அப்பாக்கள்
பரபரப்பான காலையில்
சாலை விதிகளை மீறி
நேரெதிராக
மோதிவிடுவதுபோல்
இருசக்கர வாகனங்களில்
பாய்ந்து வந்த இரு அப்பாக்களும்
தவறு யார் மீதென
அனல் பறக்க
விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்
இவையெதையும் பொருட்படுத்தாமல்
பரீட்சை அட்டைகளைப் பார்த்துவிட்டு
‘ஆல் தி பெஸ்ட்’ எனக் கட்டை விரல்களை
உயர்த்திக்கொள்கிறார்கள்
பின்னால் அமர்ந்திருந்த
குழந்தைகள்
பரஸ்பரப் புன்னகைகளில்
மெல்லக் கலையத் தொடங்குகின்றன
கூட்ட நெரிசல்களும்
கூடவே
அப்பாக்களின் பதற்றங்களும்...
- தி.கலையரசி
****
கோரிக்கைகள்
நீண்ட தரிசன வரிசையில் பயணித்து
சாமியிடம் என்ன கேட்பது என்று
யோசித்து நகர்கையில்
கருவறை வந்துவிட
‘நகருங்கள்... வழிவிடுங்கள்...’ என
நகர்த்திவிடுகிறார் காவலர்
பிரார்த்தனைகளை வைக்கவிடாது
பின்வரிசைக்கூட்டமும் தள்ள
வெளியே வருகிறேன்
கோரிக்கைகள் ஏதுமின்றி
தரிசித்துவிட்டுப் போ என்பதே
இன்றைய வேண்டுதலாக
இருக்கக்கூடுமோ என்னவோ கடவுளுக்கு!
- பெ.பாண்டியன்

நிறம் மாற்றும் மழை
மொட்டை மாடிகளில்
யாரையும் காணவில்லை
துணிகள் உலர்ந்துகொண்டிருக்கின்றன
மேகங்களுக்குள்ளேயே மறைந்துகொண்டிருக்கும்
சூரியனை நம்பி
நான்கைந்து நாள்களாகவே
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
மிகக் கனமழை வரக்கூடுமென
வழக்கம்போல்
அறிவிப்பை மதிக்காத அனைவரும்
துணிகளை கோதுமையை
அரிசியை வடகத்தை
தலையணைகளைக் காயப்போட்டிருக்கிறார்கள்
இன்றிலிருந்து
மின்னொளியில் நடக்கும்
கபடிப்போட்டி தொடங்குவதாக
அறிவிப்பு செய்தபடி
ஆட்டோ ஒன்று
தெருத்தெருவாக அலைகிறது
வாசலில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்த
புத்தகத்தின் மீது விழுகிறது
சற்றும் எதிர்பாராமல் வந்த
ஒற்றை மழைத்துளி
சரசரவென
உலகம் நிறம் மாறத் தொடங்குகிறது.
-சௌவி
***
ஏதுமற்ற ஒன்று
யாரோ போல் அழைத்தேன்
யாரோ போல் எடுத்தாய்
யாரோ போல் பேசினோம்
ஒன்றுமில்லை
ஒன்றுமேயில்லைதானே
அப்புறம் ஏன்
அவ்வளவு அவசரமாகத்
துண்டித்துக்கொண்டோம்.
- வெள்ளூர் ராஜா