Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

இளம்பிராயத்தில் எந்தத் தவறுகளையும் எச்சில் தொட்டு எளிதில் அழித்துக்கொள்வோம்

சொல்வனம்

இளம்பிராயத்தில் எந்தத் தவறுகளையும் எச்சில் தொட்டு எளிதில் அழித்துக்கொள்வோம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சுவர்ப் பிரிவு

சண்டையின் உடனடி விளைவாக

உயர்த்திக் கட்டப்பட்டது

சுற்றுச்சுவர்

கைகளை ஊன்றியபடி சாவகாசமாகப் பேச

இடம் கொடுத்த சுகம் தேடி

முட்டிக்கொண்டிருக்கிறது

முன்பு மேற்புறம் இருந்த நடுச்சுவர்

அந்தப் பக்கம் இருந்து விளையாட்டுச் சத்தம்

கேட்கும்போதெல்லாம்

டி.வி சத்தத்தை

அதிகரிக்கிறார் அப்பா

இங்கிருந்து குழம்பு வாசனை நுழையாதிருக்க அடைக்கப்படுகிறது

அந்த வீட்டுக் கதவு

பக்கத்து வீட்டு

மொட்டை மாடியிலிருந்து

இந்தப் பக்கமாகச் சட்டையோ

சேலையோ விழப்போகும்

நாளுக்காகக் காத்திருக்கிறது நட்பு.

- கி.சரஸ்வதி

******

அழுகையின் ஒற்றுமை!

விஷமச்சிரிப்புக்கும்

புன்சிரிப்புக்கும்

ஓரிரு வரிகள்தான் வேறுபாடு

புன்சிரிப்புக்கும்

கொள்ளைச் சிரிப்புக்கும்

பக்கம் பக்கமாய் வித்தியாசம்

அழுகைக்கும் பேரழுகைக்கும்

அப்படி ஓர் ஒற்றுமை

அழுதுவிட்டுப் போவோம்

நீலிக்கண்ணீர்

தவிர்த்து.

- இளந்தென்றல் திரவியம்

****

சொல்வனம்

எச்சில் காலம்

இளம்பிராயத்தில்

எந்தத் தவறுகளையும்

எச்சில் தொட்டு

எளிதில் அழித்துக்கொள்வோம்

சிராய்ப்புகளை

எச்சில் வைத்தே

ஆற்றிக்கொள்வோம்

ஆசையாய் அனுப்பும்

வாழ்த்து அட்டைகளுக்கும்

ஊதாநிறக் கடுதாசிகளுக்கும்

நுனிநாக்கில் தொட்டு அஞ்சல்தலைகளை

எச்சில் வைத்து

ஒட்டிக்கொள்வோம்

காக்காய்க்கடி எச்சில் பண்டம்

பகிர்ந்தே

நட்புகளுக்குப் பழம் விடுவோம்

டாஸ் போட்டுப் பார்க்க

பானையோட்டுச் சில்லின்

ஒருபுறம்

எச்சிலால் தொட்டு

வான் நோக்கி

எறிவோம்

எச்சிலுக்கு ஆறும் காயங்களும்

எச்சிலுக்கு அழியும் தவறுகளும்

இருந்த காலத்தைத்தான்

இப்படி நாவறள

எழுதிக்கொண்டிருக்கிறோம்.

- வெள்ளூர் ராஜா

*****

தாலாட்டு

தூளிக்காகக் கட்டப்பட்ட

சீலைத்துணியை

ஓயாமல்

ஆட்டிக்கொண்டிருக்கிறது

கிளை.

- ச.ஜெய்