வீட்டின் தனிமை
காரைகளும்
வெடிப்புகளுமாய்
நிறைந்து கிடக்கிறது
கைவிடப்பட்ட பழைய வீடு
திறந்த ஜன்னல்கள்
பெரிய விழிகளாகி
தொலைந்த சந்தோஷங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன
உடைந்த மரக்கதவுகள்
தன் பங்கு விசும்பல்களை
கிரீச் சப்தங்களால்
அடிக்கடி வெளிப்படுத்துகின்றன
முகவரியை மாற்றிப்போனவர்களின்
பாதச்சுவடுகள் இனி எப்போதும்
திரும்பப்போவதில்லை
பெருந்துயரைத் துடைத்தெறிய
இயலவில்லையென்றாலும்
அவ்வப்போது அமர்ந்து
ஆற்றுப்படுத்துகின்றன
அவ்வீட்டின் சுவர்களில்
சிறகுலர்த்தும் பறவைகள்.
- க.அய்யப்பன்
****
அன்பின் விதை
அப்பாவுக்குப் பிடிக்குமென்று
ஆரஞ்சு வாங்கிய அம்மாவுக்கு
கொய்யாதான் பிடிக்கும்
எங்கள் வீட்டில் இருக்கிறது
கல்யாணமான புதிதில்
அப்பா நட்டு வளர்த்த
கொய்யா மரம்
இங்கு
ஆரஞ்சுக்கும் கொய்யாவுக்கும்
ஒரே விதைதான்
அதன் பெயர் அன்பு.
- பித்தன் வெங்கட்ராஜ்
****

மனிதப் பயணம்
ஒரு பறவையோடு பயணிக்கிறேன்
அதன் பகலானது
இரவைச் சீண்டுவதேயில்லை
ஒரு பட்டாம்பூச்சியோடு பயணிக்கிறேன்
அது தேனெடுக்கையில்
பூக்களை சேதப்படுத்துவதேயில்லை
ஒரு விலங்கோடு பயணிக்கிறேன்
அது அனைத்தையும்
மிச்சம் வைத்தே மேய்கிறது
நான் என்னோடு
பயணித்துக்கொண்டிருக்கிறேன்
நானே என்னை மிதித்தபடி.
- சாமி கிரிஷ்
****
புன்னகைக்குளம்
`சொட்டாங்கல்' விளையாடும்
சிறுமியரின் கன்னங்களில்
புன்னகை விரிவுகளைக்
கொடுக்கச் சலனப்படுகிறது
மெளனக் குளம்!
- வ. ரகுநாத்