Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கவிதை

சொல்வனம்

கவிதை

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அருஞ்சொற்பொருள்

உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்

ஒன்றுபோலில்லை

பார்க்குந்தோறும் உருமாறும்

மேகமென பதிக்கும்போதெல்லாம்

அருஞ்சொற்பொருள் கேட்கின்றன அவை


அதிகாலை மழைநேர முத்தமொன்று

ஆதாம் ஏவாளென்றாய் ஆக்குவதற்கென

மதிய நேர ஆசுவாசத்தில் சத்தமாய்க் கூறுவது

எஞ்ஞான்றும் நன்றி


மஞ்சள் மாலையில் தரப்படுபவை

பொறுப்புள்ள காதலை விளக்குவதற்காய்


இரவில் அவை இயம்பும் பொருள்

புரிவதற்குள் மயங்கிவிடுகிறேன்

ஒரு முறையேனும்

முன்னிரவு முத்தங்களை

விழிப்பு நேரத்தில் தந்துதவு

பொருளறியாப் பேதைக்குத்

தேறல் சுவை அறிய அவா.

- கி.சரஸ்வதி

****

தீர்வு

சம்பவம் நடந்து முடிகிறது...

நாலு பேர் அழைக்கப்படுகிறார்கள்

கோட் அணிந்த நெறியாளர்

முகத்தில் கவலை தெரிகிறதா

மேக்கப்மேனிடம் கேட்டு முடித்து

கேமிராவின் கோணத்துக்குள் வந்து

நடந்ததைத் துவைக்க ஆரம்பிக்கிறார்

தண்ணீர், பெட்ரோல்,

கையில் கிடைத்ததை எடுத்துத் தெளிக்கிறார்கள்

வந்தவர்கள்

வெப்பச் சலனம் உள்ளே நுழைந்து

முடிவு என்னவென்று கேட்க

அலசியதற்கு தீர்வு சொல்லாமலே

கலைந்து செல்கிறார்கள்

அரங்கேறக் காத்திருக்கும் சம்பவங்கள்

தொலைக்காட்சி அலுவலக வாசலில்

முன்பதிவுக்குக் காத்திருக்கின்றன.

- தேனா லட்சுமி, மதுரை

****

சொல்வனம்

ஊசலாட்டம்

விரும்பிய ஆடையைத் தேர்ந்தெடுத்து

ஆசையாய்த் தடவிப் பார்க்கிறது மனம்

இன்னொரு மனமோ

அவசரமாய் வில்லையைத் தேடி

கட்டுப்படியாகாது என்கிறது


ஒரு மனம்

இன்னும் ஊதாக்கலர் ரிப்பனின்

பின்னால் சுற்ற

இன்னொரு மனமோ

ஆதார் கார்டோடு தெருத்தெருவாய் அலைகிறது


என்ன ஆனாலும்

நீயே வேண்டுமென்கிறது

ஒரு மனம்

பட்டதே போதும் விட்டுவிடு

என்று தேம்புகிறது மற்றொன்று


உச்சியிலிருந்து குதித்துவிடு என்று

ஒன்று கூவ

வாழ்ந்து பார்க்கலாம் வாவென

இழுத்து வந்து

இப்படி எழுத வைத்துவிடுகிறது

இனிமையும் இம்சையுமான

இன்னொரு மனம்.

- வெள்ளூர் ராஜா

****

ஆடம்பர கார்கள்

பரபரப்பான நகரச்சாலையில்

விதிகள் புரியாது தடுமாற்றத்துடன்

எதிர்திசை கடக்கும் வயோதிகனை

ஒலியெழுப்பிப் பதற்றம் கொள்ளச்

செய்யாது

கடக்கும்வரை அவன் பின்னே

பூனையைப் போலப் பின்தொடரும்

ஆடம்பர கார்கள்தான்

அவ்வளவு அழகு.

- ச. வடிவேல்