Published:Updated:

சொல்வனம்

ஒரு நாள் உச்சிவேளை நிழல்போல ஒவ்வொரு லவ் யூவின் அடியிலும் ஒரு சின்ன லவ் யூவைப் பார்க்கும்வரை.

பிரீமியம் ஸ்டோரி

ஒரு சின்ன லவ் யூ

ண்பர்களின் தோள்கள் அணைக்கும்போது

கைகுலுக்கி விடைபெறும்போது

அழைப்பைத் துண்டிக்கும் முன்

என இப்போதெல்லாம்

சரளமாக வருகிறது லவ் யூ

எங்கிருந்து வந்ததோ இந்தத் துணிச்சல்

அதுவும் எனக்குப்போய்

நண்பர்களும் அழைப்புகளுமற்ற வேளைகளில்

எனக்கேகூட அவ்வப்போது

லவ் யூ சொல்லிப் பார்க்கிறேன்

ஒவ்வொரு நண்பரிடமும்

வித்தியாசம் வித்தியாசமாய்

லவ் யூ சொல்வது அவர்களுக்குத் தெரியாது

தெரிந்தாலும்

அந்த லவ் யூக்களில்

லவ் யூ தவிர என்ன இருக்கிறது

ஆனால் அவை

ஒரு பழந்தாகத்தின் நினைவுச் சொற்கள்

புளிப்பேறிய ஒரு வேட்டை மிருகம்

இரையைக் கொல்லாமல்

கடித்து விளையாடுவதுபோல்

லவ் யூ சொல்கிறேன்

இப்படி

குதூகலமாகவே இருந்துவந்தது

லவ் யூ சொல்லிக்கொண்டு திரிவது

ஒரு நாள்

உச்சிவேளை நிழல்போல

ஒவ்வொரு லவ் யூவின் அடியிலும்

ஒரு சின்ன

லவ் யூவைப் பார்க்கும்வரை.

- இயற்கை

இனி வரும் காலம்

சோற்றுக்குச் சாகும்போது

நீயும் நானும் நிர்வாணமாக இருப்போம்

ஆடைக்கு அடித்துக்கொள்ளும்போது

உனக்கும் எனக்கும்

உறுப்புகள் மரத்திருக்கும்

ஊழிக்காலத்தில்

உன் சாதியும் என் மதமும் மட்டும்

மிஞ்சியிருக்கும்போது

இயற்கை வேறு கிரகத்திற்கு

இடம்பெயர்ந்திருக்கும்

புறப்படும்

நாவாயினை எட்டிப்பிடிக்கக்

கைகள் துழாவும்போது

பறிக்கப்பட்ட பூர்வகுடி நிலங்கள்

மூழ்கிக்கொண்டிருக்கும்

ஆறும் ஏரியும் மனைகளானபின்

நடுவீட்டுக்குள் பாழுங்கிணறு தோண்டி

ஒட்டகத்தை அடைத்து வைத்து வளர்ப்போம்

கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆட்சியமைக்க

தேர்தல் நடைபெறும்போது

உனக்கும் சேர்த்து

ஓட்டுக்குப் பணம் வாங்கி

வாக்குச்சாவடியின் வரிசையில்

நம் முன்னாக நின்றிருக்கும்

நமது அரசு.

- ச. அர்ஜூன்ராச்

சொல்வனம்

நிரப்பல்

காலை நடை

மாலை வெயில்

மழைத் தேநீரென

எது எதுவோ கொண்டு

இட்டு நிரப்புகிறோம்

வாழ்வின் போதாமைகளை

அப்படித்தான்

நேற்று நீ

இன்று இந்தக் கவிதைகள்.

- வெள்ளூர் ராஜா

பேரானந்த பலூன்கள்

மேளதாளம்

போலிப்புன்னகை புகைப்படங்கள்

விருந்துகள் என எதிலும் நாட்டமில்லை

அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களைக் கண்டதிலிருந்து

அதனூடே ஆடிக்கொண்டிருந்தது

குட்டீஸ் மனம்

அற்றுக்கொண்டு பறந்த ஒரு பலூன்

தூரப்போய் கீழேவிழ

பூரிப்பாய் அதை எடுத்துக்கொண்ட

குழந்தையுடன் சேர்ந்து மகிழ்ந்தது

குட்டீஸ் மனம்

சட்டென வெடித்த பலூனுக்காக

முதலில் பதறினாலும்

அதை பூமி உருண்டையாய்

உருமாற்றிய சிறுவன்

விசில் சத்தமெழுப்ப அதனோடு சேர்ந்து

கூடவே சத்தமிட்டது குட்டீஸ் மனம்

இறுதியாய்க் கிளம்பும் வேளையில்

ஒவ்வொரு மழலைக்கும்

நான்கு பலூன்களை

எண்ணிக்கொடுத்தபோது

தான் பிறந்த பலனை முழுதாய்ப் பெற்றதாய்

மகிழ்கின்றன

குட்டீஸ் மனம் கொண்ட

பேரானந்த பலூன்கள்.

- அ.வேளாங்கண்ணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு