துளித்திரள்
மழையில் நனைந்த மரமொன்றின்
ஒவ்வோர் இலையின் நுனியிலும்
உருண்டு திரண்டு நிற்கின்றன
அடுத்தநொடி வீழ்வதற்கு அணியமாய்
நீள்கோள வடிவ நீர்த்துளிகள்
ஆயினும், அக்கணப்பொழுது
இடைவெளியில்
கார்முகில் விடுத்து வெளியேறும்
கதிரோனை எதிரொளித்துப்
பெருவெளியின் ஒளித்திரளை
விழியருகே காட்டிய பின்பே
விழூஉம் அந்தத் துளித்திரள்.
- பழ.மோகன்
******
அஞ்ஞானம்
புழுக்களின் கூடு
படர்ந்திருக்கலாம்
என்ற அனுமானங்கள்
ஏதுமின்றி
மரங்களின்
பழுத்த இலைகளை
உதிர்த்துச் செல்கிறது
காற்று.
- மகா

கூண்டுப் பறவைகள்
பூட்டியிருக்கும்
வீடுகளின் உள்ளே
இயல்பைவிடக் கூடுதலாக
சிறையில் இருப்பதாய்
உணரக்கூடும்
கூண்டுப் பறவைகள்.
- அரியலூர் ச.வடிவேல்
*****
பசி்த்திருக்கும் நாற்காலிகள்
மாலை நேரத் துரித உணவு
சமைப்பவனோடு
அவன் வாணலியில்
வறுத்தெடுக்கும் சத்தத்தைக் கேட்டவாறு
பசித்திருக்கின்றன
நாற்காலிகள்
அவன் கட்டளைக்கு
ஏற்றவாறு அதன்
கால்களை நகர்த்துதலே
அவற்றுக்கு இடப்பட்ட கட்டளை
கட்டளை மீறியபொழுதுகளில்
நாற்காலிகளின்மீது விழும்
சில சொற்சித்திரங்களின்
ரத்தக்கசிவு
அதன் பலம்
அறிந்தும் அமைதியாய்
தன்மீது சுமத்தப்படுகிற
புகார்களுக்குப் பதில் ஏதும் சொல்வதில்லை
சுமக்க மட்டுமே கற்றுத்தரப்பட்டுள்ள
இந்த நாற்காலிகள்
ஒருபோதும் தனக்கென
அமர்வது பற்றி யோசிப்பதில்லை.
- அன்றிலன்