Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

தூங்கா நகரம்

துயில் நோக்கி நகரும் நகரம்

அன்றைய பேட்டா காசுடன் முதலில்

குழந்தைத் தொழிலாளர்களை

வீடு நோக்கி வெளியேற்றுகிறது

அடுத்து

உணவக வாசல்களில்

முறைவைத்துக் கண்காணிக்கும்

சீருடை முதியவர்களை


எஞ்சிய காய்கறிகளை

வந்த விலைக்கு விற்கும்

சிறு வியாபாரிகளை


இறுதியாக ஷட்டரை இழுத்துமூடி

சூடம் ஏற்றி பணப்பையுடன்

வீடு திரும்பும் முதலாளிகளையும்

அனுப்பிய பின்


கடைசிப் பேருந்தைத் தவறவிட்டவர்களையும்

முதல் பேருந்துக்காகக்

காத்திருப்பவர்களையும்

காத்திருக்க வைத்து


பிணிகொண்ட குழந்தையை

தாயுடன் உள்ளிருத்திவிட்டு

அரசு மருத்துவமனை வாசலில்

கடிக்கும் கொசுவை

கைகளால் விரட்டியபடியிருக்கும்

ஏழைத் தகப்பனுடனமர்ந்து

விழித்துக்கொண்டிருக்கிறது

தூங்கா நகரம்.

- கே.ஸ்டாலின்.

***

கதை நிலம்!


நாம ஒன்னும்

ஒன்னும் இல்லாதவங்க இல்ல

ஆதியில் நமக்கும்

ஆறு ஏக்கர் நிலமிருந்தது

என்று இறக்கும்போது

கெளரவமாய்ச் சொன்னார்

தாத்தா

இருக்கும்போதெல்லாம்

கம்பீரமாய் அடிக்கடி சொல்வார்

அப்பா

வறுமையில் வாடும்போது

ஆத்திரமாய்ச் சொல்வாள்

அம்மாவும்


கேட்கும்

போதெல்லாம் பெருமிதமாய்

அவன் தன்

பிள்ளைகளுக்குச் சொன்னான்

வழிவழியாகச்

சொல்லப்படும்

அந்த ஆறு ஏக்கர் நிலம்

அவர்கள் பரம்பரையில்

இருந்துகொண்டே இருக்கிறது

ஒரு கதையாக.

- ஜெ.ம.புதுயுகம்

*****

சொல்வனம்

வாழ்வு


நகர் வீதியின்

மாய்ந்த சடலத்தின் முன்

பறை இசைக்கும் கலைஞனாய்

நண்பனுக்கு

கண்ணீருக்கும் ஒப்பாரிக்குமிடையே வாழ்வு


யாரோ இட்ட வாய்க்கரிசியாய்

உலை கொதிக்கும் வீட்டில்

எருவு கலைக்கும் அக்காவுக்கும்

வெறகு பொறுக்கும் ஆத்தாளுக்கும்

பல நாள்களில்

பாசம் படி அளிக்கவில்லை

ரேஷன் படி அளக்கிறது

பெயர் மட்டும் ஆனந்த்துக்கு

வாழ்வு எப்போதும் பெருங்கவலை.

- ச அஜித்குமார்

*****

இடம்

ஓய்ந்த கால்களுக்கு

பேருந்து

சன்னலில்

நுழைந்து

ஓரத்து இருக்கையில்

இடம்பிடித்துத் தருகிறது

வெயில்.

- ந.சிவநேசன்