சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

பூனைக்கண் பகல்

இருள்

ஒரு பூனையாகி

வீதியைக் கடக்கிறது

நான் ஒரு வாகனமாகி

வீதியை ஓட்டுகிறேன்

வெளிச்சத்தில் மினுங்கும்

பூனையின் விழிகளில்

பூஞ்சைக் கண்களுடன்

இன்னும் விழிதிறவாத

குட்டிக் குட்டிப் பகல்கள்.

- லலிதகோபன்

******

நாவல்

முனியப்பன் கோயிலில்

காற்றடிக் காலத்தில் உதிர்கிற

நாவல் பழங்களைச் சேகரித்து

விற்க வருவாள் ஆராயக்காவாடாமல்லி நிறமுள்ள நகங்கள் மினுங்கும்

நுனிவிரல்களால்

குவிந்து விரிந்து நிரவி நாம்புகிற

நாவலம்பழம்

கைப்பிடி ஐந்து ரூபாய்உப்பு மிளகாய்ப்பொடி விசிறிய

மணற் துகள்களாய் ஒட்டியிருக்கும்

சிறகுகளற்ற கருவண்டுகள்

தினசரிக் காகிதங்களுக்குள்

தஞ்சமடைகின்றன பழங்கள்முன்வேனில் தொடங்கி

முதுவேனில் முடிய

பழுத்துச் சிவந்த

அரிவாள் வடிவத்தில் நறுக்கிய

கோசாப்பழத் துண்டுகள்

ஆராயக்காவின் அலுமினியக் குண்டானின்

பகற்பொழுதுகளை

அப்படிச் சிவக்க வைக்கின்றன.

- ஜெயாபுதீன்

****

வலியுடன் காத்திருத்தல்

கருத்தரிக்காத அச்சிவந்த அறைக்குள்

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள்

ஆளுக்கொரு கருப்பையை வைத்தவனுக்கு

அதில் குழந்தையை வைப்பதில்தான் என்ன சிக்கல்

ஒவ்வொரு முகத்திலும் இறுக்கமாக

உறைந்து கிடக்கும் காலத்தைப்

பெயர் சொல்லி உரக்க அழைக்கிறாள் தாதி

நான்காவது ஐந்தாவது முறையாக

அனஸ்தீஸியாவுக்குள் ஊடுருவும்

வலியையாவது கருப்பை சுமக்கும் பொருட்டே

தொடையகட்டிக் காத்திருக்கிறோம்

நினைவு வந்ததும் உடல் கடந்து

விழப்போகும் இந்த முறையாவது ஆயிடுமா?

கேள்வித் துளைகளுக்கு பதில் சொல்ல

இந்த அனஸ்தீஸியாவினால் ஆகாதுஇன்னொன்றும் சொல்கின்றேன்

தப்பாது தீட்டுக்கறை காணும் அத்தினங்களில்

முகம் பொத்தியழும் மனத்தைத்தான்

குழந்தையென நாங்கள் சொல்கிறோம்.

- சாய் வைஷ்ணவி

*****

சொல்வனம்

கருணை


மொட்டைமாடிக்குப் போன குழந்தை

திரும்பிவந்து பார்த்தபோது

வீட்டில் அம்மாவைக் காணோம்

அப்பத்தாவை நம்பி

ஆகாசம் பார்க்கப்போன சமயத்தில்

ஏமாற்றிவிட்டு

வேலைக்குப் போயிருக்கிறாள் அவள்

கொஞ்ச நேரம்

அவள் அவசரத்தில் எறிந்திருந்த

சுரிதார் ஷாலைக் கட்டிக்கொண்டு

கேட்டுக்கும் வீட்டுக்குமாய்

நடந்து அழுகிறது குழந்தை

பார்த்துக் கண்கலங்கும்

பக்கத்துவீட்டு அக்காவிடம்

‘‘தெரிஞ்சா வேலைக்கே போகமாட்டா’’

என்று சொல்லி மனதை

ஆற்றிக்கொள்கிறாள் அப்பத்தா

எல்லோருக்கும்தான் கருணை இருக்கிறது

ஆனால் அதைவிடக்

கொஞ்சம் பெரிதாய் இருக்கிறது

வயிறு..!

- சாய்மீரா