சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

மூங்கில் கம்புகளைக் கொண்டு தொட்டிலாய்த் தொங்கிய பரணில்தான் எங்கள் பழம்பாய்கள் குடியேறும்

ரப்பர் மீன்

பழுதுபட்ட லாரியிலிருந்து

தெறித்து விழுந்த ரப்பர் ஒன்று

சாலையோரம் கவனிப்பாரற்றுக் கிடந்தது

அடுத்த விநாடி

அதன்மீது வேகமாக‌ ஏறிச்சென்ற‌

இருசக்கர வாகனத்தின் அதிர்ச்சியில்

மீனெனத் துள்ளிக் குதித்தது

அருகில் சென்றுகொண்டிருந்த‌

அனைவரின் கவனத்திற்குள்ளும்

ஒரு சில விநாடிகள் சென்று வந்ததில்

புதிதாய்ப் பிறந்த ரப்பர் மீனுக்கு

அவ்வளவு மகிழ்ச்சி!

- அ.வேளாங்கண்ணி

****

கேட்காததும் சொல்லாததும்

கடைசிக் காதல் கடிதத்திற்கு

பதில் வரவில்லை

நீண்ட காத்திருப்புக்குப் பின்

கல்யாணப் பத்திரிகை

அனுப்ப வேண்டியதாயிற்று

தவறாமல் வந்து வாழ்த்தினாள்

காணாமல்போன கடிதம் குறித்து

நானும் கேட்கவில்லை

அவளும் சொல்லவில்லை.

- சிரஞ்சீவி இராஜமோகன்

சொல்வனம்

அம்மாவின் சாயல்

மூங்கில் கம்புகளைக் கொண்டு

தொட்டிலாய்த் தொங்கிய பரணில்தான்

எங்கள் பழம்பாய்கள் குடியேறும்

ஓரத்தில் தைத்த

நாடா கிழிந்தாலோ

கோரைக்குச்சிகள் பொடிந்து உதிர்ந்தாலோ

ஆயிரம் யோசனைக்குப்பின்

அதிகபட்ச வயதான ஒன்றிரண்டுக்கு

போகியில் விடுதலை கிடைக்கும்

ஆயினும் உண்டு

ஆளுக்கு ஒன்று

ஆணியடிக்க அனுமதியற்ற வீட்டில்

உருட்டிச் சுவரோரம்

சாத்திய

தவணை மெத்தைக்கு

கன்னத்தில் கைவைத்து நிற்கும் அம்மாவின் சாயல்.

- உமா மோகன்

****

மழையின் விளையாட்டு

நீள்கம்பிகளாகவே கீழிறங்கி

அலுத்துவிட்டது மழைக்கு

மாடிப்படிகளில்

குதித்துக் குதித்து

இறங்கிக்கொண்டிருக்கிறது

இப்போது.

- கி.சரஸ்வதி