Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கீரைகளையும் கவலைகளையும் ஒன்றாக அரிந்துகொண்டிருந்தாள் அம்மா அரிந்தபடியே என்னைப் பற்றிய தனது கவலைகளையெல்லாம்

சொல்வனம்

கீரைகளையும் கவலைகளையும் ஒன்றாக அரிந்துகொண்டிருந்தாள் அம்மா அரிந்தபடியே என்னைப் பற்றிய தனது கவலைகளையெல்லாம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நேரம் வந்ததும்...

ஹரிணியின் உள்ளங்கையில்

சிவப்பு ஸ்கெட்ச்சால்

வரைகிறாள் ஆடு மேய்ப்பவள்

பதிலுக்கு கைப்பிடி மண்ணை

அள்ளி அள்ளித் தருகிறாள்

ஹரிணி

வாங்கிய பிடிகளை ஒவ்வொன்றாக

தனித்தனியாகக் குவிக்கிறாள்

ஆட்டுக்காரி

இருவரும் நேரம் வந்ததும்

எழுந்துபோகிறார்கள்

அவர்கள் போனபின்

நிலத்தில் உட்கார்ந்திருக்கும்

குவிந்திருக்கும் மேடுகளையெல்லாம்

பார்க்கிறேன்

யாரோடும் அவை

சேர்ந்து போகவில்லை

- க.சி.அம்பிகாவர்ஷினி

******

சுருட்டியெடுக்கும் இரவு!

அதிகாலையில்

சூரியச் சுள்ளிகளை

அங்குமிங்குமாய்

பறந்தும் ஓடியும் நடந்தும்

பொறுக்கத் தலைப்பட்டுள்ளன

பறவைகள்

அள்ள அள்ளக் குறையாமல்

பெருகிவரும் சுள்ளிகளை

என்ன செய்வது என்பதறியாமல்

பொறுக்கிவந்ததை

அப்படியே போட்டுவிட்டுப்

பறந்தோடுகின்றன

ஒரு சுள்ளி விடாமல்

முழுவதையும் சுருட்டியெடுத்துப்

போய்விடுகிறது இரவு!

- கி.இளங்கோவன்

****

சொல்வனம்

அம்மாவின் சமையலறையில்...

கீரைகளையும் கவலைகளையும்

ஒன்றாக அரிந்துகொண்டிருந்தாள் அம்மா

அரிந்தபடியே

என்னைப் பற்றிய

தனது கவலைகளையெல்லாம்

கடவுளிடம் உரக்கப்

புலம்பிக்கொண்டிருந்தாள்

அவள் பார்க்காத ஒரு நொடியில்

அவள் அரிந்த

கவலைகளை மட்டும் எடுத்து

குப்பையில்

வீசிவிட்டுச் சென்றார் கடவுள்

அடுத்த

கீரைக்கட்டுடன் சேர்த்து

அக்காவின் கவலைகளை

அரியத் தொடங்கினாள் அம்மா!

- சசித்ரா தாமோதரன்

****

தாய்மையின் வெளிச்சம்!

இருளை முதுகில் சுமந்தபடி

ஓடிக்கொண்டிருக்கும்

நாயின் கண்களில் வெளிச்சம்

மீந்த உணவை

வெளியே கொட்டுகையில்

புதரடைந்து குட்டிகளைக் கண்டதும்

ஓடிவந்த குட்டிகள்

அடிவயிற்றில் முட்டி

உறிஞ்சத் தொடங்குகையில்

இன்னும் இன்னும் அதிகரிக்கிறது

நாயின் கண்களில் வெளிச்சம்

அவ்வெளிச்சத்தில் மங்குகிறது

அத்தனை நட்சத்திரங்களின் வெளிச்சமும்.

- சௌவி