Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: சிவ பாலன்

சொல்வனம்

ஓவியம்: சிவ பாலன்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வன்மக்கிறுக்கல்கள்

விளம்பரப்படுத்தியிருக்கிறான்

பெண்ணின் பெயரோடு

கைப்பேசி எண்ணையும்

சுவர்க் கிறுக்கலாய்

வரைந்திருந்த படத்தில்

வரம்புகள் தாண்டிய

சபலம்

ஓங்கிச் சாத்திய

கழிவறைக் கதவின்

கைப்பிடிக் கம்பியில்

பிசுபிசுத்துக் கிடக்கிறது

குரூரக்காரனின் ரேகைகள்

அவசரமென்று

தத்தளிக்கும் மகளை

அடுத்தடுத்த பெட்டியாக

சோதித்து இழுத்தலைகிறாள்

அம்மா...

சுகமென்று அனுபவிக்கும்

ரயில் பயணத்தின்

சன்னலோர இருக்கை

புழுங்குகிறது எனக்கு..!

- கனகா பாலன்

சிற்றோவியம்

நீலநிற மெழுகு பென்சிலோடு வருகிறாள் பாப்பு

குட்டிக்கையை அசைத்து அசைத்துத் தீற்ற

அட, வானம் இதுதானா?

ஒரு மிட்டாயைச் சப்பியதும்

சக்தி பிறந்துவிட்டது

இம்முறை குட்டிக்கை கடலைக் கொண்டுவந்து விட்டது

நட்சத்திரத்துக்கு

மஞ்சள் பென்சிலால்

பொட்டு வைத்தாச்சு

மினுங்குதாம்

கைவலித்த நேரத்தில் பச்சைமெழுகு எடுத்து

கன்னாபின்னாவென்று தீற்றிவிட்டுச் சொன்னாள்

காற்று வேகமா

ஆடும்போது மரம் அப்பிடிதான் இருக்குமாம்

நோட்டுப்புத்தகத்தின் பக்கங்களுக்குள்

பிரபஞ்சம் குடியேறியது

இப்படித்தான்

வீடு வரைவதுதான் கஷ்டமாம்

கோடுகோடாப் போட வேண்டியிருக்கு

அலுத்தபடி

மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்

பாப்புக்குட்டி

ஆமாமா என்றாள் அம்மா.

- உமா மோகன்

சொல்வனம்

முன்னறிவிப்பு

கொட்டாவி வரும்போது

பேசுவது போல்

விட்டு விட்டு எழுதுகிறது

மை தீரப்போகும் பேனா

முன்னேறவும் முடியாமல்

பின்னேறவும் விரும்பாமல்

முன்னும் பின்னும்

ஊசலாடுகிறது

நிற்கப் போகும்

சுவர்க்கடிகாரத்தின் விநாடி முள்

சொட்டுச் சொட்டாய்

கண்ணீர் சிந்துகிறது

பழுதாகிக்கொண்டிருக்கும்

தண்ணீர்க் குழாய்

ஐந்து நிமிட

பயன்பாட்டிற்குக்கூட

அரைமணி நேரம்

மினுக்கிய பின்னே எரிகிறது

மூர்ச்சையாகப் போகும்

டியூப் லைட்

எந்த வித முன்னறிவிப்புமின்றி

சட்டென உதிர்கின்றன

மரத்திலிருந்து இலைகள்!

- ப்ரணா

சிரம்

யாசகம் கேட்பதொன்றும்

யானையின் பிழைப்பன்று

வாய் பொத்தி தலை தாழ்த்தி

ஆசிகளை

யாசித்து நிற்றல் யார் பிழைப்பு?

- லலிதானந்த்

ஏதோ ஒன்று

புதுவீடு கட்டியிருக்கலாம்

கடன் தொல்லைக்கு பயந்து

ஊர் மாறியிருக்கலாம்

மனைவியோ, மகளோ

ஓடிப்போன வலி தாங்காமல் இடம்பெயர்ந்திருக்கலாம்.

வாழ்ந்துகெட்ட குடும்பமாய்

வாடகைக்கு மாறியிருக்கலாம்

இறந்துகூடப் போயிருக்கலாம்.

முகவரியில் ஆளில்லையென திரும்பிப்போகும்

அந்தக் கடிதத்தில்

மறைந்துகிடக்கின்றன அறியமுடியாத

காரணங்களும் ரகசியங்களும்.

- பெ. பாண்டியன்

ரகசியக் களவு

வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா

வீட்டின் சுதந்திரத்தை

தனிமையை

நிர்வாணத்தை

கோரத்தை

உரிமையை

முகமூடியை

இன்னும் எதையெல்லாம் முடியுமோ

அத்தனையையும் திருடுகிறது கேமரா

வளைந்த கேமரா

எங்கெங்கு இருக்கிறதென

அறிந்ததால் அங்கெல்லாம்

நேராக இருக்கிறது வீடு!

- காரைக்குடி சாதிக்