Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அறை

அறைக்குள் தனியாய்
இருப்பது அவ்வளவு எளிதல்ல

யாருடனும் பேசாமலும்
யாருடனோ எப்போதோ
பேசிய விஷயங்களை
நினைவுகூராமலும் இருக்க வேண்டும்

அறையை விட்டு வெளியேறி
கொஞ்சம் வானம் பார்க்க வேண்டும்
அப்போதும்
அன்று அவர்களோடு நின்று
வானம் பார்த்துப் பேசிய
நினைவுகள் பிடிக்காமல்தானே
அறைக்குள் சென்றிருந்தேன் என்பதும்
நினைவு வராமல் இருக்க வேண்டும்.

- மணிவண்ணன் மா

ஆட்டத்தின் முடிவில்...

வெளிச்சம் கொட்டிய விளக்குகள்
அணைக்கப்பட்டாயிற்று
மேசையின் மீதேறி அமர்ந்துகொண்டன
உட்காரப் பயன்படுத்தும் நாற்காலிகள்
உள்ளே வந்து சென்ற பாதங்களையெல்லாம்
தண்ணீரால் கழுவி வெளியேற்றி
தரையைச் சுத்தப்படுத்தியாயிற்று
பாய்லரில் கரியை நிரப்பி
மீந்த பாலில் தேநீர் தயாரித்துக் குடிக்கும்
அந்தக்கடைச் சிறுவர்களுக்கு
தேநீர் இனிப்பதுமில்லை கசப்பதுமில்லை!

- சௌவி

சொல்வனம்

உயிர்ப்பூ

சாலையோரம் ரோஜாச் செடிகளை
வைத்துக்கொண்டு
அமர்ந்திருப்பவர்
பூக்களின் மீது அடிக்கடி
தண்ணீரைத் தெளித்து
உயிர்ப்போடு வைத்திருக்கிறார்
விற்ற செடிகளினால்
மதிய உணவினை உறுதிப்படுத்திக்கொண்டு
இரவு உணவுக்காகவும்
குழந்தைகளின் சில கோரிக்கைகளுக்காகவும்
இன்னமும் உட்கார்ந்திருக்கிறார்
பூக்களுக்காக அவரும்
அவருக்காகப் பூக்களும்
பரஸ்பரம்
உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

- ச.ஜெய்

எல்லாம் மாறிவிட்டது

அம்மா சேமிக்கும்
அரிசி பருப்பு டப்பாக்கள்தான்
குபேர மூலை
திண்ணையின் ஓரத்தில்
அப்பத்தா அரிசி பொங்கப் பற்றவைத்த
கல் அடுப்புதான் அக்னிமூலை
புழக்கடையில் வைக்கப்பட்டிருந்த
கிணறுதான் ஈசான்ய மூலை
மஞ்சள் குங்குமம்
பூசப்பட்ட மரங்கள் இருந்த
இடம்தான்
நிருதி மூலை
வெள்ளந்தியாக
வகுத்த மூலைகளில்
மகிழ்ச்சியாகக்
கட்டுப்பட்டிருந்திருப்பார்
வாஸ்து பகவான்.

- கெளந்தி மு