பறத்தலின் விதி
பறவைகள் மானிடர்கள்
விதைப்பதற்குப் பிறந்தவர்கள்
மானிடர் சாயலில்
பறவைகளைப் பார்க்கலாம்
பறவையின் சாயலில்
மானுடம் அரிது
இசைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பூத்தலில்
எச்சமிட்டுச் செல்கிறது பறவை
வனமொன்று பறவையாகி
மீண்டும் விதையாகிறது.
- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்
***
குழப்பம்
இழு தள்ளு என்று
எழுதப்பட்டிருக்கும்
எல்லாக் கதவுகளும்
எல்லாச் சமயங்களிலும்
யோசிக்க வைக்கின்றன
அல்லது
குழப்பிவிடுகின்றன
சந்தேகத்துடனே
கதவுகள் தள்ளப்படுகின்றன
அல்லது இழுக்கப்படுகின்றன
எத்திசையிலும் நகரும் இக்கதவுகளுக்கு
தேவையில்லைதான்
கைகளின் மீதான அதிகாரம்
தள்ளியோ இழுத்தோ
கதவைத் திறந்து நுழைந்தவர்கள்
வெளியேறுகையிலும் அதே குழப்பத்தோடே
வெளியேறுகிறார்கள்
யாரோ இழுக்கிறார்கள்
யாரோ தள்ளுகிறார்கள்
என்றான பிறகும் புரியவில்லை
வாழ்க்கை இழுக்கப்படுகிறதா
அல்லது தள்ளப்படுகிறதா?
- சௌவி

***
நவீன நிலா
முற்றம் வந்த நிலா
முகம் திருப்பி நிற்கிறது
நீயே கூறென,
மகனை அருகழைத்து
இதனுடைய கூடத்தில்தான்
பாட்டி வெற்றிலை
இடிக்கிறாள் என்றேன்
இல்லை
ரோபோ லேப்டாப்பில்
வேலை பார்க்கிறது
வொர்க் ஃப்ரம் உலகு
என்கிறான்
கடகடவெனச் சிரித்த நிலா
மகனிடம்
கை குலுக்கி விடைபெறுகிறது.
- அகராதி
*****
அ-தனிமை
தனிமையென்றுதான் நினைத்திருந்தேன்
காலம் காலமாகப் பார்த்தவற்றையெல்லாம்
கண் முன் வீசிச் சென்றது காற்று
நூற்றாண்டு மரத்தின் மேலமர்ந்து
ஏகாந்தம் பயின்றது சிறுபறவை
தொட்டும் விட்டும்
விளையாட்டுக் காட்டியது வெயில்
புழுதிச் சுழல் மேலெழுந்து
கன்னம் தொட்டுப் போயிற்று
சலசல சப்தமெழுப்பிப்
பேசிக்கொண்டேயிருந்தன இலைகள்
தனிமை எப்போதும் தனிமையல்ல
இயற்கை என்று ஒன்று இருக்கும்வரை.
- கி.சரஸ்வதி