இலவு காக்க மறந்த காலம்
வருடமொருமுறை அப்பா
தான் பணியாற்றும்
நூற்பாலையைச் சுற்றிக்காட்டுவார்
பொரிகடலை சகிதம் வண்ணக்காகிதங்களில்
அன்று பளபளக்கும் இயந்திரங்கள்
பொட்டிடப்பட்டுப் பூசையிடப்பட்டிருக்கும்
அவற்றின்
நூல் நூற்கும் வேகத்தை
இயந்திரங்களின் காதுபடவே
பெருமிதம் கொள்வார்
எட்டு மணி நேர அசுரச் சத்தங்களை
வீடுவரை கேட்கும்படி
உரக்கப்பேசிய அவரை
ஒரு நாள் ஆலை
தாமே தோற்றதாய்
தன்னியல்பு குலைந்து
பெருங்கதவுகளை மூடி
மொத்தமாய் வெளியேற்றியது
அதன் பின்னும் அவ்வழி செல்வதை
வழக்கமாக்கிவிட்டிருந்தார்
எங்களின் வாழ்க்கையைப் போலவே
கொஞ்சம் கொஞ்சமாக
சிதிலமுறும் ஆலைச்சுவர்களின்
பஞ்சடைத்த தலையினுள்
குருவிகளின் கூடுகள்
கலைக்கப்பட்ட கவலையில்
எனையும் அழைத்துச் சென்று
துயரின் கீதங்களை
அச்சுவர்களோடு பாடலானார்
சாட்சிகளற்ற பாடலை
நான் ஒருவளே கேட்டிருந்தேன்.
- மோகனப்பிரியாநிழல்

வெயிலின் நடனம்
கன்னங்கள் ஒட்டிக்கொள்ளும்படி
கிழவன்
அழுத்தமாய் உறிஞ்சும்
சுருட்டின் முனையாக
உக்கிரம் கொள்கிறது
சூரியன்
நிழலுக்கு வெளியே
நிறுத்தப்பட்டிருக்கும்
இரு சக்கர வாகனங்களின் இருக்கையில்
அனுமதியின்றி
அமர்ந்துகொள்கிறது ஆணவமாய்
பயணப்படுபவர் மீதெல்லாம்
புளியமரத்துப்
பிசாசாக ஏறி
கரும்புச்சாறும் கம்மங்கூழும்
கேட்டு வாங்கி
தணிகிறது உச்சிப்பொழுதில்
நீச்சல் பழகவரும்
பொடியர்களின் தொல்லையின்றி
வெப்பத்தைக் கொட்டி
விளையாடுகிறது
ஆற்று மணலில்
தகிக்கும்
தனது ஆடைகளைத் தார்ச்சாலையில்
துவைத்துக் கிடத்தி
புதிய டயர் வாசனையோடு
மீண்டும்
அணிந்துகொள்கிறது
விடைபெற்ற மழைக்கு
மரங்கள் கையசைத்து
திரும்பும் முன்
சுடச்சுட வந்து
மூன்று மாதங்களை
முன்பதிவு செய்துகொள்கிறது வெயில்!
- கவிதை மொழியன்