Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

காதலாதல்

எப்போது

முதன்முதலாய்ப் பார்த்தேன்

ஆண்டு கிழமை

எதுவும் என் நினைவிலில்லை


நீயோ

நொடியைக்கூட

நினைவில் வைத்துக்கொண்டு

சொல்கிறாய்


பிறந்தநாளை மறந்து

சமாளிப்பு வார்த்தைகளை

மட்டுமே ஒவ்வொரு முறையும்

உனக்குப் பரிசாக அளிக்கின்றேன்

நீயோ

வாண வேடிக்கைகளையும்

வண்ணப் பலூன்களையும்

பறக்கவிட்டு

வாயடைக்க வைக்கின்றாய்



உனக்குப் பிடித்த பொருள்களெல்லாம்

பயணத்தில் கடக்கும் மரங்களைப்போல

மறந்துபோகின்றன


நீயோ

பேச்சுக்கு இடையில் உதிர்த்த

விருப்பங்களைக்கூட

தேடித் தேடிப் பரிசளிக்கின்றாய்


மறப்பது இயல்புதானென்று

நீ எனக்குக் கொடுக்கும்

சுதந்திரம் இருக்கிறதே,

போதும் தேவி

காதைக்கூடத் திருகிவிடு

காதலால் அடிக்காதே.

- சரண்யா சத்தியநாராயணன்

***

வேட்டை


நான் வாணமாக வெடிக்கிறேன்

நூறுநூறு தீப்பறவைகளாக மேலெழும்புகிறேன்

உன் வானின் நீலத்தில்

சடசடவென றெக்கைகளை வீசுகிறேன்

மேகங்கள் தீர்க்காத உன்மீதான தாகத்தை

திசைகளில் கூவி அரற்றுகிறேன்

ஆயிரம் முட்டைகளாய் உன் நினைவு

என் அடிவயிற்றில் கனக்கிறது

தூரக்காட்டிலிருந்து

உன் வாசனை சுமந்த மலர்கள் அழைக்கின்றன

நீ கூர்தீட்டிக்கொண்டிருக்கும் அம்பில் மாய்வதற்கென

சிறகுகள் நிதானித்து

காட்டின் பச்சை நோக்கி மிதக்கிறேன்

கீழே மிக வாஞ்சையாய்

எனை ஏந்திக்கொள்ள விரிந்து நிற்கும் பூமரங்கள்

உன் கரங்கள்தானா?

- பானுசுரேஷ்

****

சொல்வனம்

அந்தக் கேள்வி


அடுத்து என்ன என்னும் கேள்வியோடு

சுற்றித்திரிவதே வாழ்க்கையாகிறது

பல சமயங்களில்

விடை கிடைப்பதில்லை

பலருக்கு

சிலரோ தவறான விடையுடன்

தேங்கிவிடுவர்

விடைகள் அகப்படவில்லை எனினும்

விடாது துரத்தும்

‘அடுத்து என்ன’ மட்டும்

இல்லையென்றால்

என்ன எஞ்சியிருக்கிறது

சுவாரஸ்யமாய் இந்த வாழ்க்கையில்.

- இருள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism