Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நந்தவனத்தைக் கடந்து செல்லும் வசந்தம் செடிக்கொரு சேதி சொல்கிறது.

சொல்வனம்

நந்தவனத்தைக் கடந்து செல்லும் வசந்தம் செடிக்கொரு சேதி சொல்கிறது.

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அறுபட்ட முயற்சி

நந்தவனம் நடுவே வளரும்

செடியொன்று

இரண்டு மழைக்காலம்

பொய்த்துவிட்டதை எதிர்த்து

வான்நோக்கிய கரங்களை

மடித்துத்

தரையை முத்தமிடத்

தலை தாழ்கிறது

ஒரு வசந்தக்காற்று

எங்கேயோ பாலையிலிருந்து

அள்ளி வருகிறது

கடந்த நூற்றாண்டுக்காரர்கள்

நட்டு வைத்த

ஒரு பட்ட மரத்தின் வாசத்தை

நந்தவனத்தைக் கடந்து

செல்லும் வசந்தம்

செடிக்கொரு சேதி சொல்கிறது.

- நல முத்துகருப்பசாமி

***

நேர்விகிதங்கள்

அன்புக்கும் துயரத்திற்கும்

அப்படி உயரப் பொருத்தம்

அன்புக்கும் துயரத்திற்கும்

அப்படியொரு

மனப்பொருத்தம்

அன்பு

மட்கும் குப்பையாகும்போது

துயரம்

அதில் துளிர்விடத் தொடங்கும்

பாருங்கள்

அப்படியொரு பொருத்தம்

மேலும்

பத்துப் பொருத்தம்

பார்த்து

அன்பைக் கட்டிக்கொண்டு

அப்படி அழுகிறது

துயரம்.

- வெள்ளூர் ராஜா

***

நெருடலின் இசை

அங்கேயே அதைச் செய்திருக்க வேண்டும்

அடுத்த வளைவிலாவது

திரும்பியிருக்கலாம்

மூன்றாவது சிக்னலில் மனம்

அடித்துக்கொண்டதை எப்படிப் பார்ப்பது

எவ்வளவு முக்கியமான

வேலையாக இருந்தாலும்

இரண்டு நிமிடம்தான் ஆகியிருக்கும்

யோசனை வலுத்தபோது

வீட்டை நெருங்கியிருந்தேன்

வீட்டு வாசலில்கூட

கத்திக்கொண்டு அறுத்தது அக்குரல்

`கடவுள் உள்ளமே ஓ... கருணை இல்லமே...'

கட்டைக்குரலின் அடிநாதத்தில்

பசித்த உச்சரிப்புகளை இப்படிக்

கண்டும் காணாமல் வந்திருக்க வேண்டாம்

சரி ஒன்றும் கெட்டுப்

போகவில்லை

வெறும் ஐந்து கிலோ மீட்டர்தான்

கிளம்பிச் சென்று பத்து ரூபாயை

தட்டில் போட்டுவிட்டு வந்துவிடலாம்..!

- கவிஜி

சொல்வனம்

தலையாய வேலை

எண்சாண் உடம்புக்கு

சிரசே பிரதானமெனச் சொல்லும் அப்பா

தலைவாராமல்

வெளியே போனதேயில்லை

முகவாயை அந்தப்பக்கம்

இந்தப்பக்கம் திருப்பி

அம்மா தலைவாரும்போதெல்லாம்

அவனுக்குமட்டும் சுருட்டைமுடியென

அழுதேவிடுவான் அண்ணன்

பள்ளிக்கூடச் சண்டைகளில்

தலையைக் கலைப்பதே

தலையாய வேலையாயிருக்கும்

பாண்டிப்பயலுக்கு

தலைவாரச்சொல்லி

சவுண்டு விடும்போதெல்லாம்

ரவுண்டு சீப்பை

தலைக்குள் திணிக்கிறான் மகன்

நடுவில்விழுந்த சொட்டையை மறைக்க

நாலாபுறமுமிருந்து முடியைச் சேர்க்கையில்

சிவாஜிபோல கொம்புவைத்து

அம்மா சீவிவிடும் அந்த முகம்

வந்துபோகிறது கண்ணாடியில்.

- காசாவயல் கண்ணன்