Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

படம்: சசிகுமார்

சொல்வனம்

படம்: சசிகுமார்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அடையாளம்

குளத்தைத் தூர்த்தபின்

நினைவுகளில் மட்டுமே

மீன்கள் துள்ளுகின்றன

செவிகளில் மட்டுமே

குருவிகளின்

அரூபக் குரல்கள் கேட்கின்றன

நீரருந்தும் கால்நடைகளை

சித்திரங்களில் மட்டுமே

வரைந்து பார்த்துக்கொள்ள

வேண்டியிருக்கிறது

நாசிக்கு எட்டாத தொலைவில்

விலகிப் போய்விட்டது

தாமரைப் பூக்களின் வாசனை

இரையெடுக்க நீந்தும்

வாத்துகளின் சத்தம்

வேறிடம் தொலைந்துவிட்டது

அப்படியொரு குளம்

இருந்ததன் அடையாளத்தை

இக்கவிதை மட்டுமே

மௌனமாகச் சுமக்கிறது.

- மு.நந்தனா

****

சலனமற்று மிதத்தல்

வழிநெடுகக் கரங்களைப் பற்றிக்கொண்டே

நடக்கிறது உன் மனது

போதும் என்று

முடிவெடுத்துவிட்ட பின்பு

தொடர்ந்து வருவதில் என்ன இருக்கிறது

துள்ளிக் குதிக்கும் மீன்களைப்

போன்றதொரு சாகசம்

இன்னும் அதில் எஞ்சியிருக்க

கடிகாரத்தின் பெண்டுலம் போல

நிற்காமல் ஒரே மாதிரி இருக்க

எங்கே கற்றுக்கொண்டாய்

அலைகள் ததும்பும் குளத்தின் நடுவில்

சலனமற்று மிதக்கும் பௌர்ணமி நீ.

- எஸ்.ராகவன்

சொல்வனம்

பிக்பாஸ் வீட்டின் செய்திக் குறிப்பு

அரசியல் பிக்பாஸ் வீட்டைப்போல இருக்கிறது

யார் உள்ளே இருப்பார்கள்

யார் வெளியேறுவார்கள்

யாரை வெளியேற்றுவார்கள்

யார் யார் யாரைத் தக்க வைத்துக்கொள்வார்கள்

செய்திச் சேனல்களுக்கான தலைப்புச் செய்திகள்

அந்த வீட்டிலிருந்து கசிகின்றன

விவாத மேடைகள் தொகுத்து வழங்குகின்றன

புலனாய்வு இதழ்கள் பொடி வைத்துக் கூட்டுகின்றன

வீட்டின் பரபரப்பை வெளியில் காட்டுகின்றன

ஒரு நாள் பிக்பாஸ் வீட்டின் குப்பைகள்

சாலைகளில் வீசப்படுகின்றன

ரத்தத்துளிகளும் சதைத்துணுக்குகளும்

எலும்புப்பிண்டங்களும்

குப்பைகள் கணக்கில் சேர்கின்றன

விளம்பரங்கள் பிரமாண்டமாகிவிடுகின்றன

வீடு பூட்டப்பட்டாலும் தரைமட்டமானாலும்

பரபர செய்திகள்

பஞ்சாய் வெடித்துப் பறக்கத் தொடங்குகின்றன

- விகடபாரதி

மழையைப் பிடித்துக் கீழிறங்குதல்

முத்தமிட்ட தும்பிக்கூட்டம்

தோற்றுவித்த வளையங்கள்

மறையும்போதும்

தவறி விழுந்த கட்டெறும்புகள்

தத்தளிப்பை நிறுத்தி

மரிக்கும்போதும்

பசியோடு நடப்பட்ட

கொக்கின் ஒற்றைக்கால்

சலனங்கள் அடங்கும்போதும்

புலப்படுகிறது

மழையைப் பிடித்துக் கீழிறங்கி

குட்டையின் வட்டத்திற்குள்

பதுங்கியிருந்த வானம்.

- கவிதை மொழியன்