றப் போவான் அண்ணாச்சி. அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அண்ணாச்சியின் காலில் விழுவான் மண்ணாங்கட்டி. நெரிசலான ஒரு பேருந்து நிலையத்தில் யாரோ ஒருவரின் காலில் யாரோ ஒருவர் விழுவது எல்லோரையும் திகைக்க வைக்கும். அதை எல்லோரும் பார்ப்பார்கள். காலில் விழுந்த மண்ணாங்கட்டி, ‘‘எப்படியாவது என் தங்கச்சிய கரை சேத்துடணும். அது வாழவெட்டியா வந்துடுச்சி'' என்று அழுவான். வஞ்சகம் நிறைந்த மனதையும் கசியச் செய்யும் தருணம் அது. அதுவரை துரோகத்தை மட்டுமே செய்துகொண்டிருந்த அண்ணாச்சி, முதல்முறையாக இவன் தங்கைக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைப்பான்.

இதேபோல்தான் கந்தர்வனின் ‘தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' கதை. ஒருவன் பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறுவான். அதிகாலையில் வந்திறங்கி அண்ணாச்சியைச் சந்திப்பான். அன்று முழுவதும் அவருக்குச் செலவு செய்வான். அவன் கேட்கும் வேலையை முடித்துத் தருவதாக அண்ணாச்சி வாக்குறுதி கொடுப்பார். இவனும் அந்த நம்பிக்கையில் திரும்புவான். ஆனால், ஒரு நாளும் அண்ணாச்சி அவனுக்குக் கேட்டதைச் செய்து கொடுத்ததே இல்லை.

நம்பிக்கை என்ற நூலை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு மனிதர்கள் இயங்குகிறார்கள். நம்பிக்கைத் துரோகம் என்ற புதைகுழி அவர்களைப் பல தருணங்களில் மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. துரோகத்தின் நிழலில் பல சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்திருக்கின்றன. பலரின் வெளிச்சங்கள் மீது இருள் கவிந்திருக்கிறது. ‘நீயுமா புரூட்டஸ்' என்று அவநம்பிக்கையும் ஆற்றாமையுமாகக் கேட்டது ஒரு குரல் மட்டுமல்ல! வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பெயர்களைச் சொல்லி ஒலித்த குரல்தான் அது. உறவுகளில், நட்பு வட்டத்தில், எதிர்பாராத ஒரு தருணத்தில் துரோகக் குறுங்கத்தி முதுகில் குத்தப்பட்டு வீழ்ந்தவர்கள் எத்தனையோ பேர்.

சொல் வழிப் பயணம்! - 5 - அந்தச் சித்திரம்...

வெகு நாள்களுக்கு முன்பு ‘கலகக்காரனின் கதை!' என்ற இயக்குநர் ஜான் ஆபிரகாமின் கதையைப் புத்தகமாக நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன் தொகுத்துக்கொண்டிருந்தார். என்னுடைய வீட்டிலிருந்தபடி சீனிவாசன் இந்தப் பணியைச் செய்துகொண்டிருந்தார். இந்தச் செய்தி தெரிந்த ஒருவர் எனக்கு போன் செய்து, ‘‘ஜான் ஆபிரகாம் பத்தி ஒரு புக் போடப் போறீங்களாமே?'' என்று கேட்டார். நானும், ‘‘ஆமா சார்'' என்றேன். உடனே அவர், ‘‘ஜான் ஆபிரகாமை நீங்க பார்த்திருக்கீங்களா?'' என்றார். ‘‘இல்லை'' என்றேன். ‘‘பாக்காம ஒருத்தரைப் பத்தி நீங்க எப்படி புக் போறீங்க?'' என்று அவர் விடாமல் கேட்டார். ‘‘சார், எத்தனை இலக்கியவாதிகள் இருக்காங்க... எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா போடுறாங்க'' என்றேன்.

இவ்வளவு அக்கறையாகக் கேட்கிறாரே, இவர் யார் என்று விசாரித்தேன். ‘‘என் பேரு மொய்தீன். குற்றாலத்துக்குப் பக்கத்துல ஒரு ஊர்ல இருக்கேன். நான்தான் ஜான் ஆபிரகாம் டைரக்ட் செய்த ‘வித்யார்த்திகளே இதிலே இதிலே' படத்தை எடுத்த தயாரிப்பாளர். மின்னல் என்ற புனைபெயரில் அதைத் தயாரித்தேன்'' என்றார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு மொய்தீன் சாரும் நானும் நெருக்கமான நட்பானோம். அவர் எழுதிய புத்தகத்தை நாங்கள் பதிப்பித்தோம். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘விலகி ஓடிய கேமிரா.' அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் வாழ்வில் மறக்க முடியாதது.

மொய்தீனும் அவருடைய ஆத்மார்த்தமான நண்பரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். மொய்தீனிடம் அந்த நண்பர் கணிசமான தொகையைக் கடனாகப் பெறுகிறார். இந்தப் பணத்தை மொய்தீனால் திருப்பி வாங்க முடியாது என நினைப்பார். அதோடு கோயம்புத்தூருக்குச் சென்றுவிடுவார். மொய்தீனுக்குப் பணம் போனதைத் தாண்டி, நண்பன் துரோகம் செய்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து வழக்கு போடுகிறார். தன் நண்பனைக் கோயம்புத்தூரில் இருந்து சென்னை கோர்ட்டிற்கு வரவழைக்கிறார்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த நண்பர் சென்னைக்கு வந்து இறங்கி நேராக ஒரு ஆட்டோ பிடித்து மொய்தீன் அறைக்குச் செல்வார். இருவரும் குளித்து முடித்துத் தயாராகி ஒரே ஆட்டோவில் கோர்ட்டுக்குச் செல்வார்கள். வழியில் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். கோர்ட்டில் வழக்கு தள்ளி வைக்கப்படும். பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பிரியாணி சாப்பிடுவார்கள். மொய்தீன் தன் நண்பரை ரயிலில் கோவைக்கு வழியனுப்புகிறார். அவரும், ‘சரிடா, அடுத்த வாய்தாவுல பார்க்கலாம்' என்று கிளம்புவார். மூன்று ஆண்டுகள் இப்படியே வழக்கு நடக்கிறது. நண்பர்களும் இதேபோல கோர்ட்டுக்கு ஒவ்வொரு முறையும் போகிறார்கள். கடைசியில் அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு மொய்தீனுக்குச் சாதகமாக வரும். அதாவது ‘வட்டியோடு சேர்த்து 20,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆறு மாதம் சிறைத்தண்டனை' என்று தீர்ப்பாகும். அன்றும் அவர்கள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு மொய்தீன் அறைக்குப் போவார்கள். அப்போது நண்பர் தேம்பித் தேம்பி அழுவார். ‘‘என்கிட்ட காசு இருந்தா உனக்கு நான் கொடுக்க மாட்டேனா?'' எனப் பரிதவிப்பார். மொய்தீன், ‘‘காசு இல்லடா விஷயம். என் ஆத்மார்த்தமான நண்பன் நீயே என்னை ஏமாத்திட்டன்னா, இந்த உலகம் எனக்கு நம்பிக்கையற்றதாக மாறிப்போகுது. அந்த வலி கொடுமையானது'' என்பார்.

துரோகம் என்பது பெரும்பாலும் எதிரிகளிடமோ, முகம் தெரியாதவர்களிடமோ அனுபவிக்கும் ஒன்றல்ல. நாம் நம்பிய, நமக்கு நெருக்கமான மனிதர்களே அந்தக் கசப்பை நமக்குப் பரிசளிக்கிறார்கள். எல்லா மனிதனும் வாழ்க்கையில் ஒருமுறையாவது, ‘‘நான் எவ்ளோ நம்பினேன். நீ எனக்கு துரோகம் பண்ணிட்ட'' என்கிற வார்த்தைகளைக் கூறியிருப்பான். அப்படிச் சொல்லாத யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. துரோகத்தைவிட நம்பிக்கைத் துரோகம் அதிக வலியைக் கொடுக்கும். துரோகம் இழைத்தவனுக்கும் வலி இருக்கும். ‘யாரால நான் இந்த நிலைமையில இருக்கேன், யாருக்கு துரோகம் பண்ணி நான் இந்த இடத்துக்கு வந்தேன்' என்று நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் அவனுக்கு வலி அதிகமாக இருக்கும்.

இயேசுவின் சிலுவைப் பாடு அதோடு முடிந்தது. ஆனால், யூதாசின் குற்ற உணர்ச்சி வரலாறு தாண்டி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. துரோகங்களைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இருக்க முடியாது. நிலம், இனம், மொழி, நிறம் என அனைத்தையும் தாண்டி எல்லா இடங்களிலும் இருப்பது இந்தத் துரோகம்தான். யுத்தத்திலும் கலவரத்திலும்தான் துரோகத்தின் உச்சத்துக்கு மனிதர்கள் செல்கிறார்கள். எல்லோரையும் வீழ்த்திவிட்டுத் தான் மட்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் துரோகத்தின் துளிர்.

துரோகம் இழைப்பவர்கள் எப்போதும் தாங்கள் செய்த துரோகத்தைத் தோளில் சுமந்து கொண்டுதான் செல்கிறார்கள். துரோகத்தை முழுமையாக ஒழித்துவிட முடியாது. ஆனால் சிறிது குறைக்க முடியும். தோளில் சுமக்காமல் அதை இடுப்பிற்குத் தள்ளி வைக்க முடியும்.

பிரபஞ்சன் கதையில் பார்த்த அந்த அண்ணாச்சியின் கறைபடிந்த பாதங்களைக் கள்ளம் கபடமற்ற நம்பிக்கையுடன் மண்ணாங்கட்டி துடைக்கிறான். அன்று இரவு அண்ணாச்சியால் நிம்மதியாகத் தூங்கியிருக்க முடியாது. அவர் செய்த துரோகங்கள் அவர் முன் சென்றுகொண்டிருக்கும்.

இனி எங்கேயும் யாரும் யார் காலிலும் விழும் தருணத்தை என் கண்களால் பார்க்கக்கூடாது என்றே நினைக்கிறேன். ஒருவருக்குச் சரியாகத் தெரிவது அடுத்தவருக்குத் தவறாகத் தெரியலாம். ஆனால், பொதுவாக மனிதர்களுக்கென்று அறம் ஒன்று இருக்கிறது. அதை நோக்கி மனிதர்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்