Published:Updated:

சொல்வனம்

பிஞ்சுத் தூரிகை
பிரீமியம் ஸ்டோரி
பிஞ்சுத் தூரிகை

ஆளில்லா அறையில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது மின் விசிறி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கும் காகிதங்கள்

சொல்வனம்

ஆளில்லா அறையில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது மின் விசிறி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கும் காகிதங்கள்

Published:Updated:
பிஞ்சுத் தூரிகை
பிரீமியம் ஸ்டோரி
பிஞ்சுத் தூரிகை
சொல்வனம்

பிஞ்சுத் தூரிகை

ஒவ்வொரு முறையும்

பிஞ்சு மகன் வரையும் ஓவியத்தில்

வளைந்தும் நெளிந்தும்

ஒற்றைக்கோடாகவே உடல் சுருங்கி

ஓடுகிறது நதி

அந்த நதிக்கரையில்

எப்போதும் அருகருகே நின்றபடியே

நீரருந்தி தாகம் தணிக்கின்றன

பகை விலங்குகள்

அவன்

தொட்டெழுதிய கானகத்தில்

அழிவின் விளிம்பில் நிற்கும்

அத்தனை உயிரினங்களும்

பாதுகாப்பாய் உலவுகின்றன

அவன் வயல்களுக்கு மேலே

பொழிவதற்குத் தயாராய்

மிதந்தபடி காத்திருக்கின்றன

மழை மேகங்கள்.

- வி.நர்மதா

*****

சொல்வனம்

காற்று செய்யும் பறவை

ஆளில்லா அறையில்

காற்று வீசிக்கொண்டிருக்கிறது

மின் விசிறி

அங்கொன்றும் இங்கொன்றுமாகப்

பறக்கும் காகிதங்கள்

அல்லாடிக்கொண்டிருந்தன

அறையின் மெளனங்களை

சிறகு கொண்டு கலைத்து

சுவர்களோடு பேசிக்கொண்டிருந்தது

அந்த மின் விசிறி

காற்று செய்யும் மின் பறவைக்கு

மெளனம் தடங்கலாய்த்தான் இருந்தது

வீணாக ஓடுவதாய் நினைத்து

மின்விசிறியை நிறுத்திவிட்டுப் போனார்

அறையின் பொறுப்பாளர்

மின்விசிறியின் உரையாடலில் இருந்து

விடுபட்ட அந்த அறை

சுவர்க்கடிகாரத்தின்

முணுக் முணுக் சத்தத்தோடு

முயங்கிக்கொண்டிருக்கிறது

இப்போது.

- இளந்தென்றல் திரவியம்

****

சொல்வனம்

சுவாரஸ்ய ஊடல்

எப்போதுமே சுவாரஸ்யமானவை

எனக்கும் இல்லாளுக்குமான

ஊடல் கணங்கள்

நேருக்குநேர்

முகம்பார்த்துக்கொண்டால்

புன்னகைத்துத்தொலைத்து

ஊடலின் வீரியம்

நீர்த்துவிடக்கூடுமென்று

பார்வைகளின்

சந்திப்பைத் தவிர்ப்பதில்

தொடங்கிவிடுமந்த சுவாரஸ்யம்

அறை வாசல்வழி நுழைகையிலோ

வெளிவருகையிலோ

அடைத்து நிற்பவர்

விலக எத்தனிக்கையில்

இடவலக் குழப்பத்தில்

மோதிக்கொள்ளும்போது

சுவாரஸ்யம் கூடும்

சாடைப் பேச்சுகளில்

சேனல் மாற்றங்களில்

தொடரும் சுவாரஸ்யம்

அற்பக் காரணத்தை முன்னிருத்தி

சமாதானம் ஆகி

பேசத்தொடங்கும்போது

உச்சம் தொடும்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

******

சொல்வனம்

தலம்

நடை பயிலலாம்

கோபுரம் தரிசிக்கலாம்

துணிகளை உலர்த்தி

சூரிய ஒத்தடம் கொடுக்கலாம்

நண்பர்களுடன்

அரட்டை அடித்தபடி உறங்கலாம்

மல்லாந்து படுத்து

நட்சத்திரங்களுடன் பேசலாம்

குடும்பத்தினருடன் வந்தமரலாம்

மழை நாளில்

வண்ணங்கள் சமைக்கும்

வானவில் பார்க்கலாம்

வெவ்வேறு பயன்பாடுகளை

உள்ளடக்கிய மொட்டை மாடிக்கு

பலர் வருவதென்னவோ

யாருக்கும் தெரியாமல்

சிகரெட் பிடிக்கத்தான்!

- ப்ரணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism