சோற்றைச் சுமந்தலைந்து விற்பவன்
விரையும்
இருசக்கர வாகனம்
ஒளிர் மேலங்கியோடு
சோற்றைச் சுமந்தலைந்து விற்பவன்
சில சமயம்
விற்றதைக் கொடுப்பவன்
பசிக்கும் வயிற்றுக்காய் அல்ல
சுவைக்கு அலைந்து திரியும்
நாவிற்காய்
சுமந்தலைந்து கொடுப்பவன்
வான் வெளியில்
பறந்தலையும்
எண்மப்
பணப்பரிவர்த்தனை
கணக்கில் ஏறியதும்
உத்தரவு பறக்கும்
அடுத்த அரை மணிக்குள்
இல்லம் ஏக வேண்டும்
பரபரத்துச் சாலையில்
பறந்தவனின்
ரத்தச் சகதிக்குள்
வாய் பிளந்து கொட்டிக் கிடக்கிறது
தொடைக்கறிப் பிரியாணி.
- பாட்டாளி
****
தலைமுறை
சிறுமகனுடனான நடைப்பொழுதொன்றில்
அவன் வலது ஆட்காட்டி விரலை
மிருதுவாய்ப் பிடித்தபடி
நடக்கிறேன் நான்
ஒரு பரிகாசச் சிரிப்போடு
என்னிலும் மிருதுவாய்
அவன் இடக்கையைப் பிடித்தபடி
உடன் வரத்தொடங்குகிறது மென்காற்று.
- மு.நந்தனா
*****

மறைந்திருக்கும் காதல்
யாருக்கோ பயந்து
காதலை
மறைக்கிறாய் நீ
வாசலில்
கோலமிடும்போது
இப்போதெல்லாம்
வாகனத்தில் ஒலியெழுப்பிபடி
வருவதில்லை நீ
கல்லூரிப் பேருந்திற்காக
நான் வரும்போது
தேநீர்க் கடையில்
காத்திருப்பதில்லை
சமீப நாள்களாக
வரும் வழி பார்த்து
தவமிருக்கும்
உன் கண்கள் கண்டு நாள்களாகி விட்டன
அலைபேசியில்
உன் குறுஞ்செய்தி மழை
பெய்வதேயில்லை
ஆனாலும்
`மிஸ் யூ' என்று சொல்லும்
உன்
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில்
வாழ்கிறது
நம் காதல்!
- ரேணுகா சூரியகுமார்