Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அழைப்பினை ஏற்கையில் பிடித்த பாடல் உயிரிழக்கிறது வேண்டாதவரின் அழைப்புகள்தான்

சொல்வனம்

அழைப்பினை ஏற்கையில் பிடித்த பாடல் உயிரிழக்கிறது வேண்டாதவரின் அழைப்புகள்தான்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

இனிப்பிருக்கிறது

என்னிடம் கொஞ்சம்

இனிப்பிருக்கிறது

தேநீருக்கு

காபிக்கு

தேங்காய்ப் பாலுக்கு

திகட்டத் தின்னும் எதற்கும்

சேர்த்துக்கொள்ளலாம்

தோசைக்குத் தொட்டுக்க

ஆசைக்குத் துளி நுனிநாக்கில்

சிரிக்கும் சிறுமி கைகளில்

உப்புமா தட்டோரத்தில்

நீங்கள் தூங்கியபின்

சரியாக அடைபடாத

டப்பாக்களில் மிதந்தபடியே

ஊர்ந்துகொண்டிருக்கும்

எறும்புகளின் தீனியாய்

என்னிடம் அது தீர்வதேயில்லை

இனிப்புத் துகள்கள் பொழியும்

பால் நிலா

கரும்புத் தோட்டத்தில் சுழல

கவனிக்கிறேன்

தித்திக்கிறது

சர்க்கரை டப்பா முடிவிலி.

- கவிஜி

இசைக்குறிப்பு

அழைப்பினை

ஏற்கையில்

பிடித்த பாடல்

உயிரிழக்கிறது

வேண்டாதவரின் அழைப்புகள்தான்

கணநேரமாயினும்

நீட்டிக்கச் செய்கின்றன

இசைக்குறிப்பினை.

- ரகுநாத் வ.

நலம் விசாரித்தல்

சாவித்துளையின் வழியே

நித்தம் நுழைகிற கதிரவனின்

விரலைப்பிடித்தவாறே

வனத்தின் நலம்

விசாரித்துக்கொள்கிறது

மரக்கதவு!

- ரகுநாத்.வ

சொல்வனம்

வரிசையில் வராத எறும்புகள்

எல்லா நேரத்திலும்

எப்போதும்

ஒரு வரிசையைப் பின்பற்றுவதில்லை

எறும்புகள்

வரிசையிலிருந்து பிரிந்தலையும் சில

தரையில் சிந்திக் கிடக்கும் நீர் விளிம்புகளில் முகம் பார்க்கும் சில

கடிப்பதற்கான கால் விரல்களைத் தேடியலையும் சில

ஒரு வழக்கமான உணவிலிருந்து

மாறுபாட்டை நோக்கித் திரியும் சொற்ப எறும்புகள்

ருசியைச் சுமக்கின்றன

அதைத் தன் புற்றுக்கு வெளியே பதுக்கும் ரகசியங்களறியாமல்

முன்னும் பின்னும் பதறுகின்றன

திடீரெனப் பெய்ய நேரும் ஒரு மழை வரை.

- தக்ஷன்

நிழல்

மெய்யுடல் போலவே

அசைவுகளும் படபடப்புகளும்

நேர்த்தியாய்

நிலத்தினில் ஒத்திசைகின்றன

வண்ணங்களை இழந்து

ஏதிலியாய்த் திரிந்தபோதும்

நிழல் எப்படி பூமியை

வானமாக ஏற்றுக்கொண்டதோ

அதேபோலவே பூமியும்கூட

அதனை வண்ணத்துப்பூச்சியாக

அங்கீகரித்துக்கொள்கிறது.

- ச.வடிவேல்