Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: மணிவண்ணன்

சொல்வனம்

ஓவியம்: மணிவண்ணன்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

போலச் செய்தல்

அவ்வளவு பெரிய இராட்டினத்தை இயக்குபவனின் கால்கள்

இலாகவமாகக் கம்பி விட்டுக்

கம்பி தாவுகின்றன

பதற்றம் பரவும் கண்கள் சூழ

தவறிவிடாத ஜாக்கிரதையை

சுலபமாகக் காலாள்கிறான்

மேலேறும் இராட்டினத்தில் சிக்காமல்

கீழ்க் கம்பிக்குத் தாவிக்கொள்கிறவன்

நீரின் போக்கை எதிர்த்து நீந்தும் சிறுமீன்

வலுத்த காற்றுக்குப் பெயராத விருட்சம்

இவ்வளவு ஏன்...

இரைச்சலைக் கண்டுகொள்ளாத சாதுவின் தியானம்.

- ந.சிவநேசன்

*****

ஆசையைக் கற்றல்

அரண்மனைக் கதவை

சாத்தியிருந்தால்

பூனை உள்ளே போயிருக்காது

உள்ளே போன பூனை

எலிகள் பிடிப்பது மூலம்

ஆசையை சித்தார்த்தன்

கற்றிருக்க மாட்டான்

ஆசையே துன்பத்திற்குக்

காரணம் என

பூனை முகத்தில் கீறல்

ஏற்பட்டிருக்காது

ஆசை துறந்த பிக்கு போல்

தோட்டத்தில் பூச்செடிகளைச்

சுற்றி வரும் பூனை.

- க.புனிதன்

****

சொல்வனம்

அந்தியின் ஆன்மா

பூத்தலுக்கும்

வீழ்தலுக்கும் இடைப்பட்ட அந்தியைத்தான்

வான்கோ வரைந்துகொண்டிருந்தார்

ஒரு உதிரும் மலரின் துயரத்தை

நதியின் சலசலப்போடு

வரைகையில்தான்

சட்டகத்தில் மாட்டிக்கொண்ட

பறவை ஒன்று

கால் நழுவிப் பதற

வரைவதை நிறுத்தி நிதானிக்கிறார்

அந்த அந்தியில்தான் உயிர்பெற்றெழுந்தன

இரு இதயங்கள்

கற்பாறையைவிடக் கடினமாக

எப்போதாவது இரவோடு உறவாடும்

அந்தியின் ஆன்மா

துளிர் விடுவதை வரைந்துவிடவே

கையறு நிலையில் கடத்துகிறார்

தன் ஆயுளை.

- மாராணி

******

அன்பில் நகர்தல்

நாளொன்றை நகர்த்த

ஒரு அன்பு போதுமானதாக இருக்கிறது

இன்று இந்தக் குழந்தையின்

பலூனைப் பிடுங்கி நேரம் கடத்துகிறேன்

நாளை ஒரு நாய்க்குட்டியைத்

துரத்திப் பிடித்து விளையாடுவேன்

பிறிதொரு நாளில் எதிர்வீட்டு

அக்காவோடு கதையளப்பேன்

பயணத்திற்கான பெட்டியில்

நினைவுகளை அடைக்க

உயிர்களோடு சங்கமித்தல்

போதுமானதாக இருக்கிறது

ஆயினும்

உறவுகளின் வார்த்தையற்று

நிரம்பாத பெட்டி

தளும்பிக்கொண்டேதான்

கண்டம் தாண்டுகிறது.

- மதுரை சத்யா