சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

குளக்கரையில் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன் இடமும் வலமுமாய் அலைகளையெழுப்பிய மீன்களை

மழை நிகழ்வு

அந்தியின் மிளிர்வில்

ஒரு நாள் மேகம் உடைந்து

மழைத்துளிகள்

சிதற ஆரம்பிக்கின்றன

வேலை முடிந்து

வீடு போய்ச் சேர

வேகமாய் எட்டுவைக்கும்

சிலரின் செருப்புக் கால்களுக்குப்

புலப்படவில்லை

வழிந்தோடும் ஈரத்தின் வாசம்

மிச்சமில்லாமல் பெய்து முடிக்கும்

முனைப்போடு கொட்டித் தீர்க்க

ஆயத்தமாகும் வேளையில்

துளியும் நனையாமல்

முன்கூட்டியே ஓட்டைக் குடிசையின்

ஓரத்தில் இடம்பிடித்திருந்த

நாய்க்குட்டியின்

அருகிலேயே வாகாய்ப் பொருந்திக்கொள்ள

கொஞ்சம் கூடுதல் அவசரத்தோடு

சாலையைக் கடக்கும்

செருப்புத் தொழிலாளியின்

காதுகளை எட்டுவதில்லை

தூரத்து மழையின் இசையொலி

மழை சிலருக்கு

பின்னணி இசையாகி

புல்லாங்குழலை மீட்டுகிறது

பலருக்கும்

மழை ஒரு பெரு நிகழ்வு

ஒவ்வொரு முறையும்

மழை இப்படித்தான் வருகிறது

எதுவும் மாறவில்லை.

- யவனிகா சாந்தி

சொல்வனம்

மீன் பசி

குளக்கரையில் நின்று

ரசித்துக்கொண்டிருந்தேன்

இடமும் வலமுமாய்

அலைகளையெழுப்பிய மீன்களை

பசிக்கிறதென சைகை காட்டி

நடுவில் வந்த சிறுமி

பெற்றுக்கொண்ட காசில்

பொரி வாங்கித்

தூவுகிறாள் குளத்தில்

ஆர்வமாய்க் கொறிக்கத்

தொடங்குகின்றன மீன்கள்.

- கீர்த்தி

நட்பின் நடைமுறை

பக்கத்து வீட்டில்

செத்தவன் பிசாசு ஆகிறான்

எதிர்வீட்டுக்காரரின் ஜிம்மி

வெறும் நாய்தான்

அடுத்த வீட்டுக்காரியிடம்

`கவனம் தேவை’ அறிவுரை

கதவு தட்டும் விற்பன்னர்களை

செருப்பால் அடிப்பதற்கு

பதிலாக `நாய்கள் ஜாக்கிரதை’

நடைப்பயிற்சியில்

முன்னால் சென்ற மனிதனின்

மயக்கம் நம்மை ஒன்றுமே செய்வதில்லை

குப்பை வாங்கிப் போகும் ஊழியர்

கேட்ட ஒரு போத்தல் தண்ணீரை

இல்லை என்கிறது நடைமுறை

முகப் புத்தகத்தில் மட்டும்

ஆயிரத்தைத் தாண்டிவிட்டன

நட்புகள்.

- கவிஜி