
இலைகள் பச்சையாக இருக்கும் பட்சத்தில்தான் பூக்களின் நிறங்கள் பேசுபொருளாகின்றன
விருட்ச தாகம்
குடித்தது போக
மீதமிருக்கும் புட்டிநீரைக்
கவிழ்க்கிறான் பள்ளிச்சிறுவன்
தன் முன் நீட்டப்படும்
கற்றைப் புல்லை
தும்பிக்கை நீட்டிப்
பெற்றுக்கொள்ளும்
ஒரு யானையைப் போல
தன் வேர்களை
நீட்டிப் பெற்றுக்கொள்கிறது விருட்சம்.
- மகேஷ் சிபி
*****
மௌனத்தின் வாக்குமூலம்
மௌனமென்பது
வாழ வேண்டுமென்ற
விழைவின் ஒரு மாற்று வடிவம்
தன்னைச்
சற்றேனும் விடுவித்துக்கொள்ளும் ஏளனப் புன்னகை
வெளிச்சத்தையும் இருளையும்
மாறி மாறி உருவாக்கும்
நிலக்காட்சி
உலகப் பேரிரைச்சல்
அற்ற வெளி
வளைந்த வானம்
பூமியில் புதைபடுகையில்
நிவர்த்தித்துக்கொள்ளும் பனைமரம்
மொத்தத்தில் மௌனத்தின் வாக்குமூலம் ஓர் ஆன்ம வாக்கியம்.
- லைலா

*****
பொறாமையாய் இருக்கிறது!
ஆடிக் காரில்
பச்சை விளக்கு எரிய
பரபரப்புடன் காத்திருக்கும்
அவனை விடுங்கள்
சற்று முன் கடந்த
சொர்க்க ரதத்திலிருந்து உதிர்ந்த
சம்பங்கியை ஏந்திக்கொண்டு
சாலையோர
இசக்கி மரத்திடம்
சாவகாசமாய் பேசிக்கொண்டிருக்கிறானே
இவனைப் பார்த்தால்தான்
பொறாமையாய்
இருக்கிறது.
- கண்மணி ராசா
*****
சோர்ந்துபோகும் பயணம்
இலைகள் பச்சையாக
இருக்கும் பட்சத்தில்தான்
பூக்களின் நிறங்கள் பேசுபொருளாகின்றன
அடுத்த வேளைக்கான உணவு உறுதிப்படுவதைப் பொறுத்துதான்
செரிப்பது உணவா
பசியா என்பது
தீர்மானமாகிறது
கதைதான் முடிவு செய்கிறது
தூங்கப் போவது
கேட்பவரா
சொல்பவரா என்பதை
சென்ற அதே பாதையில்
திரும்புகையில்
பயணம் சோர்ந்துபோகிறது.
- சாமி கிரிஷ்